Dec 21, 2010

இப்பொழுது நான்...முறுக்கேறிய நாண்
நான்.

உன்
கை விரல்கள்
மீட்ட வேண்டியதில்லை
கால் கொலுசின்
ஓசை பட்டாலே
இசைப்பொழிய
இசைந்திடுவேன்.

~~~~~~~~~~~ * ~~~~~~~~~~~~~

முற்றிய மூங்கில் காடு
நான்.

தீப்பொறி விழவேண்டியதில்லை.
உன்
நாவிலிருந்து
தீ என்ற ஒலி விழுந்தாலே
பற்றி எரிந்து விடுவேன்.


~~~~~~~~~~~ * ~~~~~~~~~~~~~~
வரண்ட தரைக்குள்
புதைந்திருக்கும் புல்லின் வேர்
நான்.

உன்
பேரன்பு
பேய்மழையாய்
பொழிய வேண்டியதில்லை
ஒன்றிரண்டு
தூறலாய் விழுந்தாலே போதும்

பொசுக்கென்று
துளிர்த்திடுவேன்
பசும்புல் நுனி போல!

Dec 16, 2010

முள்ளிடைப் பூக்கள்இதழ்க்கிளை
இடுக்கில்
எச்சில் ஊறவைக்கும்

மகரந்தகுழல்..!~~~~~~~~~~~ *~~~~~~~~~~~


உன்
சொல்லிடை
சிரிப்பினை
நினைவூட்டும்

இம்
முள்ளிடைப் பூக்கள்!

Dec 8, 2010

இது எத்தனையாவது நாள்...?


இது எத்தனையாவது
நாளென நினைவில் இல்லை.

காற்று மட்டும் புக இடைவெளி
காது கூசாத சொல் தேடி உரையாடல்
மெல்லிய தூரல்
விரைந்து நடக்க
விரும்பாத கால்கள்
நனைந்திருந்தது உடை
பெருந் தீ யின்
முதல் பொறி
முளைவிடத் தொடங்கியிருந்தது...!


**********

சிறுவயதில்
எத்தனையோ முறை
சொல்லியிருக்கிறாள் அம்மா.
எச்சில் பண்டம்
யார் கொடுத்தாலும்
தின்னக்கூடாதென.!

இருவது வருடப்
பசியுடன் இருக்கிறேன்.
முதல்முறை
முத்தம் தின்னக் கொடுக்கிறாய் நீ
வேண்டாமெனச் சொல்ல
விரும்புமா மனம்...?


Dec 1, 2010

குமிழ்த்திரை


காதல் தீ

சுடும் என்றேன்.
சுட்டாலும்
“உன்னை தீண்டும் இன்பம்
தோன்றுதடா ” என்றாய்.

இதோ
பற்றி எரிகிறது பார் என்கிறேன்
“பிடில் வாசி போடா” என்கிறாய்.நீர்க்குமிழ்.

உள்ளுக்குள்  நீ
வெளியில் நான்
அப்படியே இருந்திருக்கலாம்!

குமிழ்த்திரை  உடைத்து
உன்னில் என்னை
நிரப்பி  நிரைத்தாய்

நிரைந்திருந்தோம்.

உறவுகள் மறுப்பதால்
உயிரிருந்தும்
சிதையாகச் சம்மதிக்கிறாய் நீ...!


கஜல்
விருத்தங்கள் எழுத
கசங்கிய காகிதத்தை
மெளனமாய்
பிரிக்கிறேன் நான்...!.

Nov 21, 2010

புகுந்தேன்”எப்படி நுழைந்தாய்
என்னுள்?”, என்பதை
இன்னும்
எத்தனை தடவைதான்
கேட்கவிருக்கிறாயோ!

செப்படி வித்தையொன்றும்
செய்திட வில்லையடி - நான்!

உயிர்த்திரவம் ஒருதுளியின்
கோடியணுக்களில் ஏதோவொன்று
ஓடிப்புகுந்து கூடி கலந்து
கரு உருவாவது போல்,

உன்
சிறுசிறு விசாரிப்புகள்
துறுதுறுவென்ற செயல்கள்
கலகலவென்ற சிரிப்பு
இதுகளில் ...

ஏதோவொன்று
என்னுள் சென்று
காதல் தரித்து
கவிதைச் சொற்களாய் வழிந்து

உன்
கண்வழி நுழைந்ததை
கண் இமைக்காமல்
நீ
கண்டிருந்த கனமொன்றில் தான்
உன்னில் நான்..!

Oct 29, 2010

காதல் சொல்லி வந்தேன் -1


ஒன்பது கிரகங்கள்
தன்னைச் சுற்றியே
வந்த போதும்
ஒளியைப்
பிரதிபலிக்கும் பாக்கியத்தை
நிலவிற்கே தந்த
சூரியன் போல

எண்ணற்றோர்
உன்னைச் சுற்றி
வந்தபோதும்
எனக்கே அருளினாய்
உன் காதலை..!

****
வீட்டிற்குத் தெரியாமல்
பூங்கா வலம் சென்றோம்

பசும்புல் மீது
பரவி அமர்ந்தாய்.
ஆறறிவு ஆணாய்ப் பிறந்ததை விட
ஓரறிவு புல்லாய் முளைத்திருக்கலாம் என
அங்கலாய்த்தது
அடி மனம்...!

****

வாரங்கள்
பல கடந்த பின்
விரலை மட்டும் தொட
சம்மதித்தாய்...

