மாட்டுக்குப் புல் பிடுங்கிவர அனுப்பியிருந்தாள், பாட்டி. வெயிலேறுவதற்குள் பிடுங்கிக்கொண்டு கொல்லையிருந்து வெளியேறிவிட வேண்டும். வெயில் நேரத்தில் சிக்கிக்கொண்டால் சொணை பிடுங்கித் தின்றுவிடும். புளியம்புற்களை மாடுகள் மிகவும் விரும்பி திண்ணும். தொடர்ந்து கொடுத்து வந்தால் எலும்பும் தோலுமாக இருக்கும் மாடுகளும் கொழுக்மொழுக்கென மினுமினுப்புக் கூடிவிடும். பால்கறக்கும் மாடுகள் என்றால் கூடுதலாக ஒருசொம்பளவுக்குப் பால் சேர்த்துச் சுரக்கும்.
புரட்டாசி மாதத் துவக்கம். சாமை புடைதள்ளும் பருவம். முதன்முறை தாய்மையடைந்த பெண்ணின் மூன்றாம் மாதத்து மேடுதட்டிய அடிவயிறும், புதுவித வனப்பூறிய உடலையும்போல சாமைக்கொல்லை தளதளப்புடன் நின்றநிலையில், வீசும் காற்றுக்கு அசைந்தாடியபடி இருக்கும். அதிகாலைவேளையின் பனித்திரள் பூத்த பயிர்வாசமும், வசீகர இளம்பச்சையும் காண்பவர்களை வசமிழக்கச் செய்யும். வரப்பின்வழியே நடந்துச்சென்றாலும் கீழமர்ந்து மாரளவு என்பதாகக் கைகளை விரித்து அப்படியே சேர்த்து ஆரத்தழுவி ஆனந்தமடைய விரும்பும் மனத்தைக் கட்டுப்படுத்துவது இயலாத காரியம். குளிருக்குப் போர்த்தியிருந்த காடாத்துணியை விலக்கிச் சுருட்டி வரப்பிலிருந்த துறிஞ்சி மரத்தின் சிறுகிளையில் போட்டுவிட்டு வெற்றுடம்புடன் பனிக்குளத்தில் இறங்குவதைப்போல பயிருக்குள் இறங்கினேன். எட்டநின்று பார்த்தால் சாமைப்பயிர் எது, புல் எதுவென்றே பிரித்தறிய முடியாதபடி சாமைக்கு சக்களத்தியாக ஈடுகொடுத்து வளர்ந்திருக்கிறது புளியம்புற்கள். வெறும்புற்களை மட்டும் போட்டல் மாடுகளுக்கு திகட்டிவிடும். கால்களால் மிதித்து சாணம், கோமியத்துடன் கலந்து வீணடித்துவிடும் என்பதால் புளியம்புற்களுடன், எருதுக்கொம்பு புல், கொட்டைத்தாதரை, குட்டிக்கொடி, பண்ணைக்கீரைச்செடி என என்னால் சுமக்கக்கூடிய அளவுக்கு கலந்துக்கட்டிப் பிடுங்கி அரிஅரியாகச் சேகரித்தேன். நீண்டு பரவிப் படர்ந்திருந்த சவுரிக்கொடியைப் பிடுங்கி கயிறாக்கி புற்களைத் திண்டாகக் கட்டினேன். இளங்காலைச் சூரியனின் கதிர்வரவால் கூதற்புகை, புற்தோகைகளில் துளிர்த்திருந்த பனிநீர் முத்துகளும் மறையத் துவங்கின. கிளையில் தொங்கிக்கிடந்த துணியின்மேல் கருப்பு எறும்புகள் சில நடமாடிக்கொண்டிருந்தன. காடாவை எடுத்து உதறும்போதுதான் நேற்று நீ கேட்டிருந்தது ஞாபகத்திற்கு வந்தது. புல்திண்டை வீடு சேர்த்துவிட்டு மாடுகளை மேய்க்க வரும்போது பார்த்துக்கொள்ளலாம் எனப் புறப்பட்டேன்.
மாட்டு கொத்திலிருந்த சாணியை அள்ளிக் கூட்டி குப்பையில் கொட்டிவிட்டு குட்டைக்குச் சென்று குளியலை முடித்துக்கொண்டு வீடு வந்ததும் பாட்டி பழைய சாமைச்சோறு, தயிருடன் உரித்த சிறுவெங்காயமும் கொடுத்தாள். சாப்பிட்டபின், கன்றுகளைக் கொட்டகையில் கட்டி சிறிது புற்களைப் போட்டேன். மாடுகள் இரண்டையும் பிடித்துக்கொண்டு கிளம்பினேன். மேய்வதற்குத் தோதான இடத்தில் மாடுகளைக் கட்டிவிட்டு துறிஞ்சி மரத்தடியில் அமர்ந்தேன். மழைவெயில் உடம்பில் சுளீரென உறைத்தது. சிலிசிலுக்கும் காற்று வெயிலின் சூட்டைச் சிதறடிக்கிறது.
