Showing posts with label படைப்பு. Show all posts
Showing posts with label படைப்பு. Show all posts

Oct 12, 2011

விருது


விருதுகள்
மலர்கள் போல.

சில
பூஜையறைக்குப் போகின்றன.

பல
கல்லறைக்குப் போகின்றன.

மனுகுலத்திற்கு
அரியதைச் செய்தவர்
பூஜையறை.

நடுவருக்கு
உரியதைச் செய்தவன்
கல்லறை.

விருதுகள்
மலர்கள் போல!

***

பி.கு.:

சிங்கப்பூர் கடற்கரைச்சாலைக் கவிமாலை அமைப்பு கடந்த மாதம் (செப்டம்பர்)  ”விருது” என்னும் தலைப்பில் நடத்திய கவிதைப் போட்டியில் பரிசு பெற்ற கவிதை.


Oct 8, 2011

தீ




ஈரைந்து புலன்கள்
இருளில் கனல்கிறது

ஒளி தராமல்
ஒலி தரும்

‘இதை’

போய்
தீ
எனச் சொல்கிறார்களே!

*

Oct 6, 2011

கார்காலம்


இருண்டு
திரண்ட
நீரிழைப்பொதி
அவிழ்ந்து சிதறியது.

நொடியில்
முளைத்து
நடை பயில்கின்றன

வண்ணவண்ணக்
காளான்கள்!

Sep 26, 2011

எதிரி



எதிரிலும்,சுற்றிலும்
எங்கிலும் இல்லை

உன்னுள் தேடு
கண்டு அழி
உன்னையறிதலில்
உள்ளது உலகம்.

வெளியில் உலவும்
எதிரியே - உன்
வெற்றிகளின் ஆணிவேர்
அவனை அப்படியே
இருக்க விடு...!

எச்சரிக்கையாய்
இருக்க வேண்டியது
நண்பர்களாய்
நீ
நம்பிக் கொண்டிருப்பவர்களிடமே!

ஏனெனில்,
நம்பிக்கை துரோகங்களே
நம்
வரலாறு முழுதும்
வலம் வந்தபடி இருக்கிறது.

வரலாறும் அதை
சளைக்காமல் சுமந்தபடி 
காலத்தைக் கடக்கிறது.

Sep 2, 2011

’தோச’ பக்தி


செவ்வாய் தோசமுள்ளவன்
செவ்வாய் தோசமுள்ள
பெண்ணை தான்
மணமுடிக்க வேண்டுமாமே!

ஜோதிடவாதிகளே,

காதல் தோசமுள்ள
பெண்னொருத்தியைக்
கண்டு சொல்லுங்களேன்.
எனக்கு!

***

இறைவனை
இரைஞ்சும் கவிதைகளால்
உலகக் கவிஞனாகி விட்டான்
உமர்கயாம்.

உன்னை
இரைஞ்சும் கவிதைகள் எழுதும்
என்னை
என்ன செய்வாய்
காதலே!




Aug 10, 2011

யுத்தம் செய்


எண்ணிக்கையில்
ஏழு புள்ளி இரண்டு கோடியை
எட்டி நிற்கும்
என் நாட்டுத் தமிழா!

’இனப்பெருமை என்பது
இனப்பெருக்கம்
செய்வது மட்டுமல்ல’-என்பதை
எப்போது உணரப்போகிறாய்?

இருபது மைல் தொலைவில்
இன மலர்ச்சிப் போராட்டம்
உச்சத்தில் இருந்த போதும்
இன மானம் உணர்ந்து,

சிறு துரும்பையும்
அசைக்க முனையாத நீயா
ஈராயிரத்து இருபதில்
இந்தியாவை
வல்லரசாக்கி விடப் போகிறாய்?

விழி நீரைத் துடைக்க
உனை நோக்கி நீண்ட
கரங்களின் விரல்களே
உன்
சுதந்திரத்தின் கண்களைக்
குருடாக்கிய கதையை
அறியாமல் கிடக்கிறாயே!

தனியொருவனால் ஒன்றும்
கிழிக்க முடியாமல் போகலாம்
ஒத்தக் கருத்துடையோருடன்
மெத்தக் கலந்து பேசி
அணி திரண்டு
யுத்தம் புரிய வேண்டாமடா நீ

உரக்க சத்தமிட்டாலே போதும்
உடைந்த சிலம்பின்
முத்துப்பரல்கள் போல்
சிதறி ஓடுமடா
எதிரிகளின் கூலிப்படையும்,
கூட்டுப் படையும்!

