Jan 13, 2014

அதிரூபனும் சிண்ட்ரெல்லாவும் - ஒரு கவிதை அநுபவம்

விதைக்குப் பொய் அழகு என்பார் கவியரசு வைரமுத்து. கவிதைக்கு உண்மையும் அழகு  என்பதைக் கவிதாயினி தமிழரசியின் கவிதைகள் உணர்த்தி விடுகின்றன. கவிதை செய்வோருக்கு  , கூடு விட்டு கூடு பாயும் வித்தைத் தெரிந்திருக்க வேண்டுமாயிருக்கிறது. இக்கவிதாயினி தெரு மாடுகளாக, தெருநாயாக, தெருவோர வாசியாக, கல்லுடைக்கும் சிறுமியாக, விபச்சாரியாக, மரமாக, மலராக, மழையாக, கல்லாக, பறவையாக, …. இப்படி அனைத்தின் பிரதிநிதியாய் முன்னின்று அவற்றின் / அவர்களின் குரலாக கவிதைகள் நெய்திருப்பதைப் பாராட்டாமல் இருக்கவே முடியாது. இவள் கவிதைக் குலப்பெண். காண்பவை அனைத்திலும் கவிதைகளைக் கடைந்தெடுத்திருக்கிறாள்.

பொதுவாக, கவிஞர்கள் காலத்தின் கண்ணாடி என்பார்கள். ஆமாம், 21-ஆம் நூற்றாண்டிலும் இந்நாடு எந்நிலையில் இருந்தது என்பதைக் காட்ட,

“பிறப்புறுப்பைக்கூட
எங்கள் தாயின்
நைந்த புடவையினால் தான் மறைக்கிறோம்” - 
என்ற இந்த வரிகள் போதாதா?

எளிய தமிழில் கவிதைகள் செய்யவேண்டும் என்பார் பாரதிதாசன். தமிழரசியின் கவிதைகளின் பலமே எளிய சொல்லாடல்கள் தான்.

காதல் கவிதைகள் எழுதாத எவரும் கவிதை உலகில் இருக்கவே கூடாது என்பது இயற்கையின் நியதி. இவள் காதலை எழுதுவதற்கென்றே பிறப்பெடுத்திருக்கிறாள் என்பதை, இத்தொகுப்பிலுள்ள காதல் கவிதைகளைப் படிப்பவர் / படித்தவர் எவரும் மறுக்க முடியாது. அதிலும்,

“போர் முடிந்தவுடன்
உன் கூர்விழிகள் கொய்யப்படும்
வேறுகளம் காணக்கூடாதென்று
சம்மதம் என்றால்
உன் மதம் காட்ட வா”

இப்படியான மிரட்ட தொனிக்கும் காதல் கவிதைக்குச் சொந்தக்காரி.

இறுதியாக இடம் பெற்றிருக்கும், “எழுதுகிறேன் ஒரு கடிதம்” … படிக்கும் ஆண் வாசகன் தன்னை அதிரூபனாய் உருவகித்துக் கொள்ளாமல் இருக்கவே முடியாது. (சிண்ட்ரெல்லாவாக அவரரவர் தலைவியை நினைச்சுக்குங்கப்பா) அந்தக் கடிதத்தின் மூன்றாவது முனையில் ஒரு முத்தம் பதித்தனுப்பி இருப்பதாகவும், கடிதத்தைப் பிரித்தவுடன் அம் முத்தத்தைத் தின்று விடும்படியாகவும் அதிரூபனுக்கு, குறிப்பெழுதியிருக்கிறாள் சிண்ட்ரெல்லா.அதிரூபன் தின்றானா, இல்லையா? என்பது தெரியாது. ஆனால்,

(தமிழரசியின் தனிப்பட்ட கவனத்திற்கு:)
உங்களின் நூலினைப் படித்து முடித்ததும் கவிதைகளைத் தின்று விட்டேன்.

மொத்தத்தில் ஒரு கவிக்கானகத்திற்குள் காணாமல் போய்விடும் அதிசயத்தை நிகழ்த்தி விடுகிறது இந்நூல்.

நண்பர்களின் கவனத்திற்கு,
சென்னைப் புத்தகக் கண்காட்சியில் இக்கவிதை நூல் வாங்க விழைவோர்,

டிஸ்கவரி புக் பேலஸ்,

ஸ்டால் எண்- 307,308, 353,354