அவளுக்கு போன் செய்து நாளைக்கு சிங்கப்பூர் புறப்படுகிறேன் என்றேன். விடுப்பு முடிஞ்சதா என்றாள். ஆமாம் என்றதும், எத்தனை மணிக்கு விமானம் என்றாள். இரவு 11.45 மணிக்கு என்றேன். ஏனோ மௌனம் காத்தாள். ஹலோ சொல்லி மௌனம் கலைத்தேன். விமான நிலையம் வரை நானும் வரவா எனக் கேட்டாள். இந்தியா வரும் போது அவசியம் சந்திக்க வேண்டும் என்று ஏற்கனவே சொல்லியிருந்தாள். நானும் சந்திப்பதாய் உறுதி கூறியிருந்தேன். ஆனால், குறுகிய கால விடுப்பு என்பதால் அவளைச் சந்திக்க நேரம் அமையாமல் போய் விட்டது. சந்திக்க முடியாமலேயே போய் விடுமோ என்ற எண்ணத்தில் தான் அவள் அப்படி கேட்கிறாள் என புரிந்தது.சரி வா என்றேன்.
ஒவ்வொரு பயணத்தின் போதும் என்னுடன் விமானநிலையம் வரை வந்து வழியனுப்பிச் செல்லும் நண்பனை இம்முறை தவிர்த்தேன். வீட்டிலிருந்து புறப்படும் நேரத்தை அவளுக்காக மாற்றிக் கொண்டேன்.
ஒவ்வொரு பயணத்தின் போதும் என்னுடன் விமானநிலையம் வரை வந்து வழியனுப்பிச் செல்லும் நண்பனை இம்முறை தவிர்த்தேன். வீட்டிலிருந்து புறப்படும் நேரத்தை அவளுக்காக மாற்றிக் கொண்டேன்.
வலைப்பூ வாசிப்பில் கிடைத்த தோழி அவள். அவளது எழுத்துக்களை வாசிக்கும் போது மெல்லிய பிரமிப்பும், படைப்புடன் ஒரு நெருக்கமும் வாசகர்களின் மனதினுள் ஊடுறுவுவதை யாரும் மறுக்க முடியாது. எழுத்து அவளின் முன்ஜென்ம ஆற்றல் போல! ஆனால் ஏகத்துக்கும் எழுத்துப்பிழை இருக்கும். அது பற்றி குறிப்பிட்டுதான் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். அப்படி தான் ஆரம்பித்தது அவளுடனான பழக்கம்.மின்னஞ்சல் தொடர்பு நாளடைவில் தொலைபேசி தொடர்பாக மாற்றம் கண்டது. பிறரது கவிதைகள், கட்டுரைகள், எழுத்துலக ஜாம்பவான்களின் படைப்புகள் என பலதும் பேசுவோம்.
ஒருமுறை அவளது கவிதைளில் சில குறுந்தொகையை ஞாபகப்படுத்துவதாய் சொன்னேன். குறுந்தொகை படித்ததில்லை என்றாள். சுஜாதாவின் ‘401 காதல் கவிதைகள்’ நூலைப் படிக்க பரிந்துரைத்தேன். பின்பொரு நாள் ஜெ.மோ-வின் ‘சங்கச் சித்திரங்கள் ’ பற்றி சொன்னேன். சரி வாசிக்கிறேன் என்றாள்.
ஒருநாள் பேசிக்கொண்டிருந்த போது உங்கள் வயதென்ன என்றேன். நாற்பத்தியிரண்டு, முதிர்கன்னி, சொற்ப வருமானம் தரும் வேலை, தனிமையாய் ஒரு சிறிய வாடகை வீட்டில் வசிக்கிறேன் என ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள். அவளிடம் பலரும் இந்த பதிலுக்கான கேள்விகளை தவணை முறையில் கேட்டிருக்கக்கூடும். இவளும் தவணை முறையில் பதில் சொல்லி அலுத்திருக்கக் கூடும் என்று நினைத்துக் கொண்டேன்.
ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றதற்கு காதல் தோல்வி என்று ஒற்றை வரி பதிலில் என் வாயடைத்து விட்டாள். உலகம் தெரியாத பெண்ணோ இவள் என நினைத்துக் கொண்டேன். ஒருமுறை காதலில் தோற்றதற்காக ஒரு பெண் வாழ்வை வீணடிப்பாளா?. அந்த காதல் அனுபவம் பற்றி மேற்கொண்டு எதையும் நான் கேட்கவில்லை. அவளும் சொல்லவில்லை.