பூ பறிக்க வாய்த்ததற்கு
தீ மிதிக்க நேர்ந்துக்கொண்ட
என்னை எண்ணி
ஏளனமாய் சிரித்தது
அம்மன் சிலை..!Oct 14, 2010

கேட்டுச் சொல் -1உணவு உண்ண 
செவ்வாயை 
ஒன்றே 
படைத்த இறைவன்

என் உயிரைத் 
திண்ண மட்டும் 
கண்களை 
இரண்டாய் படைத்தானா?

***

ஆளில்லா 
ஆல் நிழலில் 
ஓசையின்றி
பேசிக் கிடந்தோம்
விழிகளால்..!

உன்
தேன் திரண்ட
இதழ் இரண்டும்
தேம்பித் தேம்பி
அழுதுக் கொண்டிருந்ததை
நீ உணர்ந்தாயா?Oct 4, 2010

புன்னகை உனது; புரிதல் எனது-1புறாக்களின் ஜீவாதாரத்திற்கு
பிடிப்பிடியாய்
அரிசியை அள்ளி வீசும் நீ

எனது ஜீவாதாரத்திற்கு
ஒன்றிரண்டு
புன்னகையையும் வீசி விட்டு
போகிறாய்..!

***

பறந்து விடாமலும்
இறந்து விடாமலும்
உள்ளங்கைக்குள்
பொத்திப் பாதுகாக்கும்
பட்டாம்பூச்சியைப்போல்

உள்ளத்துக்குள்
உன்
புன்னகைகளையும்...!

***

அகராதிப் புத்தகங்களில்
சல்லடையாய்
சலைத்துப் பார்த்தும்
அகப்பட மறுக்கின்றன

உன்னிதழ்
உதிர்க்கும்
புன்னகைக்கான பொருள்..!

Sep 21, 2010

தேவகணம்’உன்னை
மணந்ததால் தான்
இந்த நாரும் ( நானும்)
மணக்கிறது’ என்ற
உண்மையை நீ
உணராமல்,

வாழ்த்துச் சொல்ல
வாய் திறக்கும் முன்னே
நானுன்னை
மணந்த நாள் தான்
உனது பிறந்த நாள்
எனச் சொல்லி
பிடிவாதம் செய்கிறாய்.
புரியத் தொடங்கியது
என் பிறவிப்பயன்.

*
யாசித்தே பழகிப்போன
எனக்கு
வள்ளலாக எப்போதும் நீ!

இதோ
இந்த யாசகனின்
வாசகங்கள்
வாழ்த்துக்களாய்
மலர்கிறது - உன்
மலர் பாதங்களில்...!

கூடவே,
என் வாசகர்களின்
வாழ்த்துக்களும் ...!


* இன்று (22/09/10) என்னுயிர் மனைவியின் பிறந்த நாள்.


Sep 12, 2010

வாழ்த்தலாம்....எங்களின் சாரலின்பா இன்று (13/09/2010) தனது முதலாம் பிறந்த நாளை எட்டிப் பிடித்து விட்டாள்.

*********************** ******************************


னது போற்றுதலுக்குரிய நண்பர் திரு கோவிந்தசாமி கண்ணன் அவர்கள் தனி மடலில் அவரது விருப்பத்தைத் தெரிவித்திருந்தார். அதை அப்படியே கீழே இணைத்திருக்கிறேன்.

அன்புடை சத்ரியன்!

வாழிய பல்லாண்டு! நலமே புரிக நலமே விளைக!
வியப்பின் எல்லையே தங்கள் வலைத்தள அழகினையும், தரத்தினையும் கண்டே!

வலைப்பதிவு, வலைத்தளம் போன்றவை பற்றி உங்களது தெளிவான நோக்கு “மனவிழி” என்னும் தலைப்பே, ”எல்லாம் மனசுல தாங்க இருக்கு” ,என கூறாமல் கூறுகிறது. வேறென்ன வேண்டும் இளவலே! அறிந்தும் தெரிந்தும் உணர்ந்தும் உள்ள நிலையினை எட்ட வேண்டும் என்பதே ஆன்றோர் வாக்கு. அவ்வழியிலே தொடர்க! வெல்க! எட்டுக இலக்கை! குரு வழி கிடைத்தால் மிக உயர்வன்றோ!

மனவிழி வழியே பலப்பல வலைத்தளப் பயணம் கிட்டுவதும் சிறப்பே. அவைகளில், மனநல மருத்துவர் ஷாலினி, வெட்டிப்பேச்சு போன்ற வலைத்தளங்களும் அடக்கம்!

இப்போதெல்லாம் அதிக நேரம் உள் செல இயலா நிலை ! மேம்போக்கான வலைப்பயணமே இவ்வளவு சொல்கிறதே...!
”சாரலின்பா”
சாரலே இன்பம்! தென்மேற்கு பருவக்காற்று அழைத்துவரும் தூறலிலே திருக்குற்றால அருவியிலே , கருமுகில் சூழ மழைச்சாரலில் கிடைத்திடும் இன்பத்தை அனுபவித்துதான் இப்பெயர்ச் சூடலா? அவ்வனுபவம் இல்லாமலே இப்பெயர்ச் சூட்டல் என்றால் மிகமிகச் சிறப்பு!

“சாரலின்பா” என்ன ஓர் அழகு தமிழ்! பழகு தமிழ்!

சாரலுக்கு, “வாழிய பல்லாண்டு”, என பிறந்த நாள் வாழ்த்துக்கூறி, சாரலைப் பெற்றோரையும் வாழ்த்தி மகிழ்கிறேன்.

இதனை உங்கள் வலைத்தளத்திலே பதிவிட ஆசை. எனக்காக , உங்களால் இதனை வலைப்பதிவில் ஏற்ற முடியுமா?

