Apr 25, 2012

பொய்க்கனி-01


வளுக்கு போன் செய்து நாளைக்கு சிங்கப்பூர் புறப்படுகிறேன் என்றேன். விடுப்பு முடிஞ்சதா என்றாள். ஆமாம் என்றதும், எத்தனை மணிக்கு விமானம் என்றாள். இரவு 11.45 மணிக்கு என்றேன். ஏனோ மௌனம் காத்தாள். ஹலோ சொல்லி மௌனம் கலைத்தேன். விமான நிலையம் வரை நானும் வரவா எனக் கேட்டாள். இந்தியா வரும் போது அவசியம் சந்திக்க வேண்டும் என்று ஏற்கனவே சொல்லியிருந்தாள். நானும் சந்திப்பதாய் உறுதி கூறியிருந்தேன். ஆனால், குறுகிய கால விடுப்பு என்பதால் அவளைச் சந்திக்க நேரம் அமையாமல் போய் விட்டது. சந்திக்க முடியாமலேயே போய் விடுமோ என்ற எண்ணத்தில் தான் அவள் அப்படி கேட்கிறாள் என புரிந்தது.சரி வா என்றேன்.

ஒவ்வொரு பயணத்தின் போதும் என்னுடன் விமானநிலையம் வரை வந்து வழியனுப்பிச் செல்லும் நண்பனை இம்முறை தவிர்த்தேன். வீட்டிலிருந்து புறப்படும் நேரத்தை அவளுக்காக மாற்றிக் கொண்டேன்.

லைப்பூ வாசிப்பில் கிடைத்த தோழி அவள். அவளது எழுத்துக்களை வாசிக்கும் போது மெல்லிய பிரமிப்பும், படைப்புடன் ஒரு நெருக்கமும் வாசகர்களின் மனதினுள் ஊடுறுவுவதை யாரும் மறுக்க முடியாது. எழுத்து அவளின் முன்ஜென்ம ஆற்றல் போல! ஆனால் ஏகத்துக்கும் எழுத்துப்பிழை இருக்கும். அது பற்றி குறிப்பிட்டுதான் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். அப்படி தான் ஆரம்பித்தது அவளுடனான பழக்கம்.மின்னஞ்சல் தொடர்பு நாளடைவில் தொலைபேசி தொடர்பாக மாற்றம் கண்டது. பிறரது கவிதைகள், கட்டுரைகள், எழுத்துலக ஜாம்பவான்களின் படைப்புகள் என பலதும் பேசுவோம்.

ஒருமுறை அவளது கவிதைளில் சில குறுந்தொகையை ஞாபகப்படுத்துவதாய் சொன்னேன். குறுந்தொகை படித்ததில்லை என்றாள். சுஜாதாவின் ‘401 காதல் கவிதைகள்’ நூலைப் படிக்க பரிந்துரைத்தேன். பின்பொரு நாள் ஜெ.மோ-வின் ‘சங்கச் சித்திரங்கள் ’ பற்றி சொன்னேன். சரி வாசிக்கிறேன் என்றாள்.

ஒருநாள் பேசிக்கொண்டிருந்த போது உங்கள் வயதென்ன என்றேன். நாற்பத்தியிரண்டு, முதிர்கன்னி, சொற்ப வருமானம் தரும் வேலை, தனிமையாய் ஒரு சிறிய வாடகை வீட்டில் வசிக்கிறேன் என ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள். அவளிடம் பலரும் இந்த பதிலுக்கான கேள்விகளை தவணை முறையில் கேட்டிருக்கக்கூடும். இவளும் தவணை முறையில் பதில் சொல்லி அலுத்திருக்கக் கூடும் என்று நினைத்துக் கொண்டேன்.

ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றதற்கு காதல் தோல்வி என்று ஒற்றை வரி பதிலில் என் வாயடைத்து விட்டாள். உலகம் தெரியாத பெண்ணோ இவள் என நினைத்துக் கொண்டேன். ஒருமுறை காதலில் தோற்றதற்காக ஒரு பெண் வாழ்வை வீணடிப்பாளா?. அந்த காதல் அனுபவம் பற்றி மேற்கொண்டு எதையும் நான் கேட்கவில்லை. அவளும் சொல்லவில்லை.