இலவசத்திற்கே பழகிப்போன - என்
இளையச் சமுதாயமே
‘இனச் சுதந்திரம்’
இலவசமாய்
எங்கும் கிடைக்காதப்பா!

நமக்கான
உரிமைகளை ஒன்று
கேட்டுப் பெற வேண்டும்.
மறுக்கப்படுமாயின்
உதைத்து தான் பெற வேண்டும்!

***
பின் குறிப்பு:-

கவிஞனின் சுட்டு விரல் என்னையும் சுட்டுகிறது.



Jul 30, 2011

நீயே சொல் - 08



*

ஒரு 
சொல் யோசிக்க
நீ
ஒதுக்கும்
நொடிப்பொழுதையும்
வீணாடிக்காமல்,

இதழ் மீது
சாய்ந்து
ஓய்வெடுக்கும்
உன்
எழுது கோலாய்
இருந்திருக்கலாம்
என் மீசை.


***


இவ்வுலகை
எழுத
இங்கே
அநேகம் பேர்
அவதரித்திருக்கிறார்கள்

உன்னை
எழுத 
உயிரூட்டப் பட்டவன்
நான்
ஒருவன் மட்டுமே!

வேறெதுவும்
எழுத வராதா
என்பவர்களுக்கு
வேறென்ன
சொல்லட்டும்
 நீயே சொல் ...?

Jul 26, 2011

நிலாச்சோறு



 நீ 
தயாராகவே தான்
இருக்கிறாய்.

உன்னைக் காட்டி
சோறூட்ட
தாயவளுக்கு தான்
நேரமில்லை.

***

Jul 20, 2011

கரையாதச் சொற்கள்-1



தினமும்
வந்து போகிறேன்
என்றோ இட்ட
கோலம்
பொலிவற்று கிடக்கிறது
வாசலில்...

நீ
தேடும் நாளில்
நான்
வந்து வந்து போனதற்கான
வடுக்கள்
வாசலில் நிறைந்திருக்கும்

அந்த
கோலம் போல!

*


அலைகளற்ற நீரில்
கரையிலிருந்து குதிக்கும்
தவளையைப் போல
கவலையற்ற மனதில்
காத்திருந்து குதித்து விடுகிறது

உன்
நினைவுகள்...!

*

Jul 5, 2011

குழப்ப தெய்வம்



காற்றுக்கு அசையும்
நாற்றினைப் போல்
உன்
கூற்றுக்கு அசைந்தபடியே


என் ஜீவன்!

*
*
*
 நேர்த்திக்கடன் செலுத்த
கோயிலுக்குப் புறப்பட்டோம்.
கூடவே 
உன் நினைவும்...

குழப்பத்தில்
குலதெய்வம்!


Jun 21, 2011

ஆதலால் என் கணவா...




என்
உயிர் ணவனே,

நம் ஊர் பற்றி
உணராதவரா நீர்?
கல்லடி கூட தாங்கிக் கொள்வேன்.
ஊரார் 
சொல்லடியை ...

மழலையொன்று
இல்லையென்று
மலடி என்றென்னை ...

எழுத்துக்கள் 
அழியுமென்று
அழுகையை நிறுத்திவிட்டு...

இனியும்,
தொலைவில் இருந்தே
தொலைப்பேசி வழி என்னை
போற்றுவதை விட்டுத் தொலை!

ஊருக்கு விரைந்து வந்து...
உன் நெற்றிக்கண்ணை
என் நெற்றிப் பொட்டில் பதித்திடு .
போர்வைக்குள் வேர்வை நீரில் 
என்னை வேக வை.

உன் உதிரச் சூட்டால்
என் உடலை அதிரச் செய்.
நம் உயிர்ச் செல்லால்
என் கருப்பையை
கனக்கச் செய் .

பத்தாம் மாதம் ...
மூச்சடக்கி மூச்சுத்திணறி
முகம் சுளிக்கும்படி
அசிங்கச் சொற்களால் உன்னை
அர்ச்சனை செய்தபடி
கருப்பையின் 
உள்திரையோடு
 உரித்து 
உன்
 கையில் தருவேன்.

தொப்புள் கொடியை நீயே அறு
தாய்மையின் புனிதம் நீயாய் உணர்.

