Aug 16, 2010

சலவைக்கல் ரோஜா

சேற்றில் அன்றி - யமுனை
ஆற்றில் முளைத்த
வெண் தாமரை

சிதை புதைத்த இடத்தில்
புல் முளைத்திருந்தால்
உலகு அதிசயிக்க
ஒன்றுமில்லாமல் போயிருக்கும்.
”சலவைக்கல் ரோஜா” முளைத்தால்
உலகம் அதிசயிக்காமல்
வேறென்ன செய்யும் ?

முப்பத்தெட்டு வயதில் உதிர்ந்த
முள்ளில்லாத ரோஜாவிற்கு
முகலாய ராஜா
நினைவுச் சின்னம் எழுப்ப
நினைத்த தருணம்,
யாருக்கு உதித்திருக்கும்
நாளைய உலகின்
காதல் சின்னம் இதுவென்று ?

சுவாசம் இன்றி
வாழ முடியாதென்றால்
முன்னூற்றைம்பது
ஆண்டுகள் கடந்தும்
மும்தாஜ் இன்னும்
வாழ்ந்துக் கொண்டிருப்பது எப்படி?



புகைப்படம்:- நன்றி google.

Aug 15, 2010

மிட்டாய் பண்டிகை



கஸ்ட் 15 , "மிட்டாய் பண்டிகை ".


இந்தியாவின் சுதந்திரதினம் கிராமங்களில் இப்படியாகத்தான் புரிந்துக் கொள்ளப்படுகிறது. பள்ளிகளில் கூட சுதந்திரம் பற்றிய முழுமையான உணர்வை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கத் தவறியிருக்கும் நம் கல்வி முறையை என்னச் சொல்லி பாராட்டுவது?

இந்தப் புரிதலில் எந்த தவறும் இருப்பதாய் எனக்குத் தெரியவில்லை.64 ஆண்டுகளுக்கு முன் சுதந்திரம் கொடுக்கப் பட்டிருக்கிறதேயொழிய , இதுவரை நம்மில் யாரும் அதைப் பெற்றுக்கொள்ளவில்லை என்பதே நிதர்சனமான உண்மை என்பதை எத்தனைப்பேர் ஒத்துக்கொள்வீர்கள்?

சுதந்திரம் என்றால் என்ன என்பதே ,பெரும்பாலானோருக்கு இன்னும் சரியாகப் புரியவில்லை. இதை உணர்த்தாமல் விட்டது யாருடைய தவறு? அல்லது மக்கள் உணராமல் போனதற்கு யார் காரணம்?

//இந்தியாவிற்கு காந்தியடிகள் வந்த பிறகு நேரு, ஜின்னாஹ் மற்றும் இதர தலைவர்கள் சேர்ந்து நடத்தும் மாநாட்டில் கலந்துகொண்டார். அதில் அவர் ஆற்றிய உரையில்..


"நீங்கள் சில நூறு வக்கீல்கள் சேர்ந்து கொண்டு தில்லியிலும், மும்பையிலும் நாட்டு விடுதலை பற்றியும் மக்களின் எழுச்சி பற்றியும் பேசுகிறீர்கள். இதனால் என்ன பயன்? நீங்கள் பேச வேண்டியது 700000 கிராமங்களில், நாட்டுபுறங்களில் உள்ள சாமான்யர்களிடம் தான். அவர்களை நாம் கண்டுகொள்ளாமல் எந்தப் பயனும் இல்லை.."//


ஆக, எந்த ஒரு நிகழ்வின் சாராம்சமும், அதன் முக்கியத்துவமும் கிராம மக்களிடம் கொண்டுபோய் சேர்த்து அவர்களை உணரச் செய்யவேண்டும்.இன்றையத் தலைவர்களிடம் அந்த முனைப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு நம் தேசத்தின் தலையிடமே பதில் இருக்கப்போவதில்லை.

