Feb 27, 2011

தங்கைக்கு....


                  நமக்கு நெருங்கியவர்களுக்கு நிகழும் விபத்துக்களும், மரணங்களும் மனதை பயமுறுத்துவது இயல்புதான். வாழ்வு எப்போதும் மகிழ்ச்சி நிரம்பியதாகவே இருந்துவிட வேண்டும் என்பது மனிதர்கள் எல்லோரது ஏக்கம். ஆனால், அது இயல்புக்கு மாறான ஏக்கம் என்பதைமட்டும் மறந்து போகிறோம். இத்தனை ஆயிரம் காலமும் இந்த உலகம் இப்படித்தான் இயங்கி வந்திருக்கிறது. இனிமேலும் இப்படித்தான் இருக்கும்.

                  உன் கவலை எனக்கு புரிகிறது. ஏற்ற இறக்கமின்றி இதுவரை எவனது வாழ்வும் இந்த உலகில் இருக்கவில்லை. நாமும் கூட சாதாரண மனிதர்களே. துயரங்களே எனக்கு வேண்டாம் என்றால்,  அவன் வாழ உகந்த இடம் இந்த உலகம் அல்ல என்பதை நீ உணர வேண்டும்.

                   உதவி தேவைப்படும் எல்லா நேரத்திலும் உறவினர்கள் அனைவரும் உதவ வேண்டும் என்பது நமது விருப்பம் மட்டுமே! அவர்கள் உதவியே ஆகவேண்டுமென்ற கட்டாயம் எதுவுமில்லை.

                    நண்பர்களையும், உறவினர்களையும் அடையாளம் காட்டும் நேரம் , இது போன்ற சம்பவங்கள் தான். அதற்காக நிகழ்ந்த இந்த சம்பவத்திற்கு நன்றி சொல்லி விட்டு, இனி நடத்த வேண்டியதைச் செய்ய உன்னைத் தயார் படுத்திக்கொள்.

                  தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கும் போது சொன்னாயே, உறவினர்கள் சுற்றி நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கையில் யாரோ ஒரு வழி போக்கன் வந்துதவினான் என்று.அவன் வழிப்போக்கன் இல்லை, ”அவன் தான் மனிதன்” . (ஒருவேளை அவனும் கூட உதவாமல் போயிருந்தால் அவன் மேல் உனக்கு எந்த கோபமும் வந்திருக்க வாய்ப்பில்லை தானே? அப்படி நினைத்துக்கொள். எல்லாம் சரியாகப் போய்விடும். )

                         ஆத்திரமான நேரத்தில் கத்தி தீர்ப்பதை விட, அமைதியாய் இருந்துவிடு. இத்தனை ஆண்டுகளில் எத்தனையோ துயர்களைக் கடக்கவில்லையா? இதுவும் கடந்து போகும்.பிரச்சினைகள் நமக்கு வேண்டாம் என்றாலும், பிரச்சினைகளுக்கு நாம் வேண்டியதாய் இருக்கிறது.அது தீரும். வேறொன்று வரும். இந்த சுழற்சி இருந்துக்கொண்டே தான் இருக்கும்.

                         உன் ஆத்திரம் நியாயமானதாக இருக்கலாம்...! இதோ என் எழுத்துக்களில் அதற்கான தீர்வு இருக்கலாம்....!

                         தாய் இப்போது குழந்தையாய் இருக்கிறாள் என்றாய். கவலையை விடு. வளர்த்துக் கொள்ளலாம்.இத்தனைக்கோடி ஆண்டுகளில்  தாய்க்கு தாயாகிய வாய்ப்பு இதுவரை யாருக்கும் வாய்க்கவே இல்லை. உண்மையில் நீ பாக்கியவதி.


Feb 10, 2011

தலையாய தேவதை



நதிப்படுகையில்
புதைந்து
மிதந்திருக்கும்
கூழாங்கற்கள் போல்

என்
மதிப்படுகையில்
தேவதைகள்
நிறைந்திருக்கிறார்கள்.

