Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Jul 27, 2014

இணைகோடுகள்



குடியிருப்பை அலங்கரிக்கும் 
கோயில்கள் போல
தெருக்கள்தோறும் அரசின் மதுக்கடைகள்
உழைத்துப் பிழைக்கும் 
எளியோரின் வலிமையை
இழிவு படுத்தவென்றே அரசின் இலவசங்கள்

நாட்டின் முன்னேற்றத்திற்கு
திசை திருப்பப்பட வேண்டிய
இளைய ஆற்றலையெல்லாம் போதையேற்றி
கூற்றுவன் கூடத்திற்கு
ஆள் பிடித்து அனுப்பும்
பாழ்பட்ட அரசின் பாதங்களில் வீழ்ந்து
தாள்தொட்டு வணங்கும் எம் இனத்திற்கு
என்றுதான் தெரியுமோ
மதுக்கூடங்களும், இலவசங்களும்
நம் தேசத்தின் எதிர்காலத்தை நாசப்படுத்தும்
நச்சு இணைகோடுகளென்று.

*

Apr 25, 2014

சுடர்



லைவனின்
தழுவலில் இருந்து
போலியாய்
நழுவ முயலும்
தலைவியைப் போல்
நெளிகிறது

திரியின் நுனியில்
சுடர்.

*


Feb 11, 2014

அடையாளம்

ளங்காலைப் பொழுது

தூரத்தில் ஏறியிறங்கும்
நீலம் பூத்த மலைத்தொடர்கள்

பனையோலை வேய்ந்த
பழங்குடிசை வீடு

ஈரத்தரையில் ஊர்ந்துச் செல்லும்
மரவட்டைகள்

புகை புடை சூழ மண்ணடுப்பில்
விறகெரித்துச் சமையல் செய்யும் பெண்

குப்பையைக் கிளறி 
குஞ்சுகளை இரை திண்ணப் பழக்கும் கோழி

ஓடைநீரில் துண்டு விரித்து
மீன் பிடித்து விளையாடும் சிறுவர்கள்

குச்சியின் உச்சியில்
யோசனையாய்க் காத்திருக்கும் மீன்கொத்தி

தென்னங்கீற்று நுனியில்
தூளி போல் ஆடும் தூக்கணாங்கூடு

மரக்கிளையில் மறைந்தமர்ந்து
கொய்யாவைக் கொத்தும் கிளிகள்

தொங்கும் மாங்கனியை
தூரிகைப் பற்களால் கொறிக்கும் அணில்

காளைகளிரண்டை ஓட்டிக்கொண்டு
கலப்பைச் சுமந்து போகும் உழவன்

ஐந்தங்குல இடைவெளியில் அவனைப் பின் தொடர்ந்து 
ஓட்டமும் நடையுமாய் செல்லும் நாய்

இப்படி
இயற்கையோடு இயைந்தே மனிதர்கள்
இன்புற்று வாழ்ந்ததற்கான அடையாளமாக
அதிசயமூட்டுகிறது
அருங்காட்சியகத்தில் ஒரு ஓவியம்.


Feb 3, 2014

உழவுத்துறை



உலகின் மூத்த தொழில் உழவு
உயிர்களின் மூத்த உணர்ச்சி பசி

நூறாண்டுக் காலங்கள் உழைத்து
வேளாண்மை வளர்த்த நாம் தான்
விஞ்ஞானத்தின் வால் பிடித்து
அரை நூற்றாண்டு காலத்திற்குள்
நெறித்து விட்டோம் உழவின் கழுத்தை

இயற்கை உரமிட்டு பல்லுயிர்க் காத்த
பண்பாட்டுவழி வந்த நாம் தான்
இரட்டிப்பு மகசூல் பெறும்
கட்டில்லா பேராசையால்
ரசாயன உப்பைக் கொட்டி
புற்றுநோய் தொற்ற வைத்தோம்
விளைநிலத்தின் கருப்பைக்கு.

விளைவு?

விதையூன்றும் நுணுக்கத்தை
விரல்நுனிகள் மறந்து விட்டன
மோழி பிடித்து ஏரோட்டும் லாவகத்தை
மணிக்கட்டுகள் மறந்து போயின
கலப்பை இழுத்த கால்நடைகள்
அடிமாடாகி அழிந்து போயின
எழும்புக் கூட்டில் உயிர் சுமந்து
வீம்புக்கு விவசாயம் செய்தபடி
ஊருக்கு ஓரிருவர் மட்டும்
எஞ்சி நிற்கின்றனர்

இன்னும் கொஞ்சம் காலம் தான்
அவர்களும் காலனின் ஊருக்குக்
பாடையேறிக் கிளம்பிடுவர்

புதிய தலைமுறையை
காசு பணம் செய்யும்
கல்விக்குத் தாரை வார்த்து
துறைதோறும் வல்லுநர்களாக்கி வைத்தோம்,
அதிலும் வஞ்சணையாய்
உழவுத்துறையை ஒதுக்கி வைத்தோம்

நாளை
அனைவரின் மடியிலும்
அளவு மிஞ்சிய பொருளிருக்கும்
அந்தோ பரிதாபம்!
அரை வயிற்றுக் கஞ்சி கிடைக்காமல்
உலகே பசியால் நிரம்பியிருக்கும்.