முக்கியமான சிலவற்றைப் பற்றி மக்கள் அறிந்து கொள்ளக்கூடாது என்னும் விசயத்தில் நம் அரசாங்கம் மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்கிறது. காரணம் மிகமிக எளிமையான ஒன்று. மக்கள் உண்மைகளை உணர்ந்துக் கொண்டால், தம்மால் அரசியல் பிழைப்பு நடத்த முடியாது என்பதை ஆளும் / எதிக்கட்சி அரசியல் வியாதிகள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள்.

நமக்கும் கூட, இலவச வேட்டி, இலவச சேலை, இலவச டிவி, கியாஸ் அடுப்பு.... இன்னும் இத்யாதி இத்யாதிகள்...கிடைத்தால் போதுமென்றும், ஒரு நல்ல வேலை, கை நிறைய சம்பளம் , வீடு .... இவைகள் மட்டும் போதுமென்று இருந்து விடுகிறோமே தவிர , சமூகம் பற்றிய எந்த அக்கறையும் இல்லை. ஏனென்றால், நாம் சுயமாக சிந்திப்பதையே படிப்படியாய் இழந்துக்கொண்டு வருகிறோம்.

ஆமாம், உழைப்பின் களைப்பை போக்க நாட வேண்டிய திரைப்படம், தொலைக்கட்சி நிகழ்ச்சிகளுக்கு அடிமையாகிக் கிடக்கிறோம். யாரோ ஒருவனின் படைப்பைப் பற்றியும், சிந்தனையைப் பற்றியும், நடிப்பைப் பற்றியும் சிலாகித்து பேசி, பொழுதைக் கழிப்பதில் உள்ள மகிழ்ச்சி வேறெதிலும் கிடைப்பதில்லை என்ற மனப்போக்கில் வாழ்நாளைக் கடத்திக் கொண்டிருக்கிறோம்.

நாமாய் ஒன்றை சிந்திக்காத வரையில், இனப்பற்றும், மொழிபற்றும், தேசப்பற்றும் ... எங்கிருந்து வந்து நம்மில் நங்கூரமிட்டு விடப் போகிறது?

முன்பொரு நாளில் சுதந்திரம் என்றால் என்ன என்பதை உணர்ந்து, அதற்காக போராடி , இன்னுயிர் நீத்த தியாகிகளுக்கு என் தலை தாழ்த்தி வணக்கமும் , நன்றியும் உரித்தாக்கிக் கொள்கிறேன்.

Aug 12, 2010

உசுரே போகுது





சூரியன்
ஒளியால்
நீரை
உறிஞ்சுவது போல்

கூரிய
விழியால்
என்னுயிரை
நீயும்.....!


*** *** ***

Aug 10, 2010

நட்பின்றி இயங்காது உலகு



ஜூன் 16 , 2010 அன்று 40 நாட்கள் விடுப்பில் தாய்த்தமிழகத்திற்குச் சென்றேன். சென்னை விமான நிலையத்தில் என்னை வரவேற்க (எனது தங்கையின் கணவர் வர சற்று தாமதமாகி விட்டது) நண்பர் கயிலை மு.வேடியப்பன் அவர்கள் வரவிருந்தார். தவிர்க்கவே முடியாத காரணத்தால் அவராலும் வரமுடியாமல் போகவே, அவருடைய நண்பர் ஒருவரை சுமோ வாகனத்துடன் அனுப்பி, அவரது “ டிஸ்கவரி புக் பேலஸ்”-க்கு அழைத்துப்போக ஏற்பாடு செய்திருந்தார்.

காலை உணவாக பூரி வாங்கி வைத்து காத்திருந்தார். முதன்முதலாக இருவரும் நேரில் சந்தித்துக் கொள்கிறோம். ஆனால், அப்படியொரு எண்ணமே இருவருள்ளும் இருக்கவில்லை.மாறாக, நெருங்கிய உறவினரை நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திப்பதைப் போலவே உணர்ந்தோம்.
சென்று சேர்ந்ததும் முதல் வேலையாக பூரியை பதம் பார்த்தபின், சிறிது நேரம் பேசி மகிழ்ந்தோம். அன்று புத்தகக்கடைக்கு அகநாழிகை பொன்.வாசுதேவன் அவர்களும் வந்திருந்தார்.அவரையும் அங்கே சந்தித்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி. பின், சில புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து வாங்கிக் கொண்டு ஊருக்குப் புறப்படத் தயாரானேன்.