******

வரங்களை
வழங்கி விட்டு
வாழ்க்கையை
அபகரித்துக் கொள்வதில்
தேவதைகளுக்கு
நிகர்
தேவதைகளே.


******

தீராக்களைப்பில்
என்னைக் கண்டு
அருந்த
ஒரு
கோப்பை நீரும்,

அசை போட
அளவற்ற
நினைவுகளையும்
தந்து போனவள் தான்

தேவதைகளில்
எல்லாம்
தலையாய தேவதையாய்
இருக்கிறாள்.


Jan 22, 2011

பொய் சொல்ல போறேன்


இதய
வடிவத்திற்கு
எடுத்துக்காட்டு
கேட்டார் ஆசிரியர்.

உன்னைச் சொன்னேன்.

அவர் கையில் பிரம்பு முளைத்தது.
உன் கண்ணில் நீர் உடைந்தது.

பாவம்.
அவருக்கெப்படி தெரியும்
என் இதயம்
உன்
வடிவில் இருப்பது.!

******



’என்
இதயமில்லை நீ’ என்றதற்கு
இரண்டு நாளாய்
மெளனமாய் இருக்கிறாய் கருப்பழகி.

இதயம்
ஒரு நாள்
இயங்க மறுக்கும்.
அப்போதும்
எனை காக்க
இயங்கிக் கொண்டிருப்பாயடி நீ...!







Jan 1, 2011

இது போதும்...



கிளை,
இலைக்காம்பு
இதற்கிடையில்
வெளி நீட்டும்
தளிரின் தாய்மையுடன்

உனதன்பு.....


நீரில்
விழுந்து 
நீண்டு நெளியும் 
நிலவின் ஒளியாய்


உனது காதல்...



மாம்பழக் கூடையை
நாளெல்லாம் சுற்றும்
ஈ போன்று
எனைச் சுற்றும் 
உனதிரு கண்கள்....

இது போதும் இன்றெனக்கு....!


Dec 21, 2010

இப்பொழுது நான்...



முறுக்கேறிய நாண்
நான்.

உன்
கை விரல்கள்
மீட்ட வேண்டியதில்லை
கால் கொலுசின்
ஓசை பட்டாலே
இசைப்பொழிய
இசைந்திடுவேன்.

~~~~~~~~~~~ * ~~~~~~~~~~~~~

முற்றிய மூங்கில் காடு
நான்.

தீப்பொறி விழவேண்டியதில்லை.
உன்
நாவிலிருந்து
தீ என்ற ஒலி விழுந்தாலே
பற்றி எரிந்து விடுவேன்.


~~~~~~~~~~~ * ~~~~~~~~~~~~~~




வரண்ட தரைக்குள்
புதைந்திருக்கும் புல்லின் வேர்
நான்.

உன்
பேரன்பு
பேய்மழையாய்
பொழிய வேண்டியதில்லை
ஒன்றிரண்டு
தூறலாய் விழுந்தாலே போதும்

பொசுக்கென்று
துளிர்த்திடுவேன்
பசும்புல் நுனி போல!





