Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

Jun 12, 2012

செவத்தா


நிலக்கடலைச் செடிக்கு களை கொத்திக் கொண்டிருந்தாள்.

“செவத்தா நல்லாயிருக்கியாம்மா” வரப்பு வழியில் நின்றபடியே கேட்டேன். எங்க நிலத்துக்கும், அவங்க நிலத்துக்கும் பொதுவான வரப்பு தான் எங்க கிராமத்துக்கு போகும் கொடிவழி. வரப்புகளின் வழியே வளைந்து நெளிந்து செல்லும் பாதைக்கு கொடிவழி என்று பேர்.

மிகுந்த கவனத்துடன் செடிகளை ஒதுக்கி விட்டு களைச்செடிகளைக் கொத்திக் கொண்டிருந்தவள் குரல் வந்த திசையில் திரும்பி பார்த்து தலையில் சுற்றியிருந்த முக்காட்டு துணியை எடுத்து கையில் வைத்துக் கொண்டு,

“கண்ணண்ணனா, எப்பண்ணா வந்த? நல்லாகீரயா?” என்றாள்.

தோற்றமே முற்றிலும் மாறிப்போயிருந்தாள். இவள் தான் செவத்தா என்றால் எங்கள் ஊர் காக்கா குருவிகள் கூட நம்பாது. 

”எனக்கென்னம்மா நல்ல்ல்லாருக்கேன். முந்தாநா வந்தேன். ஒன்றை மாசம் லீவு.”

“புள்ள குட்டிகள உட்டுபோட்டு என்னா வெளிநாட்டு பொழப்போ. காலாகாலத்துல ஊரு பக்கம் வந்து பொழைக்கிறத பாருண்ணா.”

“என்னாம்மா பன்றது? நம்மள பெத்தவங்க தான் இந்த மானம் பாத்த பூமிய நம்பியே இருந்துட்டு நமக்கும் ஒழுங்கான படிப்பு கெடைக்க வழியில்லாம உட்டுட்டாக. எதோ கத்துகின ‘அ’னா, ‘ஆ’வன்னாவ வெச்சி வயித்த கழுவுனா போதுமேன்னு கெடைக்கிற வேலைய செஞ்சி பொழைக்கிறோம். நம்ம பொழப்பு தான் இப்படியாகி போச்சி. புள்ளைகளயாவது நல்ல பள்ளிகோடத்துல படிக்க வச்சி கண்ண தெறந்து வெச்சிரலாமேன்னு தான் அங்க போயி சந்நாசி மாதிரி தனியா கெடக்கறேன்.”

“ஹூம்! என்னமோ. நீ சொல்றதும் மெய்தான். என் கண்ண தான் எங்கப்பன் அம்மாவே குருடாக்கி உட்டுட்டாக. போன காலம் இனி திரும்ப போதா? உடுண்ணா.”

“ஹூம்! நீ ஏம்மா தனியா கள கொத்தினு இருக்கிற. கூலிக்கு ஆளுங்கள கூப்ட்ருக்கலாமில்ல?”.

“இப்பல்லாம் யார்ணா வராங்க? நாசமா போன கெவர்மெண்ட்டுகாரன் நூறுநாளு வேலன்னு ஒன்ன கொணாந்து கொல்லி வேலைக்கி ஆளுக வரவுட்டாம பண்ணிட்டாக. ஒடம்பு வளஞ்சி வேல செய்யினும்னா ஜனங்களுக்கும் வலிக்குது.”

அவள் சொல்வதும் உண்மை தான். இன்னும் கிராமத்தில் ஒட்டிக்கிடக்கும் கொஞ்ச நஞ்ச ஆட்களும் நடையா நடந்து கெஞ்சினாலும் விவசாய வேலைக்கு ஒருத்தரும் வருவதில்லை. நூறுநாள் வேலை திட்டத்தை அறிமுகப்படுத்தி விவசாய வேலைக்கு ஆட்கள் வராமல் கெடுத்து விட்டது அரசு. போதாக்குறைக்கு இலவச அரிசி வேறு. எப்படியாவது “தன் கட்சி” ஆட்சியை பிடித்தாக வேண்டும் என்ற ஆசையில் கண்டதையெல்லாம் இலவசமா கொடுக்க ஆரம்பித்து விட்டது அரசாங்கம். அநேகமாக அடுத்த தேர்தல்களில் இலவச மனைவி, இலவச கணவன், இலவச குழந்தை என தேர்தல் அறிவிப்புகள் வந்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை. நான் கூட இன்னும் திருமணப்பதிவு செய்யவில்லை. அடுத்த தேர்தலுக்குப் பின் பதிவு செய்துக்கலாமே!

