Sep 27, 2011

வெள்ளிப் பணம்


அலார அலரலுடன்
அவசர விழிப்பு அன்றாடம்.

எட்டு மணிக்குள்
வேலை துவக்கம் - என 
மூளைக்குள்
எட்டி உதைக்கும்
மணிமுள் ஓசை.

இங்கு எழுத
கை கூசும்
மேற்பார்வையாளனின்
வசீகர வசைகள்,

சுற்றங்களின்
குற்றங்களை
கொட்டி குமையும்
நடப்புக்கால நண்பர்கள்,

தாய்நாட்டு
நாணய மதிப்பை
ஒப்பிட்டு உணர்ந்து
உலர்த்தி கிடத்தும்
உயிரூக்கி நாளங்கள்,

தொலை தேசத்திலிருந்து 
தொலைபேசி உரையாடலில்
துணையாளுடன்
துவளும் தாம்பத்யம்!

இப்படியாக...
துறவறத்துடன் கழிகிறது
பொழுதுகளும், இரவுகளும்!

ஒருபுறம்
காலை நேர 
நிழலாய் தேயும்
இளமை,

மறுபுறம்
மாலை நேர
நிழலாய் நீளும்
பணத்தேவை

இடையில் சிக்கி ஊசலாடும்
மடமக்களைக் கண்டு
கெக்களித்துச் சிரிக்கிறது
வெள்ளிப் பணம்!

இப்படியே தொலைந்திடுமோ
வாழ்வு தினம் தினம்...!!!?



33 comments:

  1. இப்படி நிறைய எழுதி புலம்ப வைக்கும், தெளிவான தீர்வு நாம் எடுக்கும் வரை ...

    ReplyDelete
  2. இந்த அலாரத்தை கண்டுப்பிடிச்சது யாருப்பா??? விடியற்காலை 4 மணிக்கு அடிக்கும் அலாரத்தை கொல்லும் வேகத்தில் கை நீட்டும் பலபேரில் ஹூம் நானும் ஒருத்தி.... ஒரு நிமிடம் தாமதமாக எழுந்தாலும் அதன்பின் அன்றாட வேலைகளில் தேக்கமும் தாமதமும் அதனால் டென்ஷனும் ஏற்பட்டுவிடும்....அப்ப அலாரம் நமக்கு நல்லது தானே செய்யுது? ஆனாலும் அலாரம் சத்தமும் வாரத்தின் முதல் நாளும் எரிச்சல் தரும் எப்போதுமே.. நம் ரிட்டையர்மெண்ட் கிடைக்கும்வரை....

    ReplyDelete
  3. அன்றைய நாளின் வேலைகளை காலை எழும்போதே ஒரு ரோபோட் போல திட்டமிடுவோம்... திட்டமிட்டாலும் இடையில் பல வேலைகள் திடிரென எட்டி பார்க்கும் நாம் எதிர்ப்பாராமலே... அதையும் செய்ய தயாரா இருக்கணும்ல?

    எப்டிப்பா எங்க மேனேஜர் இங்க பேசுறது அங்க வரை கேக்குதா என்ன??? மேனேஜர் ரூமுக்கு போகும்போதெல்லாம் ஒரு பக்கெட் கொண்டு போறது நல்லது... அழுகை கட்டுப்படுத்த முடியாதுல்ல. அவர் பேசுவதை கேட்கும் சக்தி நமக்கு கிடையாதுல்ல? அதாவது பாஸ் இஸ் ஆல்வேஸ் ரைட்.. அவர் தப்பு செய்யலாம் கணக்கு அவருக்கு உதைக்கலாம். அவரும் கணக்கை உதைக்கலாம் போரடிச்சா நம்மை போன்றோரை வார்த்தையால் கொடுமையா வாட்டலாம்....

    வேறென்ன செய்வது? முகத்துக்கு எதிராக அன்புடன் பேசி முகத்துக்கு பின்னாடி ஒரு சில உறவுகளும் நட்புகளும் நாம் ஜீரணிக்கவும் வேண்டும்...தன் அவஸ்தைகளை சொல்லி அழ குடும்பம் பக்கத்தில் இருந்தால் நம் நட்பு அவசியப்படாதே அங்கே... குடும்பம் இருப்பது தொலைவில்.... மனதின் பாரத்தை கொட்ட நல்ல உள்ளம் கொண்டிருக்கும் நட்பை தேடி வந்து அல்லல்பட்டதையும் படுவதையும் படப்போவதையும் சொல்லி செல்ல நட்பு வேண்டுமே....