Dec 16, 2010

முள்ளிடைப் பூக்கள்



இதழ்க்கிளை
இடுக்கில்
எச்சில் ஊறவைக்கும்

மகரந்தகுழல்..!



~~~~~~~~~~~ *~~~~~~~~~~~


உன்
சொல்லிடை
சிரிப்பினை
நினைவூட்டும்

இம்
முள்ளிடைப் பூக்கள்!

Dec 8, 2010

இது எத்தனையாவது நாள்...?


இது எத்தனையாவது
நாளென நினைவில் இல்லை.

காற்று மட்டும் புக இடைவெளி
காது கூசாத சொல் தேடி உரையாடல்
மெல்லிய தூரல்
விரைந்து நடக்க
விரும்பாத கால்கள்
நனைந்திருந்தது உடை
பெருந் தீ யின்
முதல் பொறி
முளைவிடத் தொடங்கியிருந்தது...!


**********

சிறுவயதில்
எத்தனையோ முறை
சொல்லியிருக்கிறாள் அம்மா.
எச்சில் பண்டம்
யார் கொடுத்தாலும்
தின்னக்கூடாதென.!

இருவது வருடப்
பசியுடன் இருக்கிறேன்.
முதல்முறை
முத்தம் தின்னக் கொடுக்கிறாய் நீ
வேண்டாமெனச் சொல்ல
விரும்புமா மனம்...?


Dec 1, 2010

குமிழ்த்திரை


காதல் தீ

சுடும் என்றேன்.
சுட்டாலும்
“உன்னை தீண்டும் இன்பம்
தோன்றுதடா ” என்றாய்.

இதோ
பற்றி எரிகிறது பார் என்கிறேன்
“பிடில் வாசி போடா” என்கிறாய்.



நீர்க்குமிழ்.

உள்ளுக்குள்  நீ
வெளியில் நான்
அப்படியே இருந்திருக்கலாம்!

குமிழ்த்திரை  உடைத்து
உன்னில் என்னை
நிரப்பி  நிரைத்தாய்

நிரைந்திருந்தோம்.

உறவுகள் மறுப்பதால்
உயிரிருந்தும்
சிதையாகச் சம்மதிக்கிறாய் நீ...!


கஜல்
விருத்தங்கள் எழுத
கசங்கிய காகிதத்தை
மெளனமாய்
பிரிக்கிறேன் நான்...!



.

Nov 21, 2010

புகுந்தேன்



”எப்படி நுழைந்தாய்
என்னுள்?”, என்பதை
இன்னும்
எத்தனை தடவைதான்
கேட்கவிருக்கிறாயோ!

செப்படி வித்தையொன்றும்
செய்திட வில்லையடி - நான்!

உயிர்த்திரவம் ஒருதுளியின்
கோடியணுக்களில் ஏதோவொன்று
ஓடிப்புகுந்து கூடி கலந்து
கரு உருவாவது போல்,

உன்
சிறுசிறு விசாரிப்புகள்
துறுதுறுவென்ற செயல்கள்
கலகலவென்ற சிரிப்பு
இதுகளில் ...

ஏதோவொன்று
என்னுள் சென்று
காதல் தரித்து
கவிதைச் சொற்களாய் வழிந்து

உன்
கண்வழி நுழைந்ததை
கண் இமைக்காமல்
நீ
கண்டிருந்த கனமொன்றில் தான்
உன்னில் நான்..!

Oct 29, 2010

காதல் சொல்லி வந்தேன் -1


ஒன்பது கிரகங்கள்
தன்னைச் சுற்றியே
வந்த போதும்
ஒளியைப்
பிரதிபலிக்கும் பாக்கியத்தை
நிலவிற்கே தந்த
சூரியன் போல

எண்ணற்றோர்
உன்னைச் சுற்றி
வந்தபோதும்
எனக்கே அருளினாய்
உன் காதலை..!

****
வீட்டிற்குத் தெரியாமல்
பூங்கா வலம் சென்றோம்

பசும்புல் மீது
பரவி அமர்ந்தாய்.
ஆறறிவு ஆணாய்ப் பிறந்ததை விட
ஓரறிவு புல்லாய் முளைத்திருக்கலாம் என
அங்கலாய்த்தது
அடி மனம்...!

****

வாரங்கள்
பல கடந்த பின்
விரலை மட்டும் தொட
சம்மதித்தாய்...

பூ பறிக்க வாய்த்ததற்கு
தீ மிதிக்க நேர்ந்துக்கொண்ட
என்னை எண்ணி
ஏளனமாய் சிரித்தது