“அப்பிடிதாம்மா ஆகிப்போச்சி இப்ப. நம்ம கொல்லிலையும் கொஞ்சம் அளவுக்குதான் வெரை போட்ருக்குது. மீதியெல்லாம் கரம்பா தான் கெடக்குது.”

”பாவம்ணா ஒம்பொண்டாட்டி தனியாளா ஒருத்தி புள்ளைகள பாப்பாளா? கொல்லி வேலைய பாப்பாளா? நான் இந்த கொல்லில கல்லக்கொட்ட போடறதுக்கே தம்பி சின்னவன ராவும் பகலுமா கெஞ்சி ஏறு ஓட்ட வெச்சேன். அவன் எப்ப பாத்தாலும் படிக்கிறேன், படிக்கிறேன்னு சொல்லி பொழுத கழிக்கிறான். மத்த நேரமெல்லம் கிரிகெட்டு ஆடறதுக்கு ஓடிர்ரான்.”

”ஆமாம்மா. இந்த காலத்து பசங்களுக்கு படிக்கிறத விடவும் கிரிக்கெட்டு தான் பொழப்பா போச்சி. சொன்னா எவன் கேக்கறான். நாள பின்ன அஞ்சுக்கும், பத்துக்கும் அல்லாடும் போது தெரியும் உடு. நல்லத சொன்னா கேக்கற காலமா இது?”

“வெவசாய பொழப்பு இப்பிடியே போனா சோத்துக்கு வழியத்து சாகப்போது ஜனம். செரிண்ணா. வெகுலு ஏர்ரதுக்குள்ள உன்னம் அமுட்டு கொத்திட்டு ஊட்டுக்கா போறன். நேரங்கெடச்சா புள்ளைகள கூட்டிக்கினு சாயங்காலமா ஊட்டானக்கி வா.”

சரியெனச் சொல்லி விட்டு வீட்டுக்கு நடையை கட்டினேன். ஆடிமாத காற்று சுழற்றி வீசி நெட்டிநெட்டி தள்ளியது. ஆடிக்காற்றுக்கு எதிர்திசையில் நடப்பதுகூட பெரும் சாகசம் தான்.

பாவம் செவத்தா. அவள் தான் எதையுமே எதிர்க்காமல் வாழ்க்கை போகும் திசையிலேயே போய் கொண்டிருக்கிறாள். நக்கீரனே மீண்டும் பிறப்பெடுத்து வந்தாலும் அவளிடம் குற்றங்குறை காண முடியாது. இறை நம்பிக்கை உள்ளவன் நான். ஆனாலும், இவளது வாழ்வை நினைத்தால் மட்டும் இறை என்பது பொய்யோ என்னும் ஐயம் வருவதை தவிர்க்க முடியவில்லை என்னால். வாழைக்கன்று போல இருந்தவளின் வாழ்வு ஆடிக்காற்றில் கிழிந்து தொங்கும் வாழையிலைப் போல மாறிப்போனதைக் கண்டால் யாருக்கு தான் மனம் வெம்பி போகாது?

இளவயது செவத்தா, பெயருக்கேற்றார் போல நல்ல சிவந்த நிறம். அழகும் கூட.  மீசை முளைக்காத முறை பையன்கள் கூட இவள் மேல் காதல் ஆசை கொண்டிருந்ததை ஊரே அறியும். சுறுசுறுப்பில் எறும்பும் தோற்கும் அவளிடம். அம்மாவுடன் சேர்ந்து ஒன்பது மணிக்குள்ளாக அவ்வளவு வீட்டு வேலைகளையும் இழுத்து போட்டு செய்து முடித்து விட்டு, மேய்ச்சலுக்கு ஆடுகளை ஓட்டிக்கொண்டு காட்டுக்கு போவாள். மாலை திரும்பி வரும்போது பெரிய சுமையாக விறகும் சுமந்து வருவாள். உள்ளூரில் சில அத்தைமார்கள் என் வீட்டுக்கு தான் மருமகளாக வரப்போகிறாள் என பெருமையாய் சொல்லிக்கொள்வார்கள். அத்தனை பேர் மனதிலும் அந்தளவிற்கு இடம்பிடித்திருந்தாள். ஆனால் இவள் மனதில் இடம் பிடித்திருந்தவன் எதிர்வீட்டு வெள்ளையன் தான்.

