Apr 16, 2012

ஆலிங்கனா-01

நீ இன்னும் என்னுடன் தான் இருக்கிறாய்.

இதைச் சொன்னால் யாரும் நம்ப மறுக்கின்றார்கள் ஆலிங்கனா. எனக்கு நீ என்பது உன் புகைப்படம் தான். மறுப்பவர்களுக்கு அது புரியாது இல்லையா?. பாவம் அவர்கள், விடு.

கறுப்பு வெள்ளை புகைப்படம் அது. நீ பத்தாம் வகுப்பு படித்த போது ‘ஹால் டிக்கெட்’டுக்காக எடுத்ததெனச் சொன்னது காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. சீராக பின்னிய இரட்டைஜடை, வெள்ளை ரவிக்கை, நீலநிற தாவணி இந்த உடையில் தான் உன்னை அதிகம் பார்த்திருக்கிறேன். இந்த கறுப்பு வெள்ளை படத்தைப் பார்க்கும் போதும், முன் சொன்ன வண்ணங்களே  என் கண்ணில் வந்து ஒட்டிக்கொள்கிறது. நேரில் உன்னைப் பார்த்த போதெல்லாம் ‘சீருடை தேவதை நீ’ என நான் நினைத்துக் கொள்வதை, ஒருமுறை உன்னிடம் சொல்லிய போது மெலிதாய் முறுவல் செய்தாய். கண் ஒரு அதிசய படக்கருவி ஆலிங்கனா. எப்போதோ கண்டதையெல்லாம் இன்னும் சேமிப்பில் வைத்திருக்கிறது பாரேன்.

கோடைக்காலத்தில் ஒரு மழைநாளுக்கு அடுத்த நாள் மாலை என்னைப் பார்க்க வந்திருந்தாய். பேசிக்கொண்டே நம் நிலத்தைச் சுற்றிப்பார்க்கச் சென்றோம். அங்கே ஈரமண்ணில் ஓணான் ஒன்று வளை தோண்டி அதில் முட்டையிடுவதைக் காட்டினேன். அதுநாள் வரை கண்டிராத நீ அதைக்கண்டு வியந்து கண்களை அகலத்திறந்து என்னை பார்த்தாயே ஒரு பார்வை, வியப்பு தளும்பிய அந்த பார்வையில் தான் என்னை முழுதும் உள்ளிழுத்துக் கொண்டு விட்டாய். அந்த சந்திப்பில் தான் உன் புகைப்படத்தையும் கொடுத்துப் போனாய். அதே இடத்தில் தான் இப்போது புதுவீடு கட்டியிருக்கிறேன் ஆலிங்கனா. உனக்கான கோயில் அது.

ஊர் அடங்கிவிடும் அர்த்தஜாமத்தில் உன்னைத்தேடி அலைகிறது என் ஆன்மா. வறண்ட காட்டில் வழி தவறிய ஒருவன் அலைந்து அலைந்து சோர்வுற்று, தொண்டை வறண்டு தாகம் தாளாது தண்ணீருக்குத் தவிக்கும் ஜீவ போராட்டத் தருணங்களில் உமிழ்நீரையே உருட்டி உருட்டி விழுங்கி இன்னும் சிலநொடி உயிர்வாழ முயல்வதைப் போல, உன்னைத்தேடி தவிக்கும் என் ஆன்மாவிற்கு உன் நினைவுகளைத் தந்து சமாளித்து வருகிறேன் ஆலிங்கனா. இன்னும் எத்தனை காலத்திற்கு இது சாத்தியம் என தெரியவில்லை எனக்கு.

நீ கேள்வியுற்றதுண்டா? கர்ப்பமுற்ற பெண்ணொருத்தி யாரை அதிகமாக நினைத்துக் கொண்டிருக்கிறாளோ அவரின் சாயலில் குழந்தை பிறக்கும் என்றொரு நம்பிக்கை கிராமப் புறங்களில் உண்டு. மணமான இரண்டாம் மாதத்தில் என் மனைவி கர்ப்பமுற்றாள். திருமணத்துக்குப் பின்னும் கூட நான் சதாசர்வ நேரமும் உன்மத்தம் பிடித்தவன் போல உன்னையே நினைத்துக் கொண்டிருந்தேன். கர்ப்பம் சுமந்தவள் என் மனைவி. உன்னை நினைவில் சுமந்துக் கொண்டிருந்தவன் நான். இதோ என் மகள் வளர்ந்து, குமரியாய் நிற்கிறாள் எதிரே. உன்னை நினைவூட்டும் முகச்சாயல் அவளுக்கு!