    பணத்தின் மேலே பேராசை கண்டிப்பா இல்லை என்றாலும் குடும்பத்துக்காக குடும்ப நலத்திற்காக இப்படி எல்லாம் விட்டு கொஞ்சி பேசும் குழந்தைக்காக, குழந்தையின் எதிர்க்காலத்திற்காக, நம்ம ஊர்லையும் உழைக்கலாம் தான். ஆனால் அதான் சொல்லிட்டீங்களே... நம்ம ஊருக்கும் இங்கக்கும் இருக்கும் வித்தியாசம் பண மதிப்பில் கொஞ்சம் இல்ல அதிகமே... அதற்காக நாம் இழப்பது அதிகமே.. அதிலும் வெளிநாட்டில் குடும்பத்துடன் இருப்பவ்ரை விட பேச்சுலராக நாட்களை நரகமாக தள்ளுவோரை பார்த்திருக்கிறேன். கஷ்டமாக இருக்கும். தன் குடும்பத்துக்காக தன்னை பலி தருவது.....

    இளம் தம்பதியரின் நிலை இன்னும் சோகமானது... மனதில் இருப்பதை கொட்டி தீர்க்க போனில் எத்தனை தான் முடியும்? அக்கம் பக்கம் உறவுகளும் குழந்தைகளும் நெருக்கி உட்கார்ந்திருக்க மனதில் இருக்கும் காதலையும் பகிர முடியாத நிலை.. இருவரும் வெவ்வேறு இடத்தில் நினைவுகளுக்கு மட்டும் உயிரூட்டி கற்பனையில் மகிழ்ந்து நினைவில் தலையணை கண்ணீரால் நனைக்கும் வேதனை.....ஆண் அழமாட்டான் என்று யார் சொன்னது? மனைவியின் அன்பு மடி கிடைத்தால் இந்த தொலைவை சொல்லி சொல்லி புரண்டு அழுவான் உன்னை நினைச்சு எப்படி தவிச்சேன் தெரியுமா இந்த ரெண்டு வருஷமா என்று..... ரெண்டு வருஷ பிரிவை கிடைத்த ரெண்டே மாச விடுமுறையில் அன்பாய் கொட்டினாலும் தீராது... இனிப்பை தினம் தினம் சிறிது சிறிதாய் உண்பதற்கும்.. இனிப்பே உண்ணாமல் இருந்து திடிர் என்று தொடர்ச்சியாக அதிகப்படி இனிப்பும் உடலுக்கும் ஆகாது இல்லையா? மனமும் ஏற்காது இல்லையா? அதுபோல இந்த பிரிவு சொல்லி சென்ற வரிகள் அத்தனையும் வேதனையாக தான் இருக்கிறது...

    தானே விரும்பி ஏற்கும் இந்த துறவறம் இழப்பை சொல்லி எதாலும் ஈடுக்கட்ட முடியாதபடி ஆகிவிடுகிறது....

    பணத்தேவைக்காக தானே இத்தனை அவஸ்தைகளும் , அந்த பணம் அங்கேயே கிடைத்தால் அதை விட சந்தோஷம் வேறென்னவா இருக்கமுடியும்? அடுத்து மனைவியும் மடியில் குழந்தையும் நிலவின் ஒளியும் நிம்மதியான மனமும், மனைவி கையால் ஒரு கை அன்னமும் எத்தனை ருசி.... வயிறும் மனமும் ஒன்றாய் நிறைக்கும் வித்தை அறிந்தவள் அல்லவா துணைவி? மெஸ்ஸில் சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கு மட்டுமா மரத்து போகிறது?? மனசும் தான் வெறுமையாகி போகிறது?? சின்ன சின்ன சந்தோஷங்கள் பெரிய பெரிய கனவுகள் நடக்க இயலா தூரங்கள் கடக்க இயலா வேதனைகள் இப்படி எல்லாவற்றின் தேவைகளை பணம் பூர்த்தி செய்துவிடுவதில்லை.. ஆனால் பணம் கண்டிப்பா வேணும் வாழவேண்டுமே....