வெள்ளையன் செவத்தாளை விடவும் ஒரு வயது இளையவன். ஆனால் அவன் உடற்கட்டைப் பார்க்கும் போது வயது வித்தியாசம் தெரியாது. பணிரெண்டாம் வகுப்புவரை படித்திருந்தான். மேற்கொண்டு படிக்க வீட்டில் அனுமதிக்கவில்லை. பாவம் கூலிவேலை செய்யும் அவனது பெற்றோர்கள் இன்னும் உள்ள மூன்று பிள்ளைகளையும் படிக்க வைக்கனுமே. அதோடு மட்டுமில்லாமல் அவனது அப்பாவிற்கும், அம்மாவிற்கும் ஏழாம் பொருத்தம். எந்நேரமும் சண்டை தான். அவர்கள் எப்படி ஒன்றாய் படுத்து நான்கு பிள்ளைகள் பெற்றுக்கொண்டார்களோ தெரியவில்லை..

தருமபுரியில் இராணுவத்துக்கு ஆள் எடுப்பதாக செய்தித்தாளில் பார்த்தேன். வெள்ளையனுக்கு நல்ல உடற்கட்டு இருந்ததால் நானும், நண்பர்களும் அவனை இராணுவத்துக்கு முயற்சிக்க சொன்னோம். ஒரு வாரம் ஓடுவதற்கு பயிற்சி எடுத்துக்கொண்டு தருமரி சென்றான். முதல் முயற்சியிலேயே தேர்வாகி விட்டான். எழுத்து தேர்விற்கு சென்னைக்கு வரச்சொன்னார்களாம்.

வந்ததும் என்னிடம் சொன்னான்.

“கண்ணா. அந்த க்ரவுண்ட பாத்ததுமே ஒன்னுக்கு வரமாதிரியாயிடுச்சிடா. எவ்ளோ பெரிய க்ரவுண்டு தெரியுமா? தாயோளிக, நாலு ரவுண்டு ஓட வைக்கிறாக. மூணாவது ரவுண்டு ஓடும்போதே மூச்சு தெணருச்சி. ஒரு செகண்டு  மனசுக்குள்ளாற செவத்தா தெரிஞ்சா. அவளுக்காகவாவது ஜெயிச்சே ஆகனும்னு தம் கட்டி ஓடனேன். செவத்தா புண்ணியத்துல நானும் ஜெயிச்சிட்டேன்.” வெள்ளந்தியாய் சொல்லிவிட்டு என்னைப் பார்த்தான். தொடர்ந்து,

“ஆமாண்டா. அவள தான் கல்யாணம் கட்டப்போறேன். பாவம்டா அவ. ஆடு மேய்க்க பொறந்தவளாடா அவ. எங்கயோ ராஜகுமாரியா பொறந்திருக்க வேண்டியவ நம்ம குடியானவங்க வயித்துல வந்து பொறந்து தொலைச்சிட்டா. ட்ரைனிங் முடிஞ்சி மொத லீவுல வந்ததுமே கல்யாணம் பண்ணிக்க போறேன். இனிமே பட்டாளத்தான் பொண்டாட்டி அவ.” என்றான் உணர்ச்சி வசப்பட்டவனாக.

ஒரு மாதம் கழித்து ராணுவ பயிற்சிக்கு லக்னோ சென்று விட்டான். செவத்தா நல்லவனை தேர்ந்திருக்கிறாள் என என் மனம் அவளை ஆசீர்வதித்தது. ஆனால், அவளது பெற்றோருக்கு தான் அவர்களது வாழ்வை ஆசீர்வதிக்க மனமில்லாமல் போனது. செவத்தாளின் அம்மா ஒரு ராங்கி. வீம்புக்கு “எதோ” செய்வது என்பார்களே. அந்த ரக பொம்பளை தான் அவள்.

