Showing posts with label ஆலிங்கனா. Show all posts
Showing posts with label ஆலிங்கனா. Show all posts

Mar 19, 2018

ஆலிங்கனா-09


ஆலிங்கனா-09
*****************
ரியின் வலக்கரை. வெள்ளாடுகள் வளர்ப்பவர்கள் ஆடுகளுக்குத் தழை வெட்டிவெட்டியே மொட்டையாகி நிற்கும் இரட்டைக்கிளை  ஆலமரத்தடியில் பிள்ளையார் நம் முப்பாட்டன்மார் காலத்திருந்தே நிலையாக அமர்ந்திருக்கிறார். அதனருகில் முண்டும் முடிச்சுமாக அடிபருத்து வளர்ந்த தேவஅரளி மரம்.
அதன் எதிரில் இருக்கும் புங்கமரத்தடியில் அமர்ந்தபடி ’எங்களையும் காப்பாத்து புள்ளையாரப்பா’ என வேண்டிக்கொண்டிருக்கையில் பழுத்த இலைக்காம்பு ஒன்று உச்சந்தலையில் விழுந்தது. எடுத்து உள்ளங்கையில் வைத்துப் பார்த்தேன். உன் இடக்கண் புருவம். உன் இன்னொரு புருவமும் அம்மரத்தடியில் கிடைக்குமென நம்பி சுற்றிலும் பார்த்தேன். தெரிந்தது. எடுக்கச்செல்கையில் தேவஅரளிப்பூ ஒன்று காற்றில் புரண்டு வந்தது. எடுத்துக்கொண்டு வந்து முன்பு அமர்ந்திருந்த இடத்தில் வட்டமாக மண்பரப்பைச் சுத்தம் செய்து விட்டு புருவங்களை வைத்தேன். உதிர்ந்திருந்த புங்கங்காய்களை எடுத்து கண்களாக்கினேன். தேவஅரளியை வைத்து உதடுகளாக்கினேன். கீழுதட்டைக் கிள்ள விழைகையில் ’என்னடா?’ என மிரட்டும் தொனியில்  வினவுவதைப்போல் இரண்டு புருவங்களையும் ஏற்றி இறக்கினாய். உன் புருவங்களின் அசைவுக்கேற்ப பூமிபரப்பே உயர்ந்து தாழ்ந்ததைக் கண்டு திகைத்தே போனேன்.

பூமிக்குள் படுத்திருந்தவளைப்போல தரையைப்பெயர்த்து எழ முயல்கிறாய். முடியாமல் போகவே எழுப்பிவிடச்சொல்லி கையை நீட்டுகிறாய். கையைப்பிடித்து இழுக்கிறேன். ஈரமண்ணிலிருந்து பிடுங்குகையில் நீண்டு வரும் மரவள்ளிக் கிழங்கைப்போல் வருகிறாய். தேகமெங்கும் மண். உன்னை நீயே பார்த்துவிட்டு ’ஒரே மண்ணாயிருக்கேன்ல, ஏரியில் குளிச்சிட்டு வரட்டுமா?’ எனக் கேட்கிறாய். ‘சரி’ என்றேன். கால்களில் அணிந்திருந்த கொலுசுகளைக் கழற்றிக்கொடுத்து ‘பத்திரமா வெச்சிக்க. தொலைஞ்சிடுச்சின்னா என் அம்மா அடிப்பா’, எனச்சொல்லி கொடுத்துவிட்டு துணியுடன் நீரில் இறங்குகிறாய்.

நீரில் பாதம், கணுக்கால், கெண்டைக்கால், முழங்கால், தொடை, இடையென உன்னுடலை விழுங்கும் நீர் உயர உயர பாவாடையும் வட்டமாக உயர்ந்து நீரின் மேற்பரப்பில் மிதக்கிறது. உடலை நீர் தீண்டும் சுகத்தில் உன் பிடரியின் மயிர்கள் சிலிர்க்கிறது. இப்பொழுது ஏரியைப் பார்க்கிறேன். நிறைந்திருக்கும் நீர் முழுதும் உன் பாவாடையாகிப் பரவுகிறது.

திடீரென நீர்க்கோழியைப்போல் மூழ்கினாய். அலையும் கூந்தலை இழுத்துக்கொண்டு நீரும் சுழிந்து உன்னுடன் நீருக்குள் மூழ்கியது.  சிறிது தூரத்தைக் கடந்து நீர் மலர அதிலிருந்து நீயும் மலர்கிறாய். ஏரியில் சூரியகாந்தியின் நீராடல். சூரியகாந்தியின் தேகத்தில் கிளைத்திருக்கும் மலரா வரம்பெற்ற கமலங்கள் இரண்டு. வெயில் முகத்தில்பட்டு வழிந்து உடலை விட்டிறங்க மனமினல்லை என்றாலும் வேறுவழியின்றி வழிந்து நீரில் விழுகிறது. தென்கரையிலிருக்கும் பனைமரத்தில் கூடுகட்டி முட்டையிட்டு அடைகாக்கும் காகம் ஒன்று கண்களைச் சாய்த்துச்சாய்த்து உன்னைப் பார்க்கிறது. நீயெழுப்பிய அலைகள் தவழ்ந்து வந்து கரையைத் தொட்டுயர நீரருகில் ஓய்ந்திருந்த உடும்புகள் இரண்டும் அருகிருந்த உன்னிச்செடிப் புதருக்கு இடம்பெயர்கின்றன.

நூறாண்டுகளாக பிரிந்திருந்த மீன் ஒன்று மீண்டும் நீருடன் கலந்ததைப்போல சுற்றிலும் நடக்கும் எதையும் கண்டுகொள்ளாமல் நீராடி களிக்கிறாய் நீ. காதுகளைப் பிடித்து முயலைத் தூக்குவதைப்போல நீ தந்துபோன கால்கொலுசுகளை என் முகத்திற்கு நேராக உயர்த்திப் பிடித்து முத்தமிட்ட நொடியில் உன்னுடல் சிலிர்க்க ஏரியின் நடுவிலிருந்து என்னைப் பார்க்கிறாய். நெடுநேரமாக நீரில் ஊறியதால் சிவந்திருக்கும் கண்களால் சிரித்துவிட்டு, கரையேறும் உத்தேசம் இல்லாதவளாக நீரில் கரைந்துகொண்டிருக்கிறாய். பொழுதுபோக்கத் தெரியாமல் நான் தடுமாறிய கணத்தில் உன் கால்களுக்குப் பூங்கொலுசு செய்யலாமென உதிக்கவும் சாணிப்பூட்டன்செடிகளின் பூக்களைக் காம்புடன் கிள்ளிப் பறிப்பதை இரைத்தேடி போயிருக்கும் தாயின் வருகைக்காகக் காத்திருக்கும் கிளிக்குஞ்சுகள் இரண்டு ஆலமரப் பொந்திலிருந்து ஒன்று மாற்றி ஒன்றென எட்டியெட்டி பார்க்கின்றன. குஞ்சம் வைத்த சடைப்பின்னலைப் போல துவங்கி  ஒருஜோடி கொலுசுகள் செய்து வைத்தேன். உதிர்ந்திருந்த புங்கம்பூக்களைச் சேகரித்து பனையோலையில் நார் உரித்து காரைமுள்ளால் கோத்து கழுத்துக்கு மணி செய்து  முடிக்கும்  தருவாயில் கரையேறி நீர் சொட்டச்சொட்ட வந்து நிற்கிறாய். தரைப்புரளக் கட்டியிருந்த பாவாடையைக் கொஞ்சமே உயர்த்திச் சேர்த்துப்பிடித்து  கால்களை நீட்டி எதிரில் அமர்கிறாய். பூங்குலுசுகளைப் பூட்டுகிறேன்.  பக்கவாட்டில் சாய்த்த கழுத்தில் புங்கம்பூ மணியைச் சூட்டுகிறேன். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மலைவாசப் பெண்ணாக ஜொலிக்கிறாய். உன் நாணத்தில் உடையின் ஈரம் உலர்ந்தே விட்டது.

நீராடிய களைப்பில் கண்கள் செருக ‘கொஞ்ச நேரம் தூங்கட்டுமா’ எனக்கேட்டு பெயர்ந்தெழுந்த இடத்தில் படுக்கிறாய். முத்தம் வேண்டுமென முணுமுணுத்து கேட்கிறது பூங்கொலுசு பாதம். மெல்லமெல்ல மண்ணுக்குள் இறங்குகிறது உன்னுடல். பதைப்பதைத்து உன்னை அள்ளியெடுக்க முயல்கிறேன். எஞ்சியது இலைக்காம்பு புருவங்களும், புங்கங்காய் கண்களும், தேவஅரளி உதடுகளும் தான். ஆற்றாத துயரத்துடன் புங்கங்காயை எடுத்துச் சென்று வீட்டின் மண்வாசலில் நடுகிறேன். முளைத்து வளர்ந்து உன் கண்களைத்தான் காய்களாய் காய்க்கும். காலமெல்லாம் உன் நிழலில் படுத்து உன் கண்களைப் பார்த்தபடியே வாழ்ந்து மடிவேன் ஆலிங்கனா.
*

Feb 20, 2018

ஆலிங்கனா-08


மாட்டுக்குப் புல் பிடுங்கிவர அனுப்பியிருந்தாள், பாட்டி. வெயிலேறுவதற்குள் பிடுங்கிக்கொண்டு கொல்லையிருந்து வெளியேறிவிட வேண்டும். வெயில் நேரத்தில் சிக்கிக்கொண்டால் சொணை பிடுங்கித் தின்றுவிடும். புளியம்புற்களை மாடுகள் மிகவும் விரும்பி திண்ணும். தொடர்ந்து கொடுத்து வந்தால் எலும்பும் தோலுமாக இருக்கும் மாடுகளும் கொழுக்மொழுக்கென மினுமினுப்புக் கூடிவிடும். பால்கறக்கும் மாடுகள் என்றால் கூடுதலாக ஒருசொம்பளவுக்குப் பால் சேர்த்துச் சுரக்கும்.


