Mar 19, 2018

ஆலிங்கனா-09


ஆலிங்கனா-09
*****************
ரியின் வலக்கரை. வெள்ளாடுகள் வளர்ப்பவர்கள் ஆடுகளுக்குத் தழை வெட்டிவெட்டியே மொட்டையாகி நிற்கும் இரட்டைக்கிளை  ஆலமரத்தடியில் பிள்ளையார் நம் முப்பாட்டன்மார் காலத்திருந்தே நிலையாக அமர்ந்திருக்கிறார். அதனருகில் முண்டும் முடிச்சுமாக அடிபருத்து வளர்ந்த தேவஅரளி மரம்.
அதன் எதிரில் இருக்கும் புங்கமரத்தடியில் அமர்ந்தபடி ’எங்களையும் காப்பாத்து புள்ளையாரப்பா’ என வேண்டிக்கொண்டிருக்கையில் பழுத்த இலைக்காம்பு ஒன்று உச்சந்தலையில் விழுந்தது. எடுத்து உள்ளங்கையில் வைத்துப் பார்த்தேன். உன் இடக்கண் புருவம். உன் இன்னொரு புருவமும் அம்மரத்தடியில் கிடைக்குமென நம்பி சுற்றிலும் பார்த்தேன். தெரிந்தது. எடுக்கச்செல்கையில் தேவஅரளிப்பூ ஒன்று காற்றில் புரண்டு வந்தது. எடுத்துக்கொண்டு வந்து முன்பு அமர்ந்திருந்த இடத்தில் வட்டமாக மண்பரப்பைச் சுத்தம் செய்து விட்டு புருவங்களை வைத்தேன். உதிர்ந்திருந்த புங்கங்காய்களை எடுத்து கண்களாக்கினேன். தேவஅரளியை வைத்து உதடுகளாக்கினேன். கீழுதட்டைக் கிள்ள விழைகையில் ’என்னடா?’ என மிரட்டும் தொனியில்  வினவுவதைப்போல் இரண்டு புருவங்களையும் ஏற்றி இறக்கினாய். உன் புருவங்களின் அசைவுக்கேற்ப பூமிபரப்பே உயர்ந்து தாழ்ந்ததைக் கண்டு திகைத்தே போனேன்.

பூமிக்குள் படுத்திருந்தவளைப்போல தரையைப்பெயர்த்து எழ முயல்கிறாய். முடியாமல் போகவே எழுப்பிவிடச்சொல்லி கையை நீட்டுகிறாய். கையைப்பிடித்து இழுக்கிறேன். ஈரமண்ணிலிருந்து பிடுங்குகையில் நீண்டு வரும் மரவள்ளிக் கிழங்கைப்போல் வருகிறாய். தேகமெங்கும் மண். உன்னை நீயே பார்த்துவிட்டு ’ஒரே மண்ணாயிருக்கேன்ல, ஏரியில் குளிச்சிட்டு வரட்டுமா?’ எனக் கேட்கிறாய். ‘சரி’ என்றேன். கால்களில் அணிந்திருந்த கொலுசுகளைக் கழற்றிக்கொடுத்து ‘பத்திரமா வெச்சிக்க. தொலைஞ்சிடுச்சின்னா என் அம்மா அடிப்பா’, எனச்சொல்லி கொடுத்துவிட்டு துணியுடன் நீரில் இறங்குகிறாய்.

நீரில் பாதம், கணுக்கால், கெண்டைக்கால், முழங்கால், தொடை, இடையென உன்னுடலை விழுங்கும் நீர் உயர உயர பாவாடையும் வட்டமாக உயர்ந்து நீரின் மேற்பரப்பில் மிதக்கிறது. உடலை நீர் தீண்டும் சுகத்தில் உன் பிடரியின் மயிர்கள் சிலிர்க்கிறது. இப்பொழுது ஏரியைப் பார்க்கிறேன். நிறைந்திருக்கும் நீர் முழுதும் உன் பாவாடையாகிப் பரவுகிறது.