    நாம் நினைப்போம் பணம் நம் கைவசம் என்று ஆனால் பணம் தான் நம்மை வசப்படுத்தி வைத்திருப்பது.... நம் சந்தோஷங்களை அடக்கி வைத்திருப்பது.. நம்மை அழவெச்சு வேடிக்கை பார்ப்பது.... நாட்கள் நரக வேதனையில் நகர.. நம் இளமை தொலைந்து சந்தோஷங்கள் இழந்து வாழ்வில் பணம் மட்டுமே மிஞ்சி இருக்கும் என்ற வார்த்தை சத்தியம் சத்ரியன்.... உங்களின் இந்த கவிதை வரிகளை படிக்கும் வாசகர் ஒவ்வொருவருக்கும் அட இது நம்ம கதை போல இருக்கே அப்டின்னு தான் நினைச்சு படிப்பாங்க,. ஏன்னா வெளிநாட்டில் வசிக்கும் ஒவ்வொரு மனிதனின் ஆசைகள் எப்படி கரைகிறது நாட்களாக என்பதை இப்படி வைர வரிகளாக படைக்க முடித்தது? வெளிநாட்டில் வாழும் ஒரு இளைஞனின் நிலை இது.... பிரிந்திருக்கும் குடும்பத்தை நினைத்து அழவைக்கும் நச் வரிகள் சத்ரியன்.... மனதை அசைத்த வரிகள் கொண்ட கவிதைக்கு என் அன்பு வாழ்த்துகள்பா...

    ReplyDelete
  4. தொலை தேசத்திலிருந்து
    தொலைபேசி உரையாடலில்
    துணையாளுடன்
    துவளும் தாம்பத்யம்!//

    நம்ம வாழ்க்கையே இப்படிதான் போங்க....

    ReplyDelete
  5. மஞ்சுபாஷிணி said...
    இந்த அலாரத்தை கண்டுப்பிடிச்சது யாருப்பா??? விடியற்காலை 4 மணிக்கு அடிக்கும் அலாரத்தை கொல்லும் வேகத்தில் கை நீட்டும் பலபேரில் ஹூம் நானும் ஒருத்தி.... ஒரு நிமிடம் தாமதமாக எழுந்தாலும் அதன்பின் அன்றாட வேலைகளில் தேக்கமும் தாமதமும் அதனால் டென்ஷனும் ஏற்பட்டுவிடும்....அப்ப அலாரம் நமக்கு நல்லது தானே செய்யுது? ஆனாலும் அலாரம் சத்தமும் வாரத்தின் முதல் நாளும் எரிச்சல் தரும் எப்போதுமே.. நம் ரிட்டையர்மெண்ட் கிடைக்கும்வரை....//

    அலாரம் நமக்கும் எதிரிதாம்ப்பா......!!!

    ReplyDelete
  6. அனைத்தும் நம் மனதில் உள்ளது... உங்கள் வாழ்க்கையை நீங்கள் ஓட்டும் வரை வாழ்க்கை நேர் கோட்டில் பயணிக்கும்... உங்கள் வாழ்க்கையில் பிறர் அமர்ந்து ஓட்டும் பொழுது உங்கள் இலக்கு திசை மாறிக் கொண்டே இருக்கும்...

    ReplyDelete
  7. இப்படியே தொலைந்திடுமோ
    வாழ்வு தினம் தினம்...!!!?\\\\\\\\\\\\\\
    இதில் வேறு சந்தேகமா? தொலைந்தேவிட்டது.
    பணத்துக்காய் பறவையாகிவிட்டோம் இல்லை,,இல்லை
    பறவைகூட இருள்பரவ...இருப்பிடம் வந்துவிடும்
    நாமோ பகல்,இரவாய் அத்தனை உணர்வுகளையும்
    துறந்து,இழந்து
    உழைக்கப் பறக்கின்றோம்
    ஆசை..ஆசை..ஆசை யாரைத்தான்
    விட்டது?

    ReplyDelete
  8. நாங்கள் எங்கள் வாழ்வைச் சரியாகத் தீர்மானிக்கும்வரை எங்களை வாழ்வு தீர்மானித்துத் தின்றுகொண்டுதானிருக்கும்.ஆனால் ஒன்று சத்ரியன்.ஈழத்தமிழர் புலம்பெயர்ந்து உறவுகளை விட்டிருப்பதற்கும் உங்களூக்கும் நிறையவே வித்தியாசம்.ஒரு குறிப்பிட்ட காலம் போட்டு உங்கள் தூரங்களை நீங்களே தீர்மானிப்பது நல்லது....சாரல்குட்டிக்கும்கூட !

    ReplyDelete
  9. அத்தனை மனக்குமுறல்களையும்...
    பணத்தின் மேல் பாரத்தைப்போட்டு
    “வெளுத்துக்” க {கா}ட்டிய கவி
    உலர்ந்த உணர்வுகளில் அசைகிறது
    அசைந்தாலும்....!!...?

