Oct 30, 2009

"தொல்லை வரம்"




பிள்ளை வரம் வேண்டி
அரசமரம் சுற்றும்
அறிவிலிப் பெண்கள் போல்

தொல்லை (காதல்) வரம் வேண்டி
உன்னைச் சுற்றிக் கொண்டிருக்கிறது

ஒன்றுமறியாத
என் மனம்...!


Oct 27, 2009

"அன்னை பூமி "

ஒரு காலை வேளை (தூங்கி எழுந்தவனைத்) தோரணம் கட்டி அழைக்கும் வானவில் ...!

இதுதான் எங்கள் வாழ்விடம் . எப்போதுமே இதேபோன்று பசுமையாக இருப்பதில்லை. பருவகாலத்திற்கு ஏற்றாற்போல் மாறும். இது கடந்த செப்டம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் ஒரு நாள் காலை நேரத்தில் எடுக்கப்பட்ட படம்.



மின்சாரக் கம்பியில் வரிசையாக அமர்ந்து இயற்கையை ரசிக்கும் கிளிகள்.



எங்களின் நெல் வயல்.



மலையும், மலையைச்சார்ந்த நிலமும்.


எங்களின் கூரை வீடு.


எங்களுக்கும் தாய் . ( பால் தருவதால் )

எங்க வீட்டு காவலன் .(வடிவேலு)


எங்கள் வாழ்வு இப்படி இயற்கையோடு ஒன்றியது. இன்னும் சில ஆண்டுகளில் இந்த நிலத்தோற்றம் சிதைக்கப் படலாம்.


(குறிப்பு:- இந்தப் படங்கள் அனைத்தும் கைத்தொலைப்பேசி மூலம் எடுத்தது.)

Oct 23, 2009

"இன்னும் இருக்கிற ...காதல்"


இதுவரை
என்னால் எழுதப்படாத
சொற்களில்தான்
அதிகமாக இருக்கிறாய்
நீ!

பகிரப்பகிரப்
பெருகும்
அன்பைப்போல்
எழுதயெழுத - என்னுள்
எங்கிருந்து வருகிறாயோ
நீ?

என் எழுத்துக்களின்
ஏதாவதொருச் சொல்
இன்றல்லது என்றாவது
அடயாளப் படுத்தக்கூடும்
நம்மை....உரியவர்களிடம்...!

Oct 22, 2009

"காதல்"



நெடுகிலும்...
பல்லாயிரம் பொய்கள்

நடுநடுவே
ஒன்றிரண்டு மெய்கள்


ஆனாலும்
இனிக்கிறது

காதல்!

Oct 20, 2009

"மலர்கள் மீண்டும் மலரும் "



அன்னையே,

என்னைக்
'கருப்பை ' தொட்டிலில் சுமந்த
உன்னை
மருத்துவமனைக் கட்டிலில்
கிடத்தி வைத்திருக்கிறேன்.

உன் உயிரைக்
கவர்ந்துச் செல்ல
வாசல் வரை வந்துவிட்ட
காலன் * கூட
கனிவான உன்
முகம் பார்த்து
கை பிசைந்து
நின்றிருக்கக் கூடும்.

அவனின்
அந்த கணப்பொழுது
தயக்கம் தான்
தாயுன்னைக் காப்பாற்றும்
வாய்ப்பைத் தந்தது.

நெடுநாளாய்
நலம் குன்றிய உன்னை
மொய்த்திருக்கும்
மௌனநிலை
எம் மனதைக் கொல்கிறது.

ஆனாலும்
நம்பிக்கை இருக்கிறது.

உன்
உதட்டுப் புன்னகை
மலர்கள் மீண்டும் மலரும்!

(காலன்*=எமன்)



குறிப்பு:- "மலர்கள் மீண்டும் மலரும்" என்ற தலைப்பின் கவிதைப் போட்டியில்
பரிசு பெற்ற கவிதை. தலைப்புத் தந்தவரும், கவிதை தேர்ந்தேடுத்தவரும் "கவிஞர் திரு.மு.மேத்தா " அவர்கள்.

இக்கவிதை எழுதிய அன்று என் தாயார் மிகவும் கடுமையாக உடல்நலம் பாதிக்கப் பட்டிருந்தார். ( தற்போது மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறார்.)

(படத்தில் "கவிதாயினியும் தோழியுமான" சுகுணா , கவிஞர் மு.மேத்தா, அருகில்அடியேன் .)

Oct 14, 2009

"...த்தேன் நினைவுகள் "


கலைக்கப்பட்ட
தேன் கூட்டில்
கரைந்தொழுகும்
தேன்நெய் போல்

புதைக்கப்பட்ட
உன் நினைவில்
கரைந்துக் கலைகிறது

பழக்கப்பட்ட
என்
தனிமை.

