Oct 5, 2012

ஆலிங்கனா-03


மாரளவு செடிகளை விலக்கிக் கொண்டு வரப்பில் நீ வருவதைக் கண்டதுமே மழைப்பொழிய தொடங்கும் முன் சிலுசிலுவென ஒரு மென்காற்று தரையோடு தவழ்ந்து வந்து உடலைத்தழுவி உயிரை வாங்குமே, அதுபோல உள்ளமெங்கும் ஒரு குளிர் பரவி ஓயாமல் பேரானந்ததைப் பிரசவித்தபடியே இருந்தது. 

வரும்போதே ஒரு வண்ணத்துப்பூச்சியைப் பிடித்த நீ, அதன் தவிப்பைத் தாளாது பறக்கவிட்டு வந்திருந்தாய். ஆனாலும், விரல் நுனியில் ஒட்டியிருந்த வண்ணங்கள் அழிந்துவிடாமலிருக்க நீ எடுத்த பிரயத்தனங்களைக் காண  கண்ணிரண்டு போதவில்லை போ. நானறிந்த வரையில், நான் ஆடு மேய்ப்பதை ஆனந்தமாய் பார்த்த முதல் மோகினி நீ மட்டும் தான் ஆலிங்கனா.

வெள்ளைச்சட்டை உனக்கு வெகு அழகு. சட்டையின் இட,வல பைகளில் ஒளித்து வைத்திருக்கும் பம்பரத்தை நினைவூட்டும் உன் கழுத்துக்குக் கீழான பகுதியைப் பார்க்காமல் தவிர்க்கும் பொருட்டு நான் பட்ட பாட்டை நீ பார்த்தாய். ஆனாலும் என்னை கடிந்துக் கொள்ளவில்லை நீ. தொடர்ந்தும் நான் பார்த்துப்பார்த்து பசியாகிக் கொண்டேன். பேச்சினூடே ”தொய்யாம்பால் சாப்பிடுவியா?’, எனக்கேட்டேன். பேந்தப்பேந்த விழித்தாய். செய்து தருகிறேன் எனச்சொல்லி ஒரு நொடியும் தாமதிக்காமல் தாயாய் செயல்பட்டேன்.

மேய்ந்துக்கொண்டிருந்த வெள்ளாட்டு மடியில் பால் கனத்திருந்தது. பசியாறக் கொண்டு வந்திருந்த கேழ்வரகு கூழை ஆட்டிற்கு உண்ணக்கொடுத்து பின்னங்கால்களை உன்னை பிடிக்கச்சொல்லி,  தூக்குச்சட்டியில் பால் பீய்ச்சி வெதுவெதுப்பு ஆறும் முன் வெப்பாலைக் கொழுந்துகளைக் கிள்ளிப்போட்டு மூடியிட்டு வைத்துவிட்டு,  சில நிமிடங்கழித்து உன் கையிரண்டை மலர்த்தி  கவிழ்த்துக் கொட்டினேன். உன் உள்ளங்கையில் மெல்ல அதிர்ந்த அந்த  ”பால் கட்டி” வெள்ளை இதயம் அசைவது போலிருந்ததைக் கண்டதும், ”உடலுக்குள் ரத்தத்திற்கு பதிலாக பால் ஓடினால் நம் இதயமும் கூட இப்படித்தான் இருக்கும் இல்லையா”, என  நீ கேட்டது நெஞ்சுக்குள் நங்கூரமிட்டபடியே இருக்கிறது  ஆலிங்கனா.

காய்ச்சாதபால் கட்டியானதை நம்ப முடியாமல் விழித்தாய். விவரித்தேன். சுவைத்து குதூகளித்தாய். எஞ்சியதை எனக்கும் ஊட்டிவிட்டாய். என் வாயைச்சுற்றி திட்டுதிட்டாய்  ஓட்டியிருந்த பால்கட்டியைக் கூச்சமின்றி துடைத்தெடுத்தாய் . தேவதை கூட தாயாகும் தருணத்தை உணர்ந்தேன் நான்.  அதற்கு முன் ஆயிரம் முறை தொய்யாம்பால் செய்து சாப்பிட்டவன் தான் என்றாலும், உன் கையால் உண்டதும் அமுதசுவை அறிந்தேன் அன்று ஆலிங்கனா. 

