மனவிழி
"எல்லாம் மனசுலதாங்க இருக்கு"
May 18, 2013
Apr 8, 2013
காத்திருப்பு
நேரம் கடத்த
சிறு கற்களெடுத்து
குளத்து நீரில் எறிந்துக் கொண்டிருந்தேன்.
எனக்கும்
நிழல் விரித்துக் கொண்டே
பழுத்த இலைகளை
கிள்ளியெறிந்துக் கொண்டிருந்தது மரம்.
என் காத்திருப்பு
அவளின் வருகைக்காக
மரத்தின் காத்திருப்பும்
அவளுக்காகத்தான் இருக்குமோ?
**
Feb 14, 2013
ஆலிங்கனா-04
இதுநாள் வரை உன்னிடம் சொல்லாத ஒரு உண்மை இருக்கிறது. என்னுடன் நீ பழகத் தொடங்கிய நாளிலிருந்து என் உடலெங்கும் ஒருவகையான விஷம் ஊறத் தொடங்கியிருப்பதாய் உணர்கிறேன், ஆலிங்கனா. நடிக்கவே தெரியாத நயணத்தை எப்படி அருளினான் உனக்கு!? எத்தனை அன்பையும், ஏக்கத்தையும் ஒருசேர பிரசவிக்கின்றன உன் கண்கள்! அய்ய்ய்யோ! உன் பார்வையை எதிர்கொள்ளும் வல்லமை இன்னும் என் கண்கள் பெறவில்லை. அனைத்தையும் நிறைவாய் கொடுத்த ’அவன்’ உனக்கான அன்பிற்கு மட்டும் பஞ்சம் வைத்து விட்டிருக்கிறான் ‘பரதேசி’. என் ஆயுளை இட்டு நிரப்பினாலும் நிரம்பாதது உன் விழிப்பள்ளத்தின் ஏக்கம், ஆலிங்கனா.
முந்தைய சந்திப்பின் விடைப்பெறுதலின் போது அந்த தேன்கலை மலையினைச் சுட்டிக்காட்டி, என்றாவது ஒருநாள் அம் மலையுச்சியில் இருக்கும் பூமரத்து சுனைக்கு உன்னை அழைத்துச் செல்வதாய்ச் சொல்லியிருந்தேன். அன்றது வாய்க்கும் என்று எதிர்பார்க்கவில்லை நான். உன்னை எண்ணி வியக்கும் விசயங்களில் அந்த நாளினை தேர்ந்தெடுத்ததும் அடங்கும். இயல்பாய் வாய்த்துவிட்டது அந்நன்னாள். ஆமாம், அன்று பிப்ரவரி 14. ஆனால் ‘காதலர் தினம்’ அது என்பதை நாமறியாத காலம் அது. இருவருமாய்ச் சேர்ந்து முழுநாளையும் கழித்தோம். என்னவொரு தேவசுகம்! இங்கிருப்பவர்களில் யாராலும் உணரமுடியாது அதை. ஒருவேளை நாகரீகம் காணாத கற்கால முன்னோர்கள் உணர்ந்திருக்கலாம்.
காட்டுப்பாதைப் பயணம் உனக்கு புதிது. உன் உடை இழுக்கும் முட்செடிகளை விடுவித்து நீ நடந்து வருவதைக் காண பாவமாக இருந்தது. செடிகளின் மீது கோவம் கோவமாய் வந்தது எனக்கு. ஒரு செடி கூட உன்னைத் தொடக்கூடாதென்ற என் எண்ணத்தின் பின்னணியில் என்ன இருக்கும் ஆலிங்கனா? ஒரு கவக்கழி கொண்டு வழியோரச் செடிகளை ஒதுக்கி நீ மலையேற வழியமைத்துக் கொண்டே முன் நடந்தேன். செடிகளை ஒதுக்குகையில் சிறு புற்றின் ஓரம் ஒரு மொட்டுக்காளான் தெரிந்தது உன் மூக்குத்தியைப் போல. அந்தப் புற்றினைச் சுற்றி இருந்த புதரினை இன்னும் சற்று ஒதுக்கிப் பார்க்கையில் மொட்டுக்காளான்கள் மொத்தமாய் விளைத்திருந்ததைக் கண்டோம். புதருக்குள் நுழைந்து நான் பறித்தெடுத்த காளான்களை நீ பாவாடை மடியில் ஏந்தி எடுத்துக் கொண்டாய். அதைச் சுமந்தபடி நடக்கத்தெரியாத உன்னழகை எந்த சொல் கொண்டும் விளக்க முடியாது என்னால்.