    ReplyDelete
  10. தீட்டிய வரிச் சித்திரத்தில்
    திரவியம் தேடும் அக்கரைவாசியின்
    வாழ்வியலின் உருவங்கள்

    சில வரிகளின் உள்ளடக்கம்
    மனதை நிதானிக்க செய்து
    மதியிடம் வாதம் செய்கிறது

    சிறப்பான வரிகள் சிறந்த கவிதை கவிஞரே

    ReplyDelete
  11. //ஒருபுறம்
    காலை நேர
    நிழலாய் தேயும்
    இளமை,


    மறுபுறம்
    மாலை நேர
    நிழலாய் நீளும்
    பணத்தேவை


    இடையில் சிக்கி ஊசலாடும்
    மடமக்களைக் கண்டு
    கெக்களித்துச் சிரிக்கிறது
    வெள்ளிப் பணம்!//

    நல்ல கவிதை.
    மஞ்சுபாஷினி அக்காவின் பின்னூட்டம் கவிதையை கவிதையாய் ஆக்கியிருக்கிறது.

    ReplyDelete
  12. என்ன பண்ணுவது அண்ணே, நம்மைப்போல் நடுத்தர மக்களுக்கு நம்மூரில் கிடைக்கும் சம்பளம் அடிப்படை வசதியை பூர்த்தி செய்துக்கொள்ள்வே போத வில்லை. இங்கு இருந்துக்கொண்டு சில அடிப்படை தேவைகளை நிறவேற்றி விட்டால் நம் குடும்பத்துடன் தங்கி விடலாம். பதிவு அருமை அண்ணே.

    ReplyDelete
  13. மஞ்சுபாஷிணி said...
    இந்த அலாரத்தை கண்டுப்பிடிச்சது யாருப்பா??? விடியற்காலை 4 மணிக்கு அடிக்கும் அலாரத்தை கொல்லும் வேகத்தில் கை நீட்டும் பலபேரில் ஹூம் நானும் ஒருத்தி.... ஒரு நிமிடம் தாமதமாக எழுந்தாலும் அதன்பின் அன்றாட வேலைகளில் தேக்கமும் தாமதமும் அதனால் டென்ஷனும் ஏற்பட்டுவிடும்....அப்ப அலாரம் நமக்கு நல்லது தானே செய்யுது? ஆனாலும் அலாரம் சத்தமும் வாரத்தின் முதல் நாளும் எரிச்சல் தரும் எப்போதுமே.. நம் ரிட்டையர்மெண்ட் கிடைக்கும்வரை....//

    அலாரம் நமக்கும் எதிரிதாம்ப்பா......!!!

    ஆமாம் மனோ.. அலாரம் தூக்கி போட்ருங்க, லேட்டா ஆபிசு போங்க. மேனேஜர் கிட்ட மண்டகப்படி வாங்குங்க, இது கூட நல்லாருக்கே.. பாத்தீங்களா நான் கம்மியா எழுதி இருக்கேன். உங்களுக்காக என்பதால் தான் நாஞ்சில் மனோ :)

    ReplyDelete
  14. அன்பு நன்றிகள் சே. குமார்..

    ReplyDelete
  15. வெளிநாட்டு வாழ்க்கையே இப்படிதான் போலும்....

    ReplyDelete
  16. பதிவின் கரு மனத்தை
    சங்கடப்படுத்திப் போனாலும்
    அருமையான படைப்பு
    பதிவாகத் தந்தமைக்கு நன்றி
    த.ம 3

    ReplyDelete
  17. ////சுற்றங்களின்
    குற்றங்களை
    கொட்டி குமையும்
    நடப்புக்கால நண்பர்கள்,////

    ஏதோ அனுபவத் தென்றல் வருடிச் செல்வது போல உள்ளது...

    ReplyDelete
  18. //இப்படியே தொலைந்திடுமோ
    வாழ்வு தினம் தினம்...!!!?///

    சில நேரங்களில் இப்படித்தான் நினைக்கத் தோனுதுண்ணே!

    கவிவரிகள் வலிகள் நிறைந்த உணர்வுகள்!

    ReplyDelete
  19. ஏக்கத்தின் எதிரொலியே-உம்
    எண்ணமதில் அலையாக
    தேக்கமுற்ற நீராக-மிக
    தெளிவான ஆறாக
    ஆக்கமிகு பாடலாக-தமிழ்
    அன்னையவள் ஆடலாக
    தாக்கமதை கொண்டீரே-உள்ளம்
    தளர்வதனை விண்டீரோ

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  20. இடையில் சிக்கி ஊசலாடும்
    மடமக்களைக் கண்டு
    கெக்களித்துச் சிரிக்கிறது
    வெள்ளிப் பணம்!
    //

    பணத்துக்கு தெரிகிறது??