(நானோ துப்பறியும் சாம்பு! இப்போதுதான் தட்டுத்தடுமாறி வலைப்பதிவிட்டு வருகிறேன்.நான் இன்னும் அறியவேண்டியதும், செய்யவேண்டியதும் நிறையவே இருக்கிறது.)

என்றும் மாறா அன்புடன்,
கோ.கண்ணன்.

என் வலைத்தளம் காண்க: வலைத்தள முகவரி :
இங்கே சொடுக்கவும்
: http://thamizhinezhuchi.blogspot.com/
http://kadaramkondan.blogspot.com/
http://japanilkannan.blogspot.com/2010/08/8.html
http://hightechtamils.blogspot.com
ஒரு வேண்டுகோள் :
“தமிழரெல்லாம் ஒன்றுபடத் தக்க நேரம்,
தமிழரிதை மறப்பாரேல் இனமே சாகும்.”
பாவேந்தர் பாரதிதாசன் கூற்று இன்றைய தேவை !
ஒரு தலைமுறைக்கு மேல் ஆங்கிலவழிக் கல்வியினால் தமிழ் அறிவு மழுங்கடிக்கப்பட்ட சூழலில், நாம் ஒருவரை ஒருவர் குறை காண்பது விடுத்து, நாமும் ஒருவகையில் காரணமே என்று உணர்வோம் ! ஒன்றுபடுவோம் ! வென்றெடுப்போம் இழந்த பெருமைதனை !
சிந்தனையை பொதுவில் வைப்போம்!
தமிழிலேயே பேச முயற்சிக்கலாமே !
வீட்டிற்குள்ளாவது ! நண்பர்களுக்கு இடையேயாவது !
தாய்த் தமிழில் தமிழ் நாட்டில் மட்டுமாவது !
நல்ல தமிழ் இங்கிருக்க தேவையில்லாமல் ஆங்கிலக் கலப்பெதற்கு ?


Sep 10, 2010

வாழ்த்துக்கள்கொண்டாடும் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Sep 8, 2010

காதலர்களின் நாயகன் - மரணம்

Actor Murali Dead


பூவிலங்கு படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் முரளி பெரும்பாலும் காதலர்களின் ஆதர்ஷ நாயனாகவே இருந்தார்.

இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்து விட்டாராம்.

திரைக்கலைஞனாய் நம்மில் கலந்திருந்தவர். அவரது குடும்பத்தாருக்கு மட்டுமின்றி, நமக்கும் தான் அவரது மரணம் பெருந்துயரைத் தந்துவிட்டது.

நாம் அனைவரும் மரணத்தின் சொத்தே!

அவரது குடும்பத்தினருக்கு நம் இரங்கலைத் தெரிவிப்போம்.

Sep 3, 2010

உதட்டுரேகைஅன்புள்ள....
எனத்தொடங்கி
காதலுடன்...என முடிக்கும்
உன் கைப்பிரதிக்
கடிதங்கள் காணாது
தூசு படிந்துக் கிடக்கிறது
என் விழித்திரைகள்.


எழுத்துப்பிழைகளுடன்
என்னை விரும்புவதாய்
எழுதியக்
கடிதமொன்றில்
பெயருக்கு பதிலாக
நீ பதித்தனுப்பிய
உதட்டு ரேகை
பத்திரமாய் இருக்கிறது
ஆழ் மனதில்.


புரையேறும் நேரங்களில்
என் பெயர்ச்சொல்லி
நீ -அழைப்பாய்
என்றொரு
பொய் சொல்லிப் பழகிவிட்டேன்
வெள்ளந்தி மனசிடம்.


Aug 16, 2010

சலவைக்கல் ரோஜா

சேற்றில் அன்றி - யமுனை
ஆற்றில் முளைத்த
வெண் தாமரை

சிதை புதைத்த இடத்தில்
புல் முளைத்திருந்தால்
உலகு அதிசயிக்க
ஒன்றுமில்லாமல் போயிருக்கும்.
”சலவைக்கல் ரோஜா” முளைத்தால்
உலகம் அதிசயிக்காமல்
வேறென்ன செய்யும் ?

முப்பத்தெட்டு வயதில் உதிர்ந்த
முள்ளில்லாத ரோஜாவிற்கு
முகலாய ராஜா
நினைவுச் சின்னம் எழுப்ப
நினைத்த தருணம்,
யாருக்கு உதித்திருக்கும்
நாளைய உலகின்
காதல் சின்னம் இதுவென்று ?

சுவாசம் இன்றி
வாழ முடியாதென்றால்
முன்னூற்றைம்பது
ஆண்டுகள் கடந்தும்
மும்தாஜ் இன்னும்
வாழ்ந்துக் கொண்டிருப்பது எப்படி?புகைப்படம்:- நன்றி google.

Aug 15, 2010

மிட்டாய் பண்டிகைகஸ்ட் 15 , "மிட்டாய் பண்டிகை ".


இந்தியாவின் சுதந்திரதினம் கிராமங்களில் இப்படியாகத்தான் புரிந்துக் கொள்ளப்படுகிறது. பள்ளிகளில் கூட சுதந்திரம் பற்றிய முழுமையான உணர்வை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கத் தவறியிருக்கும் நம் கல்வி முறையை என்னச் சொல்லி பாராட்டுவது?

