Sep 21, 2010

தேவகணம்’உன்னை
மணந்ததால் தான்
இந்த நாரும் ( நானும்)
மணக்கிறது’ என்ற
உண்மையை நீ
உணராமல்,

வாழ்த்துச் சொல்ல
வாய் திறக்கும் முன்னே
நானுன்னை
மணந்த நாள் தான்
உனது பிறந்த நாள்
எனச் சொல்லி
பிடிவாதம் செய்கிறாய்.
புரியத் தொடங்கியது
என் பிறவிப்பயன்.

*
யாசித்தே பழகிப்போன
எனக்கு
வள்ளலாக எப்போதும் நீ!

இதோ
இந்த யாசகனின்
வாசகங்கள்
வாழ்த்துக்களாய்
மலர்கிறது - உன்
மலர் பாதங்களில்...!

கூடவே,
என் வாசகர்களின்
வாழ்த்துக்களும் ...!


* இன்று (22/09/10) என்னுயிர் மனைவியின் பிறந்த நாள்.


Sep 12, 2010

வாழ்த்தலாம்....எங்களின் சாரலின்பா இன்று (13/09/2010) தனது முதலாம் பிறந்த நாளை எட்டிப் பிடித்து விட்டாள்.

*********************** ******************************


னது போற்றுதலுக்குரிய நண்பர் திரு கோவிந்தசாமி கண்ணன் அவர்கள் தனி மடலில் அவரது விருப்பத்தைத் தெரிவித்திருந்தார். அதை அப்படியே கீழே இணைத்திருக்கிறேன்.

அன்புடை சத்ரியன்!

வாழிய பல்லாண்டு! நலமே புரிக நலமே விளைக!
வியப்பின் எல்லையே தங்கள் வலைத்தள அழகினையும், தரத்தினையும் கண்டே!

வலைப்பதிவு, வலைத்தளம் போன்றவை பற்றி உங்களது தெளிவான நோக்கு “மனவிழி” என்னும் தலைப்பே, ”எல்லாம் மனசுல தாங்க இருக்கு” ,என கூறாமல் கூறுகிறது. வேறென்ன வேண்டும் இளவலே! அறிந்தும் தெரிந்தும் உணர்ந்தும் உள்ள நிலையினை எட்ட வேண்டும் என்பதே ஆன்றோர் வாக்கு. அவ்வழியிலே தொடர்க! வெல்க! எட்டுக இலக்கை! குரு வழி கிடைத்தால் மிக உயர்வன்றோ!

மனவிழி வழியே பலப்பல வலைத்தளப் பயணம் கிட்டுவதும் சிறப்பே. அவைகளில், மனநல மருத்துவர் ஷாலினி, வெட்டிப்பேச்சு போன்ற வலைத்தளங்களும் அடக்கம்!

இப்போதெல்லாம் அதிக நேரம் உள் செல இயலா நிலை ! மேம்போக்கான வலைப்பயணமே இவ்வளவு சொல்கிறதே...!
”சாரலின்பா”
சாரலே இன்பம்! தென்மேற்கு பருவக்காற்று அழைத்துவரும் தூறலிலே திருக்குற்றால அருவியிலே , கருமுகில் சூழ மழைச்சாரலில் கிடைத்திடும் இன்பத்தை அனுபவித்துதான் இப்பெயர்ச் சூடலா? அவ்வனுபவம் இல்லாமலே இப்பெயர்ச் சூட்டல் என்றால் மிகமிகச் சிறப்பு!

“சாரலின்பா” என்ன ஓர் அழகு தமிழ்! பழகு தமிழ்!

சாரலுக்கு, “வாழிய பல்லாண்டு”, என பிறந்த நாள் வாழ்த்துக்கூறி, சாரலைப் பெற்றோரையும் வாழ்த்தி மகிழ்கிறேன்.

இதனை உங்கள் வலைத்தளத்திலே பதிவிட ஆசை. எனக்காக , உங்களால் இதனை வலைப்பதிவில் ஏற்ற முடியுமா?

(நானோ துப்பறியும் சாம்பு! இப்போதுதான் தட்டுத்தடுமாறி வலைப்பதிவிட்டு வருகிறேன்.நான் இன்னும் அறியவேண்டியதும், செய்யவேண்டியதும் நிறையவே இருக்கிறது.)

என்றும் மாறா அன்புடன்,
கோ.கண்ணன்.

என் வலைத்தளம் காண்க: வலைத்தள முகவரி :
இங்கே சொடுக்கவும்
: http://thamizhinezhuchi.blogspot.com/
http://kadaramkondan.blogspot.com/
http://japanilkannan.blogspot.com/2010/08/8.html
http://hightechtamils.blogspot.com
ஒரு வேண்டுகோள் :
“தமிழரெல்லாம் ஒன்றுபடத் தக்க நேரம்,
தமிழரிதை மறப்பாரேல் இனமே சாகும்.”
பாவேந்தர் பாரதிதாசன் கூற்று இன்றைய தேவை !
ஒரு தலைமுறைக்கு மேல் ஆங்கிலவழிக் கல்வியினால் தமிழ் அறிவு மழுங்கடிக்கப்பட்ட சூழலில், நாம் ஒருவரை ஒருவர் குறை காண்பது விடுத்து, நாமும் ஒருவகையில் காரணமே என்று உணர்வோம் ! ஒன்றுபடுவோம் ! வென்றெடுப்போம் இழந்த பெருமைதனை !
சிந்தனையை பொதுவில் வைப்போம்!
தமிழிலேயே பேச முயற்சிக்கலாமே !
வீட்டிற்குள்ளாவது ! நண்பர்களுக்கு இடையேயாவது !
தாய்த் தமிழில் தமிழ் நாட்டில் மட்டுமாவது !
நல்ல தமிழ் இங்கிருக்க தேவையில்லாமல் ஆங்கிலக் கலப்பெதற்கு ?


Sep 10, 2010

வாழ்த்துக்கள்கொண்டாடும் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Sep 8, 2010

காதலர்களின் நாயகன் - மரணம்

Actor Murali Dead


பூவிலங்கு படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் முரளி பெரும்பாலும் காதலர்களின் ஆதர்ஷ நாயனாகவே இருந்தார்.

இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்து விட்டாராம்.

திரைக்கலைஞனாய் நம்மில் கலந்திருந்தவர். அவரது குடும்பத்தாருக்கு மட்டுமின்றி, நமக்கும் தான் அவரது மரணம் பெருந்துயரைத் தந்துவிட்டது.

நாம் அனைவரும் மரணத்தின் சொத்தே!

அவரது குடும்பத்தினருக்கு நம் இரங்கலைத் தெரிவிப்போம்.

Sep 3, 2010

உதட்டுரேகைஅன்புள்ள....
எனத்தொடங்கி
காதலுடன்...என முடிக்கும்
உன் கைப்பிரதிக்
கடிதங்கள் காணாது
தூசு படிந்துக் கிடக்கிறது
என் விழித்திரைகள்.


எழுத்துப்பிழைகளுடன்
என்னை விரும்புவதாய்
எழுதியக்
கடிதமொன்றில்
பெயருக்கு பதிலாக
நீ பதித்தனுப்பிய
உதட்டு ரேகை
பத்திரமாய் இருக்கிறது
ஆழ் மனதில்.


புரையேறும் நேரங்களில்
என் பெயர்ச்சொல்லி
நீ -அழைப்பாய்
என்றொரு
பொய் சொல்லிப் பழகிவிட்டேன்
வெள்ளந்தி மனசிடம்.