இப்போது அங்கே ...
என்னை
 நினை.
உன்னை அறி.

வருவாய் விரைவாய்
உன் வெளிநாட்டு
வருவாய் மறந்து.

நம் 
எதிர்க்காலம்

வரவாய் வரட்டும்
என்னுள்ளிருந்து...!

ஆதலால்,
என் கணவா...வா!







குறிப்பு:- இது ஒரு மீள்பதிவு. 

Jun 7, 2011

என்ன செய்யப் போகிறாய்?



தாயூட்டும் இரைக்காக
வாய் பிளக்கும் 
குருவிக் குஞ்சுகளைப் போல்

நீயூட்டும்
முத்தத்திற்காக
நானும்...!

*



இலை நுனியைப்
பிரிய மறுக்கும்
மழைத் துளியாய்

பயண வழியில்
பழகிய
 உன் நினைவும்..!

*

May 18, 2011

ஈழத்தைக் கொன்றவன்



இன்று மே 18.

உலகிலேயே இறையாண்மை மிக்க ஒரு ”விடுதலை இயக்கம்” சிதைக்கப்பட்ட வரலாற்றுக் கறுப்பு நாள்.ஒரு இனவெறியன் பல்லாயிரம் தமிழர்களின் உயிரை ஒரே இடத்தில் பறித்த நாள்.

அந்த இன அழிப்பை நிச்சயமாகத் தடுத்திருக்க முடியும். அண்டை நாடான “இந்தியா” நினைத்திருந்தால்!. அந்தப் போரை உக்கிரமாக  நிகழ்த்தியதே, இந்தியா அரசுதான் என்னும் போது அவர்களா போர் நிறுத்தத்தை வலியுறுத்தியிருப்பார்கள்..!?

ஈழத்தமிழர்கள் விசயத்தில் இந்தியா ஏன் அப்படி நடந்துக்கொண்டது என்ற பாமரக் கேள்விக்கு பழுத்த அறிஞர்கள் கூறிய சப்பைக் காரணம் முன்னாள் பாரதப்பிரதமர் ராஜிவ்காந்தியை விடுதலைப் புலிகள் படுகொலைச் செய்தார்கள் என்பதே!. (2020-ஆம் ஆண்டில் வல்லரசா(யிடுமா?)கும் ஒரு தேசத்தின் தொலைநோக்குப் பார்வையைக் கவனியுங்கள் என் சகோதரர்களே!)

உண்மையிலேயே விடுதலைப்புலிகள் மட்டுமே ராஜிவ் கொலைக்கு காரணமா? இந்திய அரசியலை மட்டும் கவனித்துக் கொண்டிருந்த ராஜீவை அவரது வீடு தேடி வந்து பொழுதுபோக்கிற்காகக் கொன்றார்களா?

ராஜீவின் மரணத்திற்குக் காரணிகள் எவையென அகழ்ந்தாராயப்பட்ட அறிக்கைகளின் படி பார்த்தால் , அகால மரணத்தை அவரேதான் தாம்பூலம் வைத்து அழைத்திருக்கிறார் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

1. ஈழ விடுதலையின் அவசியத்தை ‘இந்திரா’ உணர்ந்திருந்த அளவிற்கு ராஜீவ்   ஏன் புரிந்திருக்கவில்லை?

2.இலங்கையின் அரசியல் நிலைமைப் புரியாமல், ஜெயவர்த்தனே விரித்த வஞ்சக வலையில் வீழ்ந்து, ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தைச் சீர்குலைத்தது யார் தவறு?

3.அமைதிப்படை எனும் பெயரில் அரக்கர்களை அனுப்பி தமிழ்ப்பெண்களின் தாலியறுப்பையும், கற்பு பறிப்பையும் நிகழ்த்த காரணம் யார்?

4. விடுதலைப்புலிகளை ஒரே வாரத்தில் நசுக்கிவிடலாம் என்று ஆருடம் சொன்னவனின்  பேச்சைக்கேட்டு, (அமைதி ஏற்படுத்த போனவர்களா இவர்கள்? ) 2 ஆண்டுகள் 7 மாதம் போரிட்டு தோல்வியைத் தோளில் போட்டுக்கொண்டு ராஜிவ்வும், இந்திய அமைதிப்படையும் மூக்கை உடைத்துக்கொண்டதற்கு காரணம் யார்? 

