இதுநாள் வரை உன்னிடம் சொல்லாத ஒரு உண்மை இருக்கிறது. என்னுடன் நீ பழகத் தொடங்கிய நாளிலிருந்து என் உடலெங்கும் ஒருவகையான விஷம் ஊறத் தொடங்கியிருப்பதாய் உணர்கிறேன், ஆலிங்கனா. நடிக்கவே தெரியாத நயணத்தை எப்படி அருளினான் உனக்கு!? எத்தனை அன்பையும், ஏக்கத்தையும் ஒருசேர பிரசவிக்கின்றன உன் கண்கள்! அய்ய்ய்யோ! உன் பார்வையை எதிர்கொள்ளும் வல்லமை இன்னும் என் கண்கள் பெறவில்லை. அனைத்தையும் நிறைவாய் கொடுத்த ’அவன்’ உனக்கான அன்பிற்கு மட்டும் பஞ்சம் வைத்து விட்டிருக்கிறான் ‘பரதேசி’. என் ஆயுளை இட்டு நிரப்பினாலும் நிரம்பாதது உன் விழிப்பள்ளத்தின் ஏக்கம், ஆலிங்கனா.
முந்தைய சந்திப்பின் விடைப்பெறுதலின் போது அந்த தேன்கலை மலையினைச் சுட்டிக்காட்டி, என்றாவது ஒருநாள் அம் மலையுச்சியில் இருக்கும் பூமரத்து சுனைக்கு உன்னை அழைத்துச் செல்வதாய்ச் சொல்லியிருந்தேன். அன்றது வாய்க்கும் என்று எதிர்பார்க்கவில்லை நான். உன்னை எண்ணி வியக்கும் விசயங்களில் அந்த நாளினை தேர்ந்தெடுத்ததும் அடங்கும். இயல்பாய் வாய்த்துவிட்டது அந்நன்னாள். ஆமாம், அன்று பிப்ரவரி 14. ஆனால் ‘காதலர் தினம்’ அது என்பதை நாமறியாத காலம் அது. இருவருமாய்ச் சேர்ந்து முழுநாளையும் கழித்தோம். என்னவொரு தேவசுகம்! இங்கிருப்பவர்களில் யாராலும் உணரமுடியாது அதை. ஒருவேளை நாகரீகம் காணாத கற்கால முன்னோர்கள் உணர்ந்திருக்கலாம்.
காட்டுப்பாதைப் பயணம் உனக்கு புதிது. உன் உடை இழுக்கும் முட்செடிகளை விடுவித்து நீ நடந்து வருவதைக் காண பாவமாக இருந்தது. செடிகளின் மீது கோவம் கோவமாய் வந்தது எனக்கு. ஒரு செடி கூட உன்னைத் தொடக்கூடாதென்ற என் எண்ணத்தின் பின்னணியில் என்ன இருக்கும் ஆலிங்கனா? ஒரு கவைக்கழி கொண்டு வழியோரச் செடிகளை ஒதுக்கி நீ மலையேற வழியமைத்துக் கொண்டே முன் நடந்தேன். செடிகளை ஒதுக்குகையில் சிறு புற்றின் ஓரம் ஒரு மொட்டுக்காளான் உன் கூர்மூக்கில் அணிந்திருக்கும் ஒற்றைக்கல் மூக்குத்தியைப் போல தெரிந்தது. அந்தப் புற்றினைச் சுற்றிலும் இருந்த புதரினை இன்னும் சற்று ஒதுக்கிப் பார்க்கையில் மொட்டுக்காளான்கள் மொத்தமாய் விளைத்திருந்ததைக் கண்டோம். புதருக்குள் நுழைந்து நான் பறித்தெடுத்த காளான்களை நீ பாவாடை மடியில் ஏந்தி எடுத்துக் கொண்டாய். அதைச் சுமந்தபடி நடக்கத்தெரியாத உன்னழகை எந்த சொல் கொண்டும் விளக்க முடியாது என்னால்.