என்ன விந்தை இது ஆலிங்கனா?

நன்றி: தமிழ்அரசி & “அதீதம்” இணைய இதழ்.

“முகவரியற்ற கடிதங்கள்” என்னும் தலைப்பில் தமிழ் புத்தாண்டு 2012 இதழில் வெளிவந்திருக்கிறது.
*

28 comments:

  1. அட.. இங்கே இந்த விஷயம் புதிது தான்..
    பொதுவாக கர்ப்பமுற்ற காலத்தில் பெண்கள்
    யாரை நினைக்கிறார்களோ இல்லையோ நிச்சயம்
    குழந்தை பிறக்கும் தருவாயில் கணவனை நினைப்பார்கள்...

    இங்கே கணவனின் நினைப்பில் முழுதும் இருந்த மனைவி
    சாயலில் மகளின் முகம்...
    சரிதான் உணர்வுகளில் இதுவும் ஒன்று..

    ReplyDelete
  2. // கர்ப்பமுற்ற பெண்ணொருத்தி யாரை அதிகமாக நினைத்துக் கொண்டிருக்கிறாளோ அவரின் சாயலில் குழந்தை பிறக்கும் என்றொரு நம்பிக்கை கிராமப் புறங்களில் உண்டு.//

    அண்ணே, இந்த மாதிரி ஒரு விசயம் இருப்பதை இப்போ தான் கேள்விப்படுறேன். எது எப்படி இருந்தாலும் கதை அருமை.

    ReplyDelete
  3. கர்ப்பமுற்ற பெண்ணொருத்தி யாரை அதிகமாக நினைத்துக் கொண்டிருக்கிறாளோ அவரின் சாயலில் குழந்தை பிறக்கும் என்றொரு நம்பிக்கை கிராமப் புறங்களில் உண்டு.////

    இப்படியெல்லாம் எங்க கிராமத்தில் இல்லை


    ஊர் அடங்கிவிடும் அர்த்தஜாமத்தில் உன்னைத்தேடி அலைகிறது என் ஆன்மா.////

    இந்த வரிகள் அழகு

    ReplyDelete
  4. மகேந்திரன் அண்ணே,

    வாசிப்பிற்கும், கருத்திற்கும் நன்றிங்க.

    //இங்கே கணவனின் நினைப்பில் முழுதும் இருந்த மனைவி
    சாயலில் மகளின் முகம்...//

    இதில் உள்ள மகள், நாயகனுடைய காதலியின் முகச்சாயலில் இருக்கிறாள். அந்த விந்தை தான் வியப்புக்குரியது.

    ReplyDelete
  5. //காந்தி பனங்கூர் said...

    அண்ணே, இந்த மாதிரி ஒரு விசயம் இருப்பதை இப்போ தான் கேள்விப்படுறேன்.

    காந்தி,

    இதை அறிவியலும் ஒப்புக்கொண்டுள்ளது.

    //எது எப்படி இருந்தாலும் கதை அருமை.//

    நன்றிங்க.

    ReplyDelete
  6. //இப்படியெல்லாம் எங்க கிராமத்தில் இல்லை//

    அப்படிங்களா சதீஷ்? எதுக்கும் வீட்டில் பெரியவர்களிடம் ஒருமுறை கேட்டு பாருங்களேன்.

    அதோடு மட்டுமல்லாமல் - இக்கூற்றை அறிவியலும் ஏற்றுக்கொண்டிருக்கிறது. இது தொடர்பில் ஏராளமான தகவல்கள் இணையத்தில் இருக்கிறது.

    வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றிங்க.

    ReplyDelete
  7. இக்கருத்து எனது நண்பர் ஒருவர் மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார்.

    Ma Anbalagan Masilamani

    ஆலிங்கனா படித்தேன். நன்றாக இருக்கிறது. ஆனால் கர்ப்பமுற்ற பெண் மனத்தில் பதிவதை வெளிக்காட்டும் என்பது ஓர் உளவியல். அது சரிதான் தம்பி'. ஆனால் இப்போதுதான் ஒரு ஆண் நினைப்பின் படி குழந்தை பிறக்கும் என்றும் ஒரு உளவியல் கருத்து உண்டு. கருவுருகிற அன்றைய தின ஆண் எண்ணமும் பிரதிபலிக்கலாம் என்பது ஒரு விதி
    அந்த அடிப்படையில் தங்கள் கூற்றும் உண்மையே!