அம்மன் சிலை..!



Oct 14, 2010

கேட்டுச் சொல் -1



உணவு உண்ண 
செவ்வாயை 
ஒன்றே 
படைத்த இறைவன்

என் உயிரைத் 
திண்ண மட்டும் 
கண்களை 
இரண்டாய் படைத்தானா?

***

ஆளில்லா 
ஆல் நிழலில் 
ஓசையின்றி
பேசிக் கிடந்தோம்
விழிகளால்..!

உன்
தேன் திரண்ட
இதழ் இரண்டும்
தேம்பித் தேம்பி
அழுதுக் கொண்டிருந்ததை
நீ உணர்ந்தாயா?



Oct 4, 2010

புன்னகை உனது; புரிதல் எனது-1



புறாக்களின் ஜீவாதாரத்திற்கு
பிடிப்பிடியாய்
அரிசியை அள்ளி வீசும் நீ

எனது ஜீவாதாரத்திற்கு
ஒன்றிரண்டு
புன்னகையையும் வீசி விட்டு
போகிறாய்..!

***

பறந்து விடாமலும்
இறந்து விடாமலும்
உள்ளங்கைக்குள்
பொத்திப் பாதுகாக்கும்
பட்டாம்பூச்சியைப்போல்

உள்ளத்துக்குள்
உன்
புன்னகைகளையும்...!

***

அகராதிப் புத்தகங்களில்
சல்லடையாய்
சலைத்துப் பார்த்தும்
அகப்பட மறுக்கின்றன

உன்னிதழ்
உதிர்க்கும்
புன்னகைக்கான பொருள்..!

Sep 21, 2010

தேவகணம்



’உன்னை
மணந்ததால் தான்
இந்த நாரும் ( நானும்)
மணக்கிறது’ என்ற
உண்மையை நீ
உணராமல்,

வாழ்த்துச் சொல்ல
வாய் திறக்கும் முன்னே
நானுன்னை
மணந்த நாள் தான்
உனது பிறந்த நாள்
எனச் சொல்லி
பிடிவாதம் செய்கிறாய்.
புரியத் தொடங்கியது
என் பிறவிப்பயன்.

*
யாசித்தே பழகிப்போன
எனக்கு
வள்ளலாக எப்போதும் நீ!

இதோ
இந்த யாசகனின்
வாசகங்கள்
வாழ்த்துக்களாய்
மலர்கிறது - உன்
மலர் பாதங்களில்...!

கூடவே,
என் வாசகர்களின்
வாழ்த்துக்களும் ...!


* இன்று (22/09/10) என்னுயிர் மனைவியின் பிறந்த நாள்.


Sep 12, 2010

வாழ்த்தலாம்....



எங்களின் சாரலின்பா இன்று (13/09/2010) தனது முதலாம் பிறந்த நாளை எட்டிப் பிடித்து விட்டாள்.

*********************** ******************************


னது போற்றுதலுக்குரிய நண்பர் திரு கோவிந்தசாமி கண்ணன் அவர்கள் தனி மடலில் அவரது விருப்பத்தைத் தெரிவித்திருந்தார். அதை அப்படியே கீழே இணைத்திருக்கிறேன்.

அன்புடை சத்ரியன்!

வாழிய பல்லாண்டு! நலமே புரிக நலமே விளைக!
வியப்பின் எல்லையே தங்கள் வலைத்தள அழகினையும், தரத்தினையும் கண்டே!

வலைப்பதிவு, வலைத்தளம் போன்றவை பற்றி உங்களது தெளிவான நோக்கு “மனவிழி” என்னும் தலைப்பே, ”எல்லாம் மனசுல தாங்க இருக்கு” ,என கூறாமல் கூறுகிறது. வேறென்ன வேண்டும் இளவலே! அறிந்தும் தெரிந்தும் உணர்ந்தும் உள்ள நிலையினை எட்ட வேண்டும் என்பதே ஆன்றோர் வாக்கு. அவ்வழியிலே தொடர்க! வெல்க! எட்டுக இலக்கை! குரு வழி கிடைத்தால் மிக உயர்வன்றோ!

மனவிழி வழியே பலப்பல வலைத்தளப் பயணம் கிட்டுவதும் சிறப்பே. அவைகளில், மனநல மருத்துவர் ஷாலினி, வெட்டிப்பேச்சு போன்ற வலைத்தளங்களும் அடக்கம்!