மலையுச்சியை நெருங்க நெருங்க பெருஞ்சுவாசத்தின் சுதிக்கேற்ப ஜதி பிடித்து ஏறி இறங்கியது உன் நெஞ்சம். மலையுச்சியில் நின்று சுற்றியிருக்கும் ஊர்களையும், அலையலையாய் தெரியும் தூரத்து இளநீல மலைகளையும் கண்ட பரவசத்தில் மடியின் பிடியை மறந்த உன் கை கன்னத்திற்குக் குடியேறிவிட, பிடி தளர்ந்து மடி பிறிந்த காளான்கள் சறுக்கு பாறையில் உருண்டோடின. காளான்களை நான் பார்க்க, பரவசம் தொலைத்து பயத்துடன் என்னைப் பார்த்தாய். மெலிதாய்ச் சிரித்து, ’சுனையில் போய் விழும் எடுத்துக்கலாம் விடு என்றதும்’ மெல்ல நீயும் சிரித்தாய். காட்டு முல்லை பூத்தது போன்ற பற்கள் உனக்கு.
சரி வா சுனைக்குச் செல்லலாம் என சரிவான பாறையில் லாவகமாய் இறங்கினேன். அனுபவம் இல்லாததால் சிலையாக நின்றாய் நீ. மேலேறி வந்து உன் கரம் பற்றின போது தான் கண்டேன், பள்ளத்தைக் கண்டு பயத்தில் நடுங்கும் உன் பாதத்தையும். அப்படியே உன்னை அமரச் செய்து பயத்தால் வியர்த்திருந்த பாதங்களைக் கையால் துடைத்து விட்டு பயம் போக்க என்னென்னவோ சொல்லிப் பார்த்தும் பயனின்றி போகவே ‘உப்பு மூட்டை’ சுமந்தேன் உன்னை. உள்ளங்கையில் சிறை பட்ட புறாவின் கதகதப்பையும், நடுக்கத்தையும் முதுகில் உணர்ந்தேன். நம்பினால் நம்பு, பூமி சுழல்வதை அப்போது தான் உணர்ந்தேன் நான்.
சுனையில் மிதந்துக்கொண்டிருந்த காளான்களை ஒவ்வொன்றாய் எடுத்து உன்னிடம் வீசினேன். எடுத்து பத்திரப்படுத்தினாய். கூட்டாஞ்சோறு செய்துண்ணும் ஏற்பாட்டுடன் சென்றிருந்தோம். அதை கை விட்டுவிட்டு காளான் சமைக்க ஆயத்தமானோம். மூன்று கற்களால் அடுப்பு வைத்து அருகிலிருந்த சுள்ளிகள் எடுத்து தீ மூட்டி உடன் எடுத்துச் சென்றிருந்த அலுமினிய கும்பாவில் சுனைநீர் விட்டு சிறிது உப்பு, சில காய்ந்த மிளகாய்களைக் கிள்ளிப் போட்டு, அதனுடன் களான்களையும் சேர்த்து சிறிது நேரம் வேக வைத்து பாறைமீது வைத்து பறிமாறினேன். பசி தீர்ந்தது. குடிக்க நீர் கேட்டாய். மண்டியிட்டு சுனையில் குடித்துக் காட்டினேன். அந்தமுறை உனக்கு எளிதாய் இல்லை.ஆனாலும் முயற்சித்துக் குடித்தாய். பின் சுனைக்கருகிலான குகையில் அமர்ந்து இளைப்பாறினோம்.
‘இத்தனை எளிமையாய் சமைக்க எப்படி கற்றாய்?’ என்றாய். கிராமத்து ஜனங்களுக்கு எளிமை மட்டும் தானே தெரியும் என்றேன். என்னில் வியக்க எதுவுமே இல்லை. ஆனாலும் உன் ஒவ்வொரு மிடறு பார்வையிலும் என்னை வியந்தே விழுங்கினாய், ஆலிங்கனா. என்மீதான ஈர்ப்பு எந்த கணத்தில் உதித்தது உனக்குள்?. என்னிலிருந்தே உன் உலகை முற்றுமுழுதாய் உணர்ந்துவிடும் எண்ணம் எப்படி வந்தது உனக்குள்? எனக் கேட்டுவிடும் முடிவோடு தான் இன்றுன்னை அழைத்து வந்தேன். ஏதோவொரு தயக்கம். வேறொரு நாளில் கேட்டுக்கொள்கிறேன் விடு.
