அலார அலரலுடன்
அவசர விழிப்பு அன்றாடம்.
எட்டு மணிக்குள்
வேலை துவக்கம் - என
மூளைக்குள்
எட்டி உதைக்கும்
மணிமுள் ஓசை.
இங்கு எழுத
கை கூசும்
மேற்பார்வையாளனின்
வசீகர வசைகள்,
சுற்றங்களின்
குற்றங்களை
கொட்டி குமையும்
நடப்புக்கால நண்பர்கள்,
தாய்நாட்டு
நாணய மதிப்பை
ஒப்பிட்டு உணர்ந்து
உலர்த்தி கிடத்தும்
உயிரூக்கி நாளங்கள்,
தொலை தேசத்திலிருந்து
தொலைபேசி உரையாடலில்
துணையாளுடன்
துவளும் தாம்பத்யம்!
இப்படியாக...
துறவறத்துடன் கழிகிறது
பொழுதுகளும், இரவுகளும்!
ஒருபுறம்
காலை நேர
நிழலாய் தேயும்
இளமை,
மறுபுறம்
மாலை நேர
நிழலாய் நீளும்
பணத்தேவை
இடையில் சிக்கி ஊசலாடும்
மடமக்களைக் கண்டு
கெக்களித்துச் சிரிக்கிறது
வெள்ளிப் பணம்!
இப்படியே தொலைந்திடுமோ
வாழ்வு தினம் தினம்...!!!?