வெயில் சற்று உரக்க வீசியது.  கொன்றை மரத்தின் வேர்கள் மீதமர்ந்து பேசத்துவங்கினோம். அது ஆவணி மாதம். தங்க நிறத்தில் கொத்துக்கொத்தாய்ப் பூத்து தொங்கிக் கொண்டிருந்த கொன்றைப்பூக்கள் மெதுமெதுவாய் அசையும் காற்றுக்குங்கூட ஒன்றிரண்டு  பொன்னிறப்பூக்களை  நம்மீது உதிர்த்து பூரிப்பு கொண்டது கொன்றைமரம்.

குறிப்பு:- மேலே ”வெப்பாலை” என்னும் சொல்லின்மேல் சொடுக்கினால் படம் பார்த்து விளங்கிக் கொள்ளலாம்.
31 comments:

 1. Replies
  1. நன்றிங்க தனபாலன்.

   Delete
 2. பால்ய கால காதலின் பச்சை மனம் வீசுகிறது அருமை சத்திரியன் ....பால் எப்படி கெட்டியாகும் விளக்கமாக சொல்லுங்களேன் எனக்கு புதிய செய்தியாக இருகிறது

  ReplyDelete
  Replies
  1. சரளா,

   விளக்கத்தை நான்காம் பத்தியிலேயே எழுதியிருக்கிறேன்.

   //வெதுவெதுப்பு ஆறும் முன் வெப்பாலைக் கொழுந்துகளைக் கிள்ளிப்போட்டு மூடியிட்டு வைத்துவிட்டு, சில நிமிடங்கழித்து//

   உங்கள் ஊர்ப்பகுதியில் அம்மரத்தின் பெயர் வேறுவிதமாக அழைக்கப்பெறலாம். பட இணைப்பை இங்கே இணைத்துள்ளேன் இணைப்பைச் சொடுக்கி பார்த்துக் கொள்ளுங்கள்.

   http://nbranaikatti.blogspot.sg/2011/12/blog-post_27.html

   Delete
 3. கண்களை கட்டி காட்சிகளுக்குள் அழைத்துச் செல்கிறது வரிகள் கண்ணா.

  ReplyDelete
  Replies
  1. அப்படியா? மகிழ்ச்சி சசி. கண்ணை மூடிகிட்டே போங்க.

   Delete
 4. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_6.html) சென்று பார்க்கவும்...

  நன்றி...

  ReplyDelete
  Replies
  1. கண்டேன்.மகிழ்ந்தேன். தகவலுக்கு நன்றிங்க.

   Delete
 5. அருமையான காதல் கதை. நல்ல ரசனை. பால் எப்படி கெட்டியாகும் என்று சீக்கிரம் சொல்லுங்கள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க வெற்றி. சரளா கேட்டிருக்கும் கேள்வியையே நீங்களும் கேட்டிருக்கிறீர்கள். அவர்களுக்கு சொல்லியிருக்கும் பதில் உங்களுக்கும். அந்த இணைப்பைச் சொடுக்கி பாருங்கள்.

   Delete
  2. எனக்குத் தெரிந்தவரை இந்த வெப்பாலை சாப்பிட உகந்தது இல்லை என்று நினைக்கிறேன், அதனை நாம் அடிபட்ட இடத்தின் வீக்கம் குறைய பூசுவோம், எங்கள் ஊரிலும் இதன் பெயர் வெப்பாலைதான். உண்ண உகந்ததா என்பதுதான் சிறு சந்தேகமாக உள்ளது...

   Delete
 6. ஒவ்வொரு வரியிலும் காதல் மணம் வீசுகிறது கண்ணா. தேவதை தாயாகும் தருணத்தை வர்ணித்த விதம் அருமை. இந்த வெப்பாலை பற்றிய விஷயம் எனக்கு மிகமிகப் புதியது.

  ReplyDelete
 7. அழகிய படைப்பு... அருமை சகோ

  ReplyDelete
 8. ஆலிங்கனா எப்படிஎல்லாம் படுத்துகிறாள். காதல் சொட்டுகின்றது.

  "வெப்பாலை" இதை இங்கு என்ன பெயர்சொல்லி அழைக்கிறார்கள் தெரியவில்லை.