வெள்ளையனும், செவத்தாளும் ஒருவரையொருவர் விரும்பும் செய்தி அந்த ராங்கி காதுக்கு எட்டிவிட்டிருந்தது. “போயும் போய் எம்மகள அந்த கூறு கெட்ட குடும்பத்துக்கா குடுக்கப்போறேன். அவுக பொழைக்கிற பொழப்பே ஊரெல்லாம் நாறுது. எம்மவள அந்த குப்பையிலயா கொட்டுவேன். எம்மவளோட அலகுக்கும்,  நெறத்துக்கும் எப்பேர்பட்ட குடும்பத்துல இருந்தெல்லாம் வந்து கேக்கறாக”, என கொக்கரித்துக் கொண்டிருந்தாள்.  “எதும் நல்ல எடமா வந்தா சட்டு புட்டுனு கட்டி வெரட்டலாம் கழுதைய” என கணவனிடமும் சொல்லி சம்மதிக்க வைத்தாள். அவர் ஒரு அப்புறானி.

ஒருமாத காலத்துக்குள் அவசர அவசரமாக பேசி முடித்து ஒருவனுக்கு செவத்தாளை கல்யாணம் கட்ட ஏற்பாடு செய்து விட்டார்கள். மாப்பிள்ளை பற்றி விசாரித்ததில் முப்பது மைலுக்கு அப்பால் எதோ ஒரு ஊரின் பேரைச் சொன்னார்கள். பெங்களூரில் ஆட்டோ ஓட்டுகிறான் என்றார்கள். ஓரளவு சீர் செனத்தியுடன் ஒரு நன்னாளில் கல்யாணம் கட்டிக் கொடுத்தார்கள். ‘கொடுத்தார்கள்’ என்று சொல்வதை விட ‘கெடுத்தார்கள்’ என்று சொன்னால் மிக பொருத்தமாக இருக்கும்.

று மாதம் கழித்து விடுப்பில் ஊருக்கு வந்த வெள்ளையனுக்கு எதிர்க்காலம் இருட்டாய் தெரிந்திருக்கும். அதுவரை நாங்கள் யாரும் அவனுக்கு இந்த செய்தியை தெரியப்படுத்தவில்லை. அவன் கனவுக்கோட்டை சிதிலமடைந்ததை பொறுக்காமல் அன்றிரவு அவன் கொண்டு வந்திருந்த மிலிட்டரி சரக்கை அடித்து விட்டு எங்களை எல்லாம் கெட்ட வார்த்தையால் திட்டித்தீர்த்து ஆற்றாமையால் அழுதான். எங்களால் வெறும் ஆறுதல் மட்டும் தான் சொல்ல முடிந்தது. விடுப்பு முடிந்து மீண்டும் சென்று விட்டான். போய் சேர்ந்ததும் எனக்கு கடிதம் எழுதியிருந்தான். “ செவத்தா நினைப்பாகவே இருக்கிறது. அவள் இல்லாத வாழ்வை நினைத்து பார்க்கும் போதே தூக்கிட்டுச் சாகலாம் எனத்தோன்றுகிறது. ஆனாலும், என்னை நிராகரித்த அந்த குடும்பத்தினர் கண்முன்னே ராஜ வாழ்க்கை வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைரக்கியம், தற்கொலை எண்ணத்தைத் தவிடு பொடியாக்கி விட்டது. வாழ்ந்து காட்டுகிறேன் பார்” என சபதம் போட்டு எழுதியிருந்தான். ”அவர்களை தண்டிக்க அது தான் சிறந்த வழி. உன் லட்சியம் நிறைவேற என் வாழ்த்துக்கள்”,  என பதிலிட்டேன்.

காலம் யாருக்காக காத்திருக்கப் போகிறது சொல்லுங்கள்? அது ரெக்கைக்கட்டி பறந்து கொண்டு தான் இருந்தது. நண்பர்கள் தன் பிழைப்புக்காக ஆளுக்கொரு திசையில் பறந்தார்கள். எல்லோரும் மீண்டும் எப்போது ஒன்றாய் கூடிக்களிப்போமோ! காலம் தான் பதில் சொல்ல வேண்டும். காலச்சுழற்சியில் சிக்கி செவத்தாவின் பெற்றோர்களும் நொடித்து போனார்கள். ஒழுகும் வீட்டிற்கு கூரைக் கூட மாற்ற முடியவில்லை அவர்களால். ஊர் மாறி விட்டது. மக்கள் மாறிவிட்டார்கள். செவத்தாளின் வாழ்க்கை விசயத்தில் தான் தவறு செய்து விட்டதை அவளின் அம்மா கூட உணர்ந்தவளாகி விட்டாள் என்றால் பாருங்களேன்.