இந்தப் புரிதலில் எந்த தவறும் இருப்பதாய் எனக்குத் தெரியவில்லை.64 ஆண்டுகளுக்கு முன் சுதந்திரம் கொடுக்கப் பட்டிருக்கிறதேயொழிய , இதுவரை நம்மில் யாரும் அதைப் பெற்றுக்கொள்ளவில்லை என்பதே நிதர்சனமான உண்மை என்பதை எத்தனைப்பேர் ஒத்துக்கொள்வீர்கள்?

சுதந்திரம் என்றால் என்ன என்பதே ,பெரும்பாலானோருக்கு இன்னும் சரியாகப் புரியவில்லை. இதை உணர்த்தாமல் விட்டது யாருடைய தவறு? அல்லது மக்கள் உணராமல் போனதற்கு யார் காரணம்?

//இந்தியாவிற்கு காந்தியடிகள் வந்த பிறகு நேரு, ஜின்னாஹ் மற்றும் இதர தலைவர்கள் சேர்ந்து நடத்தும் மாநாட்டில் கலந்துகொண்டார். அதில் அவர் ஆற்றிய உரையில்..


"நீங்கள் சில நூறு வக்கீல்கள் சேர்ந்து கொண்டு தில்லியிலும், மும்பையிலும் நாட்டு விடுதலை பற்றியும் மக்களின் எழுச்சி பற்றியும் பேசுகிறீர்கள். இதனால் என்ன பயன்? நீங்கள் பேச வேண்டியது 700000 கிராமங்களில், நாட்டுபுறங்களில் உள்ள சாமான்யர்களிடம் தான். அவர்களை நாம் கண்டுகொள்ளாமல் எந்தப் பயனும் இல்லை.."//


ஆக, எந்த ஒரு நிகழ்வின் சாராம்சமும், அதன் முக்கியத்துவமும் கிராம மக்களிடம் கொண்டுபோய் சேர்த்து அவர்களை உணரச் செய்யவேண்டும்.இன்றையத் தலைவர்களிடம் அந்த முனைப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு நம் தேசத்தின் தலையிடமே பதில் இருக்கப்போவதில்லை.

முக்கியமான சிலவற்றைப் பற்றி மக்கள் அறிந்து கொள்ளக்கூடாது என்னும் விசயத்தில் நம் அரசாங்கம் மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்கிறது. காரணம் மிகமிக எளிமையான ஒன்று. மக்கள் உண்மைகளை உணர்ந்துக் கொண்டால், தம்மால் அரசியல் பிழைப்பு நடத்த முடியாது என்பதை ஆளும் / எதிக்கட்சி அரசியல் வியாதிகள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள்.

நமக்கும் கூட, இலவச வேட்டி, இலவச சேலை, இலவச டிவி, கியாஸ் அடுப்பு.... இன்னும் இத்யாதி இத்யாதிகள்...கிடைத்தால் போதுமென்றும், ஒரு நல்ல வேலை, கை நிறைய சம்பளம் , வீடு .... இவைகள் மட்டும் போதுமென்று இருந்து விடுகிறோமே தவிர , சமூகம் பற்றிய எந்த அக்கறையும் இல்லை. ஏனென்றால், நாம் சுயமாக சிந்திப்பதையே படிப்படியாய் இழந்துக்கொண்டு வருகிறோம்.

ஆமாம், உழைப்பின் களைப்பை போக்க நாட வேண்டிய திரைப்படம், தொலைக்கட்சி நிகழ்ச்சிகளுக்கு அடிமையாகிக் கிடக்கிறோம். யாரோ ஒருவனின் படைப்பைப் பற்றியும், சிந்தனையைப் பற்றியும், நடிப்பைப் பற்றியும் சிலாகித்து பேசி, பொழுதைக் கழிப்பதில் உள்ள மகிழ்ச்சி வேறெதிலும் கிடைப்பதில்லை என்ற மனப்போக்கில் வாழ்நாளைக் கடத்திக் கொண்டிருக்கிறோம்.

நாமாய் ஒன்றை சிந்திக்காத வரையில், இனப்பற்றும், மொழிபற்றும், தேசப்பற்றும் ... எங்கிருந்து வந்து நம்மில் நங்கூரமிட்டு விடப் போகிறது?

முன்பொரு நாளில் சுதந்திரம் என்றால் என்ன என்பதை உணர்ந்து, அதற்காக போராடி , இன்னுயிர் நீத்த தியாகிகளுக்கு என் தலை தாழ்த்தி வணக்கமும் , நன்றியும் உரித்தாக்கிக் கொள்கிறேன்.

Aug 12, 2010

உசுரே போகுது

சூரியன்
ஒளியால்
நீரை
உறிஞ்சுவது போல்

கூரிய
விழியால்
என்னுயிரை
நீயும்.....!


*** *** ***

Aug 10, 2010

நட்பின்றி இயங்காது உலகுஜூன் 16 , 2010 அன்று 40 நாட்கள் விடுப்பில் தாய்த்தமிழகத்திற்குச் சென்றேன். சென்னை விமான நிலையத்தில் என்னை வரவேற்க (எனது தங்கையின் கணவர் வர சற்று தாமதமாகி விட்டது) நண்பர் கயிலை மு.வேடியப்பன் அவர்கள் வரவிருந்தார். தவிர்க்கவே முடியாத காரணத்தால் அவராலும் வரமுடியாமல் போகவே, அவருடைய நண்பர் ஒருவரை சுமோ வாகனத்துடன் அனுப்பி, அவரது “ டிஸ்கவரி புக் பேலஸ்”-க்கு அழைத்துப்போக ஏற்பாடு செய்திருந்தார்.

