Jun 30, 2009

காதலே...



காதலே

உனக்கு முன்
எதிலும் நான்
தோற்றதில்லை

உனக்கு பின்
தோல்வி எதுவெனத்
தெரிவதில்லை.


Jun 29, 2009

இறந்த இதயம்


இங்கே
ஈக்கள் மொய்த்திருப்பது
என் பிணத்தின் மேல் அல்ல.

ஈன மானுடமே
உங்கள்
இறந்த இதயத்தின் மேல்.


Jun 28, 2009

துரோகி



ஏப்ரல் ஒன்று
முட்டாள் தினம் என்று
உலகம் கொண்டாடுகிறது.

ஏப்ரல் மாதத்தையே
ஒட்டுமொத்த தமிழரின்
முட்டாள் மாதமாக
மாற்றிய முத்தமிழே!

இவ்வாண்டு
முட்டாள் மாதம்
இருவத்தியேழுக்கு
முந்தைய நாள்வரை ...

உனக்கொரு சுகவீனமென்றால்
இறைவனைப் பிரார்த்தித்தேன்
இவனே இன்னும் பல்லாண்டு
எம் தலைவனாய் இருக்க
ஆயுளும் ஆசியும்
வேண்டுமென்று.

அன்றைய...
மூன்று மணிநேர
உண்ணாவிரதத்தின் போதுதான்
உன் முகத்திரை விலகி
உண்மை முகத்தினை
உலகிற்கே உணர்த்தினாய்
உனக்கு நன்றி.

முத்தமிழ்
துரோகியே.


(இணைப்பு:-(27-ஏப்ரல்) தமிழ்நாட்டு மக்கள் சார்பாக ஈழத்தமிழர்களை பாதுகாக்க நான் உண்ணாவிரதம் இருக்கிறேன். நேற்றுவரை மகிழ்ச்சி தரும் வகையில் போர் நிறுத்தம் பற்றிய தகவல் வரும் என்று எதிர்பார்த்திருந்தேன். - தமிழினத் தலைவர், தமிழக முதல்வர், டாக்டர் கலைஞர் திரு. கருணாநிதி அவர்கள். )

Jun 27, 2009

அகதி





வா
வன்னித்
தமிழா
வா

அகதியாய் அல்ல...

நீ
மனிதனாய்
இருந்தவரை
மதிக்கவில்லை
எவனும்.
இனியும் தான் ...!

உன்
தலைமை அழிக்க
கள்ளப்படை அனுப்பிய
குள்ளநரிகளை
அழிக்க ...

வா
அகதியாய் அல்ல.
அரக்கனாய்...!


Jun 25, 2009

...சிரித்தாள்



வாய்விட்டுச் சிரித்தால்
நோய்விட்டுப் போகுமாமே...?!

முதுமொழிகள் சிலநேரங்களில்
முரண் பட்டுப் போவதுண்டு
எனக்கு.

அவள்
வாய்விட்டுச் சிரித்தாள்.

நான்
நோய்ப்பட்டுப்  போனேன்.

( குறிப்பு: நோய் = காதல் )

Jun 24, 2009

சொல்லாமலே...




உன்னிடம்
சொல்லாமல்
விழுங்கியச்
சொற்களெல்லாம்

என்னுள்
கொள்ளாமல்
வழிகிறது

கவிதைகளாய்...!


Jun 22, 2009

மாவீரர் இல்லம்



மாபெரும்
தியாகங்களால்
கட்டப்பட்ட
சிறு குடில் .

மனிதனும்
தெய்வமாவதை
பறை சாற்றும்
கோயில்.

Jun 21, 2009

இந்தியா...?!


வல்லரசாம்
நம்
தாய் நாடு?!

அது
உண்மை என்றால்
தாயே
உன் கையில்
ஏன்
திருவோடு?

(அல்லது)

உன் வாழ்வு
ஏன் தெருவோடு?




Jun 18, 2009

இதயம்



எனது
இதயம்
அமுதசுரபியாகிப் போனது .


அள்ளஅள்ளக்
குறையாமல்
உனது
நினைவுகள்.

Jun 17, 2009

நினைவுகள்



நான்
உயிர்த்தெழுவேன்
என்பதற்கு எந்த
உத்தரவாதமும்
இல்லையென அறிந்தும்,

உன்
நினைவுகளில்

தினம் என்னை
அறைந்துக் கொள்வதில் தான்
பேரானந்தம்

எனக்கு.


Jun 13, 2009

சோதனை


உன்னைப் பற்றி
கவிதை ஒன்று
எழுதக் கேட்டாய்.

பொருள்
விளக்கம்
வேண்டுமானால்
எழுதலாம்.


கவிதைப் பற்றியே
கவிதை
ஒன்று


எப்படி நான்...?



Jun 11, 2009

காதல்




நெடுகிலும்...
பல்லாயிரம் பொய்கள்

நடுநடுவே

ஒன்றிரண்டு மெய்கள்


ஆனாலும்
இனிக்கிறது

காதல்!




என்ன செய்ய?


தினசரி

நாட்குறிப்பில்...

என்னைப் பற்றிய
எல்லாவற்றையும்
தவறாமல்
எழுதி வைக்கிறேன்.

உன்னைப் பற்றிய
எல்லாவற்றையும்
தவிர்த்து.


Jun 8, 2009

மனைவி


உளி வேண்டாம் .

ஒரு
துளி மட்டும்
உன்னிடம்
தந்தால் போதும்.


உயிர்ச்சிலை
செய்து தரும்
அதிசய சிற்பி

நீ !


Jun 7, 2009

மழை



மாதம்
மும்முறை
அல்லாமல் போனாலும்
என்றேனும்
சொல்லாமல்

வரத்தானே செய்யும்.

உன்னையும்
என்னையும்

பழைய நினைவில்
நனைத்து விட்டுப் போக...!