May 30, 2012

ஆலிங்கனா-02



முதலில் இதை படியுங்கள் ஆலிங்கனா-01

க்னி நட்சத்திரம் முடிந்தும் வெயில் சுட்டெரிக்கிறது. வீட்டுக்குள் அடைபட்டிருக்க முடியவில்லை. ஊரை ஒட்டியிருக்கும் ஏரியின் பக்கம் சென்று குளிர்க்காற்றை தழுவி வரலாம் என கிளம்பி விட்டேன். ஒருமுறை நாம் அங்கே சென்றிருந்தபோது கடல்போல் காட்சி தந்து நம்மை மிரட்டிய நீர் நிரம்பிய ஏரி இல்லை இது ஆலிங்கனா. ஏரியின் அடி மடியில் மட்டும் நீர் ஒட்டியிருக்கிறது நீ இல்லாத நான் போல!

அந்த கொஞ்ச நீரையும் வெயில் குடித்துவிடக்கூடாதென மரகதப்போர்வை போர்த்தியிருக்கிறது பாசி (அலைதாவரம்). நீரின் போர்வையை உதறி போர்த்தத் தோன்றியது எனக்கு. சற்றே பெரிய கல் ஒன்றை தூக்கி நீரில் வீசினேன். கல் விழுந்த இடத்தில் துள்ளி தெரித்த நீர், ஆழ் தூக்கத்திலிருந்து பதறியெழும் பச்சிளங்குழந்தையாய் தெரிந்தது. அவ்விடத்தில் பாசி சற்றே விலகி பின் மெதுவாய் போர்த்தியது நீர் பரப்பை. அதை கண்டதும் நொடியும் தாமதிக்காமல் உன்னைத்தேடி ஓடியது மனம் ஆலிங்கனா.

முன்பொருமுறை இங்கே நாம் வந்திருந்தோமெனச் சொன்னேனே, அன்று நீ சரிகைநெய்த அரக்குநிற பார்டர் வைத்த பச்சைநிற பாவாடையும், அதே நிறத்தில் ரவிக்கையும், மாம்பழ மஞ்சள் நிறத்தில் தாவணியும் உடுத்தி வந்தாய். அநேக கோயில்களில் அம்மன் சிலைகளுக்கு இந்த நிற உடைகள் தான் பிரசித்தம். அன்றெனக்கு அலங்காரமற்ற அம்மன் போல் தெரிந்தாய் நீ. இருவரும் எதிரும் புதிருமாய் கால்கள் நீட்டி அமர்ந்திருந்தோம். நீரலையைத் தழுவி வந்த காற்று எதிர்பாராத நொடியொன்றில் உன் பாவாடையை கெண்டைக்கால் தெரிய உயர்த்திவிட உயிர் போனதைப் போல் பதறிய நீ, பளபளக்கும் உன் கால்களை கள்ளத்தனமாய் திண்ணும் என் கண்களைக் கண்டதும் பசியாறி போகட்டுமென்றோ என்னவோ மெதுமெதுவாய் பாதம் வரையில் இழுத்து மூடியது நினைவில் ஊர்கிறது.

என்னை என்னென்னெ செய்ய தீர்மானித்திருக்கிறதோ உன்னை அபகரித்துக்கொண்ட இந்த இயற்கை! உன்னை ஏன் இந்த அளவிற்கு காட்சிபடுத்துகிறது என் மனமும், கண்ணும்? என் கண்களை குருடாக்கிக் கொண்டு பைத்தியாமாகி யாரும் அறியாத தொலைதூரத்திற்குப் போய்விட வேண்டும் ஆலிங்கனா. கண் போனால் என்ன? மனக்கண்ணில் நீ இருக்கிறாய் அது போதாதா எனக்கு? கண் தெரியாத நான் உன் கரத்தினைப் பற்றிக்கொண்டு என் ஜீவன் சொட்டுச்சொட்டாய் வற்றி முற்றுமுழுதாய் அற்று போகும் வரை உன் பின்னாலேயே நடந்து அலையவேண்டும்.

உன்னைச்சேர முடியாது போன என் ஆற்றாமை உக்கிரமடைந்து இப்போது உன்னைத் திட்டச்சொல்லி தீச்சொற்களை உதடு நோக்கி உந்தித் தள்ளுகிறது அடிவயிறு. உதடுவிட்டு வெளியேற முடியாமல் நெஞ்சுக்கூட்டில் சுற்றிச் சுழல்கிறது கெட்டவார்த்தைகள். உனக்கு கேட்கும்படி ஒரேயொரு முறை உரக்க திட்டிவிடுகிறேன் உன் செவி கொடு ஆலிங்கனா.

“ என்னை விட்டு எங்கேடி போய் தொலைந்தாய் வேசிமகளே?”.