மலையுச்சியை நெருங்க நெருங்க பெருஞ்சுவாசத்தின் சுதிக்கேற்ப ஜதி பிடித்து ஏறி இறங்கியது உன் இளமொட்டுக்கள். மலையுச்சியில் நின்று சுற்றியிருக்கும் ஊர்களையும், அலையலையாய் தெரியும் தூரத்து இளநீல மலைகளையும் கண்ட பரவசத்தில் மடியின் பிடியை மறந்த உன் கை கன்னத்திற்குக் குடியேறிவிட, பிடி தளர்ந்து மடி பிறிந்த காளான்கள் சறுக்கு பாறையில் உருண்டோடின. காளான்களை நான் பார்க்க, பரவசம் தொலைத்து பயத்துடன் என்னைப் பார்த்தாய். மெலிதாய்ச் சிரித்து, ’சுனையில் போய் விழும் எடுத்துக்கலாம் விடு என்றதும்’ மெல்ல நீயும் சிரித்தாய். காட்டு முல்லை பூத்தது போன்ற பற்கள் உனக்கு.
சரி வா சுனைக்குச் செல்லலாம் என சரிவான பாறையில் லாவகமாய் இறங்கினேன். அனுபவம் இல்லாததால் சிலையாக நின்றாய் நீ. மேலேறி வந்து உன் கரம் பற்றின போது தான் கண்டேன், பள்ளத்தைக் கண்டு பயத்தில் நடுங்கும் உன் பாதத்தையும். அப்படியே உன்னை அமரச் செய்து பயத்தால் வியர்த்திருந்த பாதங்களைக் கையால் துடைத்து விட்டு பயம் போக்க என்னென்னவோ சொல்லிப் பார்த்தும் பயனின்றி போகவே ‘உப்பு மூட்டை’ சுமந்தேன் உன்னை. உள்ளங்கையில் சிறை பட்ட புறாவின் கதகதப்பையும், நடுக்கத்தையும் முதுகில் உணர்ந்தேன். நம்பினால் நம்பு, பூமி சுழல்வதை அப்போது தான் உணர்ந்தேன் நான்.
சுனையில் மிதந்துக்கொண்டிருந்த காளான்களை ஒவ்வொன்றாய் எடுத்து உன்னிடம் வீசினேன். எடுத்து பத்திரப்படுத்தினாய். கூட்டாஞ்சோறு செய்துண்ணும் ஏற்பாட்டுடன் சென்றிருந்தோம். அதை கை விட்டுவிட்டு காளான் சமைக்க ஆயத்தமானோம். மூன்று கற்களால் அடுப்பு வைத்து அருகிலிருந்த சுள்ளிகள் எடுத்து தீ மூட்டி உடன் எடுத்துச் சென்றிருந்த அலுமினிய கும்பாவில் சுனைநீர் விட்டு சிறிது உப்பு, சில காய்ந்த மிளகாய்களைக் கிள்ளிப் போட்டு, அதனுடன் களான்களையும் சேர்த்து சிறிது நேரம் வேக வைத்து பாறைமீது வைத்து பறிமாறினேன். பசி தீர்ந்தது. குடிக்க நீர் கேட்டாய். மண்டியிட்டு சுனையில் குடித்துக் காட்டினேன். அந்தமுறை உனக்கு எளிதாய் இல்லை.ஆனாலும் முயற்சித்துக் குடித்தாய். பின் சுனைக்கருகிலான குகையில் அமர்ந்து இளைப்பாறினோம்.