அமர்வதற்கு வாகான இடம்தேடி பொன்வண்டு ஒன்று மரங்களுக்கு மேல்பரப்பில் பறப்பதைப்போல் தளிர்பச்சை ரவிக்கை, அதேவண்ண பாவாடை, ரத்தச்சிவப்பு நிற தாவணி உடுத்தி, பச்சைப்பசேலென விரிந்திருக்கும் சாமைக்கொல்லையில் மிதந்து வருகிறாய். கிளைத்துச் செழிப்பாக வளர்ந்திருக்கும் பண்ணைக்கீரையின் உச்சிக்காம்பின் முனையில் இரு இலைகளின் கதுப்பில் பிதுங்கியிருக்கும் வெண்ணிறப் பூக்கள் உன் பாவாடையில் பூத்திருப்பதைப் போன்று தோற்றம்காட்டி என் கண்களை ஏமாற்றுகிறது. என்னை நெருங்கிக் கொண்டிருக்கிறாய். மேய்ந்துக்கொண்டிருந்த மாடுகள் தலையை உயர்த்தி காதுகளைச் சிலிர்த்து முதலில் உன்னைப் பார்த்தன. தொடர்ந்து என்னையும் பார்த்தன. ஒன்றும் ஆபத்தில்லை என்பதைப்போல் கையால் சைகை செய்தேன். புரிந்துக்கொண்டு மேய்வதைத் தொடர்ந்தன.
எதிரில் நிற்கிறாய். தாயின் வயிற்றிலிருந்து பிறப்பு வாசல் கடந்ததும் எனைச்சூழ்ந்த பேரொளியொன்று இத்தனை ஆண்டுகளுக்குப்பின் இன்றென்னை மீண்டும் சூழ்ந்தது, ஆலிங்கனா. உண்மையில் சூரியனை மங்கலாக்கிய பேரொளி நீ. உன்னால் நான் உணரும் மகிழ்ச்சியை என்ன பேர்ச்சொல்லி விளக்குவேன் நான்!? மலர்ந்த முகத்தில் மேலுதட்டுப் பூனைமயிர்க்கால்களில் குட்டிக்குட்டியாக வியர்வை அரும்புகள் குறும்பாக முறைக்கின்றன. ஒற்றி எடுத்துவிட என்னுதடுகள் துடியாய் துடிக்கின்றன. ஆண்பிள்ளைக்குப் பொறுமைதான் அழகு; பொறுமைசாலியைப் போன்று நடிக்கவாவது செய்யென என்னை நானே எச்சரித்துக்கொள்கிறேன். எல்லை மீறிவிடுமோ என்ற அச்சத்தில் என் உள்ளங்கைகள் வியர்க்கிறது. கைகளைப் புல்பரப்பில் தேய்க்கிறேன். உடல் நரம்புகள் உண்டாக்கும் அதிர்வுகளை உனக்குத் தெரியாமல் மறைப்பதற்கு பெரும்பாடு படவேண்டியதாக இருக்கிறது. செம்போத்து பறவை இணைகள் ஆவிலி மரக்கிளையின்மேல் அமர்ந்து ஒன்று விலக மற்றொன்று நெருங்க, விலக நெருங்க என காதல் சரசத்தில் குரலெழுப்பி மகிழ்வது நம்மிருவரின் கவனத்தையும் கவர்ந்தன.
உன் முகத்தின் வியர்வையைக் காற்று உறிஞ்சிக்கொண்டது. கையில் காலி தீப்பெட்டிகள் இரண்டும், நூற்கண்டும் வைத்திருந்தாய். ’பூ கட்ட இங்க எதுக்கு வந்த?’ என்றேன். முகத்திலிருந்த மலர்ச்சி மெல்லக் குழைந்தது. கோபமூட்டி உன்னைக் குழையச்செய்து மீட்டெடுப்பதில்தானே பேரானந்தம் எனக்கு. தீப்பெட்டிகளை ஒரு திசையிலும் நூற்கண்டை என் முகத்திலும் வீசினாய். காரிமாடு மீண்டும் என்னைப் பார்த்தது. மீண்டும் சைகையால் அமர்த்தினேன்.
