Oct 30, 2011

மரணம்



மரணம்
உயிரின்
இடப்பெயர்வு.

அப்பா மரணித்தபோதும்
தம்பி மரணித்தபோதும்

இருமுறை
நானும்
மரணித்திருக்கிறேன்.

நீங்களும் கூட
அதை அனுபவித்திருக்கக் கூடும்.
உயிருக்கு நெருக்கமானவரின்
மரணத்தை ஒன்றி பார்த்திருந்தால்!


மரணம்
உயிர் கொண்டாடும்
திருவிழா.

இல்லையென்றால்
எல்லா உயிர்களும்
மரணத்தை விரும்பும் மர்மம்
என்னவாக இருக்க முடியும்?



Oct 24, 2011

போர் எச்சரிக்கை



கவிஞனை
தீர்க்கதரிசி என்பார்கள்!

”தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்” - என,
எட்டையபுரத்து இளம்பரிதி சுட்டிய
பெரும் பிணியாம் “பசி”! 

அதை
எரித்து அழித்திட 
ஒற்றை தீக்குச்சியை
உரசக் கூட
ஒருவரும் நம்மில் - முன்
வருவதாய் இல்லை.

இதே போக்கை தொடர்வதும்
இதற்கொரு விடிவை தருவதும்
 நம் அனைவரின் கரங்களில்!

என் சொற்களை
எச்சரிக்கையாய் ஏற்றுக்கொண்டாலும் சரி.
துச்சமாய் தட்டிக்கழித்தாலும் சரி.

இன்னும்
குறுகிய காலத்தில்
உலக பசியினைப் போக்க
முயற்சிக்க மறந்தோமானால்,
மூன்றாம் உலகப்போரின்
முதல் தீப்பொறியை
ஏழைகளின் வயிற்றை எரிக்கும்
பசி தான் பற்ற வைக்கப்போகிறது.

கவனத்தில் கொள்ளுங்கள்.
காலந்தோறும் கவிஞனை
தீர்க்கதரிசி என்றே சொல்கிறார்கள்!

Oct 12, 2011

விருது


விருதுகள்
மலர்கள் போல.

சில
பூஜையறைக்குப் போகின்றன.

பல
கல்லறைக்குப் போகின்றன.

மனுகுலத்திற்கு
அரியதைச் செய்தவர்
பூஜையறை.

நடுவருக்கு
உரியதைச் செய்தவன்
கல்லறை.

விருதுகள்
மலர்கள் போல!

***

பி.கு.:

சிங்கப்பூர் கடற்கரைச்சாலைக் கவிமாலை அமைப்பு கடந்த மாதம் (செப்டம்பர்)  ”விருது” என்னும் தலைப்பில் நடத்திய கவிதைப் போட்டியில் பரிசு பெற்ற கவிதை.


Oct 8, 2011

தீ




ஈரைந்து புலன்கள்
இருளில் கனல்கிறது

ஒளி தராமல்
ஒலி தரும்

‘இதை’

போய்
தீ
எனச் சொல்கிறார்களே!

*

Oct 6, 2011

கார்காலம்


இருண்டு
திரண்ட
நீரிழைப்பொதி
அவிழ்ந்து சிதறியது.

நொடியில்
முளைத்து
நடை பயில்கின்றன

வண்ணவண்ணக்
காளான்கள்!