Oct 5, 2012

ஆலிங்கனா-03


மாரளவு செடிகளை விலக்கிக் கொண்டு வரப்பில் நீ வருவதைக் கண்டதுமே மழைப்பொழிய தொடங்கும் முன் சிலுசிலுவென ஒரு மென்காற்று தரையோடு தவழ்ந்து வந்து உடலைத்தழுவி உயிரை வாங்குமே, அதுபோல உள்ளமெங்கும் ஒரு குளிர் பரவி ஓயாமல் பேரானந்ததைப் பிரசவித்தபடியே இருந்தது. 

வரும்போதே ஒரு வண்ணத்துப்பூச்சியைப் பிடித்த நீ, அதன் தவிப்பைத் தாளாது பறக்கவிட்டு வந்திருந்தாய். ஆனாலும், விரல் நுனியில் ஒட்டியிருந்த வண்ணங்கள் அழிந்துவிடாமலிருக்க நீ எடுத்த பிரயத்தனங்களைக் காண  கண்ணிரண்டு போதவில்லை போ. நானறிந்த வரையில், நான் ஆடு மேய்ப்பதை ஆனந்தமாய் பார்த்த முதல் மோகினி நீ மட்டும் தான் ஆலிங்கனா.

வெள்ளைச்சட்டை உனக்கு வெகு அழகு. சட்டையின் இட,வல பைகளில் ஒளித்து வைத்திருக்கும் பம்பரத்தை நினைவூட்டும் உன் கழுத்துக்குக் கீழான பகுதியைப் பார்க்காமல் தவிர்க்கும் பொருட்டு நான் பட்ட பாட்டை நீ பார்த்தாய். ஆனாலும் என்னை கடிந்துக் கொள்ளவில்லை நீ. தொடர்ந்தும் நான் பார்த்துப்பார்த்து பசியாகிக் கொண்டேன். பேச்சினூடே ”தொய்யாம்பால் சாப்பிடுவியா?’, எனக்கேட்டேன். பேந்தப்பேந்த விழித்தாய். செய்து தருகிறேன் எனச்சொல்லி ஒரு நொடியும் தாமதிக்காமல் தாயாய் செயல்பட்டேன்.

மேய்ந்துக்கொண்டிருந்த வெள்ளாட்டு மடியில் பால் கனத்திருந்தது. பசியாறக் கொண்டு வந்திருந்த கேழ்வரகு கூழை ஆட்டிற்கு உண்ணக்கொடுத்து பின்னங்கால்களை உன்னை பிடிக்கச்சொல்லி,  தூக்குச்சட்டியில் பால் பீய்ச்சி வெதுவெதுப்பு ஆறும் முன் வெப்பாலைக் கொழுந்துகளைக் கிள்ளிப்போட்டு மூடியிட்டு வைத்துவிட்டு,  சில நிமிடங்கழித்து உன் கையிரண்டை மலர்த்தி  கவிழ்த்துக் கொட்டினேன். உன் உள்ளங்கையில் மெல்ல அதிர்ந்த அந்த  ”பால் கட்டி” வெள்ளை இதயம் அசைவது போலிருந்ததைக் கண்டதும், ”உடலுக்குள் ரத்தத்திற்கு பதிலாக பால் ஓடினால் நம் இதயமும் கூட இப்படித்தான் இருக்கும் இல்லையா”, என  நீ கேட்டது நெஞ்சுக்குள் நங்கூரமிட்டபடியே இருக்கிறது  ஆலிங்கனா.

காய்ச்சாதபால் கட்டியானதை நம்ப முடியாமல் விழித்தாய். விவரித்தேன். சுவைத்து குதூகளித்தாய். எஞ்சியதை எனக்கும் ஊட்டிவிட்டாய். என் வாயைச்சுற்றி திட்டுதிட்டாய்  ஓட்டியிருந்த பால்கட்டியைக் கூச்சமின்றி துடைத்தெடுத்தாய் . தேவதை கூட தாயாகும் தருணத்தை உணர்ந்தேன் நான்.  அதற்கு முன் ஆயிரம் முறை தொய்யாம்பால் செய்து சாப்பிட்டவன் தான் என்றாலும், உன் கையால் உண்டதும் அமுதசுவை அறிந்தேன் அன்று ஆலிங்கனா. 

வெயில் சற்று உரக்க வீசியது.  கொன்றை மரத்தின் வேர்கள் மீதமர்ந்து பேசத்துவங்கினோம். அது ஆவணி மாதம். தங்க நிறத்தில் கொத்துக்கொத்தாய்ப் பூத்து தொங்கிக் கொண்டிருந்த கொன்றைப்பூக்கள் மெதுமெதுவாய் அசையும் காற்றுக்குங்கூட ஒன்றிரண்டு  பொன்னிறப்பூக்களை  நம்மீது உதிர்த்து பூரிப்பு கொண்டது கொன்றைமரம்.

குறிப்பு:- மேலே ”வெப்பாலை” என்னும் சொல்லின்மேல் சொடுக்கினால் படம் பார்த்து விளங்கிக் கொள்ளலாம்.