புரட்டாசி மாதத் துவக்கம். சாமை புடைதள்ளும் பருவம். முதன்முறை தாய்மையடைந்த பெண்ணின் மூன்றாம் மாதத்து மேடுதட்டிய அடிவயிறும், புதுவித வனப்பூறிய உடலையும்போல சாமைக்கொல்லை தளதளப்புடன் நின்றநிலையில், வீசும் காற்றுக்கு அசைந்தாடியபடி இருக்கும். அதிகாலைவேளையின் பனித்திரள் பூத்த பயிர்வாசமும், வசீகர இளம்பச்சையும் காண்பவர்களை வசமிழக்கச் செய்யும். வரப்பின்வழியே நடந்துச்சென்றாலும் கீழமர்ந்து மாரளவு என்பதாகக் கைகளை விரித்து அப்படியே சேர்த்து ஆரத்தழுவி ஆனந்தமடைய விரும்பும் மனத்தைக் கட்டுப்படுத்துவது இயலாத காரியம். குளிருக்குப் போர்த்தியிருந்த காடாத்துணியை விலக்கிச் சுருட்டி வரப்பிலிருந்த துறிஞ்சி மரத்தின் சிறுகிளையில் போட்டுவிட்டு வெற்றுடம்புடன் பனிக்குளத்தில் இறங்குவதைப்போல பயிருக்குள் இறங்கினேன். எட்டநின்று பார்த்தால் சாமைப்பயிர் எது, புல் எதுவென்றே பிரித்தறிய முடியாதபடி சாமைக்கு சக்களத்தியாக ஈடுகொடுத்து வளர்ந்திருக்கிறது புளியம்புற்கள். வெறும்புற்களை மட்டும் போட்டல் மாடுகளுக்கு திகட்டிவிடும். கால்களால் மிதித்து சாணம், கோமியத்துடன் கலந்து வீணடித்துவிடும் என்பதால் புளியம்புற்களுடன், எருதுக்கொம்பு புல், கொட்டைத்தாதரை, குட்டிக்கொடி, பண்ணைக்கீரைச்செடி என என்னால் சுமக்கக்கூடிய அளவுக்கு கலந்துக்கட்டிப் பிடுங்கி அரிஅரியாகச் சேகரித்தேன். நீண்டு பரவிப் படர்ந்திருந்த சவுரிக்கொடியைப் பிடுங்கி கயிறாக்கி புற்களைத் திண்டாகக் கட்டினேன். இளங்காலைச் சூரியனின் கதிர்வரவால் கூதற்புகை, புற்தோகைகளில் துளிர்த்திருந்த பனிநீர் முத்துகளும் மறையத் துவங்கின. கிளையில் தொங்கிக்கிடந்த துணியின்மேல் கருப்பு எறும்புகள் சில நடமாடிக்கொண்டிருந்தன. காடாவை எடுத்து உதறும்போதுதான் நேற்று நீ கேட்டிருந்தது ஞாபகத்திற்கு வந்தது. புல்திண்டை வீடு சேர்த்துவிட்டு மாடுகளை மேய்க்க வரும்போது பார்த்துக்கொள்ளலாம் எனப் புறப்பட்டேன்.

மாட்டு கொத்திலிருந்த சாணியை அள்ளிக் கூட்டி குப்பையில் கொட்டிவிட்டு குட்டைக்குச் சென்று குளியலை முடித்துக்கொண்டு வீடு வந்ததும் பாட்டி பழைய சாமைச்சோறு, தயிருடன் உரித்த சிறுவெங்காயமும் கொடுத்தாள். சாப்பிட்டபின், கன்றுகளைக் கொட்டகையில் கட்டி சிறிது புற்களைப் போட்டேன். மாடுகள் இரண்டையும் பிடித்துக்கொண்டு கிளம்பினேன். மேய்வதற்குத் தோதான இடத்தில் மாடுகளைக் கட்டிவிட்டு துறிஞ்சி மரத்தடியில் அமர்ந்தேன். மழைவெயில் உடம்பில் சுளீரென உறைத்தது. சிலிசிலுக்கும் காற்று வெயிலின் சூட்டைச் சிதறடிக்கிறது.

அமர்வதற்கு வாகான இடம்தேடி பொன்வண்டு ஒன்று மரங்களுக்கு மேல்பரப்பில் பறப்பதைப்போல் தளிர்பச்சை ரவிக்கை, அதேவண்ண பாவாடை, ரத்தச்சிவப்பு நிற தாவணி உடுத்தி, பச்சைப்பசேலென விரிந்திருக்கும் சாமைக்கொல்லையில் மிதந்து வருகிறாய். கிளைத்துச் செழிப்பாக வளர்ந்திருக்கும் பண்ணைக்கீரையின் உச்சிக்காம்பின் முனையில் இரு இலைகளின் கதுப்பில் பிதுங்கியிருக்கும் வெண்ணிறப் பூக்கள் உன் பாவாடையில் பூத்திருப்பதைப் போன்று தோற்றம்காட்டி என் கண்களை ஏமாற்றுகிறது. என்னை நெருங்கிக் கொண்டிருக்கிறாய். மேய்ந்துக்கொண்டிருந்த மாடுகள் தலையை உயர்த்தி காதுகளைச் சிலிர்த்து முதலில் உன்னைப் பார்த்தன. தொடர்ந்து என்னையும் பார்த்தன. ஒன்றும் ஆபத்தில்லை என்பதைப்போல் கையால் சைகை செய்தேன். புரிந்துக்கொண்டு மேய்வதைத் தொடர்ந்தன.

எதிரில் நிற்கிறாய். தாயின் வயிற்றிலிருந்து பிறப்பு வாசல் கடந்ததும் எனைச்சூழ்ந்த பேரொளியொன்று இத்தனை ஆண்டுகளுக்குப்பின் இன்றென்னை மீண்டும் சூழ்ந்தது, ஆலிங்கனா. உண்மையில் சூரியனை மங்கலாக்கிய பேரொளி நீ. உன்னால் நான் உணரும் மகிழ்ச்சியை என்ன பேர்ச்சொல்லி விளக்குவேன் நான்!? மலர்ந்த முகத்தில் மேலுதட்டுப் பூனைமயிர்க்கால்களில் குட்டிக்குட்டியாக வியர்வை அரும்புகள் குறும்பாக முறைக்கின்றன. ஒற்றி எடுத்துவிட என்னுதடுகள் துடியாய் துடிக்கின்றன. ஆண்பிள்ளைக்குப் பொறுமைதான் அழகு; பொறுமைசாலியைப் போன்று நடிக்கவாவது செய்யென என்னை நானே எச்சரித்துக்கொள்கிறேன். எல்லை மீறிவிடுமோ என்ற அச்சத்தில் என் உள்ளங்கைகள் வியர்க்கிறது. கைகளைப் புல்பரப்பில் தேய்க்கிறேன். உடல் நரம்புகள் உண்டாக்கும் அதிர்வுகளை உனக்குத் தெரியாமல் மறைப்பதற்கு பெரும்பாடு படவேண்டியதாக இருக்கிறது. செம்போத்து பறவை இணைகள் ஆவிலி மரக்கிளையின்மேல் அமர்ந்து ஒன்று விலக மற்றொன்று நெருங்க, விலக நெருங்க என காதல் சரசத்தில் குரலெழுப்பி மகிழ்வது நம்மிருவரின் கவனத்தையும் கவர்ந்தன.

உன் முகத்தின் வியர்வையைக் காற்று உறிஞ்சிக்கொண்டது. கையில் காலி தீப்பெட்டிகள் இரண்டும், நூற்கண்டும் வைத்திருந்தாய். ’பூ கட்ட இங்க எதுக்கு வந்த?’ என்றேன். முகத்திலிருந்த மலர்ச்சி மெல்லக் குழைந்தது. கோபமூட்டி உன்னைக் குழையச்செய்து மீட்டெடுப்பதில்தானே பேரானந்தம் எனக்கு. தீப்பெட்டிகளை ஒரு திசையிலும் நூற்கண்டை என் முகத்திலும் வீசினாய். காரிமாடு மீண்டும் என்னைப் பார்த்தது. மீண்டும் சைகையால் அமர்த்தினேன்.

அருகிலிருந்த கல் ஒன்றைத் தலைக்குமேல் தூக்கிப்பிடித்தபடி ‘அடேய் கொரங்கு என்னை கொலைக்காரி ஆக்காத’ என்றாய். சிரித்தபடி, ‘இந்த வயசுலயும் பொன்வண்டு புடிச்சி அதன் கழுத்தில நூல்கட்டி பறக்கவிட்டு ரசிப்பிபாயா?’ எனக்கேட்டதுக்கு ‘நான் என்னவோ செய்வேன், உன்னால பிடிச்சித்தர முடியுமா? முடியாதா? என முகத்தைச் சுண்டவைத்தாய். குழந்தைத்தனமான இவ்வகை குணத்தாலும் செயலாலும்தான் என்னை என்னிடமிருந்து முழுதுமாக ஈர்த்துகொண்டு வெற்றுக்கூடாக இங்கே உலவ விட்டிருக்கிறாய் பிசாசே- மனத்துக்குள் சொல்லிக்கொண்டு,’ முடியாது போடி. என்ன பண்ணுவ? கொல்லுவியா? கொன்னுக்க. என்னைக்கொன்னுட்டு பொன்வண்டு புடிச்சி விளையாடிட்டிரு’, எனச் சொல்லிக் கொண்டிருக்கையில் அமர்ந்திருந்த மரத்தின் உச்சியிலிருந்து கொம்பேறிமூக்கன் பாம்பொன்று குதித்தோடியது. பயமும் பதற்றமும் அடைந்த நீ கையிலிருந்த கல்லைக் கீழே போட்டுவிட்டு அருகில் வந்து நின்றாய். இருவருக்குமிடையில் இருந்த மூன்றடி இடைவெளியை மூக்கும் மூக்கும் உரசும் நெருக்கத்தில் கொண்டுவந்து நிறுத்தியது அந்தக் கொம்பேறிமூக்கன்.