(இந்த போரின் முடிவில் 1500 இராணுவ வீரர்களை இந்தியப்படை இழந்திருந்தது)

5. இவைகளை எல்லாம் தவிர்த்து, தனது அரசாங்கத்தில் வாழும் தமிழகத் தமிழர்களின் வரிப்பணத்தையேக் கொண்டு ஈழத்தமிழனை அழிக்க, இலங்கை இனவெறியனுக்கு உதவ அமைதிப்படையை அனுப்பி வைக்கும் அதிகாரத்தை ராஜீவுக்கு வழங்கியது யார்.? 

(ஒரு இந்தியக் குடிமகன் என்னும் அடிப்படையில் கேள்வி கேட்கும் உரிமை எனக்கும் உள்ளது இந்திய அரசே!) 

-இப்படி ஒட்டுமொத்த குற்றங்களுக்கும் “தானே” தானைத்தலைவனாக இருந்த  ராஜிவ்காந்தியினுடைய நடவடிக்கைகளின் மீது வெறுப்புக்கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகள் , தங்களது விடுதலைப்போராட்டத்திற்கு இவர் தலைவலியாக இருப்பார் என்னும் தொலைநோக்குக் கணிப்பின் இறுதி முடிவாகத்தான் ராஜீவின் படுகொலையை நிகழ்ந்தியிருக்கிறார்கள். (சுருங்கச் சொல்வதென்றால் “தன்வினை தன்னைச்சுடும்” என்னும் பழமொழி ராஜீவிற்கு சாலப்பொருந்தியிருக்கிறது.)

ராஜீவின் மரணத்திற்குப் பின் , அவரது கொலைக்கான காரணிகளைக் கண்டறியும் பணியில் ஈடுபட்ட சிபிஐ அதிகாரிகள், விசாரணைக்கமிஷன் அதிகாரிகள், ‘ரா’ (R&AW) உளவுத்துறை அதிகாரிகள் தத்தமது பதவிகளையும், பணிகளையும் தற்காத்துக்கொள்ள மொத்தப்பழியையும் தூக்கி “விடுதலைப் புலிகளின்” தலையில் கட்டிவிட்டு தப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவின் பாதுகாப்பிற்காக இயங்கும் அத்தனை பாதுகாப்பு அதிகாரிகளிடமும் ஒரு கேள்வி கேட்கிறேன். 

“ இலங்கையில் ஜெ.பி.ஜெயவர்த்தனேவுடனான எதோவொரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டு வெளியில் வந்துக்கொண்டிருந்த ராஜிவ் காந்தியை ஒரு படை வீரன் துப்பாக்கியால் அடித்தானே, அந்தச் சம்பவத்தில் ஒருவேளை ராஜிவ் உயிரிழந்திருந்தால் இந்த இறையாண்மை மிக்க இந்திய அரசு, இலங்கை அரசின்மேல் போர் தொடுத்துவிட்டிருக்குமா?  

மிஞ்சிமிஞ்சிப் போனால் பொருளாதாரத்தடை விதித்திருக்குமேயொழிய ,

ஒரு கடைநிலை சிங்களவனின் தொடையிடுக்கில் இருக்கும் ஒரு ”மயிரை”யும் பிடுங்க முடிந்திருக்காது. 

இதோ ராஜிவ்காந்தி சிங்கள அரசிற்கு உதவியதற்கான வெகுமதியாக இலங்கையில் உள்ள ஒரு தேசியக்கட்சியின் பொதுச்செயலாளனின் கூற்று:

(சூழ்ச்சியான ஒப்பந்தத்தின் மூலம் இந்திய அதிகாரத்தை இலங்கை மீது திணித்த முன்னாள் பிரதமா ராஜீவ் காந்தியை துப்பாக்கி கட்டையால் தாக்கி தனது எதிர்ப்பை; தெரிவித்த இராணுவ வீரனே உண்மையான தேசப்பற்றாளன் என்று ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.Posted 16 July 2008 - 03:41 AM - நன்றி யாழ் இணைய இதழ்)


இதோ ராஜிவ்காந்தியைத் துப்பாக்கியால் தாக்கும் படக்காட்சியை இங்கு காணலாம்.
http://www.youtube.com/watch?v=b0ikJgypnzE&feature=related


இந்தக் கட்டுரை எழுத உதவிய நூல்கள் :.