‘இத்தனை எளிமையாய் சமைக்க எப்படி கற்றாய்?’ என்றாய். கிராமத்து ஜனங்களுக்கு எளிமை மட்டும் தானே தெரியும் என்றேன். என்னில் வியக்க எதுவுமே இல்லை. ஆனாலும் உன் ஒவ்வொரு மிடறு பார்வையிலும் என்னை வியந்தே விழுங்கினாய், ஆலிங்கனா. என்மீதான ஈர்ப்பு எந்த கணத்தில் உதித்தது உனக்குள்?. என்னிலிருந்தே உன் உலகை முற்றுமுழுதாய் உணர்ந்துவிடும் எண்ணம் எப்படி வந்தது உனக்குள்? எனக் கேட்டுவிடும் முடிவோடு தான் இன்றுன்னை அழைத்து வந்தேன். ஏதோவொரு தயக்கம். வேறொரு நாளில் கேட்டுக்கொள்கிறேன் விடு.
‘கோரை ஜோசியம் தெரியுமா உனக்கு’ என்றேன். உதடு பிதுக்கிய நீ ‘எப்படின்னு எனக்கு சொல்லிக் கொடேன்’ என்றாய். ஒரு கோரைப்புல் எடுத்து ஆளுக்கொரு முனையில் பிடித்து சரி பாதியாக பிளக்க வேண்டும். சிக்கல் விழாமல் பிளந்துக் கொண்டால் நாம் நினைத்தது நிறைவேறும். சிக்கலாக பிளந்தால் நிறைவேறாது’ எனச்சொல்லி விளக்கினேன். ‘சரி சரி நாம் கோரை ஜோசியம் பார்க்கலாம்’ என்றாய். சுனையின் கரையில் வளர்ந்திருந்த கோரைப்புற்களில் ஒன்றை பிடுங்கி வந்து ஆளுக்கொரு முனையைப் பிடித்துகொண்டு ‘மனதுக்குள் ஏதாவது நினைத்துக் கொள்’ என்றேன். ‘ம்’ என்றவுடன் பிளக்கத் துவங்கினோம். சிக்கலாய்ப் பிரிந்தது. கண்கள் கலங்கினாய். ஏனென்று கேட்டதும் வெடித்தழுது வெளிப்படுத்தினாய். ‘நாம் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தேன்’ என்று. என் கண்கள் நீர் அவிழ்க்க ஆயத்தமானது.
பொழுது சாயத் தொடங்கியது. அமைதியிழந்த மனதுடன் வீட்டிற்குப் புறப்பட்டோம். வழியெங்கும் அமைதி நிறைந்திருந்தது. பொதுவாக காட்டிற்கு நிசப்தமாய் இருக்கப் பிடிக்காது. இப்பொழுது எந்த முட்செடியும் உன் உடையைப் பிடித்திழுக்கவில்லை. ஆனாலும், கவக்கழியால் வழியேற்படுத்திக் கொண்டே வந்தேன். என்னின் இந்த வழித்துணை வாழ்நாளெல்லாம் உன்னைத் தொடரும் என்றே நானும் நம்பினேன். காலமும், காலனும் கூட்டுக்களவாணிகள் என்பது புரிய ஆண்டுகள் தேவையாய் இருந்தது.
எளியவன் நான் என்ன செய்வேன் ஆலிங்கனா.
***
எண்ணம்
சத்ரியன்
இந்த இடுகையின் இணைப்புகள்
குறிச்சொல் :
அநுபவம்,
ஆட்டோகிரஃப்,
ஆலிங்கனா,
சத்ரியன்,
தமிழ்
7
கருத்துரை
Jan 5, 2013
காதல் காலம்-01
எண்ணம்
சத்ரியன்
இந்த இடுகையின் இணைப்புகள்
குறிச்சொல் :
கவிதை,
காதல்,
சத்ரியன்,
தமிழ்க் கவிதை
4
கருத்துரை
Jan 2, 2013
கண்கொத்திப் பறவை
வணக்கம்.
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.