கரப் பேருந்து நிலையத்தில் இறங்கி எதிரேயிருந்த கடையில் தண்ணீர் பாட்டில் வாங்கி கொண்டு அவளுக்கு போன் செய்தேன். பூக்கடை அருகிலிருந்து என்னை நோக்கி வந்து கொண்டிருந்தாள். புன்னகைத்துக் கொண்டோம். சென்னை செல்லும் பேருந்து ஒன்று புறப்பட தயாராய் இருந்தது. ஏறி இருவர் அமரும் இருக்கையில் அமர்ந்துக் கொண்டோம். பயணம் தொடங்கியது.

முதல் சந்திப்பு இது. தொலைபேசியில் எவ்வளவோ பேசியிருந்தாலும் நேரில் பார்த்ததும் சொற்கள் மௌனம் சாதித்தது. மூடியைத் திறந்து தண்ணீர் பாட்டிலை நீட்டினேன். குடித்தாள். எப்படியிருக்கீங்க என்றாள். ம் இருக்கேன் என்றேன். போனில் பேசும் போது ஒருமையில் தானே பேசுவ, இன்னைக்கு என்ன ‘ங்க’ சேர்ந்து வருது என்றேன்.சிரித்தாள். சரி இனிமே ‘ங்க’ சேர்க்கல. போதுமா என்றாள்.

“ம் சொல்லு, எதுக்காக வந்த?” 

 “பாக்கனும்னு இருந்துச்சி”

“அதுக்கு பஸ் ஸ்டாண்ட்லயே பாத்துட்டு போயிருக்கலாமே. ஏர்போர்ட் வரைக்கும் வரவான்னு கேட்டியே எதுக்கு?”

“தெரியல. அடுத்து எப்ப வருவியோ? இந்த சந்தர்ப்பத்தை விட்டா ஒருவேளை பாக்க முடியாம கூட போகலாம் இல்லியா?”

அவளது முகத்தைப் பார்த்தேன். அவள் ஜன்னலுக்கு வழியே எதையோ பர்த்தாள்.

“ஏன் முகம் பாத்து பேசமாட்டியா?”

“முகம் பார்க்க முடியல”

“அவ்ளோ கோரமாவா இருக்கு எம்மூஞ்சி?”

“ச்சே! அப்படியில்ல. உன் கண் பார்க்க கூச்சமா இருக்கு.”

“ஹலோ, ஆளுங்களோட பழகும் போது எப்பவும் கண்ணைப் பாத்து பேச கத்துக்க.”

“ம்ம்”

“என்ன ம்ம்? எம் பக்கம் திரும்பு.”

ஜன்னல் பக்கமிருந்து பார்வையை விலக்கவேயில்லை. அவளின் பின்னந்தலையில் கை வைத்து முகத்தை என் பக்கம் திருப்பினேன். கண்களில் நீர் துளிர்த்திருந்தது. அதற்கான காரணம் எனக்கு தேவையில்லை. உங்களுக்கும் தான் என நினைக்கிறேன். காற்றில் கலைந்து காதோரம் அலைந்த கூந்தல் இழைகளை காதிடுக்கில் ஒதுக்கி விட்டாள். விரல்களுக்கு மருதாணியிட்டு நாளாகியிருந்தது போல. நகங்களில் பாதியளவிற்கு தான் சாயமிருந்தது.

“ரொம்ப சந்தோஷமா இருக்கு”, என்றாள். ‘ம்’ என்றேன்.

“முன்ன பின்ன தெரியாத ஒரு ஆம்பிளையுடன் போறேமேன்னு பயமில்லையா உனக்கு?”

“துளியும் இல்ல.உன்னால எனக்கு எந்த ஆபத்தும் இருக்காது”

“எதை வச்சி அப்படி சொல்ற?”

“உன் மனைவிக்காக நீ எழுதியிருக்கும் கவிதைகள். மனைவியை அவ்வளவு நேசிக்கிற உன் மனசுல இன்னொருத்திக்கு ஆபத்து ஏற்படுத்தற எண்ணமோ, இன்னொருத்திக்கான இடமோ இருக்காது. அதான் எனக்கு தைரியம் குடுத்தது.”

அவள் அப்படிச் சொன்னதும் என் மனைவி மேலுள்ள காதல் இன்னும் அதிகமானது. அதே நேரம், இவள் மீதான நேசயிழையொன்று மனதின் ஓரம் வேர்விட்டிருந்ததையும் சொல்லியே ஆகவேண்டும்.