    ReplyDelete
  8. உடலால் பெண் கர்ப்பம் அடைகிறாள்
    மனத்தால் ஆண் கர்ப்பம் அடைகிறேன்
    பத்துமாதம் குழந்தையின் வளர்சிகண்டு பூரிக்கும் ஆண் உள்ளம்
    ஆரோக்கியமான சமூகத்திற்கு தேவை என்பதாக அர்த்தம் கொள்கிறேன்

    "உன்னை நினைவூட்டும் முகச்சாயல் அவளுக்கு!"

    உள்ள உணர்வுகளின் சங்கமம் ஆலிங்கனா அருமை சத்திரியன் ...........

    ReplyDelete
  9. கதை நன்று!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  10. //கர்ப்பமுற்ற பெண்ணொருத்தி யாரை அதிகமாக நினைத்துக் கொண்டிருக்கிறாளோ அவரின் சாயலில் குழந்தை பிறக்கும் என்றொரு நம்பிக்கை கிராமப் புறங்களில் உண்டு.//

    இது கிராமப் புறங்களில் அன்று நிலவிய ஒரு பேச்சு
    அனால் இரு அது அறிவியல் ரீதியாக கண்டுபிடிகப்பட்ட உண்மை



    கர்ப்பம்
    சுமந்தவள் என் மனைவி
    உன்னை நினைவில்
    சுமந்துக் கொண்டிருந்தவன்
    நான்

    இதோ
    என் மகள் வளர்ந்து,
    குமரியாய் நிற்கிறாள் எதிரே.
    உன்னை நினைவூட்டும் முகச்சாயல்
    அவளுக்கு!

    கதை என்று சொல்லிவிட்டு கவிதையில் அழகிய சொல்லாடல்கள்

    அழகான க(வி)தை

    ReplyDelete
  11. உணர்வைச் சுமந்த இக்கதையை மிக ரசித்தேன். நன்று.

    ReplyDelete
  12. எல்லாம் மனசுல தாங்க இருக்கு - மனவிழி சதிரியன்.

    உண்மைதாங்க.

    ReplyDelete
  13. ஆலிங்கனா,நல்ல் பெயர்.நல்ல சொற்கட்டு அடங்கைய நவீன கவிதையின் தோற்றத்தையும், ஒரு மடல் விரிகிற தோற்றத்தையும் ஒரு சேர தந்து விட்டுச்செல்கிற படைப்பு.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. சற்று உளவியல் ரீதியாகவும் நம்மை தொடுகிற நினைவு பொதியல்/

    ReplyDelete
  15. காதலுக்கு மாளிகை கட்டி வாழ்பவன்.ஆழமான வரிகள்.தொடரட்டும் ஆவலாய் காத்திருப்பு !

    காதல் போரில் வெள்ளைக்கொடி தவிர போர்க்கொடி காட்டியதேயில்லை.இத்தனை தூரத்திலிருந்துகொண்டு
    ஏனிந்த அம்பு !


    கலாய்க்காதேங்கோ காதல் கண்ணனை !

    ReplyDelete
  16. எங்கிருந்து கொணர்ந்தீர் வார்த்தைகளை கவி வரிகளாய் வார்க்க..ஈர மண்ணில் ஓணான் வலை வரிகள் விந்தையாய் தான் இருந்தது படிக்கும் போதே....கற்பனையில் அந்த வெள்ளை ரவிக்கை நீல நிற தாவணி பெண் வந்து போக தவறவில்லை.காதலை இந்த தோரணையில் எங்கும் படிக்கவில்லை. அழகிய ஆக்கம் உணர்வோடு கூடி இருக்கு சத்ரியன். பல முறை பலமுறை படிச்சிட்டேன். ஆலிங்கனா எத்தனை அழகிய ரசனை உங்களுடையது ஒரு கதைக்கு பேர் வைக்க கூட இத்தனை அழகிய பேரை தேர்வு செய்தது.அர்த்த ஜாமத்தில் அவளை ஆன்மா தேடி அலைவதின் அர்த்தம் புரிகிறது,