நீண்ட இடைவெளிக்குப் பின் வலைப்பக்கம் வந்திருக்கிறேன். இந்த இடைவெளிக்கு காரணம் “கண்கொத்திப் பறவை” யை உங்களின் “மனங்களைக் கொத்தும்” வகையில் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் தான். எதிர்பார்த்தது போலவே பலரும் பாராட்டும் வகையில் உருவாகியிருக்கிறது.
(நூலின் அட்டைப்படம். பெரிதாக்கி பார்க்க படத்தின் மேல் சொடுக்கவும்.)
இப்புத்தகம் சிறப்பாக உருவாக உறுதுணைப் புரிந்த ,
1.“மின்னல் வரிகள்” திரு.பா.கணேஷ்:
நான் இழுத்த இழுப்பிற்கெல்லாம் தன்னை இலகு படுத்திக்கொண்டு தான் ஏற்றுக்கொண்ட வடிவமைப்பு பணியினைக் காலநேரம் பாராது ஒத்துழைப்பு தந்து உழைத்ததன் விளைவாக நான் எதிர்பார்த்ததை விடவும் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது.
2.கவிஞர் திரு.இசாக் (தமிழ் அலை பதிப்பகம்),
”இது இப்படி இருக்க வேண்டும். இந்த தேதிக்குள் கிடைத்தால் நலம்” - என்று எனது தேவையைச் சொல்லி முழு பொறுப்பையும், சுதந்திரத்தையும் கொடுத்து விட்டு நேர இக்கட்டையும் கொடுத்தேன். அட்டையை வடிவமைத்து , அச்சிட்டு, புத்தகமாக்கி நான் எதிர்பார்த்த நேரத்துக்குள்ளாகவே கொடுத்து விட்டார்.
செய்நேர்த்தி என்பதின் விளக்கத்தை சுருங்கச் சொல்வதென்றால் “இசாக்” என்று சொல்வேன்.
புத்தகமாக உருபெறும் வரையிலும் கணேஷ் அண்ணா+ இசாக் அண்ணா+ நான் எங்கள் மூன்று பேரையும் ஒருங்கிணைத்து பெரும்பங்காற்றிய எனது அன்புக்குரிய மாப்பு. ”கண்கொத்திப் பறவை” நூல் விற்பனை உரிமையையும் தானே ஏற்றுக்கொண்டிருக்கிறார்.
இம் மூவருக்கும் , மற்றும் இதன் பின்புலத்திலிருந்து செயல்பட்ட அனைத்து தோழமைகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
குறிப்பு: நூல் வாங்க Discovery Book Palace வேடியப்பன் அவர்களைத் தொடர்புக் கொள்ளுங்கள்.
**************************************************************************************************************************
நூல் அறிமுக விழா (சிங்கையில்)
2013 - புத்தாண்டின் புன்னகையுடன் சிங்கப்பூரில் நடைபெறவிருக்கும் எனது “கண்கொத்திப் பறவை ” - கவிதை நூல் அறிமுக விழாவிற்கு உங்கள் அனைவரையும் (உள்ளூரில் இருப்பவர்கள் நேரில் வந்து சிறப்பிக்கவும், தொலைதேசத்தில் இருப்பவர்கள் வாழ்த்தி சிறப்பிக்கவும்) அன்புடன் அழைக்கின்றோம்.
நாள் : 06 / 01/ 2013 - ஞாயிற்றுக்கிழமை
நேரம் : மாலை 6:30 - 8:30 வரை
இடம் : ஆனந்தபவன் உணவகம் (2 ஆம் தளம்),
(முஸ்தஃபா சென்டர் எதிரில்)
95 சையது அல்வி சாலை,
சிங்கப்பூர்.
மேலும் தகவல்களுக்கு இணைப்பில் உள்ள அழைப்பிதழைச் சொடுக்கி பெரிது படுத்திப் பார்க்கவும்.
உங்கள் ஆசிகளுடன்,
சத்ரியன்.
Subscribe to:
Posts (Atom)


.jpg)
.jpg)