கல்லூரிக்குப் போயிருப்பதாகவே
என்னுள் இருக்கிறாய்.
காலன் வீட்டிற்குப் போய்விட்டதாய்
எப்படி நான் ஏற்றுக்கொள்ள?
உன் சிதைக்கு "தீ" மூட்டி
நான் அழுதுக்கொண்டிருக்கையில்
நம் பகை சிரித்து மகிழ்ந்ததை
எப்படி உன்னிடம் சொல்வேன்?
வேலையிருக்கு விரைந்தெழுடா என்றால்
அதிகாலை குளிருதுடா என்பாயே,
வெந்நீர் எடுத்து வைத்து
குளிக்கவாடா என்றழைத்தால்
சுடுகிறதென்று குளிர் நீர் கேட்பாயே
அன்று மட்டும் ,
அதிகாலை என்றும் பாராமல்
கொழுந்து விட்டெறிந்தகட்டைக் குவியலுக்குள்
அமைதியாய் எப்படிடா படுத்திருந்தாய் ?
நம்மைப் பெற்றெடுத்த
அம்மா சொல்கிறாள்:
உன்னைச் சுமந்த கருப்பை
மறந்து போனதாம்.
உன்னைச் சுமக்கும் நினைப்பை
மறக்க முடியவில்லையாம் .
நீ
வாங்கவிருந்த பட்டங்களுக்கும்
சூடவிருந்த வெற்றிகளுக்கும்
மாலைச் சூட்ட வேண்டிய கரங்கள்
உன் நிழல் அடைத்திருக்கும்
மரச் சட்டங்களுக்கு
மலர்கள் குவித்து........,
எங்கள்
பதினெட்டு வயது கனவை
தீயின் நாவிற்கு உணவாய்
கொடுத்துவிட்ட
ஓராண்டு நினைவில்
அழுகிறோம்.
எங்கிருக்கிறாய்
உடன் பிறப்பே?
ஏங்கித் தவிக்கிறோமே
ஏதும் உணராமல் இருப்பாயோ?
எனக்கு மகனாகப் பிறப்பாயோ?