அந்நேரம் பார்த்து அருகில் எங்கோ பொன்வண்டு பறக்கும் சத்தம் கேட்கவும் முட்டைக்கண்களைச் சுழலவிட்டுத் தேடுகிறாய். விலகிப்போய் தேடவிடாமல் உன்னை என்னிடத்திலேயே தேக்கிவிட்டது பாம்பு. பொன்வண்டின் சத்தம் தேய்வதும் வளர்வதும் உன்னை என்னவோ செய்கிறது. நான் எழுந்து போவதைக்கண்டு புன்னகைத்த உன்னுதட்டுச் சுளைகள், மாடுகளை நோக்கிப்போவதை அறிந்ததும் களையிழந்தன. மாடுகள் போட்டிருந்த சாணத்தை அள்ளி கொல்லையில் வீசிவிட்டு கைகளை சீத்தா இலையில் துடைத்தேன். மாடுகளைப் பிடித்து வேறிடத்தில் மாற்றி கட்டிவிட்டு வந்து அதே இடத்தில் அமர்ந்தேன். என்மீதான எரிச்சல் உச்சிக்குப் பயணிப்பதை உன் பார்வையே உணர்த்தியது. சற்றுத் தொலைவில் இருக்கும் கொன்றை மரத்திற்குமேல் ஒரு பொன்வண்டு பறப்பதைக் கண்டு பதைப்பதைத்து அதையும் என்னையும் மாறிமாறி பார்க்கிறாய். ஓய்ந்து கொன்றை இலையில் அமர்ந்து தலையை ஆட்டியாட்டி இலையைத் தின்கிறது. மினுங்கும் அதன் கரிய தலையும் உடலும், சிவப்பு இறக்கைகளும் உன்னை நிலைக்கொள்ள விடாமல் செய்கிறது.

இயலாமையும், ஏமாற்றமும் தோய்ந்த உன் கண்களைப் பார்க்கவே பிடிக்கவில்லை. விட்டால் சில நொடிகளில் அழுதுவிடுவாய். உன் கோபங்களை ரசிக்கும் எனக்கு உன் அழுகையைத் தாங்கிக்கொள்ள முடியாது, ஆலிங்கனா. சுருட்டி வைத்திருந்த என் சட்டையை விரித்து மூன்று தீப்பெட்டிகளை நீட்டினேன். ஒன்றில் வெட்டைத்தாதரை இலையை வைத்து தலை, உடல், இறக்கை என முழுதும் பச்சை வண்ணம் கொண்ட பொன்வண்டு, அடுத்ததில் துறிஞ்சி இலைகளை வைத்து தலையும் உடலும் பச்சை, இறக்கை மட்டும் சிவப்பு வண்ணம் கொண்ட பொன்வண்டு, மூன்றாவதில் கொன்றை இலை வைத்து தலையும், உடலும் கருப்பு, இறக்கை மட்டும் சிவப்பு வண்ணம் கொண்ட பொன்வண்டு – என மூன்று வகையானதைக் கொடுத்தேன். அழுதே விட்டாய். அது மகிழ்ச்சிக் கண்ணீர். இவ்வுலகில் நான் இறக்கும் வரையிலும் உன் கண்களில் இருந்து மகிழ்ச்சி மட்டும்தான் வழியவேண்டும்.
*

May 7, 2015

ஆலிங்கனா-07


ஆலிங்கனா-07


சித்திரையின் முதல்நாளில் கொட்டோ கொட்டென்று கோடைமழைக் கொட்டி இன்றோடு எட்டாண்டுகள் ஆகிவிட்டது. மழைக்குப்பின்னான நாளில் நிலம் சுற்றிப் பார்ப்பது தனிசுகம். இதோ கிளம்பி விட்டேன். வானம் பார்த்த பூமியில் தூசு படிந்து மழுங்கியிருந்த சின்னஞ்சிறு சரளைக் கற்களெல்லாம் மழைநீரால் கூர் தீட்டிய ஊசிகளாகக் குறுகுறுக்கிறது பாதத்துள். குகையிலிருந்து எட்டிப்பார்க்கும் புலிக்குட்டிகளைப் போல தரைக்குள்ளிருந்து தலைநீட்டி வெளிவருகிறது அருகம்புல் தளிர்கள். தரையில் அமர்ந்து நுனிப்புற்களைக் கவனிக்கிறேன். நினைவு பின்னோக்கி உன்னிடம் திரும்புகிறது.

து போன்றதொரு நாளில் நிலத்தைச்சுற்றி நடைப்போட்டுக் கொண்டிருக்கையில் தான் நெருஞ்சி முள்ளொன்று குத்தி விட்டது உன் காலில். முள்குத்திய காலை சற்றே உயர்த்தி கொக்கைப்போல் நின்றாய் நீ. காலைத் தரையில் தேய்த்தால் முள் தானாய் விழுந்து விடுமெனச் சொல்லியும் நீ அதைச் செய்யவே இல்லை. பாவம் பார்த்துக் கீழமர்ந்து முள்ளைப் பிடுங்க உன் பாதத்தை ஒரு கையில் தாங்குகையில், உன் வலக்கையை உயர்த்தி ஆசிவழங்குவதைப் போன்ற பாவனையில் நிற்கிறாய். என்ன திமிர் உனக்கு? போனால் போகட்டுமென்று பிடுங்கிய முள்ளைத் தூர எறிந்து விட்டு எச்சில் தொட்டு முள்குத்திய இடத்தில் தடவி தேய்த்து விட்டேன். தாங்கித்தாங்கி நடந்து என்னைப் பின்தொடர்ந்தாய்.

சுட்டெரிக்கும் வெயிலில் காய்ந்துக் கருகி விடும் புற்கள், மழைப்பெய்த ஓரிரு நாட்களில் முளைவிடுகிறதே எப்படி என்றொரு கேள்வியை எழுப்பினாய். உன்னிடம் பிடிக்காதவைகளில் அடிக்கடி கேள்வி கேட்டு துளைப்பதும் ஒன்று எனச்சொல்லி விட்டு,  “தனக்குள்ளிருக்கும் புற்களின் வேரினைச் சுற்றிலும் , மண்ணே ஒருவகை பூஞ்சையால் கூடுகட்டி காக்கும். பின் ஈரம் பட்டதும் வேரை மெல்ல விழிப்பூட்டி தளிரை வெளியனுப்பும்என்று, அனைத்தையும் அறிந்த அதிமேதாவி போல் ஒரு பதிலைச் சொன்னேன். அப்படியா! என ஆச்சரியங்காட்டி நம்பினாய். என்னுள்ளிருக்கும் உன் நினைவின் வேர்களுக்கும் இப்பூமியைப் போல்தான்  என் நெஞ்சமும் கூடுகட்டிக் காத்து வருவது, நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை.

நிலத்தின் நடுவில் வகிடெடுத்தபடி இருக்கும் ஒத்தையடிப்பாதையில் நீண்டு பயணிக்கிறது என் கால்கள். மென்மையாய் ஜாதிமல்லியின் வாசம் நெருங்கியது என்னை. சுற்றிலும் பார்த்தேன். ஒருவரும் இல்லை. சற்று நெருக்கத்தில் ஒரு குறும்புதர்ச்செடி தரையோடு தவழ்ந்திருப்பதைக் கண்டேன். அருகே சென்று பார்த்தேன். அப் புதர்ச்செடியில் வெள்ளைநிறத்தில் ஒரு பூ மலர்ந்திருந்தது. சட்டென்று நினைவில் நீ முளைத்துப் படர்கிறாய். விரித்த கூந்தலில் ஒரேயொரு பூவை சூடிக்கொண்டு வெற்றுத்தரையில் நீ சுருங்கிப் படுத்திருப்பதைப் போன்று தோற்றம் பெறுகிறது அச்செடி. நீரிலிருந்து உயிரினம் தோன்றியதாக அறிவியல் சொல்கிறதுஎன்னவொரு அபத்தமான கூற்று அதுஇங்கிருக்கும் அனைத்துமே உன்னிலிருந்து பிறந்தவைமீண்டும் மீண்டும் சொல்வேன்உன் சாயல் இல்லாத ஒன்றுமே இவ்வுலகில் இல்லை. இதோ, அச்செடியில் பூத்திருந்த பூவைப் பறித்தெடுக்காமல் முழங்காலிட்டு குனிந்து முகர்ந்தேன். ஜாதிமல்லியின் அசல் வாசம். அசந்து போய் விட்டேன். ஏனெனில், அது உன்வாசம்.