காலை உணவாக பூரி வாங்கி வைத்து காத்திருந்தார். முதன்முதலாக இருவரும் நேரில் சந்தித்துக் கொள்கிறோம். ஆனால், அப்படியொரு எண்ணமே இருவருள்ளும் இருக்கவில்லை.மாறாக, நெருங்கிய உறவினரை நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திப்பதைப் போலவே உணர்ந்தோம்.
சென்று சேர்ந்ததும் முதல் வேலையாக பூரியை பதம் பார்த்தபின், சிறிது நேரம் பேசி மகிழ்ந்தோம். அன்று புத்தகக்கடைக்கு அகநாழிகை பொன்.வாசுதேவன் அவர்களும் வந்திருந்தார்.அவரையும் அங்கே சந்தித்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி. பின், சில புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து வாங்கிக் கொண்டு ஊருக்குப் புறப்படத் தயாரானேன்.

சுமோ ஓட்டி வந்த அதே நண்பர் அதுவரை வாகனத்திலேயே காத்திருந்து (நான் அதை எதிர்ப்பார்த்திருக்கவில்லை), என்னை அழைத்துக் கொண்டு போய் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சேர்த்தார். எனது தகவலின் பேரில் தங்கையின் கணவர் அங்கே வந்து காத்திருந்தார். சுமோ ஓட்டிய நண்பருக்கு நன்றி சொல்லிவிட்டு,
“பாஸ் தண்ணிப்பழக்கம் உண்டா?”, என்றேன். (எனக்கும் அந்த பழக்கம் இல்லைங்க. நம்பனும். நம்பிக்கைதான் வாழ்க்கை.)

“ஆறு மாசம் ஆச்சுங்க பாஸ். கல்யாணத்துக்கப்புறம் விட்டுட்டேன்”, என்றார்.

“ரொம்ப சந்தோசம்”, என்று மீண்டும் ஒருமுறை கை குலுக்கி விடைப்பெறுகையில்,

இன்னொரு சந்தோசம் பாஸ் உங்களுக்காக விமான நிலையத்தில் காத்திருந்த போது உங்க தங்கச்சி (அவரின் மனைவி) போன் செஞ்சிருந்தாங்க. ”உண்டாகி இருக்காங்களாம்”, என்றார்.

முதல் சந்திப்பிலேயே உறவினராகிப்போன அந்த நட்பை என்ன பேர் சொல்லி அழைக்கலாம்?

அதைவிடவும் கவனிக்கவேண்டியது, மனைவி சொன்ன மகிழ்வானத் தகவலைக்கேட்டு உடனே வீட்டிற்குச் சென்று தனது அன்பையும் , மகிழ்வையும் வெளிப்படுத்துவதை தவிர்த்துவிட்டு , நண்பனின் நண்பனுக்காக மூன்று மணி நேரத்திற்கும் மேலாக (எனக்காக) காத்திருந்த அவரது அன்பை என்ன பேர் சொல்லி அழைக்கலாம்?

“இதை ஏன் மொதல்லயே என்கிட்ட சொல்லலை. நீங்க போய் தங்கச்சியப் பாத்திருக்கலாம். நான் ஆட்டோ புடிச்சி போயிருப்பனே”, என்றேன்.

“பரவாயில்ல விடுங்க பாஸ், உங்களை சந்திக்கறதும் கூட மகிழ்ச்சியான விசயந்தானே. நிலமைய சொன்னா வீட்ல ஏத்துக்குவாங்க பாஸ்” என்றார்.

அந்த நண்பரின் பெயர் “ சுரேஷ் ”. சென்னை தான் அவரது சொந்த ஊராம்.

இரு கைகளையும் பற்றிக் குலுக்கி அவருக்கு வாழ்த்துச் சொல்லி, அந்த புதுத் தங்கைக்கு எனதன்பை தெரிவிக்கச் சொல்லி விட்டு , ஊருக்குப் பயணமானோம். பயணம் இனிதாய் அமைந்தது. அதைவிட இனிது,

எனக்கு, பதிவுலகம் தந்த நட்புகள்......!


அகநாழிகை பொன்.வாசுதேவன் நண்பர்களுடன்.

வேடியப்பனுடன் நான்.


கீழே- “டிஸ்கவரி புக் பேலஸ்”- இன் புகைப்படங்கள்.
நம்ம ”டாபிக்”குல கூட நிறைய புத்தகங்கள் இருக்கே.

அகநாழிகை பொன்.வாசுதேவனுடன் வேடியப்பன்.
நட்பின் ப(பா)லம் அடுத்த பதிவிலும் தொடரும்.....

Jul 30, 2010

சேமிப்புகளில் சில...
மாரிக்காலத்திற்கு
தானியம் சேகரிக்கும்
எறும்புகள் போல

மரண காலத்திற்கு
உன் நினைவுகளைச்
சேகரித்து வைக்கிறேன்.


***


அறுத்து விட்ட
அடுத்த நாளே
குருத்து நீட்டி
வளர்ந்து நிற்கும்
வாழைக் கன்று போல

மறக்க நினைத்தாலும்
மறக்காமல் வந்து நிற்கிறது
உன் நினைவுகள்...!


Jul 29, 2010

தாஜ்மஹால் ஒன்று...
நான்
உன்னை காதலிக்கிறேன்.
கடவுள் மீது சத்தியம்
என்றேன்.

” போடா பொய்யா” என்றாய்.

தந்திரமாய்
சிந்தித்து
தாஜ்மஹால் மீது சத்தியம்
என்றேன்.

”தாலி” எப்போது என்கிறாய்.