 1.”விடுதலைப்புலிகள்” -ஆசிரியர் மருதன்
 2.”பிரபாகரன் - ஒரு வாழ்க்கை” - ஆசிரியர் :செல்லமுத்து குப்புசாமி
 3.”ராஜிவ் கொலை வழக்கு”- ஆசிரியர் : ரகோத்தமன்
 4.”நிழல் வீரர்கள்” - ஆசிரியர் : பி.ராமன்
 5.”யாழ் இணைய இதழ்.”


இதோ இந்தச் சுட்டி தரும் தகவல்களும் உங்களுக்கு உதவும்.
http://www.writerpara.com/paper/?p=944

....இது தொடர்பில் இன்னும் எழுதுவேன்.....



May 5, 2011

காதல் ராமாயணம்




நான் ’அகலிகன்’
நீ ’ராமனி’

உன் கண்களால் 
நெஞ்சில் மிதித்தாய்.

உயிர்ப்பெற்றது 
நம் காதல்.

*


’பூவு...பூவேய்’ - எனக் 
கூவி போகிறாள் 
பூக்காரி.

கருப்பு மின்னலாய்
என்னில் மறைகிறது,
பூ கேட்கும்
உன் பின்னல்.


*

Mar 6, 2011

சிப்பிக்குள் நிலா



சிப்பிக்குள்
முத்து பிறப்பதில்
வியப்பொன்றும் இல்லைதான்

நிலா பிறந்தால்...?

ஆம்!
’நிலா’ பெற்றெடுத்த
சிப்பி என்
அத்தை.

***
கவிதை ப்ரியன் நான்
என்பதை
கடவுளும் அறிந்திருக்கிறான்.
படித்து ரசிக்க
என்னுலகில்
உன்னையும்
படைத்திருக்கிறானே!

***



உனக்கு
கடன் பட்டுக் கிடக்கிறது
என் மொழி

எழுத மறந்த
என் விரல்களை
மீண்டும்
எழுதத் தூண்டியதால்......!


***


Feb 27, 2011

தங்கைக்கு....


                  நமக்கு நெருங்கியவர்களுக்கு நிகழும் விபத்துக்களும், மரணங்களும் மனதை பயமுறுத்துவது இயல்புதான். வாழ்வு எப்போதும் மகிழ்ச்சி நிரம்பியதாகவே இருந்துவிட வேண்டும் என்பது மனிதர்கள் எல்லோரது ஏக்கம். ஆனால், அது இயல்புக்கு மாறான ஏக்கம் என்பதைமட்டும் மறந்து போகிறோம். இத்தனை ஆயிரம் காலமும் இந்த உலகம் இப்படித்தான் இயங்கி வந்திருக்கிறது. இனிமேலும் இப்படித்தான் இருக்கும்.

                  உன் கவலை எனக்கு புரிகிறது. ஏற்ற இறக்கமின்றி இதுவரை எவனது வாழ்வும் இந்த உலகில் இருக்கவில்லை. நாமும் கூட சாதாரண மனிதர்களே. துயரங்களே எனக்கு வேண்டாம் என்றால்,  அவன் வாழ உகந்த இடம் இந்த உலகம் அல்ல என்பதை நீ உணர வேண்டும்.

                   உதவி தேவைப்படும் எல்லா நேரத்திலும் உறவினர்கள் அனைவரும் உதவ வேண்டும் என்பது நமது விருப்பம் மட்டுமே! அவர்கள் உதவியே ஆகவேண்டுமென்ற கட்டாயம் எதுவுமில்லை.

                    நண்பர்களையும், உறவினர்களையும் அடையாளம் காட்டும் நேரம் , இது போன்ற சம்பவங்கள் தான். அதற்காக நிகழ்ந்த இந்த சம்பவத்திற்கு நன்றி சொல்லி விட்டு, இனி நடத்த வேண்டியதைச் செய்ய உன்னைத் தயார் படுத்திக்கொள்.