நகரப் பேருந்து நிலையத்தில் இறங்கி எதிரேயிருந்த கடையில் தண்ணீர் பாட்டில் வாங்கி கொண்டு அவளுக்கு போன் செய்தேன். பூக்கடை அருகிலிருந்து என்னை நோக்கி வந்து கொண்டிருந்தாள். புன்னகைத்துக் கொண்டோம். சென்னை செல்லும் பேருந்து ஒன்று புறப்பட தயாராய் இருந்தது. ஏறி இருவர் அமரும் இருக்கையில் அமர்ந்துக் கொண்டோம். பயணம் தொடங்கியது.
முதல் சந்திப்பு இது. தொலைபேசியில் எவ்வளவோ பேசியிருந்தாலும் நேரில் பார்த்ததும் சொற்கள் மௌனம் சாதித்தது. மூடியைத் திறந்து தண்ணீர் பாட்டிலை நீட்டினேன். குடித்தாள். எப்படியிருக்கீங்க என்றாள். ம் இருக்கேன் என்றேன். போனில் பேசும் போது ஒருமையில் தானே பேசுவ, இன்னைக்கு என்ன ‘ங்க’ சேர்ந்து வருது என்றேன்.சிரித்தாள். சரி இனிமே ‘ங்க’ சேர்க்கல. போதுமா என்றாள்.
“ம் சொல்லு, எதுக்காக வந்த?”
“பாக்கனும்னு இருந்துச்சி”
“அதுக்கு பஸ் ஸ்டாண்ட்லயே பாத்துட்டு போயிருக்கலாமே. ஏர்போர்ட் வரைக்கும் வரவான்னு கேட்டியே எதுக்கு?”
“தெரியல. அடுத்து எப்ப வருவியோ? இந்த சந்தர்ப்பத்தை விட்டா ஒருவேளை பாக்க முடியாம கூட போகலாம் இல்லியா?”
அவளது முகத்தைப் பார்த்தேன். அவள் ஜன்னலுக்கு வழியே எதையோ பர்த்தாள்.
“ஏன் முகம் பாத்து பேசமாட்டியா?”
“முகம் பார்க்க முடியல”
“அவ்ளோ கோரமாவா இருக்கு எம்மூஞ்சி?”
“ச்சே! அப்படியில்ல. உன் கண் பார்க்க கூச்சமா இருக்கு.”
“ஹலோ, ஆளுங்களோட பழகும் போது எப்பவும் கண்ணைப் பாத்து பேச கத்துக்க.”
“ம்ம்”
“என்ன ம்ம்? எம் பக்கம் திரும்பு.”
ஜன்னல் பக்கமிருந்து பார்வையை விலக்கவேயில்லை. அவளின் பின்னந்தலையில் கை வைத்து முகத்தை என் பக்கம் திருப்பினேன். கண்களில் நீர் துளிர்த்திருந்தது. அதற்கான காரணம் எனக்கு தேவையில்லை. உங்களுக்கும் தான் என நினைக்கிறேன். காற்றில் கலைந்து காதோரம் அலைந்த கூந்தல் இழைகளை காதிடுக்கில் ஒதுக்கி விட்டாள். விரல்களுக்கு மருதாணியிட்டு நாளாகியிருந்தது போல. நகங்களில் பாதியளவிற்கு தான் சாயமிருந்தது.
“ரொம்ப சந்தோஷமா இருக்கு”, என்றாள். ‘ம்’ என்றேன்.
“முன்ன பின்ன தெரியாத ஒரு ஆம்பிளையுடன் போறேமேன்னு பயமில்லையா உனக்கு?”
“துளியும் இல்ல.உன்னால எனக்கு எந்த ஆபத்தும் இருக்காது”
“எதை வச்சி அப்படி சொல்ற?”
“உன் மனைவிக்காக நீ எழுதியிருக்கும் கவிதைகள். மனைவியை அவ்வளவு நேசிக்கிற உன் மனசுல இன்னொருத்திக்கு ஆபத்து ஏற்படுத்தற எண்ணமோ, இன்னொருத்திக்கான இடமோ இருக்காது. அதான் எனக்கு தைரியம் குடுத்தது.”
அவள் அப்படிச் சொன்னதும் என் மனைவி மேலுள்ள காதல் இன்னும் அதிகமானது. அதே நேரம், இவள் மீதான நேசயிழையொன்று மனதின் ஓரம் வேர்விட்டிருந்ததையும் சொல்லியே ஆகவேண்டும்.
“சரி இப்ப சொல்லு. ஏன் கல்யாணம் பண்ணிக்கலை?”
“எனக்கு பத்தொன்பது வயசிருக்கும் போது அடிக்கடி வயித்து வலி வந்துட்டே இருந்தது. ஹாஸ்பிடல் போய் செக் பண்ணப்ப கர்ப்பபையில எதோ கட்டி இருக்கிறதாவும், கர்ப்பபையை எடுத்தா தான் உயிர் பிழைக்க முடியும்னு டாக்டர் சொல்லிட்டாங்க. உயிர் பிழைக்கனுமே! அதான் அதை நீக்கிட்டோம்.