“சரி இப்ப சொல்லு. ஏன் கல்யாணம் பண்ணிக்கலை?”

“எனக்கு பத்தொன்பது வயசிருக்கும் போது அடிக்கடி வயித்து வலி வந்துட்டே இருந்தது. ஹாஸ்பிடல் போய் செக் பண்ணப்ப கர்ப்பபையில எதோ கட்டி இருக்கிறதாவும், கர்ப்பபையை எடுத்தா தான் உயிர் பிழைக்க முடியும்னு டாக்டர் சொல்லிட்டாங்க. உயிர் பிழைக்கனுமே! அதான் அதை நீக்கிட்டோம்.

இதை காரணம் சொல்லி என்னை விரும்பினவரு விட்டு விலகிட்டாரு. அதுக்கப்புறம் ஒன்னு ரெண்டு பேர் பெண் கேட்டு வந்தாங்க. வர்றவங்க கிட்ட இந்த விசயத்தை நான் மொதல்லயே சொல்லிடுவேன். ஏன்னா, யாராயிருந்தாலும் வாழையடி வாழையா தன் வம்சம் தழைக்கனும்னு தானே நெனைப்பாங்க. என்னால அது முடியாதுன்னு தெரிஞ்சும் ஏன் மறைக்கனும்? வயசு ஏறயேற பெண் கேட்டு யாரும் வரலை. அப்பாவும், அம்மாவும் ஒரு விபத்துல... அவங்க இப்ப இல்ல!”

இப்போது என் கண்களில் நீர் முட்டியிருந்தது. அவளுக்குத் தெரியாமல் லாவகமாக துடைத்துக் கொண்டேன்.

“கர்ப்பபை இல்லைன்னா என்ன? இப்போதான் அறிவியல் எவ்வளவோ முன்னேறி இருக்கே. வாடகைத்தாய் மூலமா குழந்தை பெத்துக்க வழியிருக்கே!” 

“ஒருவேளை உங்களுக்கு கல்யாணமாகறதுக்கு முன்ன நாம சந்திச்சிருந்தா நீ சொல்றது நடந்திருக்குமோ, என்னவோ?

இந்த பதிலை அவளிடமிருந்து நான் எதிர்பார்த்திருக்கவில்லை.

“உன் கையை தொட்டு பாக்கட்டுமா?”

எனது விரல்களும் விரும்பியது.

என் கையை மெல்ல அவள் மடிமீது வைத்தேன். கையினை மெதுவாக பற்றிக் கொண்டாள். அவளின் உள்ளங்கை வியர்த்திருந்தது. என் விரல்களைப் பிடித்து நகங்களை அழுத்திப் பார்த்தாள். விரல்களுக்கிடையில் விரல் கோத்து இறுக்குவதும் தளர்த்துவதுமாய் இருந்தாள். புது உலகமொன்று அவள் கைகளில் கிடைத்திருப்பதாய் நினைத்துக் கொண்டாள் போல!

தொடர்ந்த பயணத்தில் தொடர்பற்ற எதையெதையோ பேசிக்கொண்டே வந்தோம். பேருந்து கோயம்பேடு வந்து சேர்ந்தது. அவள் திரும்பிச் செல்வதற்கான பயணச்சீட்டை முன்பதிவு செய்து விட்டு உணவகத்திற்குச் சென்று சாப்பிட்டோம். ஆட்டோ பிடித்து விமான நிலையம் புறப்பட்டோம்.

சென்னை விமான நிலையம்.

பிரிவுநேரம் நொடிநொடியாய் நெருங்கிக் கொண்டிருந்தது. ஏதாவது பேசுங்களேன் என்றாள். வாழ்க்கை துணை பற்றிய தேவையைச் சொன்னேன். யாரையாவது மணமுடித்துக் கொள் என்றேன். அவள் கையால் என் வாயை மூடினாள். புரிந்தது.

“அதை நான் முடிவு செஞ்சிக்கிறேன். நீ ஊர் போய் சேர்ந்ததும் போன் பண்ணு. தினமும் போன் பண்ணி கொஞ்ச நேரம் பேசு. எத்தனையோ கோடி பேர் வாழும் இந்த பூமியில நீயாவது என்னோடு தொடர்பில் இரு. உன் அன்பு என் ஆயுளை இன்னும் கொஞ்சம் நீட்டிக்கும் போல இருக்கு. இதை மட்டும் செய் எனக்காக”,என்றாள்.