திடீரென நீர்க்கோழியைப்போல் மூழ்கினாய். அலையும் கூந்தலை இழுத்துக்கொண்டு நீரும் சுழிந்து உன்னுடன் நீருக்குள் மூழ்கியது.  சிறிது தூரத்தைக் கடந்து நீர் மலர அதிலிருந்து நீயும் மலர்கிறாய். ஏரியில் சூரியகாந்தியின் நீராடல். சூரியகாந்தியின் தேகத்தில் கிளைத்திருக்கும் மலரா வரம்பெற்ற கமலங்கள் இரண்டு. வெயில் முகத்தில்பட்டு வழிந்து உடலை விட்டிறங்க மனமினல்லை என்றாலும் வேறுவழியின்றி வழிந்து நீரில் விழுகிறது. தென்கரையிலிருக்கும் பனைமரத்தில் கூடுகட்டி முட்டையிட்டு அடைகாக்கும் காகம் ஒன்று கண்களைச் சாய்த்துச்சாய்த்து உன்னைப் பார்க்கிறது. நீயெழுப்பிய அலைகள் தவழ்ந்து வந்து கரையைத் தொட்டுயர நீரருகில் ஓய்ந்திருந்த உடும்புகள் இரண்டும் அருகிருந்த உன்னிச்செடிப் புதருக்கு இடம்பெயர்கின்றன.

நூறாண்டுகளாக பிரிந்திருந்த மீன் ஒன்று மீண்டும் நீருடன் கலந்ததைப்போல சுற்றிலும் நடக்கும் எதையும் கண்டுகொள்ளாமல் நீராடி களிக்கிறாய் நீ. காதுகளைப் பிடித்து முயலைத் தூக்குவதைப்போல நீ தந்துபோன கால்கொலுசுகளை என் முகத்திற்கு நேராக உயர்த்திப் பிடித்து முத்தமிட்ட நொடியில் உன்னுடல் சிலிர்க்க ஏரியின் நடுவிலிருந்து என்னைப் பார்க்கிறாய். நெடுநேரமாக நீரில் ஊறியதால் சிவந்திருக்கும் கண்களால் சிரித்துவிட்டு, கரையேறும் உத்தேசம் இல்லாதவளாக நீரில் கரைந்துகொண்டிருக்கிறாய். பொழுதுபோக்கத் தெரியாமல் நான் தடுமாறிய கணத்தில் உன் கால்களுக்குப் பூங்கொலுசு செய்யலாமென உதிக்கவும் சாணிப்பூட்டன்செடிகளின் பூக்களைக் காம்புடன் கிள்ளிப் பறிப்பதை இரைத்தேடி போயிருக்கும் தாயின் வருகைக்காகக் காத்திருக்கும் கிளிக்குஞ்சுகள் இரண்டு ஆலமரப் பொந்திலிருந்து ஒன்று மாற்றி ஒன்றென எட்டியெட்டி பார்க்கின்றன. குஞ்சம் வைத்த சடைப்பின்னலைப் போல துவங்கி  ஒருஜோடி கொலுசுகள் செய்து வைத்தேன். உதிர்ந்திருந்த புங்கம்பூக்களைச் சேகரித்து பனையோலையில் நார் உரித்து காரைமுள்ளால் கோத்து கழுத்துக்கு மணி செய்து  முடிக்கும்  தருவாயில் கரையேறி நீர் சொட்டச்சொட்ட வந்து நிற்கிறாய். தரைப்புரளக் கட்டியிருந்த பாவாடையைக் கொஞ்சமே உயர்த்திச் சேர்த்துப்பிடித்து  கால்களை நீட்டி எதிரில் அமர்கிறாய். பூங்குலுசுகளைப் பூட்டுகிறேன்.  பக்கவாட்டில் சாய்த்த கழுத்தில் புங்கம்பூ மணியைச் சூட்டுகிறேன். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மலைவாசப் பெண்ணாக ஜொலிக்கிறாய். உன் நாணத்தில் உடையின் ஈரம் உலர்ந்தே விட்டது.

நீராடிய களைப்பில் கண்கள் செருக ‘கொஞ்ச நேரம் தூங்கட்டுமா’ எனக்கேட்டு பெயர்ந்தெழுந்த இடத்தில் படுக்கிறாய். முத்தம் வேண்டுமென முணுமுணுத்து கேட்கிறது பூங்கொலுசு பாதம். மெல்லமெல்ல மண்ணுக்குள் இறங்குகிறது உன்னுடல். பதைப்பதைத்து உன்னை அள்ளியெடுக்க முயல்கிறேன். எஞ்சியது இலைக்காம்பு புருவங்களும், புங்கங்காய் கண்களும், தேவஅரளி உதடுகளும் தான். ஆற்றாத துயரத்துடன் புங்கங்காயை எடுத்துச் சென்று வீட்டின் மண்வாசலில் நடுகிறேன். முளைத்து வளர்ந்து உன் கண்களைத்தான் காய்களாய் காய்க்கும். காலமெல்லாம் உன் நிழலில் படுத்து உன் கண்களைப் பார்த்தபடியே வாழ்ந்து மடிவேன் ஆலிங்கனா.
*