இதை காரணம் சொல்லி என்னை விரும்பினவரு விட்டு விலகிட்டாரு. அதுக்கப்புறம் ஒன்னு ரெண்டு பேர் பெண் கேட்டு வந்தாங்க. வர்றவங்க கிட்ட இந்த விசயத்தை நான் மொதல்லயே சொல்லிடுவேன். ஏன்னா, யாராயிருந்தாலும் வாழையடி வாழையா தன் வம்சம் தழைக்கனும்னு தானே நெனைப்பாங்க. என்னால அது முடியாதுன்னு தெரிஞ்சும் ஏன் மறைக்கனும்? வயசு ஏறயேற பெண் கேட்டு யாரும் வரலை. அப்பாவும், அம்மாவும் ஒரு விபத்துல... அவங்க இப்ப இல்ல!”
இப்போது என் கண்களில் நீர் முட்டியிருந்தது. அவளுக்குத் தெரியாமல் லாவகமாக துடைத்துக் கொண்டேன்.
“கர்ப்பபை இல்லைன்னா என்ன? இப்போதான் அறிவியல் எவ்வளவோ முன்னேறி இருக்கே. வாடகைத்தாய் மூலமா குழந்தை பெத்துக்க வழியிருக்கே!”
“ஒருவேளை உங்களுக்கு கல்யாணமாகறதுக்கு முன்ன நாம சந்திச்சிருந்தா நீ சொல்றது நடந்திருக்குமோ, என்னவோ?
இந்த பதிலை அவளிடமிருந்து நான் எதிர்பார்த்திருக்கவில்லை.
“உன் கையை தொட்டு பாக்கட்டுமா?”
எனது விரல்களும் விரும்பியது.
என் கையை மெல்ல அவள் மடிமீது வைத்தேன். கையினை மெதுவாக பற்றிக் கொண்டாள். அவளின் உள்ளங்கை வியர்த்திருந்தது. என் விரல்களைப் பிடித்து நகங்களை அழுத்திப் பார்த்தாள். விரல்களுக்கிடையில் விரல் கோத்து இறுக்குவதும் தளர்த்துவதுமாய் இருந்தாள். புது உலகமொன்று அவள் கைகளில் கிடைத்திருப்பதாய் நினைத்துக் கொண்டாள் போல!
தொடர்ந்த பயணத்தில் தொடர்பற்ற எதையெதையோ பேசிக்கொண்டே வந்தோம். பேருந்து கோயம்பேடு வந்து சேர்ந்தது. அவள் திரும்பிச் செல்வதற்கான பயணச்சீட்டை முன்பதிவு செய்து விட்டு உணவகத்திற்குச் சென்று சாப்பிட்டோம். ஆட்டோ பிடித்து விமான நிலையம் புறப்பட்டோம்.
சென்னை விமான நிலையம்.
பிரிவுநேரம் நொடிநொடியாய் நெருங்கிக் கொண்டிருந்தது. ஏதாவது பேசுங்களேன் என்றாள். வாழ்க்கை துணை பற்றிய தேவையைச் சொன்னேன். யாரையாவது மணமுடித்துக் கொள் என்றேன். அவள் கையால் என் வாயை மூடினாள். புரிந்தது.
“அதை நான் முடிவு செஞ்சிக்கிறேன். நீ ஊர் போய் சேர்ந்ததும் போன் பண்ணு. தினமும் போன் பண்ணி கொஞ்ச நேரம் பேசு. எத்தனையோ கோடி பேர் வாழும் இந்த பூமியில நீயாவது என்னோடு தொடர்பில் இரு. உன் அன்பு என் ஆயுளை இன்னும் கொஞ்சம் நீட்டிக்கும் போல இருக்கு. இதை மட்டும் செய் எனக்காக”,என்றாள்.
விமானநிலையத்தினுள் நுழைந்தேன்.
உள்ளே சென்று மீண்டுமொரு முறை அவளை திரும்பிப் பார்த்தேன். அவளது கன்னத்தில் வழிந்திருந்த நீர்த்தடத்தில் மின்விளக்கொளியும் வழிந்துக்கொண்டிருந்தது. போய் வா என்னும் தோரணையில் கையசைத்தபடி நின்றிருந்தாள்.
அசையும் அவளின் கை உங்கள் மனதை ஒன்றும் செய்யவில்லையா?
அசையும் அவளின் கை உங்கள் மனதை ஒன்றும் செய்யவில்லையா?
#