Jul 26, 2010

சாரலுடன்...எம்மகள் சாரலின்பாவுடன்... இன்பமாய் இருந்த நொடிகளில் ... ஒரு படம்.இப்பதான் தாயகத்திலிருந்து வந்திருக்கேன். மிச்சத்தை அப்புறமா பகிர்ந்துக்கறேன்.

Jun 15, 2010

யாதுமாகி....


மா கவி பாரதிக்கு
யாதுமாகி நின்றாளாம் காளி.

ஏழை கவி எனக்கு
யாதுமாய்
நீ...!


*****************************

அன்பு நண்பர்களே,

மகள் சரலின்பாவைக் காண ஒரு மாத விடுப்பில் (ஜூன் 16 ) தமிழகம் செல்கிறேன். மீண்டும் சந்திக்கலாம்.

Jun 9, 2010

இரு விழியும் நானும் !


தக்கையின் அசைவுக்காக
தவமிருக்கும்
மீன்பிடிச் சிறுவனைப் போல்

தத்தையுன்
கண் அசைவை
எதிர்ப்பார்த்து

நான்...!
***


விழும்போது சிறிதாயொரு
வட்ட அலையெழுப்பி விட்டு
நீரடியில் அமர்ந்துக்கொள்ளும்
சிறு கல் போல்

என்னுள்
உன்
விழியும்....!

Jun 8, 2010

ஆண்மை இழந்த இறையாண்மைஒரு கொலைக்கு தண்டனையாய்
ஒரு இனத்தையே படுகொலை செய்ய
துணை போன இந்தியாவில்
இன்றொரு ( 07/06/10)
விசித்திரம் நிகழ்ந்தது.

பதினைந்தாயிரம் உயிரைக் கொன்று
பல்லாயிரத்தோர் உறுப்புகளைத் தின்று
கால் நூற்றாண்டு காலந்தாழ்த்தி
காசு பணங்கொண்டு காய்களை நகர்த்தி

போபால் வழக்கில்
கொலைக்காரர்களுக்கு
குறைந்தபட்ச தண்டணையாய்
ஈராண்டு சிறை விதிக்கிறேன் - என
தீர்ப்பொன்றைத் துப்பியது பணம்.
நீதிதேவதை முகத்தில்!

ஆண்மை சோதனைக்கு
உட்படுத்த வேண்டிய கட்டாயத்தில்
இந்தியாவின் இறையாண்மை!*************************************


இணைப்புப் படங்கள் போபால் விஷவாயுவினால் நிகழ்ந்த கொடூரக்காட்சிகள்.Jun 4, 2010

யாருக்குத் தெரியும்?


குளித்து முடித்து
கூந்தல் உலர்த்துகிறாயோ
நீ ?


வாய்விட்டுச் சிரித்தால்
நோய்விட்டுப் போகுமென்று
யார் சொன்னது உனக்கு?


May 25, 2010

நீயே சொல் - 07

07

நாளுக்கு நாள்
ஆழப்பட்டுக்கொண்டே போகும்
நிலத்தடி நீரைப்போல

உன்
காதல் என்னுள்
மீளமுடியா ஆழம் தேடி
மூழ்க முயலும்
மாயம் என்ன...?

May 18, 2010

கரி நாள்


சக உறவுகள்
சவச் சகதியாக்கப்பட்டு
தமிழ் வரலாற்றில்
கரி படிந்த இந்நாளை
துளி கண்ணீர் சிந்தி
மெளனமாய் ஓர்நொடி
மனதார பிரார்த்திக்க
மறந்து,

பிரபல நடிகை
‘பிற பல’ கட்சியில் இணைந்ததை
பிரதானமாய்க் கொண்டாடும்
வல்லரசின் இந்த
வருங்காலத் தூண்களை

பொறுத்தருள்
என் மனமே!


May 12, 2010

உன்னை எப்படி....?எத்தனையோ முறை
எச்சரித்தப் பின்னும்
இப்படியே செய்கிறாய் நீ.

அலுவல் நேரத்தில்
வேண்டாம் என்கிறேன்.
அப்போதுதான்
அசத்தும் நடையில்
அத்துமீறி வந்து நிற்கிறாய்!

என்
வேலை போனால் உனக்கென்ன?
உன்
தேவை தீர்ந்திட வேண்டுமென்பதில்
தீவிரமாய் இருக்கிறாய்.

உன்னை
விரும்பிய பாவத்திற்கு
எனக்கு...
இன்னமும் வேண்டும்.

காதலியாய்
இருந்திருந்தால்
எப்போதோ விட்டிருப்பேன்.

கவிதையே
உன்னை எப்படி....?

Apr 29, 2010

’விழி’ப்பயன்


நடப்பதெல்லாம்
'விதி'ப்பயன்
என்கிறாய் நீ.

உண்மையைச் சொல்லவா?

என் வாழ்வில்
நடப்பதெல்லாம்
உன்
'விழி’ப்பயன் ..!

Apr 23, 2010

நீயே சொல்-06எப்பொழுது
எனை பார்ப்பாய் என
எப்பொழுதும்
உனையே பார்த்துக் கொண்டிருக்கும்
என் கண்ணிரண்டை

என்ன செய்யலாம்...?


********************

உன்னடிமை நான் என்பது
மிகையென்று தான் படுகிறது.
உன் அன்பினில்
கட்டுண்டு கிடக்கிறேனே - அதை

வேறெப்படி சொல்லட்டும்...?


Apr 8, 2010

பரிசு


பரிசுகள் பரிமாறிக் கொள்ள
காதலர்களுக்கு மட்டும்
காரணங்களே தேவைப்படுவதில்லை.

