Feb 2, 2010

சொல்லில் புரியாது...



ச்ச்ச்ச்....சே!

எத்தனை நாள் ...?
எத்தனைமுறை ....?
பட்டினி கிடந்து
ஒத்திகைப் பார்த்தும்...


உன்னிடம் நேரில்
உள்ளத்தைச் சொல்கையில்
“ திக்கித்.....திணறி......
ச்ச்ச்ச்....சே! "

சொல்லில் புரியாது... போ.
ஆண் என்ற திமிர்
நாணம் கொண்ட அக்கணம்.!

மூவாண்டு முழுதாகியிருக்குமா?
ஆனால் என்ன?

நாம் மூப்பெய்தி
மூன்றாம் காலில் நடந்தாலும்
மறக்காதடி அந்த
மணித்துளி எனக்கு.

தாயும் இருக்க
தாயாக வாய்த்தவளே...!

Feb 1, 2010

ஒரேயொரு முறை


கூடு கலைக்கப்பட்ட
குருவிகள் பல
நாடு கடந்து பறந்துப்போயின
திசைகள் அறியாமலே...!

இறகுகள் பிடுங்கப்பட்ட
பறவைகள் நாங்கள்
என் செய்ய
எம் தலைவா...?


சிம்மக்குரல் அல்ல - உனக்குச்
சின்னக்குரல் தான் - ஆனாலும்
அது மந்திரக் குரல்!

இங்கே நாள்தோறும்,
ஏதிலிகள் எனும் சொல்
காதினில் விழும் போதில்
உயிரைக் கூறு போட்டு கொல்லுதப்பா.

"இதோ நானிருக்கிறேன்", என
எண் திசையில்
எத்திசையிலிருந்தேனும்
ஒரேயொரு முறை

உன்

அன்னைக் குரலால்
“எம் மக்களே!”
என்றழை!

எமைவிட்டுப் போன பலம்
இமைப்பொழுதில் வந்துச்சேரும்.

எதிரிக்கு(ள்) விட்டுப் போன பயம்
நெற்றிப் பொட்டில்
குட்டி போட்டு குடியேறும் !