‘கோரை ஜோசியம் தெரியுமா உனக்கு’ என்றேன். உதடு பிதுக்கிய நீ ‘எப்படின்னு எனக்கு சொல்லிக் கொடேன்’ என்றாய். ஒரு கோரைப்புல் எடுத்து ஆளுக்கொரு முனையில் பிடித்து சரி பாதியாக பிளக்க வேண்டும். சிக்கல் விழாமல் பிளந்துக் கொண்டால் நாம் நினைத்தது நிறைவேறும். சிக்கலாக பிளந்தால் நிறைவேறாது’ எனச்சொல்லி விளக்கினேன். ‘சரி சரி நாம் கோரை ஜோசியம் பார்க்கலாம்’ என்றாய். சுனையின் கரையில் வளர்ந்திருந்த கோரைப்புற்களில் ஒன்றை பிடுங்கி வந்து ஆளுக்கொரு முனையைப் பிடித்துகொண்டு ‘மனதுக்குள் ஏதாவது நினைத்துக் கொள்’ என்றேன். ‘ம்’ என்றவுடன் பிளக்கத் துவங்கினோம். சிக்கலாய்ப் பிரிந்தது. கண்கள் கலங்கினாய். ஏனென்று கேட்டதும் வெடித்தழுது வெளிப்படுத்தினாய். ‘நாம் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தேன்’ என்று. என் கண்கள் நீர் அவிழ்க்க ஆயத்தமானது.
பொழுது சாயத் தொடங்கியது. அமைதியிழந்த மனதுடன் வீட்டிற்குப் புறப்பட்டோம். வழியெங்கும் அமைதி நிறைந்திருந்தது. பொதுவாக காட்டிற்கு நிசப்தமாய் இருக்கப் பிடிக்காது. இப்பொழுது எந்த முட்செடியும் உன் உடையைப் பிடித்திழுக்கவில்லை. ஆனாலும், கவக்கழியால் வழியேற்படுத்திக் கொண்டே வந்தேன். என்னின் இந்த வழித்துணை வாழ்நாளெல்லாம் உன்னைத் தொடரும் என்றே நானும் நம்பினேன். காலமும், காலனும் கூட்டுக்களவாணிகள் என்பது புரிய ஆண்டுகள் தேவையாய் இருந்தது.
எளியவன் நான் என்ன செய்வேன் ஆலிங்கனா.
***
அற்புதமான அனுபவம்.
ReplyDeleteநீங்களும் உணர்ந்திருந்தால் மகிழ்வே.
Deleteஅழகிய வர்ணனைகளுடன் ஆலிங்கனா.
ReplyDeleteகோரை ஜோசியம் !!!
ReplyDeleteஅற்புதம்.
ReplyDeleteகாலத்தின் சூழல் நீண்ட நாள்களுக்கு பிறகு உங்களின் இடுகை வசிக்கிறேன் மிக சிறந்த காதல் வரிகள் ...
ReplyDeleteவரி வரியாய் வார்த்தைகளில் வழிகிறது ஆலிங்கனாவின் மேல் இருக்கும் உங்கள் காதல் உணர முடிந்தது எங்களால் ....................ஒவ்வொரு சொல்லாடல்களும் கவித்துவம் மிக்கவைகளாக கவர்ந்து இழுக்கிறது கிராமத்து வாடை கலந்த காற்றையும் நீரையும் குடித்த திருப்தி எனக்கு கோரை ஜோசியம் பார்க்காத காதலர்கள் இல்லை பால்யத்தின் நம்பிக்கை அது .......தொடருங்கள் நண்பா சிறப்பான கதையாடலுடன் வாழ்த்துக்கள்
ReplyDelete