தாமரையை ராஜமலர் என்பார்கள். இல்லவே இல்லை . என்னைப் பொறுத்தவரை ஜாதிமல்லி தான் ராஜமலர். எனக்கு மிகமிகப் பிடித்த பூ அதுதான். அதன் முகை ன் நீண்ட கூர்மூக்கை நினைவுப் படுத்தும்.  அதன் வாசம் உன்னை முழுதாய்க் கொண்டு வந்து என்முன் நிறுத்தும். என் உடலை இயக்கும் உயிர்க்காற்றையெல்லாம் வெளியே கடத்தி விட்டு ஜாதிமல்லியின் வாசத்தை மட்டுமே நுரையீரல் முழுதும் நிறைத்துக் கொள்வேன். அது உள்ளிருந்து அங்கமெங்கும் ஊறி மூளையின் நினைவடுக்குகளில் போய் பதுங்கிக்கொள்ளும். ஜாதிமல்லியின் வாசத்தை சுவாசிக்க வாய்க்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம், நுகரும் உணர்வை ஐம்புலன்களுக்கும் அளிக்காமல் ஏன் குறைவைத்தான்  இறைவன் என்று கோபம் பொங்கும்.

ன்னையொத்த அச்செடியருகில் சற்றுநேரம் நானும் ஒடுங்கிப் படுத்துக்கொண்டேன். இங்கே தான் நீ குடிகொண்டிருப்பதாய் நம்புகிறது என் மனம். அம்மலரிலிருந்து  பரவும் வாசம் நம்மிருவரையும் உயரத்தில் மிதக்கச் செய்து எங்கெங்கோ பயணித்து கடத்திக்கொண்டு போய் ஓர் அடர்வனத்தின் நடுவில் இறக்கிவிட்டு விட்டது.

வ்வனம் கொஞ்சம் பயமுறுத்தினாலும் குதுகலமாகத்தான் இருக்கிறது. இங்கே கொடிய விலங்குகள் நம்மை அச்சுறுத்தலாம். சாதுவான விலங்கினங்கள் நம்மோடு சிநேகம் கொள்ளலாம். எந்நேரத்திலும் எதுவும் நடக்கலாம். ஆனாலும், இது தான் நம் உலகம். இனிமேல் இங்குதான் நாம் ஜீவிக்கப்போகிறோம்.


அதோ அந்தப் பாறையில் இருக்கும் நீள் சுனையில் நீராடு
அருகே செடிமீது படர்ந்திருக்கும்
கொடிமுல்லை மலர்கள் கொய்துத் தருகிறேன்
கொஞ்சம் பூக்களால் உன்னைத் துவட்டிக்கொள்
மிச்சப் பூக்களை நீ உடுத்திக்கொள்
ஆதியுலகில் நுழையலாம்
ஆதாம் ஏவாள் ஆகலாம்
குகையொன்றில் குடிபுகலாம்
எரிநட்சத்திரம் ஒன்றை வேட்டையாடி வீழ்த்தி
வீட்டு வாசலில் ஒளியேற்றலாம்
காய் கனி தேன் கிழங்கு என தேடித்தேடி
வகைவகையாய் உண்ணலாம்
சிக்கிமுக்கிக்கல் உரசி தீ மூட்டலாம்
கட்டாந்தரையைக் கட்டிலாக்கலாம்
வில் நீ
அம்பு நான்
வினைபுரியலாம்
வினையின் விளைவால் விளையும்
நம் மேல்மூச்சு கீழ்மூச்சு இவ்வனமெங்கும் அலைந்து
வண்டு துளைத்த வன்மூங்கிலில் நுழைந்து
புல்லாங்குழல் இசையாக வெளியேறட்டும்
வனமே இசைந்தாடட்டும்
இம் மன்மத ஆண்டு மதங்கொள்ளட்டும்.

எழு ஆலிங்கனா.

*

Feb 14, 2014

ஆலிங்கனா-06


கொத்துக்கொத்தாய் மிகக் கூர்மையான மெல்லிய முட்களைக் கண்டு விலகிச் சென்ற என்னை வழியே வந்து விருந்துக்கு அழைத்தது அந்த அடர்ந்தரோஸ் நிற சப்பாத்திக்கள்ளிப்பழம். அருகே சென்று சில பழங்களைப் பறித்து பக்கத்திலிருந்த பாறையின் மீது உரசி அதன் மென்முட்களை நீக்கிக்கொண்டிருந்தேன். முதுகுப்புறமிருந்து வரும் சருகு நொறுங்கும் சப்தம் நெருங்கி ஒலிக்கையில் வருவது நீ தான் என உளவு சொன்னது செவிப்புலன். நான் திரும்பிப் பார்ப்பதாக இல்லை. உயிர் முழுதும் ஆவல் நிரம்பியிருந்தாலும், உன்மீதான கோபம்  கழுத்துவரை தேங்கியிருந்தது எனக்குள். இருக்காதா பின்ன? உள்ளூரில் இருந்துக்கொண்டே இரண்டு நாட்களாய் கண்ணிலேயே படாமல் போக்குக்காட்டிய காட்டேரி தானே நீ.

முன்புறம் வந்து நிற்க உனக்கும் துணிவில்லை போல. முதுகுப்புறத்திலேயே நின்றுக்கொண்டிருந்தாய். ஒரு பழத்தைக் கீறி உள்ளிருந்த கொக்கி முள்ளை எடுத்து தூர வீசிவிட்டு பழத்தை வாயிலிடும் நேரம் பார்த்து “எனக்கு” என்றாய். கோபமாய்த் திரும்பினேன். உன் வலக்கன்னத்திலிருந்த தழும்பைக் கண்டதும் வலி கொண்டு,  “என்னாச்சி” என கேட்கும் முன்னமே உன் கீழ் இமைக்குள்ளிருந்து குதித்து விட்டது கண்ணீர். கையை நீட்டினேன். உன் கைகளைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டாய். என்னவாயிருக்கும் என எண்ணியபடியே வலுக்கட்டாயமாக பிடித்திழுத்ததுப் பார்த்ததும் உன் உள்ளங்கைக்குள் நீ சுமந்து வந்த சூட்டுக்காயத்தைக் கண்டு உள்ளம் கலங்கி போனேன்.

ன்றொருநாள் காட்டுக்குப் போய் காளான் சமைத்துச் சாப்பிட்ட கதையை சில நாட்கள் கடந்து உன் தோழியிடம் பெருமையாய் நீ சொல்ல, அது உன்னைப் பிடிக்காத ஒருத்தியின் காதில் விழ, அவள் போய் உன் அம்மாவின் காதில் அமிலம் போல் ஊற்ற அதனால் விளைந்த காயம் இதுவெனவும், இனியெப்போதும் என்னைப் பார்க்கவோ, பேசவோ கூடாதென எச்சரித்து இருநாட்களாய் வீட்டோடு வைத்திருந்ததையும் சொல்லி முடித்தாய். இப்போதும் கூட யாருக்கும் தெரியாமல் தான் இங்கே வந்திருப்பதாய்ச் சொன்னாய்.

இங்கிருந்தால் யாராவது பார்க்கக்கூடும் என்பதால், முள்நீக்கி வைத்திருந்த பழங்களை உன் தாவணியின் முந்தானையில் அள்ளிக்கொண்டு  ஆளரவமற்ற பகுதிக்கு நடந்தோம். ஒரு சின்ன பாறையில் அமர்ந்து உன் துயரங்களைச் சொன்னாய். ஆறுதல் சொல்லிக்கொண்டே பழங்களை உறித்தேன். உறிக்கையில் விரலில் வழிந்த பழச்சாற்றினால் உன் நெற்றியில் பொட்டிட்டேன். இப்படி நேருமென்று சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை நீ. நானும் தான். பின் பழச்சதையை உண்ணக்  கொடுத்தேன். கொஞ்சம் எனக்கும் ஊட்டினாய். அதன் சதையையும், சாற்றையும் உறிஞ்சிக்கொண்டு விதைகளைத் துப்பத் திரும்பியவளின் பார்வை நிலைத்த இடத்தில் ஊர்ந்துச் சென்றுக்கொண்டிருந்த ‘வெல்வெட் பூச்சி’யைக் கண்டேன். அதை எடுத்து உன் கையை விரித்து சூட்டுப்புண்ணின் மேல் விட்டேன். அங்கிருந்து முன்னும் பின்னும் நகர்ந்த அப்பூச்சியைப் பார்கையில் புண்ணிலிருந்துக் கசிந்துத் திரண்ட ரத்தத்துளி ஒன்று உருள்வது போல் இருந்தது. வலி மறந்து அதன் மென்மையை ரசித்தாய் நீ. உன் நிலைக்கண்டு உள்ளுக்குள் கசிந்தேன் நான்.

உன்னுடன் இருப்பது மகிழ்வாய் இருந்தாலும், நேரம் கடந்துக்கொண்டிருந்ததை எண்ணி உறுத்திக் கொண்டே இருந்தது. பிரிய மனமில்லை தான். இருந்தாலும்,  “உன் அம்மா தேடுவதற்குள்  வீடு போய் சேர்”, எனச் சொன்னேன்.  “கொஞ்ச தூரம் நீயும் வா” என்றாய். பின் தொடர்ந்தேன்.