இப்போதெல்லாம் அதிக நேரம் உள் செல இயலா நிலை ! மேம்போக்கான வலைப்பயணமே இவ்வளவு சொல்கிறதே...!
”சாரலின்பா”
சாரலே இன்பம்! தென்மேற்கு பருவக்காற்று அழைத்துவரும் தூறலிலே திருக்குற்றால அருவியிலே , கருமுகில் சூழ மழைச்சாரலில் கிடைத்திடும் இன்பத்தை அனுபவித்துதான் இப்பெயர்ச் சூடலா? அவ்வனுபவம் இல்லாமலே இப்பெயர்ச் சூட்டல் என்றால் மிகமிகச் சிறப்பு!

“சாரலின்பா” என்ன ஓர் அழகு தமிழ்! பழகு தமிழ்!

சாரலுக்கு, “வாழிய பல்லாண்டு”, என பிறந்த நாள் வாழ்த்துக்கூறி, சாரலைப் பெற்றோரையும் வாழ்த்தி மகிழ்கிறேன்.

இதனை உங்கள் வலைத்தளத்திலே பதிவிட ஆசை. எனக்காக , உங்களால் இதனை வலைப்பதிவில் ஏற்ற முடியுமா?

(நானோ துப்பறியும் சாம்பு! இப்போதுதான் தட்டுத்தடுமாறி வலைப்பதிவிட்டு வருகிறேன்.நான் இன்னும் அறியவேண்டியதும், செய்யவேண்டியதும் நிறையவே இருக்கிறது.)

என்றும் மாறா அன்புடன்,
கோ.கண்ணன்.

என் வலைத்தளம் காண்க: வலைத்தள முகவரி :
இங்கே சொடுக்கவும்
: http://thamizhinezhuchi.blogspot.com/
http://kadaramkondan.blogspot.com/
http://japanilkannan.blogspot.com/2010/08/8.html
http://hightechtamils.blogspot.com
ஒரு வேண்டுகோள் :
“தமிழரெல்லாம் ஒன்றுபடத் தக்க நேரம்,
தமிழரிதை மறப்பாரேல் இனமே சாகும்.”
பாவேந்தர் பாரதிதாசன் கூற்று இன்றைய தேவை !
ஒரு தலைமுறைக்கு மேல் ஆங்கிலவழிக் கல்வியினால் தமிழ் அறிவு மழுங்கடிக்கப்பட்ட சூழலில், நாம் ஒருவரை ஒருவர் குறை காண்பது விடுத்து, நாமும் ஒருவகையில் காரணமே என்று உணர்வோம் ! ஒன்றுபடுவோம் ! வென்றெடுப்போம் இழந்த பெருமைதனை !
சிந்தனையை பொதுவில் வைப்போம்!
தமிழிலேயே பேச முயற்சிக்கலாமே !
வீட்டிற்குள்ளாவது ! நண்பர்களுக்கு இடையேயாவது !
தாய்த் தமிழில் தமிழ் நாட்டில் மட்டுமாவது !
நல்ல தமிழ் இங்கிருக்க தேவையில்லாமல் ஆங்கிலக் கலப்பெதற்கு ?






Sep 10, 2010

வாழ்த்துக்கள்



கொண்டாடும் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Sep 8, 2010

காதலர்களின் நாயகன் - மரணம்

Actor Murali Dead


பூவிலங்கு படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் முரளி பெரும்பாலும் காதலர்களின் ஆதர்ஷ நாயனாகவே இருந்தார்.

இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்து விட்டாராம்.

திரைக்கலைஞனாய் நம்மில் கலந்திருந்தவர். அவரது குடும்பத்தாருக்கு மட்டுமின்றி, நமக்கும் தான் அவரது மரணம் பெருந்துயரைத் தந்துவிட்டது.

நாம் அனைவரும் மரணத்தின் சொத்தே!

அவரது குடும்பத்தினருக்கு நம் இரங்கலைத் தெரிவிப்போம்.

Sep 3, 2010

உதட்டுரேகை











அன்புள்ள....
எனத்தொடங்கி
காதலுடன்...என முடிக்கும்