எப்போதாவது கணவனுடன் செவத்தா ஊருக்கு வந்து போவாள். பார்க்கும் சந்தர்ப்பங்களில் வெள்ளையன் பற்றி விசாரிப்பாள். கண்களை துடைத்துக் கொள்வாள். யார் செய்த பாவமோ, செவத்தாளுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் போனது. அவளது கணவன் பெங்களூரிலேயே ஆட்டோ ஓட்டி வருவதாகவும்,  இரண்டு அல்லது மூன்று மாதத்திற்கொரு முறை ஊருக்கு வந்து போவதாகவும், தன்னை அன்பாக கவனித்துக் கொள்வதாகவும் சொல்வாள். குழந்தைப் பேற்றுக்காக மருத்துவ சோதனை செய்து கொண்டார்களா எனத் தெரியவில்லை.

வெள்ளையனும் உள்ளூரிலேயே ஒரு கரியநிற தேவதையொருத்தியைத் தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொண்டான். அந்த பெண்ணும் சிறந்த குணவதி தான். அவர்களுக்கு இரு குழந்தைகள். பழைய வீட்டை இடித்து விட்டு இரண்டடுக்கு மாடி வீடு கட்டியிருக்கிறான். வீட்டிற்கு வெள்ளைநிற பெயிண்ட் தான் அடித்திருக்கிறான். பார்க்க மாளிகைப்போல் தோற்றமளிக்கிறது.

நானும் வேலை கிடைத்து வெளிநாட்டிற்குச் சென்று விட்டேன்.

அன்று ஞாயிற்றுக்கிழமை. அம்மாவிற்கு போன் செய்த போது செவத்தாளின் கணவனை எங்கோ அநாதைப் பிணமாய் கண்டெடுத்ததாகவும், அவர் தனக்கு எய்ட்ஸ் நோய் இருந்த செய்தியறிந்து தற்கொலைச் செய்து கொண்டு இறந்து போனதாகவும், அதன் பின் தாலியருத்து அனைத்து சடங்குகள் முடிந்ததும் அந்த ஊர் பெரியவ்ர்கள் கூடி செவத்தாளுக்கு குழந்தையும் இல்லை, கணவனும் இல்லை என்பதைக் காரணம் காட்டி அம்மா வீட்டிற்கே அனுப்பி வைத்து விட்டதாகவும் சொல்லி முடித்தாள் எனது அம்மா. செவத்தாளின் வாழ்வு சூன்யமாகிப் போனதைக் கேட்டு ஒரு பாவமும் அறிந்திராத அந்த பெண்ணுக்கு மட்டும் ஏன் இத்தனை சோதனைகளோ என புழுங்கியது என் மனம்.

அடுத்தடுத்த வருடங்களில் செவத்தாளின் பெற்றோர்களும் இறந்து விட்டார்கள். அவளது கணவன் எய்ட்ஸ் நோயால் இறந்து போன காரணத்தால் அவளுடன் யாரும் சரிவர பேசுவதும் பழகுவதும் கிடையாது. அவளுக்கு அந்நோய்தொற்று இருக்குமோ இல்லையோ இன்று வரை அவளுக்கே தெரியாது. யார்யாரோ சொல்லிப் பார்த்தும் மருத்துவச் சோதனை செய்ய ஒப்புக்கொள்ளவில்லை அவள். நான் நோயற்றவள் என்று யாருக்கு நிரூபிக்க வேண்டும்? என்ற கேள்வியுடன் எளிமையாக மறுத்துவிடுவாள். இத்தனை இழப்புகளுக்கு பின்னும் இன்னாரால் தான் என் வாழ்வு கெட்டது என்று ஒருவரையும் சுட்டிக்காட்ட முனையவில்லை அவளின் சுட்டு விரல். இப்போது அவளின் இரண்டு தம்பிகள் சென்னையில் பேக்கரியில் வேலை செய்து வருகின்றார்கள். கடைசி தம்பி படிக்கிறான். அவர்களுக்காகத்தான் மாடாய் உழைக்கிறாள் இப்போதும். அவர்களுக்கு அவள் தான் எல்லாமும். ஆனால் அவளுக்கு?!