உண்மையை உணர்ந்த பின்னும்
கணினிப்பெட்டி முன்னமர்ந்து
கவலைப்பட்டுக் கவிதை எழுதுவோமேயன்றி
நம்மில் ஒருவனும்
திரும்பப் போவதில்லை
உலகின் மூத்த தொழிலுக்கு.

***

Oct 11, 2013

இரை

குஞ்சுகளுக்கு
இரையூட்டி விட்டு
விருட்டென பறக்கும்
தூக்கணாங்குருவி போல்
அஞ்சல்பெட்டிக்குக் கடிதத்தையும்
என் நெஞ்சத்துக்குக் காதலையும்
ஊட்டிவிட்டு விரைந்து விட்டாய்
அடுத்தடுத்த நாளும்
அங்கேயே
நிறுத்தி வைத்திருக்கிறேன் என்னை.

*

Jun 12, 2013

வல்லமை

என்னை 
வீழ்த்தும் ஆயுதம் செய்ய 
பத்து மாதம் தேவையாய் இருந்திருக்கிறது 
என் அத்தைக்கு

அந்த 
ஆயுதத்தைக் கூர் தீட்ட
எண்ணிரண்டு ஆண்டுகள்
தேவையாய் இருந்திருக்கிறது
காலத்திற்கு

அந்த
ஆயுதத்திற்கு என்னை இரையாக்க
ஒரேயொரு நொடிதான் தேவையாய் இருந்தது
காதலுக்கு.


May 18, 2013

பெயர்




எழுதுகோல்
வாங்கும்போதெல்லம்
எதற்கு உந்தன்
பெயர் எழுதினேன் என்பதை
இன்று தான் உணர்ந்தேன்

கவிதை எழுத
தவழ்ந்திருக்கிறேன்.

*

Jan 5, 2013

காதல் காலம்-01



இன்றென்ன
காதல் ஜெயந்தியா?

என் 
வீடெங்கும்
உன்
கா(த)ல் தடங்கள் பதிந்திருக்கிறதே!

*

என் உள்ளம் 
பல்லாங்குழியாகவா தெரிகிறது?
பின்னே ஏனடி
கண்ணுமுழி ரெண்டையும்
அதில் போட்டு
விளையாடிக் கொண்டிருக்கிறாய்?

**


Jul 26, 2012

காளியடியான்


நாற்புறமும்
நீ
நடுவில்
நான்.

இதுவரை
எனை காத்தவள் 
காளி
இனி 
நீ

காளிக்கும்
உனக்குமான வித்தியாசம்,

காளி கையில் ஆயுதம்
உன் கையில் காதல்.

*


Jul 21, 2012

களவொழுக்கம்




நிறைமாத கர்ப்பிணியின்
நடையைப் போல
தளும்புகிறது
நிரம்பிய ஏரி.

விதவிதமாய் ஒலியெழுப்பி
பயமுறுத்தும் முயற்சியில்
தவளைகள்

கரைக்குள் தவிக்கும்
அலைகளுடன் அலைந்து கொண்டிருக்கிறேன்
நான்.

ஜாமம் நெருங்கிக் கொண்டிருக்கிறதே
தூங்கி போயிருப்பாளோ?




Jun 21, 2012

கண்ணி

பிரத்யேகமான இழை கொண்டு
பின்னவில்லை
உனக்கான வலை கண்ணியை.
உன்
பேச்சுக்களிலிருந்தே
பிரித்தெடுக்கிறேன்
உறுதியான நாரிழைகளை.

உனை வெல்ல
என் முதலீடு
வலை பின்னும்
விரல் நுணுக்கம் மட்டுமே.

வலைக்குள் சிக்காத
கலைமான் நீயென அறிவேன், எனவே
பின்னும் முன்னே
உள் வைத்து விட்டேன் உன்னை.

#

May 7, 2012

பரு காட்டி விரல்


இளம் இருளில்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
அரும்பும்
விண்மீன் போல
அவளின்
இளங்கறுப்பு கன்னத்தில்
ஒன்றிரண்டு
பருவ பருக்கள்.

அதை
அடிக்கடி தொட்டுத் தடவும்
அவளின்
ஆள்காட்டி விரல்
எனக்கு மட்டும்
பரு காட்டி விரலாக
தெரிவதேன்?

#



May 2, 2012

தாய்ப்பசு


கண் தானம்
சிறந்தது தான்.
என்றாலும்

என்
கண்களை தானம்
வழங்கும் அனுமதியை
நீங்கள்
அவளிடம் தான் கேட்க வேண்டும்.

*

தாய்ப்பசு
அவள்.

இளங்கன்று
நான்.

விளையாடச் செல்லும்
வேளைகளில்
தடுமாறிடுவேனோ என
எப்போதும் அச்சத்துடனே இருக்கிறாள்.