நேற்று நீ தந்து போன
கவிதைப் புத்தகத்தை
படிக்கப் பிரிக்கையில்

உள்புறம் மடங்கியிருந்த
ஒற்றைத்தாளின்
வெட்டுக்கு விலகிய முனை
சற்றே வெளியில்
நீட்டித் தெரிகிறது,

உன்
சின்னப் புன்னகையில்
மின்னலாய்த் தெரியும்
தெத்துப்பல் போல..!

Apr 5, 2010

யார் அந்த அவர்?


"புணர்ச்சி பழகுதல் வேண்டா; உணர்ச்சிதான்
நட்புஆம் கிழமை தரும். " - குறள்

ட்புச் செய்வதற்குத் தொடர்பும் பழக்கமும் வேண்டியதில்லை; ஒத்த உணர்ச்சியே நட்பு ஏற்படுவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கும். மேற்கண்ட திருக்குறளுக்கு , முனைவர் மு.வரதராசனார் அவர்கள் கூறும் விளக்கம் இது.

அவருடைய ஆறு மாதப் பெண்குழந்தையின் பெயர் “ மதிவதனி”. என்ன செய்வது ? என் அன்பைத் தெரிவிக்க என்னால் செய்ய முடிந்தது இதுதான்” , என்றார். நெகிழ்ந்து விட்டேன்.

- இந்த வரிகளைக் கொண்டுதான் ஒரு (ண்)பரை அறிமுகம் செய்திருந்தார் நமதருமைச் சகோதரி திருமதி. தேனம்மை லக்ஷ்மணன்.

“ மதிவதனி” என்ற பெயரை நானும் எனது மகளுக்குச் சூட்ட தெரிவு செய்திருந்தேன். அது தமிழ்ப்பெயர் அல்ல என்பதால் வேறு பெயர் (சாரலின்பா) சூட்டினோம்.

அவர் எந்த எண்ணத்தில் தன் மகளுக்கு மதிவதனி என்னும் பெயர் சூட்டினாரோ அதே காரணத்திற்காகத்தான் நானும் அப்பெயரைத் தெரிவு செய்திருந்தேன்.
(இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் மேலேயுள்ள குறளை ஏன் இங்கே குறிப்பிட்டுள்ளேன் என.)
ஆம்! நட்பு கொள்ள ஒத்த சிந்தனையே போதும்...!

யார் அந்த அவர்?

சென்னை கே.கே. நகரில் “ டிஸ்கவரி புக் பேலஸ்” என்னும் புத்தகக்கடையின் நிறுவனரும், முதலாளியுமான இளம் தொழில் முனைவர் திரு.வேடியப்பன் அவர்கள் தான் - அந்த அவர்.

“இதென்ன பெரிய விஷயம்..?”, எனக் கேட்பது புரிகிறது. அதற்கு பதில் இதோ....

1. இலக்கிய ஆர்வலர்களின் பாலமாகத் திகழ்கிறார். (அவருடைய வலைப்பூவை ஒருமுறை பார்வையிடுங்கள், புரியும். பதிவின் முடிவில் இணைப்பு கொடுத்துள்ளேன்)

2. வளரும் எழுத்தாளர்களில் குறிப்பிடத் தகுந்தவர்.


"சென்னையில் ஹிக்கின்ஸ் பாதாம்ஸ்., லேண்ட்மார்க் போன்ற கடைகளில் புத்தகம் வாங்குபவர்கள் ஒருமுறை இங்கும் வாங்கிப் பார்க்கலாம்- என்று தேனம்மை குறிப்பிட்டிருந்தார்.

வாசிப்பதற்கு எனக்குச் சில நூல்கள் தேவைப்பட்டன. என்னிடம் புத்தகப்பட்டியல் இருக்கிறது. எனக்காக கடைகடையாய் ஏறி இறங்கி தேடிப்பிடித்து வாங்கி, அதை யார் நமக்கு அனுப்பி வைக்கப்போகிறார்கள் என ஏங்கிக் கொண்டிருந்தேன்.

திருமதி தேனம்மைலக்ஷ்மணன் அவர்களின் பதிவைப் படித்து விட்டு சிறிது நேரத்தில், திரு. வேடியப்பன் அவர்களைத் தொடர்பு கொண்டு பேசி மகிழ்ந்து எனது விருப்பத்தைச் சொன்னேன்.

தற்காகத்தானே நாங்கள் இருக்கிறோம்”, என அகமகிழ்ந்து உங்களுக்குத் தேவையான நூல்களின் பட்டியலைக் கொடுங்கள். நான் வாங்கி அனுப்பி வைக்கிறேன் என்றார். பட்டியலைச் சொன்னேன். ”நம் கடையிலேயே நீங்கள் கேட்டிருக்கும் பெரும்பாலான புத்தகங்கள் இருக்கிறது, ஒன்றிரண்டு நம் நண்பர்களிடம் பெற்று அனுப்பி வைக்கிறேன் அது என் பொறுப்பு”, என்றார்.


1. 401 காதல் கவிதைகள் - சுஜாதா
2.விஞ்ஞானச் சிறுகதைகள் - சுஜாதா
3.காமக் கடும்புனல் - மகுடேஷ்வரன்
4.விஷ்ணுபுரம் - ஜெயமோகன்
5.கன்னியாக்குமரி - ஜெயமோகன்
6.சங்கச்சித்திரங்கள் - ஜெயமோகன்
7.பாரதிதாசன் கவிதைகள் -பாரதிதாசன்
8.ராஜீவ் கொலை வழக்கு - ரகோத்தமன்
9.ஒரு பட்டாம்பூச்சியின் கனவுகள் - நிலாரசிகன்
10.ஞானத்தின் பிரம்மாண்டன் - ஜக்கி வாசுதேவ்
11.ஆன்மீகத்தில் பொருந்தாத மறைஞானியின் சுய சரிதை- ஓஷோ


இத்துடன் என் செல்ல மகள் சாரலின்பாவிற்கும் சில புத்தகங்கள் எல்லாம் சேகரித்து எனக்கு வேண்டிய நூல்களை (தற்போது நான் பணிபுரியும்) சிங்கப்பூருக்கும், என் மகளுக்கான நூல்களை எங்கள் வீட்டிற்கும் (தமிழ் நாடு) அனுப்பி வைத்தார்.