கல்லாலமரத்தைக் கடக்கையில் எதிரே இருபதடி தொலைவில் இரு பாம்புகள் ஒன்றாகித் தள்ளாடுவதைக் கண்டதும் பதறியபடி திரும்பிய வேகத்தில் என்னை நெஞ்சிறுகக் கட்டிக்கொண்டு கண்களை மூடிக்கொண்டாய். வழக்கமாய் இதயம் துடிப்பதைக் கேட்டிருக்கிறேன். இதயம் நடுங்கும் என்பதை அன்றுதான் உணர்ந்தேன். உன் இதயத்தின் தாறுமாறான துடிப்பை என் மார்பு உணர்ந்தது. நடுங்கும் உன்னை நிதானப்படுத்த என்ன செய்வதெனப் புரியவில்லை எனக்கு. ஒருவாறு,  பின்னந்தலையில் தொடங்கி தோளினைத் தடவியபடியே எதையெதையோ பேசி உன்னை திடப்படுத்தினேன். சிறிது சிறிதாக நடுக்கம் தொலைத்தாய். உன் முகத்தை உயர்த்தினேன். ஆனாலும் கண்களைத் திறப்பதாயில்லை நீ. போர்வைக்குள் புரளும் பூவையைப்போல திறவாத இமைக்குள் இடவலமாய்  உருண்டன உன் கண்கள். உதட்டுக்குச் சற்று மேலுள்ள பூனைமுடிகள் குறுகுறுப்பாய் என் கண்களை முறைத்துப் பார்த்தன. அதை நான் கண்டு கொண்டதாய்க் காட்டிக் கொள்ளவில்லை.  மூடிக்கிடந்த உன் இமைகளின் மேல் மெதுவாய் ஊதினேன். காற்றின் வருடலில்  நீ கண் திறந்தத் தருணத்தில் பாம்பிருக்கும் திசையைப் பார்க்கச்சொல்லி கண்களால் உத்தரவிட்டேன். பிடியின் இறுக்கம் தளர்த்தாமல் திரும்பிப் பார்த்தாய். சரசத்தில் பிணைந்திருந்த அந்த சர்ப்பங்களும் நம்மைக் கண்டுக்கொள்வதாய் இல்லை. பாம்பின் திசையிலிருந்து பார்வையை விலக்கி இருவர் கண்களும் இணையாய் மோதின. இரு கண்கள் என்னவோ கேட்டன. இரு கண்கள் எதையோ சொல்லின.

காம்பில் தங்காது கழன்ற, கனிந்த நாவல்பழங்கள் இரண்டு முழுமையடைந்த பெண் ஓவியத்தின் முகத்தில் விழுந்து ஒட்டிக்கொண்டதைப் போன்ற உன் உதடுகள் எனக்குள் ஏதோ வேதிவினை நிகழ்த்தின. கனியும் கனி வாய் எனக்கு ஒப்புதல் அளிப்பதாய் சுழிந்தன. என் மார்பில் முட்டியிருந்த சிற்ப பூச்செண்டுகள் தீக்கங்கின் வேலையைச் சிறிதாய்த் தொடங்கியிருந்தன. அந்த பாம்புகளின் நிலைக்குச்செல்ல நம்மை ஆயத்தமாக்கின ஆர்மோன்கள். இரத்தநாளங்கள் மொத்தமும் பித்தம் கடத்தின. மூடியிட்ட கொதிகலனிலிருந்து சிறு துவாரத்தின் வழியே வெளியேறும் நீராவி போல இரு மோகக் கலன்களிலிருந்து தீ மூச்சு வெளியேறிக் கொண்டிருந்தது. இருவருக்குள்ளும் சுழலும் ஊன்வெப்பப் பெருக்கத்தால் மார் கச்சையின் கீழ்கொக்கி கழல மறுத்தும் முயற்சியை நிறுத்தவில்லை விரல்கள். 

தளிரான என்மேனி
தாங்காது உன் மோகம்” .

– பாடல்வரி தூரத்தில் எங்கோ ஒலித்துக் கொண்டிருந்தது.


*

Aug 30, 2013

ஆலிங்கனா-05


       லம் விழுது போல நிலவிலிருந்து ஒரு ஒளிக்கயிறு என் முன்னே இறங்கியது. ஆவலில் அதைத் தொட்டதும் என் கைகளை  அதிலிருந்து விலக்கவே முடியவில்லை. நிலவிலிருந்து யாரோ அக்கயிற்றை மேல்நோக்கி இழுத்தார்கள். உயரே போகப்போக உயிரே போய்விடும் போல் திகிலலடைந்து மனம். பயத்தில் நினைவிழந்துவிட்டேன். நினைவு திரும்பி கண்விழித்தபோது எதோவொரு புது இடத்தின் விளிம்பில்  விழுந்துக்கிடந்தேன். இப்போது அங்கே கயிறு எதுவும் இல்லை. படுத்தபடியே சுற்றிலும் பார்த்தேன்.ஒருவரையும் காணவில்லை. இரு கைகளாலும் விளிம்பினை உறுதியாகப் பிடித்துக் கொண்டு எட்டிப் பார்த்தேன். இதுவரையிலும் காணாத என்னென்னவெல்லாமோ தெரிந்தது. அவற்றின் பெயர் தெரியாததால் அவை பற்றி எதுவும் இங்கே விவரிக்க முடியாது என்னால்.  படுத்திருந்த தரை பளிங்கினால் ஆனது போல் இருக்கிறது. எழுந்து நிற்க முயன்றேன். கால்கள் நழுவியது. இப்போது புரிந்து விட்டது எனக்கு, நானிருக்கும் இடம் நிலா

இத்தனை ஆண்டுகளாய் நான் நினைத்திருந்ததைப் போல நிலா தட்டையாய் இல்லை. இங்கே வந்த பின்புதான் தெரிகிறது, ஒளியுமிழும் ஒரு வட்ட பரப்பு இது.  வட்டத்தின் நடுவில் குழிந்து குளம் போன்றதொரு  பள்ளத்தில் பால் நிரம்பியிருக்கிறது. நிலவின் விளிம்பையொட்டியே நடந்து பூமியை எட்டியெட்டிப் பார்த்து பரவசத்தில் இருந்தேன். நிலா மெல்ல குலுங்கியது. மீண்டும் பயம்.  ஓரிடத்தில் நின்று குளத்தை உற்றுக் கவனித்தேன். நிலவின் கரையில் நிற்கும் என்னை பொருட்படுத்தாமல் பால்குளக் கரையோரத்தில் நின்று மேலாடைகளை மெல்லக் களைந்து வீசியெறிந்தாய். அது காற்றில் அலைந்து அலைந்து நிலவின் மறுவிளிம்பில் சிக்கித் தொங்கியது. அனுதினமும்  குளிக்க ஆடைகளைக் களைந்து நீ வீசும்போது ஒழுங்கற்று விழுந்து நிலவின் சில பகுதிகளை மூடிக்கொள்வதால் வளர்பிறை, தேய்பிறை நிகழ்வதையும், உனதாடை தவறுதலாய் நிலா முழுவதையும் மூடிக்கொள்ளும் நாளில் பிரபஞ்சமே இருண்டு போய் அமாவாசை யாவதையும் புரிந்துக் கொண்டேன். ஆளரவமே இல்லாத இங்கே நீ மட்டும் எப்படி வந்திருப்பாய் என்பதை நினைத்துப் பார்த்தேன். சாத்தியமே இல்லை. சத்தியமாய் நீ நிலவின் மகளாய்த்தான் இருக்க முடியும் என முடிவு கொண்டேன்.

பாவடையின் நாடாவைத் தளர்த்தி இடுப்பிலிருந்து உயர்த்தி திமிரும் தனங்களுக்கு மேலே நெருக்கிக் கட்டி பால் குளத்தில் இறங்கி நீந்தினாய். பல்லவன் உளி பெற்றெடுத்த கரிய கற்சிலையொன்று பாலில் நீந்துவதைக் கண்ட என் கண்கள் வியப்பில் இமைக்க மறந்து போயின. கண் திரைகள் உலர்ந்து விட்டன. நிலவின் விளிம்பில் நான் நின்றிருந்த இடம் மட்டும்  பாரந்தாங்காமல் அலுமினியத் தட்டினைப் போல் நெகிழ்ந்து வளைவதை என் உள்ளங்கால்கள் உணர்த்துகின்றன. இங்கிருந்து நகர்ந்து விடலாம் என நினைக்கையில், இனி ஒரு அடி கூட நடக்கவே முடியாது என்னால். ஆமாம், என் பாதத்திலிருந்து நிலவிற்குள் வேர் பாய்ந்துக்கொண்டிருக்கிறது. வேறு வழியின்றி குளத்தையே பார்த்துக் கொண்டு நின்றேன். பாலுக்குள் மூழ்கி நெடுநேரம் கழித்து வெடுக்கென தலைநீட்டிய நீ அடக்கியிருந்த மூச்சை அவசர அவசரமாய் வெளியேற்றி,உள்ளிழுக்கும் போது அந்தக் குளமே சுருங்கி விரிவது விந்தையாய் இருக்கிறதெனக்கு.  

நீந்தி களைத்துக் கரையேறுமிடத்தில் தும்பைப் பூக்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கிறது. குளத்திலிருந்து வெளிவந்து அப்பூக்களை அள்ளியெடுக்கிறாய். பூந்துவாலையைப் போல் பின்னி விரிகிறது அவ் உதிரிப்பூக்கள்.  முகத்திலிருந்து பாதம்வரை துடைக்கிறாய். உன் உடலைத் துடைக்கையில் அத்துவாலையிலிருந்து உதிரும் தும்பைப்பூக்கள் கண் கூசாத அளவிற்கு ஒருவிதமான மென்னொளி வீசுகின்றன.  உதிர்ந்த பூக்களின்மேல் வானம் நோக்கி நீண்டு படுத்துக் கொண்டாய். சிதறிக்கிடந்த பூக்களை எடுத்து அங்கத்தின் அந்தரங்கத்தை மூடினாய்.