விமானநிலையத்தினுள் நுழைந்தேன்.

உள்ளே சென்று மீண்டுமொரு முறை அவளை திரும்பிப் பார்த்தேன். அவளது கன்னத்தில் வழிந்திருந்த நீர்த்தடத்தில் மின்விளக்கொளியும் வழிந்துக்கொண்டிருந்தது. போய் வா என்னும் தோரணையில் கையசைத்தபடி நின்றிருந்தாள்.

அசையும் அவளின் கை உங்கள் மனதை ஒன்றும் செய்யவில்லையா?

#

30 comments:

 1. கண்கள் கலங்கிட்டது மாப்ள

  ReplyDelete
 2. கன்னத்தில் வழிந்திருந்த நீர்த்தடத்தில் மின்விளக்கொளியும் வழிந்துக்கொண்டிருந்தது.

  -வர்ணணை அருமை. சொல்லிச் சென்ற விஷயத்தின் எழுத்து நடையும் சரளம். என்ன கேட்டீங்க... உங்கள் மனதை ஒன்றும் செய்யலியான்னா..? உள்ள ஒரு பூகம்ப அதிர்வையே ஏற்படுத்தி, கண்ணை லேசாக் கலங்க வெச்சுட்டு இப்டி ஒரு கேள்வியா தம்பி!

  ReplyDelete
 3. காலாங்காத்தால ஏன்யா இப்படி கலங்கடிக்கிறீங்க.

  உணர்வுகளை அப்படியே எழுத்தில் கொண்டுவந்திருக்கிறீர்கள். என்ன சொல்றதுன்னு தெரியலையே நண்பா. கஷ்டமா இருக்கு. :-(

  ReplyDelete
 4. ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்.
  யாரோ வருவார் யாரோ போவார்
  ஒருவர் மட்டும் குடியிருந்தால் என்றும் துன்பம் இல்லை.
  ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதி இல்லை.

  ReplyDelete
 5. கதையா உண்மையா எதுவானாலும்
  எழுதியுள்ள முறையும் நடையும் மிக
  பாராட்டுக்குரியது
  சென்னை வந்தது உண்மை என்றால் குறைந்தபட்சம் தொலை வழியிலாவது தொடர்பு கொண்டிருக்கலாமே

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 6. கனமான வலி உணர்த்தும் உணர்வுகள் நிறைய தட்டுப்படுகிறது கதையில், நிறைய இடங்களில் வரிகளால் வலியை மீறும் அழகு.வர்ணனைகள் அத்தனையும் காட்சியாய் வந்து போக தவறவில்லை.

  // விரல்களைப் பிடித்து நகங்களை அழுத்திப் பார்த்தாள். விரல்களுக்கிடையில் விரல் கோத்து இறுக்குவதும் தளர்த்துவதுமாய் இருந்தாள்.//

  கற்பனையா என்ற சந்தேகத்தை ஏற்படுத்த தவறவில்லை, எதாயிருந்தால் என்ன அழகை ரசிக்கலாம்.

  // அவளது கன்னத்தில் வழிந்திருந்த நீர்த்தடத்தில் மின்விளக்கொளியும் வழிந்துக்கொண்டிருந்தது.//

  கிளாஸ் வரிகள்...எங்கியோ போயிட்டீங்க வாத்தியாரே..

  // அசையும் அவளின் கை உங்கள் மனதை ஒன்றும் செய்யவில்லையா?
  //

  கண்டிப்பா அசைச்சிடுங்க, நீங்க கையை பிடிக்காமலா இருந்தீங்க டவுட்டு..

  நைஸ் ஒன் சத்ரியன்..

  மைக்காரி
  ஆலிங்கனா
  பொய்கனி..

  இதுக்கு முன்ன எத்தனையின்னு நேரம் கிடைக்கும் போது கணக்கெடுக்கிறேன்

  சரியா தான் வச்சிருக்காங்க பேரை

  “ கண்ணன்”

  என்று..

