தேர்வில் தோல்விக்கு
உயிர் துறக்க துணியும் மூடா
என்னிடம் உன்
செவியைக் கொஞ்சம் தாடா.
உறைக்குள் உறங்கும் உடைவாளுக்கு
உதிரச்சுவை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
மதியென்னும் உடைவாளை விதி என்னும்
உறையிட்டே வைத்திருக்கிறாய் நீ.
உருவியெடு உடைவாளை
வெட்டி வீழ்த்து விதிகளை
வெற்றி உன்னை சுற்றிச்சுற்றி
வட்டமிடும் பார்.
உலகத்துக்கானவன் அல்ல நீ
உனக்கானது இவ்வுலகு என்பதை உணர்
வெற்றிச்சிகரத்தைத் தொடாமல்
நெற்றிக்கண்ணை உறங்கவிடுவதில்லை என
உறுதி கொள்
உச்சிதனை முகரும் உறவுகள் பார்.
புரவி ஏறி புழுதி பறக்க விரைந்து
போரிட்டு உலகை வெல்வது கடினம்
காலம் மாறிவிட்டதை கவனி
விரல் அசைவில் நீ வெல்ல முடியும் உலகை
அவ்வித்தை கற்கச் செல்ல வேண்டிய இடம் கல்விச்சாலை
இன்று தோற்றால் தான் என்ன
மீண்டும் பயிலச் செல்
நாளை கனவுகளை வெல்.