சற்றுநேர இளைப்பாறலுக்குப் பின் மீண்டும் குளத்தில் இறங்கி நீந்தத் துவங்கிவிட்டாய். நீந்துவதும் இளைப்பாறுவதும் தான் உன் வேலையா? உனக்கு பசியே எடுக்காதா? பசிக்காது தான். உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கும் எனக்கே பசிக்கவில்லையே. உனக்கு மட்டும் எப்படி பசிக்கும்? இங்கே எதை உண்டு இத்தனை வனப்பாக வளர்ந்தாய் நீ? பெண் அங்கத்திற்கென உருவகித்திருக்கும் அத்தனை இலக்கணங்களுக்கும் உரியவளாய் எப்படி உருவெடுத்தாய் நீ? ஒருவேளை மந்திரமோகினியா நீ? இங்கிருந்து உன்னை நான் பார்க்க முடிகிறதென்றால் அங்கிருந்து என்னை உன்னால் பார்க்க முடியுந்தானே? பிறகேன் என்னைக் காணாதவள் போலவே ஆடை அவிழ்ப்பதும், நீந்துவதும், கரையில் புரள்வதுமாய் செய்கிறாய்.  ஒருவேளை பார்வையற்றவளா நீ?

அட! நின்றவிடத்திலிருந்து நான் உன்னையே பார்த்துக் கொண்டிருந்ததை எப்படியோ உணர்ந்து விட்டாய். நீர்க்கோழி போல் மீண்டும் பாலுக்குள் மூழ்கி உன்னை மறைத்து கொண்டு விட்டாய். மூச்சுத்திணறி இறந்துவிட போகிறாய். வெளியே வந்துவிடு சிலையம்மா. வா. வந்து விடு. குளத்தினருகில் வந்து உன்னைத் தேடலாமென்றாலும், வேரூன்றி விட்ட கால்களை விடுவிக்க முடியவில்லை என்னால். உனக்கு என்னாகுமோ என தவித்து, எப்போது வெளியே வருவாயென எதிர்பார்த்து காத்து களைத்திருந்தேன்.  நான் போய்விட்டிருக்கக் கூடும் என்றெண்ணி, நீரினடியில் அமிழ்த்து வைக்கப்பட்டிருந்த வளி நிரம்பிய பந்து பிடி நழுவி வெளியேறும் வீச்சில், குளத்திலிருந்து   வெளியே தலையை நீட்டி கூந்தலை ஒரு வீசுவீசினாய். கூந்தலிலிருந்து தெரித்த பால் துளிகள் என் கண்ணுக்குள் வந்து விழுந்தன. அனிச்சையாய் கண்களைக் கசக்க, கலைந்துவிட்டது கனவு. 

*

Feb 14, 2013

ஆலிங்கனா-04


துநாள் வரை உன்னிடம் சொல்லாத ஒரு உண்மை இருக்கிறது. என்னுடன் நீ பழகத் தொடங்கிய நாளிலிருந்து என் உடலெங்கும் ஒருவகையான விஷம் ஊறத் தொடங்கியிருப்பதாய் உணர்கிறேன், ஆலிங்கனா. நடிக்கவே தெரியாத நயணத்தை எப்படி அருளினான் உனக்கு!?  எத்தனை அன்பையும், ஏக்கத்தையும் ஒருசேர பிரசவிக்கின்றன உன் கண்கள்! அய்ய்ய்யோ! உன் பார்வையை எதிர்கொள்ளும் வல்லமை இன்னும் என் கண்கள் பெறவில்லை. அனைத்தையும் நிறைவாய் கொடுத்த ’அவன்’ உனக்கான அன்பிற்கு மட்டும் பஞ்சம் வைத்து விட்டிருக்கிறான்  ‘பரதேசி’. என் ஆயுளை இட்டு நிரப்பினாலும் நிரம்பாதது உன் விழிப்பள்ளத்தின் ஏக்கம், ஆலிங்கனா. 

முந்தைய சந்திப்பின் விடைப்பெறுதலின் போது அந்த தேன்கலை மலையினைச் சுட்டிக்காட்டி, என்றாவது ஒருநாள் அம் மலையுச்சியில் இருக்கும் பூமரத்து சுனைக்கு உன்னை அழைத்துச் செல்வதாய்ச் சொல்லியிருந்தேன். அன்றது வாய்க்கும் என்று எதிர்பார்க்கவில்லை நான். உன்னை எண்ணி வியக்கும் விசயங்களில்  அந்த நாளினை தேர்ந்தெடுத்ததும் அடங்கும். இயல்பாய் வாய்த்துவிட்டது அந்நன்னாள். ஆமாம், அன்று பிப்ரவரி 14.  ஆனால்  ‘காதலர் தினம்’ அது என்பதை நாமறியாத காலம் அது.   இருவருமாய்ச் சேர்ந்து  முழுநாளையும் கழித்தோம். என்னவொரு தேவசுகம்! இங்கிருப்பவர்களில் யாராலும் உணரமுடியாது அதை. ஒருவேளை நாகரீகம் காணாத  கற்கால முன்னோர்கள் உணர்ந்திருக்கலாம். 

காட்டுப்பாதைப் பயணம் உனக்கு புதிது. உன் உடை இழுக்கும் முட்செடிகளை  விடுவித்து நீ நடந்து வருவதைக் காண பாவமாக  இருந்தது. செடிகளின் மீது கோவம் கோவமாய் வந்தது எனக்கு. ஒரு செடி கூட உன்னைத் தொடக்கூடாதென்ற என் எண்ணத்தின் பின்னணியில் என்ன இருக்கும் ஆலிங்கனா? ஒரு கவைக்கழி கொண்டு வழியோரச் செடிகளை ஒதுக்கி நீ மலையேற வழியமைத்துக் கொண்டே முன் நடந்தேன். செடிகளை ஒதுக்குகையில் சிறு புற்றின் ஓரம் ஒரு மொட்டுக்காளான்  உன் கூர்மூக்கில் அணிந்திருக்கும் ஒற்றைக்கல் மூக்குத்தியைப் போல தெரிந்தது.  அந்தப் புற்றினைச் சுற்றிலும் இருந்த புதரினை இன்னும் சற்று ஒதுக்கிப் பார்க்கையில் மொட்டுக்காளான்கள் மொத்தமாய் விளைத்திருந்ததைக் கண்டோம். புதருக்குள் நுழைந்து நான் பறித்தெடுத்த காளான்களை நீ பாவாடை மடியில் ஏந்தி எடுத்துக் கொண்டாய். அதைச் சுமந்தபடி நடக்கத்தெரியாத உன்னழகை எந்த சொல் கொண்டும் விளக்க முடியாது என்னால்.

மலையுச்சியை நெருங்க நெருங்க  பெருஞ்சுவாசத்தின் சுதிக்கேற்ப ஜதி பிடித்து ஏறி இறங்கியது உன் நெஞ்சம். மலையுச்சியில் நின்று சுற்றியிருக்கும் ஊர்களையும், அலையலையாய் தெரியும் தூரத்து இளநீல மலைகளையும் கண்ட பரவசத்தில் மடியின் பிடியை மறந்த உன் கை கன்னத்திற்குக் குடியேறிவிட,  பிடி தளர்ந்து மடி பிறிந்த காளான்கள் சறுக்கு பாறையில் உருண்டோடின. காளான்களை நான் பார்க்க, பரவசம் தொலைத்து பயத்துடன்  என்னைப் பார்த்தாய். மெலிதாய்ச் சிரித்து, ’சுனையில் போய் விழும் எடுத்துக்கலாம் விடு என்றதும்’ மெல்ல நீயும் சிரித்தாய். காட்டு முல்லை பூத்தது போன்ற பற்கள் உனக்கு.

சரி வா சுனைக்குச் செல்லலாம் என சரிவான பாறையில் லாவகமாய் இறங்கினேன். அனுபவம் இல்லாததால் சிலையாக நின்றாய் நீ. மேலேறி வந்து உன் கரம் பற்றின போது தான் கண்டேன், பள்ளத்தைக் கண்டு பயத்தில் நடுங்கும் உன் பாதத்தையும். அப்படியே உன்னை அமரச் செய்து பயத்தால் வியர்த்திருந்த பாதங்களைக் கையால் துடைத்து விட்டு பயம் போக்க என்னென்னவோ சொல்லிப் பார்த்தும் பயனின்றி போகவே  ‘உப்பு மூட்டை’ சுமந்தேன் உன்னை. உள்ளங்கையில் சிறை பட்ட புறாவின் கதகதப்பையும், நடுக்கத்தையும் முதுகில் உணர்ந்தேன். நம்பினால் நம்பு, பூமி சுழல்வதை அப்போது தான் உணர்ந்தேன் நான்.

சுனையில் மிதந்துக்கொண்டிருந்த காளான்களை ஒவ்வொன்றாய் எடுத்து உன்னிடம் வீசினேன். எடுத்து பத்திரப்படுத்தினாய். கூட்டாஞ்சோறு செய்துண்ணும் ஏற்பாட்டுடன் சென்றிருந்தோம். அதை கை விட்டுவிட்டு காளான் சமைக்க ஆயத்தமானோம். மூன்று கற்களால் அடுப்பு வைத்து அருகிலிருந்த சுள்ளிகள் எடுத்து தீ மூட்டி உடன் எடுத்துச் சென்றிருந்த அலுமினிய கும்பாவில் சுனைநீர் விட்டு சிறிது உப்பு, சில காய்ந்த மிளகாய்களைக் கிள்ளிப் போட்டு, அதனுடன் களான்களையும் சேர்த்து சிறிது நேரம் வேக வைத்து பாறைமீது வைத்து பறிமாறினேன்.  பசி தீர்ந்தது. குடிக்க நீர் கேட்டாய். மண்டியிட்டு சுனையில்  குடித்துக் காட்டினேன். அந்தமுறை உனக்கு எளிதாய் இல்லை.ஆனாலும் முயற்சித்துக் குடித்தாய். பின் சுனைக்கருகிலான குகையில் அமர்ந்து இளைப்பாறினோம்.