  ReplyDelete
 7. நீ ஊர் போய் சேர்ந்ததும் போன் பண்ணு. தினமும் போன் பண்ணி கொஞ்ச நேரம் பேசு. எத்தனையோ கோடி பேர் வாழும் இந்த பூமியில நீயாவது என்னோடு தொடர்பில் இரு. உன் அன்பு என் ஆயுளை இன்னும் கொஞ்சம் நீட்டிக்கும் போல இருக்கு. இதை மட்டும் செய் எனக்காக”,என்றாள்.
  சாதரணமா எல்லாத்துக்கும் அழரவங்க என்று எங்களை சொல்வாங்க ஆனா இந்த மாறி ஒரு சூழலை படிக்கும் போதே அழவச்சிடிங்க உண்மையா நிகழ்ந்தா ? அருமைங்க .

  ReplyDelete
 8. வாழ்க்கையிலிருந்து உருவியெடுக்கப்பட்ட ஈரமிக்க வாழ்க்கையை, அன்போடு முன்வைக்கப்பட்ட உணவைக் கவ்வி உண்ணும் நாயைப் போல், மனம் கவ்விக் கொள்கிறது.

  சமூகத்தின் வலைப் பின்னல்களை மாற்றி எழுதிக் கொண்டிருக்கும் சமூக வலைதள, வலைப்பூச் சூழலை பின்புலமாகக் கொண்டுள்ள கதை, இறுகியும், தளர்ந்தும் நடக்கும் இரு மனங்களின் கனவுகளை, கவிதைகளை, தடங்களை, தடுமாற்றங்களை, பலம், பலவீனங்களை, இவற்றை எல்லாம் மீறிக் கிடக்கும் இயலாமையை ஒரு கேமராவென பிரதியெடுத்துள்ளது.

  நடந்து விடக் கூடிய, நடந்து கொண்டிருக்கும் கதைதான். இளையதளத்தில் சந்தித்த முகம் தெரியாத நண்பர்களின் தற்கொலைகளும், கடத்தல்களும் (பாஸ்கர் சக்தி சமீபத்தில் கடத்தப்பட்ட கலெக்டர் தனது முகநூல் நண்பர் என்று குறிப்பிட்டிருந்தார்) நம்மை உலுக்கி எடுக்கத் துவங்கி இருக்கும் இந்த உலக விசித்திரத்தில், ஒரு வலைப்பூ தோழியின் உள்ளங்கை வியர்வையை அழுந்தத் துடைப்பதும், அவளின் அழுகையை சுட்டுவிரல் நீட்டுத் துடைப்பதும் இயல்பான வாழ்க்கையாக, வாழ்க்கைக் கதையாக மாற்றுவதில் ஆச்சரியங்கள் இல்லை.

  தம்பி, உனக்குக் கதை அழகாக வருகிறது. கதையும் வடிவாக முடிகிறது. இடையில் - வாசகனோடு நேரடியாகப் பேச முற்படும் அந்த எழுத்தாளக் குரல் மட்டும் இல்லையென்ன்றால், இப்போதிலும் அழுத்தமாக வந்திருக்கும் இந்தக் கதை.

  ஆனால், அதையும் மீறி மனதை ஈரமாக்கிப் பார்க்கும் எழுத்து, உழைப்பால் வந்தது ; இன்னும் உழைக்க நிச்சயம் இன்னும் சிறக்கும்!

  ReplyDelete
 9. உங்கட கையை தொட்டு பாக்கேலுமோ....எதுவும் சொல்ல வரேல்ல சத்ரியா !

  ReplyDelete
 10. கண்கள் கலங்க்கச் செய்துவிட்டு
  எதுவும் செய்யவில்லையா என்றால் என்ன் அர்த்தம்
  நட்பின் ஆழத்தை அழுத்தமாய் உணர்ந்தோம்
  மனம் கவர்ந்த பதிவு.வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. கண்கள் கலங்கிட்டது...

  கதையா... நிஜமா...
  கலங்கடித்துவிட்டது.

  ReplyDelete
 12. ஒன்றுமே சொல்லத்தோனலை மாம்ஸு, எனது மெளனத்தை மொழி பெயர்க்க தெரிந்தவன் நீ ‍
  புரிந்து கொண்டிருப்பாய்

  ReplyDelete
 13. சமூக கட்டத்தை தாண்டி வெளியே உலவும் அக மனதின் படபிடிப்பு இந்த பொய்கனி .....எல்லோருடைய வாழகையிலும் வந்து போகும் ஒரு பிம்பத்தை அப்பட்டமாய் சித்தரிக்கும் வசீகரமிக்க வார்த்தைகள்
  உங்களுடையது.