செவத்தா இன்னும் அந்த பழைய கூரை வீட்டில் தான் வசிக்கிறாள். எப்போதும் என்னை குடையும் ஒரு கேள்வி, படிக்கும் உங்களையும் ஒருமுறை குடையட்டும். எதிரே இருக்கும் வெள்ளையனின் மாளிகை வீடு இயல்பாய் தூங்க விடுமா செவத்தாளை? அல்லது எதிர்வீட்டு குடிசையை எதார்த்தமாய் பார்க்க நேரிட்டாலும்  நிம்மதியாய் தூங்க முடியுமா வெள்ளையனால்?

இவள் வாழ்வை படித்த பின்னும், உங்கள் பிள்ளைகளின் வாழ்விற்காக அனைத்து முடிவுகளையும் நீங்களே தான் எடுப்பீர்கள் என்றால், எக்கேடாவது கெட்டுப் போங்கள்.

இன்னொரு செவத்தா கதையை எழுத தெம்ப்பில்லை எனக்கு.

# # #
நன்றி: ‘அதீதம்’ இணைய இதழ்.

May 30, 2012

ஆலிங்கனா-02



முதலில் இதை படியுங்கள் ஆலிங்கனா-01

க்னி நட்சத்திரம் முடிந்தும் வெயில் சுட்டெரிக்கிறது. வீட்டுக்குள் அடைபட்டிருக்க முடியவில்லை. ஊரை ஒட்டியிருக்கும் ஏரியின் பக்கம் சென்று குளிர்க்காற்றை தழுவி வரலாம் என கிளம்பி விட்டேன். ஒருமுறை நாம் அங்கே சென்றிருந்தபோது கடல்போல் காட்சி தந்து நம்மை மிரட்டிய நீர் நிரம்பிய ஏரி இல்லை இது ஆலிங்கனா. ஏரியின் அடி மடியில் மட்டும் நீர் ஒட்டியிருக்கிறது நீ இல்லாத நான் போல!

அந்த கொஞ்ச நீரையும் வெயில் குடித்துவிடக்கூடாதென மரகதப்போர்வை போர்த்தியிருக்கிறது பாசி (அலைதாவரம்). நீரின் போர்வையை உதறி போர்த்தத் தோன்றியது எனக்கு. சற்றே பெரிய கல் ஒன்றை தூக்கி நீரில் வீசினேன். கல் விழுந்த இடத்தில் துள்ளி தெரித்த நீர், ஆழ் தூக்கத்திலிருந்து பதறியெழும் பச்சிளங்குழந்தையாய் தெரிந்தது. அவ்விடத்தில் பாசி சற்றே விலகி பின் மெதுவாய் போர்த்தியது நீர் பரப்பை. அதை கண்டதும் நொடியும் தாமதிக்காமல் உன்னைத்தேடி ஓடியது மனம் ஆலிங்கனா.

முன்பொருமுறை இங்கே நாம் வந்திருந்தோமெனச் சொன்னேனே, அன்று நீ சரிகைநெய்த அரக்குநிற பார்டர் வைத்த பச்சைநிற பாவாடையும், அதே நிறத்தில் ரவிக்கையும், மாம்பழ மஞ்சள் நிறத்தில் தாவணியும் உடுத்தி வந்தாய். அநேக கோயில்களில் அம்மன் சிலைகளுக்கு இந்த நிற உடைகள் தான் பிரசித்தம். அன்றெனக்கு அலங்காரமற்ற அம்மன் போல் தெரிந்தாய் நீ. இருவரும் எதிரும் புதிருமாய் கால்கள் நீட்டி அமர்ந்திருந்தோம். நீரலையைத் தழுவி வந்த காற்று எதிர்பாராத நொடியொன்றில் உன் பாவாடையை கெண்டைக்கால் தெரிய உயர்த்திவிட உயிர் போனதைப் போல் பதறிய நீ, பளபளக்கும் உன் கால்களை கள்ளத்தனமாய் திண்ணும் என் கண்களைக் கண்டதும் பசியாறி போகட்டுமென்றோ என்னவோ மெதுமெதுவாய் பாதம் வரையில் இழுத்து மூடியது நினைவில் ஊர்கிறது.