ஹ்ம்ம்! மனம் லேசானது போல் உணர்கிறேன் ஆலிங்கனா. நீ நல்லவள். உன்னை திட்டியிருக்கக் கூடாது. நான் முரடன். முட்டாள். இத்தனைக் கேவலாமான திட்டினை வாங்கிக்கொண்டும் ஒன்றும் சொல்லாமல் புன்னகைத்து என்னை நோக்கி கரம் நீட்டும் பேரன்பு உன்னைத்தவிர யாரால் புகட்ட முடியும்? அனல் பட்ட வெண்ணை போல என் நெஞ்சம் உன் பாதம் நோக்கி நெகிழ்ந்து வழிகிறது. வேசிமகளே என்ற சொல் உன்னை வேதனை படுத்தவில்லையா ஆலிங்கனா? நீ என் போற்றுதலுக்குரியவள். கொஞ்சம் பொரு. உன்னை அர்ச்சிக்க ஏதேனும் பூக்கள் பறித்து வருகிறேன்.

ஐயோ...இந்த கடவுள் துரோகி ஆலிங்கனா. உன்னை பூசிக்க உகந்த மலர் ஒன்றுமே இவ்வுலகத்தில் படைக்காமல் விட்டிருக்கிறான் பாவி. கடவுளின் முகத்தில் காரி உமிழத்தோன்றுகிறது. நீயே சொல், என் கோபம் நியாயமானது தானே? நான் சூடவும் நீயில்லை.நீ சூடவும் ஒரு பூவில்லை. உன் பூசைக்கும் இங்கே பூக்களில்லை எனும்போது இப்பூமியை படைத்தவன் மேல் கோபம் கொள்ளாது வேறு யாரை சாடட்டும் நான்?

#



23 comments:

  1. வார்த்தைகளின் ஆலிங்கனம், ஆலிங்கனா....!!!

    ReplyDelete
  2. *ஏரியின்
    அடி மடியில் மட்டும் நீர் ஒட்டியிருக்கிறது
    நீ இல்லாத நான் போல


    ம்ம்ம்... கவிதை... கவிதை...

    மூற்றாம் பத்தி
    ரசனை கவிஞனின்
    வரிகள் காட்ச்சியாக ஒளிர்கிறது



    ங்க ...இல்லாத தனிமைகளில்
    கோபமும் கெட்ட வார்த்தையும்
    சில நேரங்களில் தவிர்க்க முடியதில்லை (எல்லாருக்கும் )

    அதிலும்
    சில அமிலத்தன்மையுள்ள வார்த்தைகள்
    உறையாமல் தேங்கியே நிற்கும்


    *நான்
    சூடவும் நீயில்லை
    நீ சூடவும் ஒரு பூவில்லை
    உன் பூசைக்கும் பூக்களில்லை

    கடவுளையும்
    திட்டும் தருணம்
    எனன செய்ய இது .............ம்(:

    ReplyDelete
  3. உக்கிரமாய்த் திட்டுகிற, அர்ச்சிக்கப் பூக்கள்கூட இல்லையென்று அனத்துகிற பேரன்பு... அபாரம் தம்பி. பிரமிக்க வைக்கிறது உன் எழுத்து.

    ReplyDelete
  4. முதலில் தாங்கள் தேர்வு செய்துள்ள பெயருக்கு ஒரு வந்தனம். மிகவும் நன்றாக இருக்கிறது.

    உள்ள உணர்வுகளை, இயலாமையில் எழும் கோபம்.. அதன் விளைவு எல்லாம் உளவியலை அப்படியே படம்.

    இறுதியில்
    நான் சூடவும் நீயில்லை.
    நீ சூடவும் ஒரு பூவில்லை.
    உன் பூசைக்கும் இங்கே பூக்களில்லை எனும்போது இப்பூமியை படைத்தவன் மேல் கோபம் கொள்ளாது வேறு யாரை சாடட்டும் நான்?

    இது உயிர்ப்புள்ள கவிதை வரிகளாய் ஒளிவீசுகிறது. அழகு.. தொடருங்கள். அவ்வப்போது கொஞ்சம் தவறாக நினைக்காமல் நினைவூட்டுங்கள் கண்ணன். என்னால் வலைப்பூக்கள் பக்கமே இப்போதெல்லாம் வர இயல்வதில்லை. அதனால்..

    ReplyDelete
  5. கவிதை நடை! கலக்கல்! வருணணை! கருத்துக் காவிய மாகச் செல்கிறது பதிவு!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  6. அபாரம்... பிரமிக்க வைக்கிறது. படைப்பும், சொல்லிச்சென்ற விதமும்.

    ReplyDelete
  7. அனைத்தும் இந்தப் பதிவில் அடங்கியிருக்கிறது..ஒவ்வொரு வார்த்தையும் உயிர் பெற்றிருக்கிறது. வசன கவிதையாய் வார்த்தைகள் வரிகட்டி நிற்கின்றன.

    "கண் தெரியாத நான்
    உன் கரத்தினைப் பற்றிக்கொண்டு உன்பின்னால் நடந்து அலையவேண்டும்"

    "உன்னைத் திட்டச்சொல்லி தீச்சொற்களை உதடு நோக்கி
    உந்தித் தள்ளுகிறது அடிவயிறு. உதட்டைவிட்டு
    வெளியேற முடியாமல் நெஞ்சுக்கூட்டில் சுற்றிச் சுழல்கிறது கெட்டவார்த்தைகள்"

    மிகவும் பிடித்தவை..