  எதையோ எழுதுகிறோம் என்று எழுதாமல் உணர்வுகளை உறவுகளை நட்புகளை அச்சிட்டு வார்க்கும் ஒரு நேர்த்தி உங்கள் எழுத்துகளில் காணக்கிடக்கிறது........

  தொடர்ந்து எழுதுங்கள் சத்திரியன் உணர்வுகளை உணர்ந்தவனால் மட்டுமே அதை மற்றவர்களுக்கு உணர்த்தமுடியும் .................இன்னும் உணர்த்துங்கள் வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 14. அசையும் அவளின்
  கை உங்கள் மனதை ஒன்றும் செய்யவில்லையா?\\\\\\
  அவளின் அசையும்...கையுடன்
  மனசும் பல..பல கதைகள பேசிக்கொளகின்றன,பகிரத்தான் முடியாத அலைகளின் அபலை.
  இப்படி ..இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கும் பாத்திரங்களின் மெளனஓலம் யார் செவிகளிலும் இன்னும் விழாமல்......
  ம்மம்மம்ம்...நன்றாகத்தான் இருக்கின்றது

  ReplyDelete
 15. “ச்சே! அப்படியில்ல. உன் கண்
  பார்க்க கூச்சமா இருக்கு.”\\\\\\
  ஹேமா, இதைக் குறிப்பெடுக்கவும்

  “ஹலோ, ஆளுங்களோட பழகும்
  போது எப்பவும் கண்ணைப் பாத்து
  பேச கத்துக்க.”\\\\\\
  ஹேமா, யாருக்கு இது என்று
  தெரிகிறதா?
  சொல்லாமல்..சொல்வது!
  ஆமா, என்ன நடந்தது தமிழுக்கு? ஏதோ ஓரு கை இல்லாமல் இருப்பதுபோல் தோன்றுகிறது எனக்கு!

  ReplyDelete
 16. உங்கட கையை தொட்டு
  பாக்கேலுமோ\\\\\
  என்டா இது வம்பாப்போச்சு அவரு....
  எத்தனைபேருக்குதான் "அந்தக்"
  கையைக் கொடுப்பது?

  ReplyDelete
 17. அசியும் அவளது கைமட்டுமல்ல,தூரத்து உணர்வுகளும் எதையோ சொல்லிச்செல்ல மனம் கனக்கிறது,படித்து முடித்ததும்/நல்ல பதிவு வாழ்த்துக்கள்,தொடர்ந்து இதுமாதிரியான மனம் கனக்கிற பதிவுகளையே எழுதி வருகிறீர்களே?

  ReplyDelete
 18. // ஆமா, என்ன நடந்தது தமிழுக்கு? ஏதோ ஓரு கை இல்லாமல் இருப்பதுபோல் தோன்றுகிறது எனக்கு!//

  ஆமாம் கலா என் ஒரு கை இப்ப அவர் கையில் இருக்கு அதான் குறைஞ்சமாதிரி இருக்கும்..

  // உங்கட கையை தொட்டு
  பாக்கேலுமோ\\\\\//

  அதெல்லாம் இயலும் ஹேமா..இயலாமலா அந்த அம்மணி இறுக்குவதும் தளர்த்துவதுமா இருந்தாங்க..

  இந்த முறை இந்தியா வந்து திரும்பும் போது நான் தான் ஏர்போர்ட்க்கு கூட போகப்போறேன்..

  ReplyDelete
 19. கதையைப் படித்து கருத்திட்ட அனைவருக்கும் என் மனம் கனிந்த நன்றிகள்.

  இதுநாள் வரையிலும் கவிதைகளாகவே பதிவிட்டு வந்தேன். ஒரு கதைச் சொல்லியாக முயற்சித்து பார்க்கலாமே என்று முயன்றதன் விளைவு தான்

  “ஆலிங்கனா”-வும், “பொய்க்கனி”-யும்.

  உங்களில் பலரின் கவனத்தையும் கவரும் வகையில் இனிமேலும் அவ்வப்போது இது போன்ற கதைகள் தரலாம் என முடிவெடுத்திருக்கிறேன்.