    // வறண்ட காட்டில் வழி தவறிய ஒருவன் அலைந்து அலைந்து சோர்வுற்று, தொண்டை வறண்டு தாகம் தாளாது தண்ணீருக்குத் தவிக்கும் ஜீவ போராட்டத் தருணங்களில் உமிழ்நீரையே உருட்டி உருட்டி விழுங்கி இன்னும் சிலநொடி உயிர்வாழ முயல்வதைப் போல,// அழகிய வரிகள் மிகையான வரிகள் இது போன்று சுட்டி காட்ட வரிகளை தேர்ந்தெடுத்தால் மொத்த கதையையும் தான் தேர்ந்தெடுத்து சொல்ல வேண்டும் அத்தனை வரியும் அழகு.அவள் சாயலில் உங்கள் மகளுக்கு வாழ்த்துக்கள்.

    வாழ்த்துக்கள் காதல் மன்னா!!

    ReplyDelete
  17. தூரத்திலிருந்துகொண்டு
    ஏனிந்த அம்பு !\\\\\\
    ரொம்பத்தான் தைத்ததோ?
    “அந்தக்காயம்” ரொம்பத்தான் தேடுகிறது
    “இந்தக் காயாம்பூ மேனியை”





    அவள் சாயலில் உங்கள்
    மகளுக்கு வாழ்த்துக்கள்.\\\\\
    தமிழ்! அவ்வளவு அழகாக..வாழைப்பழம் கொடுத்துப்,
    பின் ஊசியை ஏற்றிவிட்டீர்கள்.சரியான...
    கில்லாடிதான் நீங்கள்! உண்மையைக் கண்டுபிடித்துச்
    சொன்னதற்கு நன்றி தாயி......
    சிங்கையில் ஒரு வேலைக்கு
    ஆள் தேடுகிறார்கள்...அதுதானமா!சி.ஜ.டி சம்மதமா?

    ReplyDelete
  18. கோடைக்காலத்தில் ஒரு மழைநாளுக்கு
    அடுத்த நாள் மாலை என்னைப்
    பார்க்க வந்திருந்தாய்\\\\\
    கோடைகாலத்திலும்.......



    அங்கே ஈரமண்ணில் ஓணான் ஒன்று
    வளை தோண்டி அதில் முட்டையிடுவதைக்
    காட்டினேன். அதுநாள் வரை கண்டிராத
    நீ அதைக்கண்டு வியந்து \\\\\\

    நானும் இப்போதுதான் அறிகிறேன்



    கர்ப்பம் சுமந்தவள் என் மனைவி.
    உன்னை நினைவில் சுமந்துக்
    கொண்டிருந்தவன் நான். \\\\\\

    உண்மைக்காதலில் உணர்சிகள்,
    வெடித்து வந்த நினைவின் தழுவல்கள்
    மிக நன்று.
    இருந்தாலும்....அந்தப் பெயர்மட்டும்
    ஒரு ஆணைக்குறிப்பதுபோல் எனக்குத்
    தோன்றுகிறது!மற்றப்படி அருமையான...
    சொல்லாடல்கள் நண்பரே!

    ReplyDelete
  19. உன்னை நினைவில் சுமந்துக் கொண்டிருந்தவன் நான். அழகிய வார்த்தைக் கோர்வை ரசித்துப் படிக்கும் படி இருந்தது அருமை .

    ReplyDelete
  20. மண்ணுக்குள் மறையும் வரை இந்த நினைவுகளும் மறையாது அண்ணே ..
    என்றுமே இந்த பதிவு இனிமையாக இருக்கும் அண்ணே..
    என் நன்றிகள் அண்ணே

    ReplyDelete
  21. அருமையான உணர்வுக் கதை. இதில் உண்மையும் உண்டு. வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  22. நன்றாக உள்ளது கவி வரிகள்.
    நாட்டு நடப்பை எடுத்துக் கூறும்
    வரிகள் நன்று சசிகலா.
    வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  23. மனதில் ஏதோ ஒரு பாரம் உங்கள் கதை படித்தபின். ரொம்ப அருமையாக இருக்கிறது உங்கள் சிறுகதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. puthithaga oru kathai solli ulleergal

    ReplyDelete
  25. ஆணோ பெண்ணோ காதலும் தாய்மையும் உணர்வில் ஒன்றி இருப்பதே இயல்பு அவன் காதல் உண்மையானதைப்போல அவள் கணவன் மீதான அன்பும் உயிரானது.

