எங்களின்
சாரலின்பா இன்று (13/09/2010) தனது
முதலாம் பிறந்த நாளை எட்டிப் பிடித்து விட்டாள்.
*********************** ******************************
எனது போற்றுதலுக்குரிய நண்பர் திரு கோவிந்தசாமி கண்ணன் அவர்கள் தனி மடலில் அவரது விருப்பத்தைத் தெரிவித்திருந்தார். அதை அப்படியே கீழே இணைத்திருக்கிறேன்.
அன்புடை சத்ரியன்!
வாழிய பல்லாண்டு! நலமே புரிக நலமே விளைக!
வியப்பின் எல்லையே தங்கள் வலைத்தள அழகினையும், தரத்தினையும் கண்டே!
வலைப்பதிவு, வலைத்தளம் போன்றவை பற்றி உங்களது தெளிவான நோக்கு “
மனவிழி” என்னும் தலைப்பே, ”எல்லாம் மனசுல தாங்க இருக்கு” ,என கூறாமல் கூறுகிறது. வேறென்ன வேண்டும் இளவலே! அறிந்தும் தெரிந்தும் உணர்ந்தும் உள்ள நிலையினை எட்ட வேண்டும் என்பதே ஆன்றோர் வாக்கு. அவ்வழியிலே தொடர்க! வெல்க! எட்டுக இலக்கை! குரு வழி கிடைத்தால் மிக உயர்வன்றோ!
மனவிழி வழியே பலப்பல வலைத்தளப் பயணம் கிட்டுவதும் சிறப்பே. அவைகளில், மனநல மருத்துவர் ஷாலினி, வெட்டிப்பேச்சு போன்ற வலைத்தளங்களும் அடக்கம்!
இப்போதெல்லாம் அதிக நேரம் உள் செல இயலா நிலை ! மேம்போக்கான வலைப்பயணமே இவ்வளவு சொல்கிறதே...!
”சாரலின்பா”
சாரலே இன்பம்! தென்மேற்கு பருவக்காற்று அழைத்துவரும் தூறலிலே திருக்குற்றால அருவியிலே , கருமுகில் சூழ மழைச்சாரலில் கிடைத்திடும் இன்பத்தை அனுபவித்துதான் இப்பெயர்ச் சூடலா? அவ்வனுபவம் இல்லாமலே இப்பெயர்ச் சூட்டல் என்றால் மிகமிகச் சிறப்பு!
“சாரலின்பா” என்ன ஓர் அழகு தமிழ்! பழகு தமிழ்!சாரலுக்கு, “வாழிய பல்லாண்டு”, என பிறந்த நாள் வாழ்த்துக்கூறி, சாரலைப் பெற்றோரையும் வாழ்த்தி மகிழ்கிறேன்.
இதனை உங்கள் வலைத்தளத்திலே பதிவிட ஆசை. எனக்காக , உங்களால் இதனை வலைப்பதிவில் ஏற்ற முடியுமா?
(நானோ துப்பறியும் சாம்பு! இப்போதுதான் தட்டுத்தடுமாறி வலைப்பதிவிட்டு வருகிறேன்.நான் இன்னும் அறியவேண்டியதும், செய்யவேண்டியதும் நிறையவே இருக்கிறது.)
என்றும் மாறா அன்புடன்,
கோ.கண்ணன்.
http://hightechtamils.blogspot.com
ஒரு வேண்டுகோள் :
“தமிழரெல்லாம் ஒன்றுபடத் தக்க நேரம்,
தமிழரிதை மறப்பாரேல் இனமே சாகும்.”
பாவேந்தர் பாரதிதாசன் கூற்று இன்றைய தேவை !
ஒரு தலைமுறைக்கு மேல் ஆங்கிலவழிக் கல்வியினால் தமிழ் அறிவு மழுங்கடிக்கப்பட்ட சூழலில், நாம் ஒருவரை ஒருவர் குறை காண்பது விடுத்து, நாமும் ஒருவகையில் காரணமே என்று உணர்வோம் ! ஒன்றுபடுவோம் ! வென்றெடுப்போம் இழந்த பெருமைதனை !
சிந்தனையை பொதுவில் வைப்போம்!
தமிழிலேயே பேச முயற்சிக்கலாமே !
வீட்டிற்குள்ளாவது ! நண்பர்களுக்கு இடையேயாவது !
தாய்த் தமிழில் தமிழ் நாட்டில் மட்டுமாவது !
நல்ல தமிழ் இங்கிருக்க தேவையில்லாமல் ஆங்கிலக் கலப்பெதற்கு ?