  காற்றில் மிதந்து வரும் நாங்கள் சிறுவயதில் பஞ்சுப் பூ என பிடித்து ஊதி விளையாடி இருக்கின்றோம்.

  ReplyDelete
 9. விளக்க முடியாத உணர்வோடு ரசிக்கிறேன். ஒவ்வொரு முறையும் முதலிலிருந்து படித்து மயங்குகிறேன். நிதானமாகவே எழுதுங்கள். ஒவ்வொரு வரியும் நெஞ்சை வருடிச் செல்கிறது.

  ReplyDelete
 10. வெப்பாலையிலிருந்து சர்க்கரை எடுக்க முடியுமா தெரியவில்லை.

  ReplyDelete
 11. மன்ம் ஒன்றிய எழுத்து.இப்படி எழுத்துக்களைப் பார்ப்பது அபூர்வமாகிப்போன நேரங்களில் உங்களுடைய எழுத்து மிகவும் உற்சாக மூட்டுவதாய்/நல்ல ரசனை மிகுந்த எழுத்து,கண் இமைக்காமல் படிக்க வித்து விடுகிறது,வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிங்க விமலன். உங்கள் போன்றோரின் ஊக்கச் சொற்கள் நல் ஆக்கம் செய்ய பணிக்கின்றன.

   Delete
 12. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கும் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துகள் மாதேவி.
   நலம் தானே?

   Delete
 13. Replies
  1. மிக்க நலம். நன்றி. தற்காலிகமாக யாருடைய படைப்புகளையும் படிக்க நேரம் ஒதுக்க முடியாத சூழ்நிலை.


   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
  3. அதனால் என்ன.. பரவாயில்லை.
   ஆலிங்கனாவைத் தொடர்ந்து எழுத நேரமெடுங்க..

   Delete
 14. சிறந்த எழுத்தாளரை மிஞ்சி விட்டீர்கள். அருமையான பதிப்பு. உங்களின் ஆடு கதை என் மனதையும் இளைப்பாற வைத்தது. நன்றி.தொடருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம். வாங்க மீனா. நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்திருக்கீங்க.

   எழுத்து ஜாம்பவான்கள் பலர் இருக்கின்றார்கள். நம்மில் ஒவ்வொருவரிடத்திலும் வெவ்வேறு வகையிலான கதை வெளிப்பாட்டுத் திறன் இருக்கிறது. யார் யாரையும் மிஞ்சிட முடியாது என்றே நினைக்கிறேன்.

   நான் விவசாய குடும்பத்தைச் சார்ந்தவன் ஆதலால் கால்நடைகளுடனான பரிச்சயம் மிக அதிகம். கிராமத்து மக்களுக்கு அதுகளும் கூட குடும்ப உறுப்பினர்கள் போல தான். காடு மேடு திரிந்து ஆடு, மாடுகள் மேய்த்த அனுபவம் எனக்கு நிறையவே உண்டு. இப்போதும் மாடுகள் வளர்த்து வருகிறோம்.

   உங்கள் போன்ற நட்புறவுகளின் பாராட்டுக்கள் இன்னும் நிறைய எழுதத் தூண்டுகிறது.

   Delete
 15. மீண்டும் உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_16.html

  நன்றி...

  ReplyDelete
 16. தொய்யாம்பல் என்ற புதுச் சொல் அறிந்தேன்.
  மிக்க நன்றி.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 17. ஒரு நல ஆக்கம் பாராட்டுகள் பழங்காலங்களில் இது எளிமையாக கடிபிடிக்கப் பட்டு வந்தததை ஊர்புற மக்கள் சொல்லுவார்கள் சிப்பு பாராட்டுகள்

  ReplyDelete
 18. ”தொய்யாம்பால் --- அருமையான சுவையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
 19. நேரமில்லை. சாவகாசமாக வந்து அனைத்தும் படித்துக் கருத்து இடுகிறேன். புத்தக வெளியீடு, விறபனை எப்படி உள்ளது”

  இந்த ஆண்டு பல புத்தகங்களை வெளியிட்டுத் தமிழ்த்தொண்டு ஆற்ற வாழ்த்துகள்.தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

  ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.