    ReplyDelete
  8. ஒரு மெல்லிசை தழுவியதாய் உண்ரமுடிகிறது.கோடிட்டு சொல்ல நினைத்தால் மொத்த கதையையும் தான் கட் காபி பேஸ்ட் பண்ணி சொல்லனும்.

    // நீரின் போர்வையை உதறி போர்த்தத் தோன்றியது எனக்கு. //

    கற்பனை ரசனையின் உச்சம் இவ்வரிகள்

    தேர்ந்தெடுத்த ஒரு ராகத்தில் லயித்த சுகம் கதையில்.

    ஒரு கவிஞன் காதலனுக்கு உரிய அத்தனை ரசனையும் திறமையும் காதலும் உள்ளது உங்களுக்குள்.

    இப்படி ஒரு காதலன் பொறாமையா இருக்கு ஆலிங்கனாவின் மேல்.கெட்டவார்த்தை முகம் சுளிக்கச் செய்யவில்லை.

    முரட்டுக்காதலா கதை அழகு நயம் சுகம் தெய்வீகம்..........

    ReplyDelete
  9. ஆலிங்கனாவின் மேல் கொண்ட அதீத அன்பின் ஆழம் வார்த்தைகளில் ஊடுருவி செல்வதை பார்க்கமுடிகிறது காவிய கவிஞன் சத்திரியன் அவர்களே ..........அருமை

    ReplyDelete
  10. நண்பா.. மிக அருமை.. வாழ்த்துகள்..

    ReplyDelete
  11. //நான் சூடவும் நீயில்லை.நீ சூடவும் ஒரு பூவில்லை.//

    ஆலிங்கனா மீதான காதல் கண்மாய் தண்ணீர் போல குளிர்ச்சியாய்... காதல் வரிகளை அள்ளி வீசுகிறது...

    அருமை... கவிஞரே... அருமை.

    ReplyDelete
  12. என்ன சொல்ல சத்ரியா...கடவுள்மீதும்,காதலிமீதும் காதல் உங்களுக்கு.செல்லக்கோபம்....இயலாமையால் வெளிப்படும் பெருமூச்சு வார்த்தைகளாகிவிட்டிருக்கிறது.ஆறிக்கொள்வதைத் தவிர....காற்றலையில் கைபிடித்துக்கொள்கிறேன்....காலமும் கடவுளும் துரோகிகள்...நானும் சேர்ந்து திட்டுறன்....!

    ReplyDelete
  13. தாபம் தீர்க்கின்றனவா? மேலும் சேர்க்கின்றனவா? தெரியவில்லை. ஆயினும் வரிகளுக்குள் அடைபட்டிருக்கும் காதலின் பெருமூச்சில் தகித்துக் கொண்டிருக்கிறது கவிதை. பாராட்டுகள் சத்ரியன்.

    ReplyDelete
  14. அருமையாக எழுதப் பட்டுள்ளது. உணர்வுகளைக் கையாண்ட விதமும் அருமை. நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  15. ஆலிங்கனா... பெயரே என்னைத் தழுவிக் கொள்கிறதே...

    ReplyDelete
  16. எங்கேயோ கூட்டிப் போகிறீர்கள் என்பது மட்டும் புரிகிறது. உடன் வருகிறேன்.

    ReplyDelete
  17. பச்சை மஞ்சள் பாவாடை தாவணி கண்முன் கொண்டு வந்தக் காட்சியில் கொஞ்சம் மெய் மறக்கிறேனே?

    ReplyDelete
  18. கவிதைகளை விட இது போன்ற நடையில் முயற்சிக்கலாம். நல்லா வந்துருக்கு.

    ReplyDelete
  19. வார்த்தைகளை தேடித்தேடி கோர்த்து இருக்கிறீர்கள் சிறப்பான நடை பாராட்டுகள்

    ReplyDelete
  20. நயம் சொட்டும் காதல் கதை ஆலிங்கனா.

    ReplyDelete
  21. கைபிடித்துக்கொள்கிறேன்....காலமும் கடவுளும் துரோகிகள்...நானும் சேர்ந்து திட்டுறன்\\\\\\
    ஹேமா ,தப்புத் தப்பு .....காலமும்,கடவுளுமா! இணைப்பதும்,பிரிப்பதும் இல்லவே!
    இருமனங்களின் போக்குத்தான் காரணம்.
    இனிமேல் திட்டவே கூடாது சரியா?

    சத்ரியா! அழகான எழுத்துநடை விபரிக்க நேரமில்லை ....தொடருங்கள.

    ReplyDelete
  22. மனம் கனத்துப் போனது வரிகள் காட்சியை கண் முன் கொண்டு வருகின்றன. உண்மை நிகழ்வைப் போல் நிஜம் வெறுத்து நிற்கிறேன்.
    ஆலிங்கனாவின் மீது அர்த்தமற்ற கோபம் கூட வருகிறது ஏனோ?

    ReplyDelete
  23. ஹேமாவுடன் சேர்ந்து நானும் திட்டுகிறேன், காலமும் காதலும் துரோகிகள்...

    அருமையாக எழுதியுள்ளீர்கள்...

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.