Oct 13, 2009

சாரலின்பா


(தூளியில் துயில்கிறாள் )

என் செல்ல மகளுக்கு "சாரலின்பா" என்னும் பெயரை ஒன்பது பேரும், "சாரலினியா" என்னும் பெயரை ஏழு பேரும் பரிந்துறைச் செய்திருந்தார்கள். ஆக "சாரலின்பா" பெரும்பான்மைப் பெற்றதைத் தொடர்ந்து ,

முதன்மை நீதிபதியாக அங்கம் வகித்த னதருமை "மனைவி"யின் தீர்ப்பினை ஏற்று ,

"
சாரலின்பா"


என்னும் பெயரைச் சூட்டி பெருமகிழ்வடைகிறோம்.


உதவிய அனைத்து அன்புள்ளங்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி.



இன்பா
(இவர் புதுமுகம் ஆதலால் இங்கிட்டு முக்கியமா பாத்துட்டுப் போங்க.)

இவர்கள் அனைவருக்கும் என் அன்பு மகளின் இன்ப முத்தங்கள்.

Oct 12, 2009

இனிப்பு எடுத்துக் கொள்ளுங்கள்




வாருங்கள் ,

சகோதர சகோதரிகளே,
மாமன் மச்சான்களே,
பாசமுள்ள மச்சினிகளே,(யாரும் இல்லையா?)


இனிப்பை எடுத்துக்கொள்ளுங்கள் .

இனிப்புச் சுவையுடன்,
எங்கள் ...ம்ம்ஹூம் .... நம் குட்டி தேவதைக்கு ,

பெயர்ச் சூட்டி விடலாம். சூட்டும் முன்,

அ). சாரலினியா, (சாரல் இனியா )
ஆ). சாரலின்பா (சாரல் இன்பா)



மேற்கண்ட இரண்டில் (உங்களுக்கு மிகவும் பிடித்த) ஒரு பெயரைக் குறிப்பிட்டு பின்னூட்டமிடவும்.



"எப்பதான் எனக்கு பேர் சூட்டப் போறீங்கப்பா?" -ன்னு நாள்தோறும் என்னைத் தூங்கவிடாமல் துவம்சம் செய்கிறாள்.

பெரும்பான்மையோருக்குப் பிடித்த பெயரைச் சூட்டலாம் என்று காத்திருக்கிறோம்.

பெயரினைத் தெரிவு செய்ய உதவிய இணையதளம் நம் விடுதலைப் புலிகளின் " நிதித்துறை.காம்" .

குறிப்பு:-
இதற்கு முன்னையப் பதிவிற்கு பின்னூட்டமாக ஏராளமான பெயர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பிய உறவினர்கள் அனைவருக்கும் நன்றி.

Oct 1, 2009

தேவதையைக் காணுங்கள்

வணக்கம் வலைத் தோ(ழி)ழர்களே!

நேற்றுதான் ஊரிலிருந்துத் திரும்பி வந்தேன். நீங்கள் எல்லோரும் நலம்தானே?

நான் விடுப்பில் சென்றதால் என்னைப்பற்றி என்னென்ன கற்பனைச் செய்து வைத்திருந்தீர்கள் ? உண்மையாய்ச் சொல்லுங்கள் ! பரிசாக ஒரு முத்தம் கிடைக்கும் , எங்கள் தேவதையிடமிருந்து !

ஊருக்குச் சென்றதன் மர்மத்தை அவிழ்க்கும் நேரமிது.






எங்கள் குல தேவதையை வரவேற்கத்தான் தாயகம் சென்றேன் .
மற்றாக , தேவதைக் காத்திருந்தாள் என்னை வரவேற்க! (அவசரக்காரி)




வரதட்சணையை எதிர்க்கும் எங்களுக்குக் இறைவன் கொடுத்த 'இறைதட்சணை" இவள்.






அப்பாவை வரவேற்ற நிம்மதியில் ஆழ்ந்து உறங்குகிறாள்.





விடுப்பு முடிந்து,பிறந்த பதினெட்டாம் நாளே பிரிந்துச் செல்லும் துர்பாக்கியத் தந்தையைப் பார்த்து பொக்கை வாய்ப் புன்னகையைப் பரிசாகத் தந்து வழியனுப்பி வைத்தாள்.


இப்படியொரு இனிப்புச் செய்தியை யாரும் எதிர்ப்பார்த்திருக்க மாட்டீர்கள் ! நான் சொல்வது சரிதானே?



சரி . பெயர் சூட்ட வேண்டும் . சின்னதாக , அழகாக , அம்சமாக உங்களுக்குப் பிடித்த தமிழ்ப் பெயர்களைக் கூறுங்கள். ஒரேயொரு நிபந்தனை மட்டும்.

தொடக்க எழுத்து , "ச " அல்லது "சா " ஆங்கிலத்தில் எழுதும்பொழுது "CH" எனத் தொடங்கும்படி யோசித்துச் சொல்லுங்கள்.