நண்பர்களே!


ன்னைப் போன்று அயல் நாட்டில் பணியில் இருப்பவரோ, அங்கேயே நிரந்தரமாய் வாழ்பவர்களோ உங்களுக்கும் விரும்பிய புத்தகங்கள் வாங்கும் தேவை இருப்பின் நீங்களும் திரு.வேடி அவர்களைத் தொடர்பு கொள்ளுங்கள். வாங்கிப் படித்து மகிழுங்கள். அவர் தொழில் மென்மேலும் சிறக்க வாழ்த்துங்கள்....!


அவரது வலைப்பூவின் முகவரி : http://discoverytamilbooks.blogspot.com/

அவரைத் தொடர்பு கொள்ளும் முன் இங்கே சுட்டிப் பாருங்கள்.


இவை எல்லாவற்றையும் விட மிக நெருங்கிய நண்பராகி விட்டார். அதுவே எனக்கு பெருமகிழ்ச்சி.

...நட்புடன் சத்ரியன்

வேடியப்பன் அவர்களைத் தொடர்பு கொள்ள:-

டிஸ்கவரி புக் பேலஸ் ,
6 மகாவீர் காம்பளக்ஸ் ,
முனுசாமி சாலை (பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் அருகில்),
கேகே.நகர், சென்னை 78
தொடர்பு எண் :9884060274, 9940446650

Apr 1, 2010

பாவம்தன்னை மறத்தல் ஞானமாம்
உன்னால் அப்படித்தானே இருக்கிறேன்.
பிறகேன்
பார்ப்பவரெல்லாம் பைத்தியம்
என்றென்னை பரிகசிக்கிறார்கள்...?

பைத்தியக்காரர்கள்.

Mar 26, 2010

காதலா இருக்குமோ..?

காமாலை
நோய் கொண்ட கண்களுக்கு
காண்பதெல்லாம் மஞ்சளாய் தெரியும்
என்பார்கள்.

என்னவென்று தெரியவில்லை
என் கண்களுக்கு மட்டும் காண்பதெல்லாம்

நீயாகவே தெரிகிறதே

என்ன நோய் இதுவென
எப்படி நான் கண்டறிய...?

Mar 12, 2010

நண்பனின் நண்பன் உயிர் காப்போம்

அன்பின் வலையுலக நண்பர்களே!

' நாடோடி ' திரைப்படம் பார்த்து , அதில் இடம் பெற்ற கதாபாத்திரங்களின் நட்பை நம்மில் பலரும் சிலாகித்திருப்போம். அப்படத்தில் ஒரு வாசகம் இடம் பெற்றிருக்கும்
“ நண்பனின் நண்பன் நமக்கும் நண்பன் ” என்று.

இன்று அவ் வசனத்தின் அவசியம் உணரவேண்டிய ஒரு அவசர தருணம்.

இங்கே செ.சரவணகுமார் சுட்டி முழு விவரங்களை அறிக.

நம்மால் இயன்றதை செய்து ஒருவரின் உயிரைக் காக்க உங்களின் வலைப்பூவிலும் இணைப்புக் கொடுக்கலாமே...!

http://saravanakumarpages.blogspot.com/2010/03/blog-post_11.ஹ்த்ம்ல்

Mar 9, 2010

நீயே சொல் - 05

05

'
திருமண நிச்சயம் ’
பெரியோர்களால்
நிச்சயிக்கப் பட்டு விட்டது.

` நாள், நட்சத்திரம் ’
குறித்தாகி விட்டது.

` அழைப்பிதழ் '
அதுவும் அச்சாகி விட்டது.

‘ ஊர் உறவுகளை '
அழைத்தாகி விட்டது.

எஞ்சியிருப்பது
இடைப்பட்ட
இரு நாட்கள் மட்டும் தான்.

ஒற்றை அழைப்பிதழைக்
கையில் வைத்து
மணமகள் பெயரை
உற்று உற்று பார்த்தபடி...

திரைப்படங்களில் நிகழும்
திருப்புமுனை காட்சி போல்
அதிசயம் எதுவும் நிகழ்ந்து

` இவள் ' பெயருக்கு பதிலாய்
` உன் பெயர் ' முளைத்திடாதா? ...என

உள்ளுக்குள்
முனகித் தவிக்கும்
மனதை என்ன செய்யலாம்....?

Mar 1, 2010

வாய் மை
இமைகளுக்குத்
தீட்டும் மை
"கண் மை " என்கிறார்களே.

உன்

இதழ்களுக்குத் தீட்டும் மை
வாய் மை” - யோ....?
பின்குறிப்பு : -

என் மாப்பிள்ளைகள் இருவருக்கு முன்பு இணைத்திருந்த படங்கள் கவிதைக்குப் பொருந்தவில்லையாம். அதனால் மாற்றவேண்டியதாகிவிட்டது.

(இப்ப பொருந்துதான்னு பார்த்து சொல்லுங்க மாப்ள.)