Jul 31, 2009

அவளுக்குத் திருமணம்



உனைச் சுமந்த
கருவறை
இனி என்னுள்
எதற்கு ?

உனைப்
பிரிதல் என்பதும்
இறப்பு தான்
எனக்கு.

உன்னால்
வேண்டுமானால் முடியலாம்
உள்ளே என்னையும்
கணவனாய் வேறொருவனையும்
சுமக்க .

என்னால் முடியாது
எடுத்துக் கொண்டுப் போ
உன்னை உன்னோடு .



Jul 29, 2009

யாரேனும் சொல்லுங்கள் ...




எதிர்ப்பார்த்தே நிகழ்ந்ததுதான்
என்றாலும்,

விபத்தால் உறுப்பிழந்த
எனக்கு
இழப்பீடு தருவதுதானே
நியாயம்.?

அவளின் விழிகள்
வீசிய ஒளியால்
இழந்து தவிக்கிறேன்
இதயத்தை !

யாரேனும்
எடுத்துச் சொல்லுங்கள்
அவளிடம்.

நியாயத்தை !


Jul 27, 2009

பெண்



உளி வேண்டாம்
ஒரு
துளி மட்டும்
உன்னிடம்
தந்தால் போதும்

உயிர்ச்சிலை
செய்து தரும்
அதிசய சிற்பி நீ!

என்னிடம்
இறைவனை விடவும்
உயர்நிலை
உனக்குத்தான் .

உலகையும்
உயிர்களையும்
இறைவன் படைத்ததாய்
வெறும் நம்பிக்கை.

எந்த இறைவனும்
தன்னுள் இன்னுமொரு
உயிர் சுமந்ததாய்
சான்றுகளில்லை.

எல்லா சாமிகளும்
கருவறைக்குள்
அடைந்திருக்கும் போது
கருவறையே
உனக்குள்
அடைந்திருக்கிறதே

இப்போதாவது
ஒப்புக்கொள்

நீ

இறைவனை விடவும்
உயர்நிலையானவள்.

Jul 25, 2009

கருப்பு நிலா




வெளிர்த்த நிறமாகவே
பார்த்துப் பழகிய
கண்களுக்கு

வியப்பாகத்தான் இருந்தது.

சூரிய
நெருப்பில் தெரிந்த
நிலவின் முகம்
சில நொடி
இருட்டாய்
இருந்ததைக்
கண்டு.

சூரிய கிரகணமாம் அன்று .

Jul 24, 2009

அந்த நாள் முதல்...



காற்றோடு பேசுகிறேன்
காற்றில் தேடுகிறேன்


இப்பொழுதெல்லாம்
புவிஈர்ப்பு விசைக்கு என்னை
பிடிப்பதில்லை
ஆகாச வானுக்கும்
அப்படித்தான் போலும்!

மரக்கிளையில் காகங்கள்
இலைமறைவில் குயில்கள்
அதனதன் மொழியில் - என்
அந்தரங்கம் பற்றியே
பேசுவது போல் ...

மாமர நிழலில்
நானிருந்தாலும்
தொலைதூரத் தென்னை
எனக்காய்
சாமரம் வீசுவது போல்...

உனைக்காண
காத்திருக்கும் நேரத்தில்
என் கடிகாரத்தின்
நொடிமுள் கூட
மணிமுள் வேகத்தில்
சுழல்வது போல்...

எல்லாம்
காதல்
வந்த நாள் முதல்...!


Jul 23, 2009

ஏன்?



"உறங்கும் போது
ஒளிந்து வந்து
முத்தமிட வேண்டாம்
ஒருநொடி பயந்து போகிறேன்
தெரியுமா ?", என்கிறாய்.

நான்
உன் வீட்டிற்குள்
புகுந்ததை உணர்ந்ததும்
படிப்பதை நிறுத்திவிட்டு
உறங்குவதைப் போல்

நீ
நடிப்பதை மட்டும்
ஏன் என்று
சொல்லிவிடு...!


Jul 21, 2009

ஞாபகங்கள் ...


சிற்றிடையில்
சின்னதாய்ச்
சீண்டினேன்.

காதருகில் வந்து
நாயே என்றாய்.

அய்யய்யோ ...
நாயளவு நன்றியெல்லாம்
என்னிடம் இல்லை என்றேன்.

முறைத்துச்
சிரித்தாய்.

மூவிரண்டு ஆண்டுகள்
முடிந்த பின்னும்
மங்காத பிம்பங்களாய்
மனக்கண்ணில்...!


Jul 20, 2009

என்ன இது ?




வெறும் நட்பென்று
ஒப்புக்கொள்ள மனமுமில்லை.

பெருங்காதல் என்று
சொல்லித்திரிய துணிவுமில்லை.

எதுவென்று புரியாமல்
ச்ச் ச்சே ...
என்ன அவஸ்தை இது..!?


Jul 18, 2009

நெடுங்காதல்



ஒதுக்கப்பட்ட நபர் போல்
ஊருக்கு வெளியே உள்ள
புங்க மரத்தடியில்
ஒற்றையாய் அமர்ந்திருந்தேன்.