சுமோ ஓட்டி வந்த அதே நண்பர் அதுவரை வாகனத்திலேயே காத்திருந்து (நான் அதை எதிர்ப்பார்த்திருக்கவில்லை), என்னை அழைத்துக் கொண்டு போய் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சேர்த்தார். எனது தகவலின் பேரில் தங்கையின் கணவர் அங்கே வந்து காத்திருந்தார். சுமோ ஓட்டிய நண்பருக்கு நன்றி சொல்லிவிட்டு,
“பாஸ் தண்ணிப்பழக்கம் உண்டா?”, என்றேன். (எனக்கும் அந்த பழக்கம் இல்லைங்க. நம்பனும். நம்பிக்கைதான் வாழ்க்கை.)

“ஆறு மாசம் ஆச்சுங்க பாஸ். கல்யாணத்துக்கப்புறம் விட்டுட்டேன்”, என்றார்.

“ரொம்ப சந்தோசம்”, என்று மீண்டும் ஒருமுறை கை குலுக்கி விடைப்பெறுகையில்,

இன்னொரு சந்தோசம் பாஸ் உங்களுக்காக விமான நிலையத்தில் காத்திருந்த போது உங்க தங்கச்சி (அவரின் மனைவி) போன் செஞ்சிருந்தாங்க. ”உண்டாகி இருக்காங்களாம்”, என்றார்.

முதல் சந்திப்பிலேயே உறவினராகிப்போன அந்த நட்பை என்ன பேர் சொல்லி அழைக்கலாம்?

அதைவிடவும் கவனிக்கவேண்டியது, மனைவி சொன்ன மகிழ்வானத் தகவலைக்கேட்டு உடனே வீட்டிற்குச் சென்று தனது அன்பையும் , மகிழ்வையும் வெளிப்படுத்துவதை தவிர்த்துவிட்டு , நண்பனின் நண்பனுக்காக மூன்று மணி நேரத்திற்கும் மேலாக (எனக்காக) காத்திருந்த அவரது அன்பை என்ன பேர் சொல்லி அழைக்கலாம்?

“இதை ஏன் மொதல்லயே என்கிட்ட சொல்லலை. நீங்க போய் தங்கச்சியப் பாத்திருக்கலாம். நான் ஆட்டோ புடிச்சி போயிருப்பனே”, என்றேன்.

“பரவாயில்ல விடுங்க பாஸ், உங்களை சந்திக்கறதும் கூட மகிழ்ச்சியான விசயந்தானே. நிலமைய சொன்னா வீட்ல ஏத்துக்குவாங்க பாஸ்” என்றார்.

அந்த நண்பரின் பெயர் “ சுரேஷ் ”. சென்னை தான் அவரது சொந்த ஊராம்.

இரு கைகளையும் பற்றிக் குலுக்கி அவருக்கு வாழ்த்துச் சொல்லி, அந்த புதுத் தங்கைக்கு எனதன்பை தெரிவிக்கச் சொல்லி விட்டு , ஊருக்குப் பயணமானோம். பயணம் இனிதாய் அமைந்தது. அதைவிட இனிது,

எனக்கு, பதிவுலகம் தந்த நட்புகள்......!


அகநாழிகை பொன்.வாசுதேவன் நண்பர்களுடன்.

வேடியப்பனுடன் நான்.


கீழே- “டிஸ்கவரி புக் பேலஸ்”- இன் புகைப்படங்கள்.




நம்ம ”டாபிக்”குல கூட நிறைய புத்தகங்கள் இருக்கே.

அகநாழிகை பொன்.வாசுதேவனுடன் வேடியப்பன்.




நட்பின் ப(பா)லம் அடுத்த பதிவிலும் தொடரும்.....