‘இத்தனை எளிமையாய் சமைக்க எப்படி கற்றாய்?’ என்றாய். கிராமத்து ஜனங்களுக்கு எளிமை மட்டும் தானே தெரியும் என்றேன். என்னில் வியக்க எதுவுமே இல்லை. ஆனாலும் உன் ஒவ்வொரு மிடறு பார்வையிலும் என்னை வியந்தே விழுங்கினாய், ஆலிங்கனா.  என்மீதான ஈர்ப்பு எந்த கணத்தில் உதித்தது உனக்குள்?. என்னிலிருந்தே உன் உலகை முற்றுமுழுதாய் உணர்ந்துவிடும் எண்ணம் எப்படி வந்தது உனக்குள்?  எனக் கேட்டுவிடும் முடிவோடு தான் இன்றுன்னை அழைத்து வந்தேன். ஏதோவொரு தயக்கம்.  வேறொரு நாளில் கேட்டுக்கொள்கிறேன் விடு.

‘கோரை ஜோசியம் தெரியுமா உனக்கு’ என்றேன். உதடு பிதுக்கிய நீ ‘எப்படின்னு எனக்கு சொல்லிக் கொடேன்’ என்றாய். ஒரு கோரைப்புல் எடுத்து ஆளுக்கொரு முனையில் பிடித்து சரி பாதியாக பிளக்க வேண்டும். சிக்கல் விழாமல் பிளந்துக் கொண்டால் நாம் நினைத்தது நிறைவேறும். சிக்கலாக பிளந்தால் நிறைவேறாது’ எனச்சொல்லி விளக்கினேன்.  ‘சரி சரி நாம் கோரை ஜோசியம் பார்க்கலாம்’ என்றாய். சுனையின் கரையில் வளர்ந்திருந்த கோரைப்புற்களில் ஒன்றை பிடுங்கி வந்து ஆளுக்கொரு முனையைப் பிடித்துகொண்டு  ‘மனதுக்குள் ஏதாவது நினைத்துக் கொள்’ என்றேன். ‘ம்’ என்றவுடன் பிளக்கத் துவங்கினோம். சிக்கலாய்ப் பிரிந்தது. கண்கள் கலங்கினாய். ஏனென்று கேட்டதும் வெடித்தழுது வெளிப்படுத்தினாய்.  ‘நாம் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தேன்’ என்று. என் கண்கள் நீர் அவிழ்க்க ஆயத்தமானது.

பொழுது சாயத் தொடங்கியது. அமைதியிழந்த மனதுடன் வீட்டிற்குப் புறப்பட்டோம்.  வழியெங்கும் அமைதி நிறைந்திருந்தது. பொதுவாக காட்டிற்கு நிசப்தமாய் இருக்கப் பிடிக்காது. இப்பொழுது எந்த முட்செடியும் உன் உடையைப் பிடித்திழுக்கவில்லை. ஆனாலும், கவக்கழியால் வழியேற்படுத்திக் கொண்டே வந்தேன். என்னின் இந்த வழித்துணை வாழ்நாளெல்லாம் உன்னைத் தொடரும் என்றே நானும் நம்பினேன். காலமும், காலனும் கூட்டுக்களவாணிகள் என்பது புரிய ஆண்டுகள் தேவையாய் இருந்தது.   

எளியவன் நான் என்ன செய்வேன் ஆலிங்கனா.

***

Oct 5, 2012

ஆலிங்கனா-03


மாரளவு செடிகளை விலக்கிக் கொண்டு வரப்பில் நீ வருவதைக் கண்டதுமே மழைப்பொழிய தொடங்கும் முன் சிலுசிலுவென ஒரு மென்காற்று தரையோடு தவழ்ந்து வந்து உடலைத்தழுவி உயிரை வாங்குமே, அதுபோல உள்ளமெங்கும் ஒரு குளிர் பரவி ஓயாமல் பேரானந்ததைப் பிரசவித்தபடியே இருந்தது. 

வரும்போதே ஒரு வண்ணத்துப்பூச்சியைப் பிடித்த நீ, அதன் தவிப்பைத் தாளாது பறக்கவிட்டு வந்திருந்தாய். ஆனாலும், விரல் நுனியில் ஒட்டியிருந்த வண்ணங்கள் அழிந்துவிடாமலிருக்க நீ எடுத்த பிரயத்தனங்களைக் காண  கண்ணிரண்டு போதவில்லை போ. நானறிந்த வரையில், நான் ஆடு மேய்ப்பதை ஆனந்தமாய் பார்த்த முதல் மோகினி நீ மட்டும் தான் ஆலிங்கனா.

வெள்ளைச்சட்டை உனக்கு வெகு அழகு. சட்டையின் இட,வல பைகளில் ஒளித்து வைத்திருக்கும் பம்பரத்தை நினைவூட்டும் உன் கழுத்துக்குக் கீழான பகுதியைப் பார்க்காமல் தவிர்க்கும் பொருட்டு நான் பட்ட பாட்டை நீ பார்த்தாய். ஆனாலும் என்னை கடிந்துக் கொள்ளவில்லை நீ. தொடர்ந்தும் நான் பார்த்துப்பார்த்து பசியாகிக் கொண்டேன். பேச்சினூடே ”தொய்யாம்பால் சாப்பிடுவியா?’, எனக்கேட்டேன். பேந்தப்பேந்த விழித்தாய். செய்து தருகிறேன் எனச்சொல்லி ஒரு நொடியும் தாமதிக்காமல் தாயாய் செயல்பட்டேன்.

மேய்ந்துக்கொண்டிருந்த வெள்ளாட்டு மடியில் பால் கனத்திருந்தது. பசியாறக் கொண்டு வந்திருந்த கேழ்வரகு கூழை ஆட்டிற்கு உண்ணக்கொடுத்து பின்னங்கால்களை உன்னை பிடிக்கச்சொல்லி,  தூக்குச்சட்டியில் பால் பீய்ச்சி வெதுவெதுப்பு ஆறும் முன் வெப்பாலைக் கொழுந்துகளைக் கிள்ளிப்போட்டு மூடியிட்டு வைத்துவிட்டு,  சில நிமிடங்கழித்து உன் கையிரண்டை மலர்த்தி  கவிழ்த்துக் கொட்டினேன். உன் உள்ளங்கையில் மெல்ல அதிர்ந்த அந்த  ”பால் கட்டி” வெள்ளை இதயம் அசைவது போலிருந்ததைக் கண்டதும், ”உடலுக்குள் ரத்தத்திற்கு பதிலாக பால் ஓடினால் நம் இதயமும் கூட இப்படித்தான் இருக்கும் இல்லையா”, என  நீ கேட்டது நெஞ்சுக்குள் நங்கூரமிட்டபடியே இருக்கிறது  ஆலிங்கனா.

காய்ச்சாதபால் கட்டியானதை நம்ப முடியாமல் விழித்தாய். விவரித்தேன். சுவைத்து குதூகளித்தாய். எஞ்சியதை எனக்கும் ஊட்டிவிட்டாய். என் வாயைச்சுற்றி திட்டுதிட்டாய்  ஓட்டியிருந்த பால்கட்டியைக் கூச்சமின்றி துடைத்தெடுத்தாய் . தேவதை கூட தாயாகும் தருணத்தை உணர்ந்தேன் நான்.  அதற்கு முன் ஆயிரம் முறை தொய்யாம்பால் செய்து சாப்பிட்டவன் தான் என்றாலும், உன் கையால் உண்டதும் அமுதசுவை அறிந்தேன் அன்று ஆலிங்கனா. 

வெயில் சற்று உரக்க வீசியது.  கொன்றை மரத்தின் வேர்கள் மீதமர்ந்து பேசத்துவங்கினோம். அது ஆவணி மாதம். தங்க நிறத்தில் கொத்துக்கொத்தாய்ப் பூத்து தொங்கிக் கொண்டிருந்த கொன்றைப்பூக்கள் மெதுமெதுவாய் அசையும் காற்றுக்குங்கூட ஒன்றிரண்டு  பொன்னிறப்பூக்களை  நம்மீது உதிர்த்து பூரிப்பு கொண்டது கொன்றைமரம்.

குறிப்பு:- மேலே ”வெப்பாலை” என்னும் சொல்லின்மேல் சொடுக்கினால் படம் பார்த்து விளங்கிக் கொள்ளலாம்.




May 30, 2012

ஆலிங்கனா-02



முதலில் இதை படியுங்கள் ஆலிங்கனா-01

க்னி நட்சத்திரம் முடிந்தும் வெயில் சுட்டெரிக்கிறது. வீட்டுக்குள் அடைபட்டிருக்க முடியவில்லை. ஊரை ஒட்டியிருக்கும் ஏரியின் பக்கம் சென்று குளிர்க்காற்றை தழுவி வரலாம் என கிளம்பி விட்டேன். ஒருமுறை நாம் அங்கே சென்றிருந்தபோது கடல்போல் காட்சி தந்து நம்மை மிரட்டிய நீர் நிரம்பிய ஏரி இல்லை இது ஆலிங்கனா. ஏரியின் அடி மடியில் மட்டும் நீர் ஒட்டியிருக்கிறது நீ இல்லாத நான் போல!

அந்த கொஞ்ச நீரையும் வெயில் குடித்துவிடக்கூடாதென மரகதப்போர்வை போர்த்தியிருக்கிறது பாசி (அலைதாவரம்). நீரின் போர்வையை உதறி போர்த்தத் தோன்றியது எனக்கு. சற்றே பெரிய கல் ஒன்றை தூக்கி நீரில் வீசினேன். கல் விழுந்த இடத்தில் துள்ளி தெரித்த நீர், ஆழ் தூக்கத்திலிருந்து பதறியெழும் பச்சிளங்குழந்தையாய் தெரிந்தது. அவ்விடத்தில் பாசி சற்றே விலகி பின் மெதுவாய் போர்த்தியது நீர் பரப்பை. அதை கண்டதும் நொடியும் தாமதிக்காமல் உன்னைத்தேடி ஓடியது மனம் ஆலிங்கனா.