                  தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கும் போது சொன்னாயே, உறவினர்கள் சுற்றி நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கையில் யாரோ ஒரு வழி போக்கன் வந்துதவினான் என்று.அவன் வழிப்போக்கன் இல்லை, ”அவன் தான் மனிதன்” . (ஒருவேளை அவனும் கூட உதவாமல் போயிருந்தால் அவன் மேல் உனக்கு எந்த கோபமும் வந்திருக்க வாய்ப்பில்லை தானே? அப்படி நினைத்துக்கொள். எல்லாம் சரியாகப் போய்விடும். )

                         ஆத்திரமான நேரத்தில் கத்தி தீர்ப்பதை விட, அமைதியாய் இருந்துவிடு. இத்தனை ஆண்டுகளில் எத்தனையோ துயர்களைக் கடக்கவில்லையா? இதுவும் கடந்து போகும்.பிரச்சினைகள் நமக்கு வேண்டாம் என்றாலும், பிரச்சினைகளுக்கு நாம் வேண்டியதாய் இருக்கிறது.அது தீரும். வேறொன்று வரும். இந்த சுழற்சி இருந்துக்கொண்டே தான் இருக்கும்.

                         உன் ஆத்திரம் நியாயமானதாக இருக்கலாம்...! இதோ என் எழுத்துக்களில் அதற்கான தீர்வு இருக்கலாம்....!

                         தாய் இப்போது குழந்தையாய் இருக்கிறாள் என்றாய். கவலையை விடு. வளர்த்துக் கொள்ளலாம்.இத்தனைக்கோடி ஆண்டுகளில்  தாய்க்கு தாயாகிய வாய்ப்பு இதுவரை யாருக்கும் வாய்க்கவே இல்லை. உண்மையில் நீ பாக்கியவதி.


Feb 10, 2011

தலையாய தேவதை



நதிப்படுகையில்
புதைந்து
மிதந்திருக்கும்
கூழாங்கற்கள் போல்

என்
மதிப்படுகையில்
தேவதைகள்
நிறைந்திருக்கிறார்கள்.

******

வரங்களை
வழங்கி விட்டு
வாழ்க்கையை
அபகரித்துக் கொள்வதில்
தேவதைகளுக்கு
நிகர்
தேவதைகளே.


******

தீராக்களைப்பில்
என்னைக் கண்டு
அருந்த
ஒரு
கோப்பை நீரும்,

அசை போட
அளவற்ற
நினைவுகளையும்
தந்து போனவள் தான்

தேவதைகளில்
எல்லாம்
தலையாய தேவதையாய்
இருக்கிறாள்.


Jan 22, 2011

பொய் சொல்ல போறேன்


இதய
வடிவத்திற்கு
எடுத்துக்காட்டு
கேட்டார் ஆசிரியர்.

உன்னைச் சொன்னேன்.

அவர் கையில் பிரம்பு முளைத்தது.
உன் கண்ணில் நீர் உடைந்தது.

பாவம்.
அவருக்கெப்படி தெரியும்
என் இதயம்
உன்
வடிவில் இருப்பது.!

******



’என்
இதயமில்லை நீ’ என்றதற்கு
இரண்டு நாளாய்
மெளனமாய் இருக்கிறாய் கருப்பழகி.

இதயம்
ஒரு நாள்
இயங்க மறுக்கும்.
அப்போதும்
எனை காக்க
இயங்கிக் கொண்டிருப்பாயடி நீ...!







Dec 16, 2010

முள்ளிடைப் பூக்கள்



இதழ்க்கிளை
இடுக்கில்
எச்சில் ஊறவைக்கும்

மகரந்தகுழல்..!



~~~~~~~~~~~ *~~~~~~~~~~~


உன்
சொல்லிடை
சிரிப்பினை
நினைவூட்டும்

இம்
முள்ளிடைப் பூக்கள்!

Oct 4, 2010

புன்னகை உனது; புரிதல் எனது-1



புறாக்களின் ஜீவாதாரத்திற்கு
பிடிப்பிடியாய்
அரிசியை அள்ளி வீசும் நீ

எனது ஜீவாதாரத்திற்கு
ஒன்றிரண்டு
புன்னகையையும் வீசி விட்டு
போகிறாய்..!

***

பறந்து விடாமலும்
இறந்து விடாமலும்
உள்ளங்கைக்குள்
பொத்திப் பாதுகாக்கும்
பட்டாம்பூச்சியைப்போல்

உள்ளத்துக்குள்
உன்
புன்னகைகளையும்...!

***

அகராதிப் புத்தகங்களில்
சல்லடையாய்
சலைத்துப் பார்த்தும்
அகப்பட மறுக்கின்றன

உன்னிதழ்
உதிர்க்கும்
புன்னகைக்கான பொருள்..!