அவள் தரப்பிலும் யாரும் இல்லை
என் தரப்பிலும் யாரும் இல்லை
கடவுளாய் மாற்றப்பட்ட
கற்சிலை முன்பு நலமாகவே நடந்தேறியது
எங்களின்
கந்தர்வக் கல்யாணம்
அதே வருடம் ஒரு வாரிசு
அடுத்த வருடமே விவாகரத்து
அழுதுச் சொன்னேன்
அழுந்தச் சொன்னேன்
வேண்டாமே இந்த "ரத்து" என்று.
அவள் -
கேட்கவுமில்லை
கேட்பதாகவும் இல்லை .
பிரிந்தே விட்டாள்
பிள்ளையும் என்னையும் விட்டு.
அது அவள் குற்றமில்லை
அழகின் கர்வம்
உடலின் திமிர்
காலம்
கடிகார முள்ளில்
சுற்றிச் சுற்றிச் சுருங்கியது -அவளின்
சருமம் போலவே.
நீண்ட இடைவெளி.......................ஒரு நாள்,
பெண்களின்
பேராயுதமாம் கண்ணீர் - அதை
கண்களில் ஏந்தி
உழுதாள்...என்னை.
அவள் மனதின் மறு நடவிற்கு
இவனின் மனம் வேண்டும் என்று .
என் கை விரலை இறுகப்பற்றியபடி
கண் சிமிட்டினான் என் கண்மணி .
இறுக்கம் தளர்த்தி
இதயம் சொல்லியது
"பிரிந்தால் பாவம்-மீண்டும்
இணைந்தால் தீரும்" என்று.