சிறகு
உதிர்ந்த
ஈசல் போல்
சிதறிக் கிடந்தது
புங்க மரத்துப் பூக்களும்

எப்போதோ
நாம்
சிரித்துப் பேசியச் சொற்களும் ...!

Jul 17, 2009

இதுதான் ...என்பதா?


இருவேறு
இல்லங்களில்
நடைப் பிணமாய்
நாம் இருந்தாலும்,

உண்ட
உணவை
ஒய்வு வேளையில்
இரைப்பையிலிருந்து
மீட்டெடுத்து
அசை போடும்
ஆடு மாடுகளைப் போல்

என்
இதயப் பையிலிருந்து
மீட்டெடுத்து
அவ்வப்போது
அசை போடுகிறேன்

நம்மின்
மரணமற்ற
முந்தைய
மணித்துளிகளை !


Jul 15, 2009

கனவுகள்



அடர்ந்த இருளில்
ஒளிர்ந்து இருளும்
ஏதோ
ஒன்று
போல்

என்னுள்

மலர்ந்து உதிரும்
எனதும் உனதுமான
இறந்துபோன
கனவுகள் !

Jul 13, 2009

மறக்கத்தான் நினைக்கிறேன்...


எதிர்ப்பாராமல்
நிகழும்
நொடிப்பொழுது
பார்வையிலும்
நோகுதடி பெண்ணே.


நேற்றையப்
பொழுதுகளின்
நினைவுகள்...!


Jul 9, 2009

இறந்த காலம்


உனக்கு

மனைவியாய் வரப்போகிறவள்
கொடுத்து வைத்தவள்
என்றாய் - நீ .

உன்னை
மனைவியாய் பெறப்போகிறவன்
கொடுத்து வைத்தவன்
என்றேன் - நான் .

என்னை
மனதுள் வைத்து நீயும்.
உன்னை
மனதுள் வைத்து நானும்.

நாளும் ஆண்டும்
நினைவில் இல்லை.
நினைவு மட்டும்
ஒவ்வொரு நாளும்...

பின்குறிப்பு :-

"
உன் குடும்பத்தில்
அனைவரும்
நலமா?
என் குடும்பம் பற்றி
எப்பொழுதாவது

உன் நினைவில் வருமா?"

Jul 6, 2009

உன்னாலே... உன்னாலே ...


உன்னால்தான்
எல்லாமே
உன்னால்தான்.

என்
வீட்டு நபர்கள்
எதிரில் வந்தாலே
எதிரிகள் போல் தெரிகிறது.

உன் ஊரார்
யாரைக் கண்டாலும்
உறவினர்போல் தெரிகிறது.

உன்னால்தான்
எல்லாமே
உன்னால்தான்..!

Jul 4, 2009

என்னைக்கொடு


திருப்பித் தந்துவிடு
என்
எல்லாவற்றையும்.

உன்னை
நினைத்த கணங்களை,
உன்னோடு
பேசிய வார்த்தைகளை,
உனக்கென
எழுதிய எழுத்துக்களை.

நாம்
தனிமையில் சந்தித்தபோது
நம்மருகில் அமர்ந்து
நம்மை ரசித்த
குருவிகளின்
குறும்புப் பார்வையை.

அருகருகே
கலந்துப் பிரிந்த
பிரிந்துக் கலந்த
மூச்சுக் காற்றை.

நாள்தோறும்
பிரிந்துச் செல்கையில்
அசைந்த
கை அசைவுகளை.

நான் உனக்கெனவும்
நீ எனக்கெனவும்
எண்ணிய எண்ணங்களை...

...இனி
எதுவும்
உன்னிடம் வேண்டாம்.

என்
எல்லாவற்றையும்
திருப்பித் தந்துவிடு.

Jul 3, 2009

பிணம்


வாய் விட்டுக் கதறும்
ஈழச் சகோதரியே,

எங்கள்
வாக்கையே (ஓட்டு) விற்று
காசாக்கும் (நாய்) நாங்கள்

உங்கள்
வாழ்வைக் காக்கவா
வாய் திறக்கப்போகிறோம்.

எங்கள்
வீரமெல்லாம்
புறநானுறோடுப் போயாச்சி.

இன உணர்வு இறந்து
இருநூரு ஆண்டாச்சி.

இனம் அழிந்து போனா
எங்களுக்கு என்னாச்சி.

பிரியாணி, பிராந்தி
இரந்து தின்ன இன்னும்
ஐந்தாண்டு காக்கனுமே என்று
பெருங்கவலையாப் போச்சி.

(குறிப்பு:- இது ஓட்டு விற்ற உத்தமர்களுக்காக . இன உணர்வு உள்ள இந்தியத் தமிழன் எவரும் வருந்த மாட்டீர்கள் என நம்புகிறேன்.)

Jul 1, 2009

விழியும் உளியும்



பிறவியிலேயேப்
பேரழகு உன்
விழிகள் !

அதை
இன்னும் ஏன்
செதுக்கியபடியே
இமை உளிகள் ?!