நமக்கு நெருங்கியவர்களுக்கு நிகழும் விபத்துக்களும், மரணங்களும் மனதை பயமுறுத்துவது இயல்புதான். வாழ்வு எப்போதும் மகிழ்ச்சி நிரம்பியதாகவே இருந்துவிட வேண்டும் என்பது மனிதர்கள் எல்லோரது ஏக்கம். ஆனால், அது இயல்புக்கு மாறான ஏக்கம் என்பதைமட்டும் மறந்து போகிறோம். இத்தனை ஆயிரம் காலமும் இந்த உலகம் இப்படித்தான் இயங்கி வந்திருக்கிறது. இனிமேலும் இப்படித்தான் இருக்கும்.
உன் கவலை எனக்கு புரிகிறது. ஏற்ற இறக்கமின்றி இதுவரை எவனது வாழ்வும் இந்த உலகில் இருக்கவில்லை. நாமும் கூட சாதாரண மனிதர்களே. துயரங்களே எனக்கு வேண்டாம் என்றால், அவன் வாழ உகந்த இடம் இந்த உலகம் அல்ல என்பதை நீ உணர வேண்டும்.
உதவி தேவைப்படும் எல்லா நேரத்திலும் உறவினர்கள் அனைவரும் உதவ வேண்டும் என்பது நமது விருப்பம் மட்டுமே! அவர்கள் உதவியே ஆகவேண்டுமென்ற கட்டாயம் எதுவுமில்லை.
நண்பர்களையும், உறவினர்களையும் அடையாளம் காட்டும் நேரம் , இது போன்ற சம்பவங்கள் தான். அதற்காக நிகழ்ந்த இந்த சம்பவத்திற்கு நன்றி சொல்லி விட்டு, இனி நடத்த வேண்டியதைச் செய்ய உன்னைத் தயார் படுத்திக்கொள்.
தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கும் போது சொன்னாயே, உறவினர்கள் சுற்றி நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கையில் யாரோ ஒரு வழி போக்கன் வந்துதவினான் என்று.அவன் வழிப்போக்கன் இல்லை, ”அவன் தான் மனிதன்” . (ஒருவேளை அவனும் கூட உதவாமல் போயிருந்தால் அவன் மேல் உனக்கு எந்த கோபமும் வந்திருக்க வாய்ப்பில்லை தானே? அப்படி நினைத்துக்கொள். எல்லாம் சரியாகப் போய்விடும். )
ஆத்திரமான நேரத்தில் கத்தி தீர்ப்பதை விட, அமைதியாய் இருந்துவிடு. இத்தனை ஆண்டுகளில் எத்தனையோ துயர்களைக் கடக்கவில்லையா? இதுவும் கடந்து போகும்.பிரச்சினைகள் நமக்கு வேண்டாம் என்றாலும், பிரச்சினைகளுக்கு நாம் வேண்டியதாய் இருக்கிறது.அது தீரும். வேறொன்று வரும். இந்த சுழற்சி இருந்துக்கொண்டே தான் இருக்கும்.
உன் ஆத்திரம் நியாயமானதாக இருக்கலாம்...! இதோ என் எழுத்துக்களில் அதற்கான தீர்வு இருக்கலாம்....!
தாய் இப்போது குழந்தையாய் இருக்கிறாள் என்றாய். கவலையை விடு. வளர்த்துக் கொள்ளலாம்.இத்தனைக்கோடி ஆண்டுகளில் தாய்க்கு தாயாகிய வாய்ப்பு இதுவரை யாருக்கும் வாய்க்கவே இல்லை. உண்மையில் நீ பாக்கியவதி.