என்னை என்னென்னெ செய்ய தீர்மானித்திருக்கிறதோ உன்னை அபகரித்துக்கொண்ட இந்த இயற்கை! உன்னை ஏன் இந்த அளவிற்கு காட்சிபடுத்துகிறது என் மனமும், கண்ணும்? என் கண்களை குருடாக்கிக் கொண்டு பைத்தியாமாகி யாரும் அறியாத தொலைதூரத்திற்குப் போய்விட வேண்டும் ஆலிங்கனா. கண் போனால் என்ன? மனக்கண்ணில் நீ இருக்கிறாய் அது போதாதா எனக்கு? கண் தெரியாத நான் உன் கரத்தினைப் பற்றிக்கொண்டு என் ஜீவன் சொட்டுச்சொட்டாய் வற்றி முற்றுமுழுதாய் அற்று போகும் வரை உன் பின்னாலேயே நடந்து அலையவேண்டும்.

உன்னைச்சேர முடியாது போன என் ஆற்றாமை உக்கிரமடைந்து இப்போது உன்னைத் திட்டச்சொல்லி தீச்சொற்களை உதடு நோக்கி உந்தித் தள்ளுகிறது அடிவயிறு. உதடுவிட்டு வெளியேற முடியாமல் நெஞ்சுக்கூட்டில் சுற்றிச் சுழல்கிறது கெட்டவார்த்தைகள். உனக்கு கேட்கும்படி ஒரேயொரு முறை உரக்க திட்டிவிடுகிறேன் உன் செவி கொடு ஆலிங்கனா.

“ என்னை விட்டு எங்கேடி போய் தொலைந்தாய் வேசிமகளே?”.

ஹ்ம்ம்! மனம் லேசானது போல் உணர்கிறேன் ஆலிங்கனா. நீ நல்லவள். உன்னை திட்டியிருக்கக் கூடாது. நான் முரடன். முட்டாள். இத்தனைக் கேவலாமான திட்டினை வாங்கிக்கொண்டும் ஒன்றும் சொல்லாமல் புன்னகைத்து என்னை நோக்கி கரம் நீட்டும் பேரன்பு உன்னைத்தவிர யாரால் புகட்ட முடியும்? அனல் பட்ட வெண்ணை போல என் நெஞ்சம் உன் பாதம் நோக்கி நெகிழ்ந்து வழிகிறது. வேசிமகளே என்ற சொல் உன்னை வேதனை படுத்தவில்லையா ஆலிங்கனா? நீ என் போற்றுதலுக்குரியவள். கொஞ்சம் பொரு. உன்னை அர்ச்சிக்க ஏதேனும் பூக்கள் பறித்து வருகிறேன்.

ஐயோ...இந்த கடவுள் துரோகி ஆலிங்கனா. உன்னை பூசிக்க உகந்த மலர் ஒன்றுமே இவ்வுலகத்தில் படைக்காமல் விட்டிருக்கிறான் பாவி. கடவுளின் முகத்தில் காரி உமிழத்தோன்றுகிறது. நீயே சொல், என் கோபம் நியாயமானது தானே? நான் சூடவும் நீயில்லை.நீ சூடவும் ஒரு பூவில்லை. உன் பூசைக்கும் இங்கே பூக்களில்லை எனும்போது இப்பூமியை படைத்தவன் மேல் கோபம் கொள்ளாது வேறு யாரை சாடட்டும் நான்?

#



Apr 16, 2012

ஆலிங்கனா-01

நீ இன்னும் என்னுடன் தான் இருக்கிறாய்.

இதைச் சொன்னால் யாரும் நம்ப மறுக்கின்றார்கள் ஆலிங்கனா. எனக்கு நீ என்பது உன் புகைப்படம் தான். மறுப்பவர்களுக்கு அது புரியாது இல்லையா?. பாவம் அவர்கள், விடு.