    ReplyDelete
  26. கதை வித்தியாசமான பாணியில் தொடங்குகிறது....

    அட.... இப்படி ஒரு நேசமா என்று வியக்க வைக்கிறது... இந்த கலிகாலத்தில் உயிராய் நேசிக்கும் ஒரு மனம் இருக்குமா என்று தோன்றுகிறது... ஆமாம் என்று ஆணித்தரமாய் அழுத்தமாய் சொல்லி செல்கிறது கதையின் வரிகள்... இல்லை இல்லை... நேசித்தவனின் மன உணர்வுகள்... அந்த மனதில் நேசத்துக்குரியவள் இன்னும் ஜீவித்திருக்கும் விந்தையை அறிய முடிகிறது....

    மனதில் இருக்கும் நேசத்தை, உணர்வுகளை வலியுடன் வெளிக்கொணர்ந்திருக்கிறது இந்த கதையின் வரிகள்....

    என்ன ஒரு அழகிய சிந்தனை.... என்றோ சந்தித்து நேசித்து பிரிந்து தனக்கென ஒரு வாழ்க்கை அமைத்துக்கொண்டப்பின்பும் அந்த நேசம் தொடர்கிறது யாரும் அறியாமல் மனதில்...

    மனமும் சூல் கொள்கிறது.... நினைவுகளை பிரசவிக்கிறது.... நேசித்தவளுக்கு மணிமண்டபம் அவள் நினைவாய் கட்டுகிறது... தினம் தினம் அவள் நினைவில் மீண்டும் அவளை எங்காவது என்றாவது சந்திப்போமா என்ற நம்பிக்கைத்துளி வாழ்க்கையை அர்த்தமாக்கி ஜீவமரண போராட்டத்தில் இருந்து மெல்ல விடுவித்து வாழவைக்கும் அமிர்தத்துளியாகி....

    மணந்தவள் கர்ப்பமுற்றாலும் இவன் நினைவுகள் மட்டும் இன்னும் அவளையே சுற்றி...நேசித்தவளின் நினைவுகளை தாங்கி இவன்... இவன் உயிரணுவைத்தாங்கி இவன் மனைவி.... பிறந்த தேவதையோ இவன் உயிராய் இன்னும் நேசித்துக்கொண்டிருக்கும் வெள்ளை கறுப்பு படத்தில் இருக்கும் அதே சீருடை தேவதை ஆலிங்கனா.... (ஆலிங்கனம்னா அணைத்தல் என்று ஒரு பொருளும் உண்டு )

    அதிர்ஷ்டசாலி அந்த சீருடை தேவதை... உலகில் இதுவரை நேசித்து பிரிந்தோர் உண்டு.. நேசித்து இருமனம் சங்கமித்து திருமணத்தில் முடிந்ததும் உண்டு.. ஆனால் இப்படி காலம் முழுக்க நேசித்தவளை நினைவுகளால் சுமக்கும் ஒரு அற்புத பிறவியை இந்த கதை மூலம் தான் காண்கிறேன்.. ஆச்சர்யமாக இருக்கிறது.. இப்படி நடக்க சாத்தியமுண்டா என்று திரும்ப திரும்ப யோசிக்க வைக்கிறது....

    தான் ஒருவனால் நேசிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறோம் என்பதை அறியாத துரதிர்ஷ்டசாலி....

    வித்தியாச பெயர்... வித்தியாசமான கதை நடை....

    யாருமே இப்படி ஒரு கோணத்தில் சிந்தித்ததும் இல்லை....
    யாருமே இப்படி ஒரு நேசத்தை பகிர்ந்ததும் இல்லை....
    யாருமே தன் உணர்வுகளை கருவாக்கி உயிராக்கியதில்லை.....

    வித்தியாசமான கதை... ஆனால் மனதை மகிழ்வித்த கதை...
    நேசத்தை தன் உயிராய் கொண்டு நடமாடும் ஆண்களும் உண்டு என்பதை நிரூபித்த அட்டகாச கதை சத்ரியன்....

    நூற்றுக்கு நூறு இந்த கதைக்கு....

    அன்பு வாழ்த்துகள் சத்ரியன்....

    ReplyDelete
  27. மனதை மயக்கும் வரிகள், ஏன் பள்ளி காலத்தை நினைவூட்டும் கதை... அருமை சத்ரியரே...

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.