Dec 30, 2011

எரி’மழை’



குடை கொண்டு போக
மறந்து விட்டேன்

‘தானே’ தயவால்
தொடர் தூரல்

நனைந்தபடியே
வீட்டிற்குச் சென்றேன்.

ஈரக்கூந்தலுடன் எதிரே
வாசமாய் நிற்கிறாள் ‘அவள்’.

மழையென்றும் பாராமல்
பற்றியெரியப் போகிறது
எங்கள் குடிசை!


*தானே’ : 29/12/2011 & 30/12/2011 ஆகிய இரு நாட்களில் தமிழகத்தைப் பதம் பார்த்த ‘புயல்’. 

***



 நூல் ஆர்வலர்களுக்கு : 


                    நமது நண்பர் திரு.வேடியப்பன் அவர்களின்,
                    DISCOVERY BOOK PALACE -ம் 
                   சென்னை புத்தக கண்காட்சி யில் இடம்பெறுகிறது
                                      கடை எண்: 334,
                             நாள் : 05/12/2012 முதல் 17/01/12 வரை


                             தொடர்புக்கு : 9940446650


Dec 23, 2011

அவளுக்கு “அமுதென்றும்” பேர் -02





கோபத்தில் திட்டி விட்டால்...


எப்போது அழைப்பார் அப்பா - என 
வாயில் விரல் வைத்து 
ஏங்கி நிற்கும் குழந்தைப் போல, 

எப்போது அழைப்பேன் - என 
முப்பொழுதும் 
வாயில் முத்தங்களை வைத்து
ஏங்கி நிற்கும் குமரி ‘அவள்’.


Dec 20, 2011

முரண்


விதை ஒன்று போட்டால்
சுரை ஒன்றா முளைக்கும்?
எனும் கேள்வி
மடத்தனமாய் தெரிகிறது.

விழிகளை என்
விழிகளுக்குள் விதைத்துச் சென்றாள்.


இங்கே,
முளைத்ததென்னவோ 
காதல்!

***

யார் மூலமாவது
தெரியப்படுத்தியே தீரவேண்டுமென
தீர்மானித்து விட்டது மனது.

நேரிடையாய்
அவளிடமே சொல்லி விட்டால் என்ன?

Dec 17, 2011

உப்புச்சொல்




தேவைக்கும் அதிகமாய்
கை தவறி விழுந்து
விருந்துச் சமையலில்
சுவை கெடுக்கும்
உப்புக்கல் போல,

சீர்மிகு உறவுதனை
சிதைத்துவிட முனைகிறது
பொருந்தாத நேரத்தில்
நா தவறி
செப்புஞ்சொல்!

***

வீடமைக்கும் சிலந்தியின்
வாய் வழியும்
எச்சில் இழை போல,

தொடர்பு அறாமல்
நினைவில்  நீள்கிறது
பிழைபொருள் தந்த
அப் பெருஞ்சொல்! 


Dec 5, 2011

அவளுக்கு “அமுதென்றும்” பேர் -01




இதழ் மீது
மிதக்கும்
பனித்துளிகளை
சூரியன் களவாடி விடுவதால்,

எனக்கான
தேன் துளிகளை
இதழ் இடுக்குகளில்
பதுக்கி வைத்து பரிமாறுபவள்- அவள்.

***




நோக்கு வர்மத்தால்
நெடுந்தொலைவிலிருந்தே
நோய்* தந்தாள்.

அருகினில் நெருங்கி
அளவளாவும் போது தான் தெரிந்தது
பேச்சு வர்மத்திலும்
பெருங் கைக்காரி அவளென.!




* நோய் - காதல்
***