    ReplyDelete
  21. என்ன செய்ய நண்பரே...
    இதுதான் நம்மைபோன்றோர் வாழ்க்கை
    நாடுகடத்தப்பட்ட
    விக்கிரமாதித்தர்கள்
    வேதாளம் எனும் இந்த உணர்வுகளை சுமந்தே
    காலமும் பொழுதும் போகிறது நமக்கு.

    கவிதை அருமை நண்பரே...

    ReplyDelete
  22. சப்பாஷ்............

    #அருமையிலும் அருமை...

    ReplyDelete
  23. ஒருபுறம்
    காலை நேர
    நிழலாய் தேயும்
    இளமை,

    மறுபுறம்
    மாலை நேர
    நிழலாய் நீளும்
    பணத்தேவை

    இடையில் சிக்கி ஊசலாடும்
    மடமக்களைக் கண்டு
    கெக்களித்துச் சிரிக்கிறது
    வெள்ளிப் பணம்!


    சுவைபடச் சொல்லிவிட்டீர்கள் கவிஞரே..

    ReplyDelete
  24. பொருளுக்காக ஓடும்
    நாம்

    வாழ்க்கையின் பொருளை உணர்ந்துகொள்ள முயற்சிக்கும் வேளையில்தான்...

    இவை போன்ற வார்த்தைகள் தோன்றும்..

    ReplyDelete
  25. பொருளுக்காக ஓடும்
    நாம்

    வாழ்க்கையின் பொருளை உணர்ந்துகொள்ள முயற்சிக்கும் வேளையில்தான்...

    இவை போன்ற வார்த்தைகள் தோன்றும்..

    ReplyDelete
  26. பிரிவின் துயரத்தையும், வலியையும் கவிதையாக்கிவிட்டீர்கள். என்ன செய்வது? பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லையென்பதை நாம்தான் கண்கூடாகக் காண்கிறோமே... குறிப்பிட்டக் காலம் கஷ்டப்பட்டு பொருளீட்டிக் கொண்டு வீடு திரும்பலாம் என்று நினைத்தாலும் திரும்ப முடியாத அளவுக்கு நீளும் பணத்தேவை. காலை மாலை நிழல்களை அழகிய உவமையாக்கியுள்ளீர்கள். கவிதையை ரசிக்கமுடிகிறது. கருவை?

    ReplyDelete
  27. //இப்படியே தொலைந்திடுமோ
    வாழ்வு தினம் தினம்...!!!// நிறைய கருத்துக்கள் பறிமாறப்பட்டுள்ளது..ம்ம்ம் பெருமூச்சு தான்..

    ReplyDelete
  28. ''...இப்படியே தொலைந்திடுமோ
    வாழ்வு தினம் தினம்...'''
    ஆமாம் எழுதாத விதியாக சிலருக்கு இப்படியே தான் வாழ்வு தொலையப் போகிறது. உண்மைகள் அழகாக எழுதப்பட்டுள்ளது. வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  29. இன்றைக்குத் தான் உங்கள் பதிவுகளைப் படிக்க முடிந்தது.
    காலை நேர நிழலாய்த் தேயும் இளமை - வரி நிறைய நாட்கள் மனதில் தங்கித் தாக்கும் என்று தோன்றுகிறது.
    பிரமாதம்.

    ReplyDelete
  30. என் மனம் கவர்ந்த இந்தப் பதிவை நாளைய (3/11/11 -வியாழக்கிழமை) வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தவிருக்கிறேன். நேரம் கிட்டும்போது வந்து பாருங்கள். http://blogintamil.blogspot.com/

    ReplyDelete
  31. ''..இப்படியாக...
    துறவறத்துடன் கழிகிறது
    பொழுதுகளும், இரவுகளும்!


    ஒருபுறம்
    காலை நேர
    நிழலாய் தேயும்
    இளமை,...''
    வலைச் வரத்தால் வந்தேன் வாழ்த்துகள் சகோதரா.
    வேதா. இலங்காதிலகம்
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  32. தாய்நாட்டு
    நாணய மதிப்பை
    ஒப்பிட்டு உணர்ந்து
    உலர்த்தி கிடத்தும்
    உயிரூக்கி நாளங்கள்,


    arumai.....

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.