அருகிலிருந்த கல் ஒன்றைத் தலைக்குமேல் தூக்கிப்பிடித்தபடி ‘அடேய் கொரங்கு என்னை கொலைக்காரி ஆக்காத’ என்றாய். சிரித்தபடி, ‘இந்த வயசுலயும் பொன்வண்டு புடிச்சி அதன் கழுத்தில நூல்கட்டி பறக்கவிட்டு ரசிப்பிபாயா?’ எனக்கேட்டதுக்கு ‘நான் என்னவோ செய்வேன், உன்னால பிடிச்சித்தர முடியுமா? முடியாதா? என முகத்தைச் சுண்டவைத்தாய். குழந்தைத்தனமான இவ்வகை குணத்தாலும் செயலாலும்தான் என்னை என்னிடமிருந்து முழுதுமாக ஈர்த்துகொண்டு வெற்றுக்கூடாக இங்கே உலவ விட்டிருக்கிறாய் பிசாசே- மனத்துக்குள் சொல்லிக்கொண்டு,’ முடியாது போடி. என்ன பண்ணுவ? கொல்லுவியா? கொன்னுக்க. என்னைக்கொன்னுட்டு பொன்வண்டு புடிச்சி விளையாடிட்டிரு’, எனச் சொல்லிக் கொண்டிருக்கையில் அமர்ந்திருந்த மரத்தின் உச்சியிலிருந்து கொம்பேறிமூக்கன் பாம்பொன்று குதித்தோடியது. பயமும் பதற்றமும் அடைந்த நீ கையிலிருந்த கல்லைக் கீழே போட்டுவிட்டு அருகில் வந்து நின்றாய். இருவருக்குமிடையில் இருந்த மூன்றடி இடைவெளியை மூக்கும் மூக்கும் உரசும் நெருக்கத்தில் கொண்டுவந்து நிறுத்தியது அந்தக் கொம்பேறிமூக்கன்.
அந்நேரம் பார்த்து அருகில் எங்கோ பொன்வண்டு பறக்கும் சத்தம் கேட்கவும் முட்டைக்கண்களைச் சுழலவிட்டுத் தேடுகிறாய். விலகிப்போய் தேடவிடாமல் உன்னை என்னிடத்திலேயே தேக்கிவிட்டது பாம்பு. பொன்வண்டின் சத்தம் தேய்வதும் வளர்வதும் உன்னை என்னவோ செய்கிறது. நான் எழுந்து போவதைக்கண்டு புன்னகைத்த உன்னுதட்டுச் சுளைகள், மாடுகளை நோக்கிப்போவதை அறிந்ததும் களையிழந்தன. மாடுகள் போட்டிருந்த சாணத்தை அள்ளி கொல்லையில் வீசிவிட்டு கைகளை சீத்தா இலையில் துடைத்தேன். மாடுகளைப் பிடித்து வேறிடத்தில் மாற்றி கட்டிவிட்டு வந்து அதே இடத்தில் அமர்ந்தேன். என்மீதான எரிச்சல் உச்சிக்குப் பயணிப்பதை உன் பார்வையே உணர்த்தியது. சற்றுத் தொலைவில் இருக்கும் கொன்றை மரத்திற்குமேல் ஒரு பொன்வண்டு பறப்பதைக் கண்டு பதைப்பதைத்து அதையும் என்னையும் மாறிமாறி பார்க்கிறாய். ஓய்ந்து கொன்றை இலையில் அமர்ந்து தலையை ஆட்டியாட்டி இலையைத் தின்கிறது. மினுங்கும் அதன் கரிய தலையும் உடலும், சிவப்பு இறக்கைகளும் உன்னை நிலைக்கொள்ள விடாமல் செய்கிறது.
இயலாமையும், ஏமாற்றமும் தோய்ந்த உன் கண்களைப் பார்க்கவே பிடிக்கவில்லை. விட்டால் சில நொடிகளில் அழுதுவிடுவாய். உன் கோபங்களை ரசிக்கும் எனக்கு உன் அழுகையைத் தாங்கிக்கொள்ள முடியாது, ஆலிங்கனா. சுருட்டி வைத்திருந்த என் சட்டையை விரித்து மூன்று தீப்பெட்டிகளை நீட்டினேன். ஒன்றில் வெட்டைத்தாதரை இலையை வைத்து தலை, உடல், இறக்கை என முழுதும் பச்சை வண்ணம் கொண்ட பொன்வண்டு, அடுத்ததில் துறிஞ்சி இலைகளை வைத்து தலையும் உடலும் பச்சை, இறக்கை மட்டும் சிவப்பு வண்ணம் கொண்ட பொன்வண்டு, மூன்றாவதில் கொன்றை இலை வைத்து தலையும், உடலும் கருப்பு, இறக்கை மட்டும் சிவப்பு வண்ணம் கொண்ட பொன்வண்டு – என மூன்று வகையானதைக் கொடுத்தேன். அழுதே விட்டாய். அது மகிழ்ச்சிக் கண்ணீர். இவ்வுலகில் நான் இறக்கும் வரையிலும் உன் கண்களில் இருந்து மகிழ்ச்சி மட்டும்தான் வழியவேண்டும்.
*
No comments:
Post a Comment
சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.