கறுப்பு வெள்ளை புகைப்படம் அது. நீ பத்தாம் வகுப்பு படித்த போது ‘ஹால் டிக்கெட்’டுக்காக எடுத்ததெனச் சொன்னது காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. சீராக பின்னிய இரட்டைஜடை, வெள்ளை ரவிக்கை, நீலநிற தாவணி இந்த உடையில் தான் உன்னை அதிகம் பார்த்திருக்கிறேன். இந்த கறுப்பு வெள்ளை படத்தைப் பார்க்கும் போதும், முன் சொன்ன வண்ணங்களே  என் கண்ணில் வந்து ஒட்டிக்கொள்கிறது. நேரில் உன்னைப் பார்த்த போதெல்லாம் ‘சீருடை தேவதை நீ’ என நான் நினைத்துக் கொள்வதை, ஒருமுறை உன்னிடம் சொல்லிய போது மெலிதாய் முறுவல் செய்தாய். கண் ஒரு அதிசய படக்கருவி ஆலிங்கனா. எப்போதோ கண்டதையெல்லாம் இன்னும் சேமிப்பில் வைத்திருக்கிறது பாரேன்.

கோடைக்காலத்தில் ஒரு மழைநாளுக்கு அடுத்த நாள் மாலை என்னைப் பார்க்க வந்திருந்தாய். பேசிக்கொண்டே நம் நிலத்தைச் சுற்றிப்பார்க்கச் சென்றோம். அங்கே ஈரமண்ணில் ஓணான் ஒன்று வளை தோண்டி அதில் முட்டையிடுவதைக் காட்டினேன். அதுநாள் வரை கண்டிராத நீ அதைக்கண்டு வியந்து கண்களை அகலத்திறந்து என்னை பார்த்தாயே ஒரு பார்வை, வியப்பு தளும்பிய அந்த பார்வையில் தான் என்னை முழுதும் உள்ளிழுத்துக் கொண்டு விட்டாய். அந்த சந்திப்பில் தான் உன் புகைப்படத்தையும் கொடுத்துப் போனாய். அதே இடத்தில் தான் இப்போது புதுவீடு கட்டியிருக்கிறேன் ஆலிங்கனா. உனக்கான கோயில் அது.

ஊர் அடங்கிவிடும் அர்த்தஜாமத்தில் உன்னைத்தேடி அலைகிறது என் ஆன்மா. வறண்ட காட்டில் வழி தவறிய ஒருவன் அலைந்து அலைந்து சோர்வுற்று, தொண்டை வறண்டு தாகம் தாளாது தண்ணீருக்குத் தவிக்கும் ஜீவ போராட்டத் தருணங்களில் உமிழ்நீரையே உருட்டி உருட்டி விழுங்கி இன்னும் சிலநொடி உயிர்வாழ முயல்வதைப் போல, உன்னைத்தேடி தவிக்கும் என் ஆன்மாவிற்கு உன் நினைவுகளைத் தந்து சமாளித்து வருகிறேன் ஆலிங்கனா. இன்னும் எத்தனை காலத்திற்கு இது சாத்தியம் என தெரியவில்லை எனக்கு.

நீ கேள்வியுற்றதுண்டா? கர்ப்பமுற்ற பெண்ணொருத்தி யாரை அதிகமாக நினைத்துக் கொண்டிருக்கிறாளோ அவரின் சாயலில் குழந்தை பிறக்கும் என்றொரு நம்பிக்கை கிராமப் புறங்களில் உண்டு. மணமான இரண்டாம் மாதத்தில் என் மனைவி கர்ப்பமுற்றாள். திருமணத்துக்குப் பின்னும் கூட நான் சதாசர்வ நேரமும் உன்மத்தம் பிடித்தவன் போல உன்னையே நினைத்துக் கொண்டிருந்தேன். கர்ப்பம் சுமந்தவள் என் மனைவி. உன்னை நினைவில் சுமந்துக் கொண்டிருந்தவன் நான். இதோ என் மகள் வளர்ந்து, குமரியாய் நிற்கிறாள் எதிரே. உன்னை நினைவூட்டும் முகச்சாயல் அவளுக்கு!

என்ன விந்தை இது ஆலிங்கனா?

நன்றி: தமிழ்அரசி & “அதீதம்” இணைய இதழ்.

“முகவரியற்ற கடிதங்கள்” என்னும் தலைப்பில் தமிழ் புத்தாண்டு 2012 இதழில் வெளிவந்திருக்கிறது.
*