  மீண்டும் அனைவருக்கும் நன்றி.

  ReplyDelete
 20. thamilarasi said...
  //இந்த முறை இந்தியா வந்து திரும்பும் போது நான் தான் ஏர்போர்ட்க்கு கூட போகப்போறேன்.//

  வாங்க வாங்க.

  ஆனா, இதே கதையை மறுபடி பதிவேத்த மாட்டேன், சொல்லிட்டேன்.

  ReplyDelete
 21. // வாங்க வாங்க.

  ஆனா, இதே கதையை மறுபடி பதிவேத்த மாட்டேன், சொல்லிட்டேன்.//

  எனக்கு கல்யாணமாகி ரெண்டு புள்ளை இருக்கு அதனால் வேற கதை தான் எழுத முடியும் சத்ரியன்.

  ReplyDelete
 22. இந்த முறை இந்தியா வந்து திரும்பும் போது நான் தான் ஏர்போர்ட்க்கு கூட போகப்போறேன்\\\\\\

  ஆமா,தமிழ்! இதுதான் சரியானமுடிவு
  அந்த இரண்டு கைகளையும் இல்லாமல்ப் பண்ணிவிடுங்கள.
  உங்க புத்தி கூர்மையான படியாத்தான் இந்தக் கத்தியெல்லாம் எடுக்கணும்
  என்று தோணுது. பயப்படாமச்....களைஞ்சிருக்க அப்புறம் யாரு கை வேணும் என்று கேட்கிறார்களெனப் பார்ப்போம்! வாழ்த்துடன் அனுப்பி வைப்பேன் உங்களை!கவலைப்பட வேண்டாம்

  ReplyDelete
 23. // ஆமா,தமிழ்! இதுதான் சரியானமுடிவு
  அந்த இரண்டு கைகளையும் இல்லாமல்ப் பண்ணிவிடுங்கள.//

  ஆமாங்க கலா சொல்லி வச்சிருக்கேன், விரலில் ஒவ்வொரு கணுவையும் ஒடைக்கிறேன்னு...பயபுள்ளைக்கு ரெண்டு கையையும் உடைக்கிறேன்னு..பாவம் ஹேமா தான் எப்படி தாங்க போறாங்களோ? புடிக்கயேலுமோன்னு கேட்டுட்டு போனாங்க.

  ReplyDelete
 24. பாவம் ஹேமா தான் எப்படி தாங்க போறாங்களோ? புடிக்கயேலுமோன்னு கேட்டுட்டு போனாங்க\\\\\\

  பாவம்!எல்லாம் பாக்காதிங்கோ,அவ அங்கிட்டும்,இங்கிட்டும் பாடுவா,சமரசம் பண்ணப்பாப்பா..ம்ம்ம்ம்ம்ம...
  மசியவே கூடாது அவக எப்படியெப்படியெல்லாம் வீராப்போட பேசினாக.. சொன்னதெல்லாம்..நாம மறக்கவே கூடாது தமிழ்!

  ReplyDelete
 25. தங்களின் பதிவை இன்று வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரமிருப்பின் வந்து பார்த்துக் கருத்துச் சொல்லும்படி வேண்டுகிறேன்.

  http://blogintamil.blogspot.in/2012/05/blog-post.html

  ReplyDelete
 26. சூப்பர் அண்ணே...

  ReplyDelete
 27. சத்ரியன்...அதென்ன உங்கள் மனதை ஒன்றும் செய்யவில்லையா என்று கேட்டுவிட்டீர்கள்!
  மனம் ரணப் பட்டு விட்டதைய்யா...
  தோழியை விட்டு நீங்கள் சென்றது நாங்கள் எதையோ இழந்தது போல்..............உங்கள் எழுத்துக்களில் எப்போது ஒரு புதுமை உண்டு...இப்போ கனிவும்...தோழமையும் காண்கிறேன்!! அடுத்தமுறை பேசும் போது அவர்களிடம் என் அன்பைத் தெரிவியுங்கள்!!!

  ReplyDelete
 28. மனவிழியில் கவியுடன் கதையும் போட்டி போடப் போகின்றது. வாழ்த்துக்கள்.

  நெஞ்சைத்தொட்ட கதை.

  ReplyDelete
 29. தங்கள் பதிவொன்றை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருமாறு நட்போடு அழைக்கிறேன் .

  ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.