Feb 3, 2014

உழவுத்துறை



உலகின் மூத்த தொழில் உழவு
உயிர்களின் மூத்த உணர்ச்சி பசி

நூறாண்டுக் காலங்கள் உழைத்து
வேளாண்மை வளர்த்த நாம் தான்
விஞ்ஞானத்தின் வால் பிடித்து
அரை நூற்றாண்டு காலத்திற்குள்
நெறித்து விட்டோம் உழவின் கழுத்தை

இயற்கை உரமிட்டு பல்லுயிர்க் காத்த
பண்பாட்டுவழி வந்த நாம் தான்
இரட்டிப்பு மகசூல் பெறும்
கட்டில்லா பேராசையால்
ரசாயன உப்பைக் கொட்டி
புற்றுநோய் தொற்ற வைத்தோம்
விளைநிலத்தின் கருப்பைக்கு.

விளைவு?

விதையூன்றும் நுணுக்கத்தை
விரல்நுனிகள் மறந்து விட்டன
மோழி பிடித்து ஏரோட்டும் லாவகத்தை
மணிக்கட்டுகள் மறந்து போயின
கலப்பை இழுத்த கால்நடைகள்
அடிமாடாகி அழிந்து போயின
எழும்புக் கூட்டில் உயிர் சுமந்து
வீம்புக்கு விவசாயம் செய்தபடி
ஊருக்கு ஓரிருவர் மட்டும்
எஞ்சி நிற்கின்றனர்

இன்னும் கொஞ்சம் காலம் தான்
அவர்களும் காலனின் ஊருக்குக்
பாடையேறிக் கிளம்பிடுவர்

புதிய தலைமுறையை
காசு பணம் செய்யும்
கல்விக்குத் தாரை வார்த்து
துறைதோறும் வல்லுநர்களாக்கி வைத்தோம்,
அதிலும் வஞ்சணையாய்
உழவுத்துறையை ஒதுக்கி வைத்தோம்

நாளை
அனைவரின் மடியிலும்
அளவு மிஞ்சிய பொருளிருக்கும்
அந்தோ பரிதாபம்!
அரை வயிற்றுக் கஞ்சி கிடைக்காமல்
உலகே பசியால் நிரம்பியிருக்கும்.

உண்மையை உணர்ந்த பின்னும்
கணினிப்பெட்டி முன்னமர்ந்து
கவலைப்பட்டுக் கவிதை எழுதுவோமேயன்றி
நம்மில் ஒருவனும்
திரும்பப் போவதில்லை
உலகின் மூத்த தொழிலுக்கு.

***

4 comments:

  1. உண்மைகள்...

    உழவர் சிரிக்கணும்...! உலகம் செழிக்கணும்...!

    ReplyDelete
    Replies
    1. வாய்ப்பில்லையென்றே தோன்றுகிறது.

      Delete
  2. அனைவரின் மடியிலும்
    அளவு மிஞ்சிய பொருளிருக்கும்
    அந்தோ பரிதாபம்!
    அரை வயிற்றுக் கஞ்சி கிடைக்காமல்
    உலகே பசியால் நிரம்பியிருக்கும்.//

    பொருள் இருந்தாலாவது பரவாயில்லை, பணமல்லாவா இருக்கும் அதுவும் ஏ டி எம் கார்டாக...!

    கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி, என்று அன்றைய திரைப்படங்கள் அவர்களை ஊக்குவித்தன, இன்றைக்கு போடாங்கோ போடாங்கோ"ன்னு திரைப்படங்கள் வருகிறது !

    ReplyDelete
    Replies
    1. ஊதற சங்கை ஊதி வெப்போமே, மனோ.

      Delete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.