முன்பொருமுறை இங்கே நாம் வந்திருந்தோமெனச் சொன்னேனே, அன்று நீ சரிகைநெய்த அரக்குநிற பார்டர் வைத்த பச்சைநிற பாவாடையும், அதே நிறத்தில் ரவிக்கையும், மாம்பழ மஞ்சள் நிறத்தில் தாவணியும் உடுத்தி வந்தாய். அநேக கோயில்களில் அம்மன் சிலைகளுக்கு இந்த நிற உடைகள் தான் பிரசித்தம். அன்றெனக்கு அலங்காரமற்ற அம்மன் போல் தெரிந்தாய் நீ. இருவரும் எதிரும் புதிருமாய் கால்கள் நீட்டி அமர்ந்திருந்தோம். நீரலையைத் தழுவி வந்த காற்று எதிர்பாராத நொடியொன்றில் உன் பாவாடையை கெண்டைக்கால் தெரிய உயர்த்திவிட உயிர் போனதைப் போல் பதறிய நீ, பளபளக்கும் உன் கால்களை கள்ளத்தனமாய் திண்ணும் என் கண்களைக் கண்டதும் பசியாறி போகட்டுமென்றோ என்னவோ மெதுமெதுவாய் பாதம் வரையில் இழுத்து மூடியது நினைவில் ஊர்கிறது.

என்னை என்னென்னெ செய்ய தீர்மானித்திருக்கிறதோ உன்னை அபகரித்துக்கொண்ட இந்த இயற்கை! உன்னை ஏன் இந்த அளவிற்கு காட்சிபடுத்துகிறது என் மனமும், கண்ணும்? என் கண்களை குருடாக்கிக் கொண்டு பைத்தியாமாகி யாரும் அறியாத தொலைதூரத்திற்குப் போய்விட வேண்டும் ஆலிங்கனா. கண் போனால் என்ன? மனக்கண்ணில் நீ இருக்கிறாய் அது போதாதா எனக்கு? கண் தெரியாத நான் உன் கரத்தினைப் பற்றிக்கொண்டு என் ஜீவன் சொட்டுச்சொட்டாய் வற்றி முற்றுமுழுதாய் அற்று போகும் வரை உன் பின்னாலேயே நடந்து அலையவேண்டும்.

உன்னைச்சேர முடியாது போன என் ஆற்றாமை உக்கிரமடைந்து இப்போது உன்னைத் திட்டச்சொல்லி தீச்சொற்களை உதடு நோக்கி உந்தித் தள்ளுகிறது அடிவயிறு. உதடுவிட்டு வெளியேற முடியாமல் நெஞ்சுக்கூட்டில் சுற்றிச் சுழல்கிறது கெட்டவார்த்தைகள். உனக்கு கேட்கும்படி ஒரேயொரு முறை உரக்க திட்டிவிடுகிறேன் உன் செவி கொடு ஆலிங்கனா.

“ என்னை விட்டு எங்கேடி போய் தொலைந்தாய் வேசிமகளே?”.

ஹ்ம்ம்! மனம் லேசானது போல் உணர்கிறேன் ஆலிங்கனா. நீ நல்லவள். உன்னை திட்டியிருக்கக் கூடாது. நான் முரடன். முட்டாள். இத்தனைக் கேவலாமான திட்டினை வாங்கிக்கொண்டும் ஒன்றும் சொல்லாமல் புன்னகைத்து என்னை நோக்கி கரம் நீட்டும் பேரன்பு உன்னைத்தவிர யாரால் புகட்ட முடியும்? அனல் பட்ட வெண்ணை போல என் நெஞ்சம் உன் பாதம் நோக்கி நெகிழ்ந்து வழிகிறது. வேசிமகளே என்ற சொல் உன்னை வேதனை படுத்தவில்லையா ஆலிங்கனா? நீ என் போற்றுதலுக்குரியவள். கொஞ்சம் பொரு. உன்னை அர்ச்சிக்க ஏதேனும் பூக்கள் பறித்து வருகிறேன்.

ஐயோ...இந்த கடவுள் துரோகி ஆலிங்கனா. உன்னை பூசிக்க உகந்த மலர் ஒன்றுமே இவ்வுலகத்தில் படைக்காமல் விட்டிருக்கிறான் பாவி. கடவுளின் முகத்தில் காரி உமிழத்தோன்றுகிறது. நீயே சொல், என் கோபம் நியாயமானது தானே? நான் சூடவும் நீயில்லை.நீ சூடவும் ஒரு பூவில்லை. உன் பூசைக்கும் இங்கே பூக்களில்லை எனும்போது இப்பூமியை படைத்தவன் மேல் கோபம் கொள்ளாது வேறு யாரை சாடட்டும் நான்?

#



Apr 16, 2012

ஆலிங்கனா-01

நீ இன்னும் என்னுடன் தான் இருக்கிறாய்.

இதைச் சொன்னால் யாரும் நம்ப மறுக்கின்றார்கள் ஆலிங்கனா. எனக்கு நீ என்பது உன் புகைப்படம் தான். மறுப்பவர்களுக்கு அது புரியாது இல்லையா?. பாவம் அவர்கள், விடு.

கறுப்பு வெள்ளை புகைப்படம் அது. நீ பத்தாம் வகுப்பு படித்த போது ‘ஹால் டிக்கெட்’டுக்காக எடுத்ததெனச் சொன்னது காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. சீராக பின்னிய இரட்டைஜடை, வெள்ளை ரவிக்கை, நீலநிற தாவணி இந்த உடையில் தான் உன்னை அதிகம் பார்த்திருக்கிறேன். இந்த கறுப்பு வெள்ளை படத்தைப் பார்க்கும் போதும், முன் சொன்ன வண்ணங்களே  என் கண்ணில் வந்து ஒட்டிக்கொள்கிறது. நேரில் உன்னைப் பார்த்த போதெல்லாம் ‘சீருடை தேவதை நீ’ என நான் நினைத்துக் கொள்வதை, ஒருமுறை உன்னிடம் சொல்லிய போது மெலிதாய் முறுவல் செய்தாய். கண் ஒரு அதிசய படக்கருவி ஆலிங்கனா. எப்போதோ கண்டதையெல்லாம் இன்னும் சேமிப்பில் வைத்திருக்கிறது பாரேன்.

கோடைக்காலத்தில் ஒரு மழைநாளுக்கு அடுத்த நாள் மாலை என்னைப் பார்க்க வந்திருந்தாய். பேசிக்கொண்டே நம் நிலத்தைச் சுற்றிப்பார்க்கச் சென்றோம். அங்கே ஈரமண்ணில் ஓணான் ஒன்று வளை தோண்டி அதில் முட்டையிடுவதைக் காட்டினேன். அதுநாள் வரை கண்டிராத நீ அதைக்கண்டு வியந்து கண்களை அகலத்திறந்து என்னை பார்த்தாயே ஒரு பார்வை, வியப்பு தளும்பிய அந்த பார்வையில் தான் என்னை முழுதும் உள்ளிழுத்துக் கொண்டு விட்டாய். அந்த சந்திப்பில் தான் உன் புகைப்படத்தையும் கொடுத்துப் போனாய். அதே இடத்தில் தான் இப்போது புதுவீடு கட்டியிருக்கிறேன் ஆலிங்கனா. உனக்கான கோயில் அது.

ஊர் அடங்கிவிடும் அர்த்தஜாமத்தில் உன்னைத்தேடி அலைகிறது என் ஆன்மா. வறண்ட காட்டில் வழி தவறிய ஒருவன் அலைந்து அலைந்து சோர்வுற்று, தொண்டை வறண்டு தாகம் தாளாது தண்ணீருக்குத் தவிக்கும் ஜீவ போராட்டத் தருணங்களில் உமிழ்நீரையே உருட்டி உருட்டி விழுங்கி இன்னும் சிலநொடி உயிர்வாழ முயல்வதைப் போல, உன்னைத்தேடி தவிக்கும் என் ஆன்மாவிற்கு உன் நினைவுகளைத் தந்து சமாளித்து வருகிறேன் ஆலிங்கனா. இன்னும் எத்தனை காலத்திற்கு இது சாத்தியம் என தெரியவில்லை எனக்கு.

நீ கேள்வியுற்றதுண்டா? கர்ப்பமுற்ற பெண்ணொருத்தி யாரை அதிகமாக நினைத்துக் கொண்டிருக்கிறாளோ அவரின் சாயலில் குழந்தை பிறக்கும் என்றொரு நம்பிக்கை கிராமப் புறங்களில் உண்டு. மணமான இரண்டாம் மாதத்தில் என் மனைவி கர்ப்பமுற்றாள். திருமணத்துக்குப் பின்னும் கூட நான் சதாசர்வ நேரமும் உன்மத்தம் பிடித்தவன் போல உன்னையே நினைத்துக் கொண்டிருந்தேன். கர்ப்பம் சுமந்தவள் என் மனைவி. உன்னை நினைவில் சுமந்துக் கொண்டிருந்தவன் நான். இதோ என் மகள் வளர்ந்து, குமரியாய் நிற்கிறாள் எதிரே. உன்னை நினைவூட்டும் முகச்சாயல் அவளுக்கு!

என்ன விந்தை இது ஆலிங்கனா?

நன்றி: தமிழ்அரசி & “அதீதம்” இணைய இதழ்.

“முகவரியற்ற கடிதங்கள்” என்னும் தலைப்பில் தமிழ் புத்தாண்டு 2012 இதழில் வெளிவந்திருக்கிறது.
*