எங்கு சென்றாலும்
அவள் மடி தேடி வருவேன் என்பதை மறந்து.

**




Apr 9, 2012

தீயாடல்


தேய்பிறைக் காலம்.

பின்னிரவு.

நிலா
துழாவிப் பார்த்து கடந்திருக்கிறது
நம் மொட்டை மாடியை.

இனியெப்பவும்
வெளியூரில் ராத்தங்கல்
கூடாது நமக்கு.

*

தீ
நிரம்பிய
குளம்
நீ.

தீயாட வேண்டும்
நான்.

**


Apr 3, 2012

மைக்காரி



நம்மூர்
கோயில் திருவிழா நிறைவடைந்தது.
நம்முள்
காதல் திருவிழா ஆரம்பமானது.

திருவிழாவுக்கு வந்த
நம் உறவுகளெல்லாம்
ஊருக்குப் புறப்பட்ட
அன்றைய காலையில்...

என் அறைக்கு ஓடிவந்து
கண்ணாடிக்கு முன் நின்று
கண்ணுக்கு மையிட்டு
நுனிவிரலால் தொட்டெடுத்து
திருஷ்டியாய் கண்ணாடிக்கும்
வைத்துவிட்டுச் சென்றுவிட்டாய் .

அன்றிலிருந்து.....

கண்ணாடி
முன்பாக நான் நின்றால்
முன்னாடி
பிம்பமாக நீ தான் தெரிகிறாய்.

உண்'மையைச் சொல்லேன்.
அன்று நீ
கண்ணாடிக்கு வைத்து போனது
வெறும்
கண் ‘மை’ தானா?



Mar 26, 2012

ஒரு சொட்டு உயிர்


யார் யாரோ கூடிநின்று
விரலில் தொட்டு
புகட்டிக் கொண்டிருக்கிறார்கள்
இறுதி பால்.

அவளது
துவண்ட மார்பிலிருந்து பிழிந்த
ஒரேயொரு சொட்டுக்காக வேண்டி
இழுத்துக் கொண்டிருக்கிறது இன்னும்.

பெண்
உணர்த்திய
முதல் சுவை அது
இறுதிச் சுவையும் அதுவாகவே
இருக்க ஆவன செய்து

ஆனந்தமாக
ஆவியாக விடுங்கள் என்னுயிரை!



Mar 12, 2012

அவளுக்கு அமுதென்றும் பேர் - 06



பேசிப்பேசி
இமைகளின் மேல்
இமயக்கனவை
ஏற்றி விட்டு
நள்ளிரவு ஆகிப்போச்சு
“உறங்கு போடா” - என
இரக்கமற்ற சொல் உதிர்க்கும் அவளின்,
தீயில் 
ஊறிய 
பலாச்சுளைகளை
என் செய்வேனோ
தொலைதேசத்தில்
இருந்தபடி?


***


இரும்புக் கொல்லனின்
நெருப்பு உலையை எரிக்கும்
தோல் துருத்தியின் காற்றைப்போல

எரிக்கிறது
என் இரவுகளை
தொலைபேசியில்
துளைத்து வரும்
ஒருத்தியின்  ஏக்க மூச்சுக்காற்று .

***



Mar 5, 2012

துணை

ஆளரவமற்ற மதியவேளை
ஏரிக்கரை.

சலனமற்ற நீர் பரப்பில்
தலைக்கீழாய் தவமிருக்கிறது
தரை பிம்பங்களுடன்
என் பிம்பமும்.

நீரமைதியில்
லயித்திருந்தேன் நான்

எலந்தைக் கிளையிலிருந்து
ஏதோ விழுந்தது நீரில்.
கண் திறவாத
அணில் குட்டி அது.

நீருக்குள்
நெடுமரமாய் இறங்கி
மீட்டு விட்டேன்
குட்டி அணிலை.

கூட்டில்
விட்டுச்செல்ல மனமில்லை.
என்
கூடவேயிருந்து மாளட்டும்.


Feb 23, 2012

அவளுக்கு “அமுதென்றும்” பேர் -05



பெருந்தீயின் 
நுனி ஜ்வாலை 
அறுந்து அறுந்து காற்றில் 
கரைந்து விடுவது போல 


என் 
ஜீவ செல்கள் 
ஒவ்வொன்றாய் 
அவளில் 
கரைந்துபோக 
சாபமிடுங்கள்..!
***

வழிப்பயணிக்கென 
விளைந்து நிற்கும் 
காட்டு கனிமரங்கள் போல


என் 
வழியெங்கும்
வியாபித்திருக்கும்
விநோதா
அவள்.


***

Feb 20, 2012

திமிருக்கு திமிர் அழகு



தான்
அழகென்ற திமிர் அவளுக்கு.

‘என்னிடம்
எது அழகு சொல்?’,  என
நிமிடத்திற்கு 
எண்பது தடவை
கேட்டு வைக்கிறாள்.

உங்களிடம்
சொல்வதற்கென்ன?

திமிர் தான் அழகு
அவளக்கு!


****