உன் கைப்பிரதிக்
கடிதங்கள் காணாது
தூசு படிந்துக் கிடக்கிறது
என் விழித்திரைகள்.


எழுத்துப்பிழைகளுடன்
என்னை விரும்புவதாய்
எழுதியக்
கடிதமொன்றில்
பெயருக்கு பதிலாக
நீ பதித்தனுப்பிய
உதட்டு ரேகை
பத்திரமாய் இருக்கிறது
ஆழ் மனதில்.


புரையேறும் நேரங்களில்
என் பெயர்ச்சொல்லி
நீ -அழைப்பாய்
என்றொரு
பொய் சொல்லிப் பழகிவிட்டேன்
வெள்ளந்தி மனசிடம்.


Aug 16, 2010

சலவைக்கல் ரோஜா

சேற்றில் அன்றி - யமுனை
ஆற்றில் முளைத்த
வெண் தாமரை

சிதை புதைத்த இடத்தில்
புல் முளைத்திருந்தால்
உலகு அதிசயிக்க
ஒன்றுமில்லாமல் போயிருக்கும்.
”சலவைக்கல் ரோஜா” முளைத்தால்
உலகம் அதிசயிக்காமல்
வேறென்ன செய்யும் ?

முப்பத்தெட்டு வயதில் உதிர்ந்த
முள்ளில்லாத ரோஜாவிற்கு
முகலாய ராஜா
நினைவுச் சின்னம் எழுப்ப
நினைத்த தருணம்,
யாருக்கு உதித்திருக்கும்
நாளைய உலகின்
காதல் சின்னம் இதுவென்று ?

சுவாசம் இன்றி
வாழ முடியாதென்றால்
முன்னூற்றைம்பது
ஆண்டுகள் கடந்தும்
மும்தாஜ் இன்னும்
வாழ்ந்துக் கொண்டிருப்பது எப்படி?



புகைப்படம்:- நன்றி google.

Aug 15, 2010

மிட்டாய் பண்டிகை



கஸ்ட் 15 , "மிட்டாய் பண்டிகை ".


இந்தியாவின் சுதந்திரதினம் கிராமங்களில் இப்படியாகத்தான் புரிந்துக் கொள்ளப்படுகிறது. பள்ளிகளில் கூட சுதந்திரம் பற்றிய முழுமையான உணர்வை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கத் தவறியிருக்கும் நம் கல்வி முறையை என்னச் சொல்லி பாராட்டுவது?

இந்தப் புரிதலில் எந்த தவறும் இருப்பதாய் எனக்குத் தெரியவில்லை.64 ஆண்டுகளுக்கு முன் சுதந்திரம் கொடுக்கப் பட்டிருக்கிறதேயொழிய , இதுவரை நம்மில் யாரும் அதைப் பெற்றுக்கொள்ளவில்லை என்பதே நிதர்சனமான உண்மை என்பதை எத்தனைப்பேர் ஒத்துக்கொள்வீர்கள்?

சுதந்திரம் என்றால் என்ன என்பதே ,பெரும்பாலானோருக்கு இன்னும் சரியாகப் புரியவில்லை. இதை உணர்த்தாமல் விட்டது யாருடைய தவறு? அல்லது மக்கள் உணராமல் போனதற்கு யார் காரணம்?

//இந்தியாவிற்கு காந்தியடிகள் வந்த பிறகு நேரு, ஜின்னாஹ் மற்றும் இதர தலைவர்கள் சேர்ந்து நடத்தும் மாநாட்டில் கலந்துகொண்டார். அதில் அவர் ஆற்றிய உரையில்..


"நீங்கள் சில நூறு வக்கீல்கள் சேர்ந்து கொண்டு தில்லியிலும், மும்பையிலும் நாட்டு விடுதலை பற்றியும் மக்களின் எழுச்சி பற்றியும் பேசுகிறீர்கள். இதனால் என்ன பயன்? நீங்கள் பேச வேண்டியது 700000 கிராமங்களில், நாட்டுபுறங்களில் உள்ள சாமான்யர்களிடம் தான். அவர்களை நாம் கண்டுகொள்ளாமல் எந்தப் பயனும் இல்லை.."//


ஆக, எந்த ஒரு நிகழ்வின் சாராம்சமும், அதன் முக்கியத்துவமும் கிராம மக்களிடம் கொண்டுபோய் சேர்த்து அவர்களை உணரச் செய்யவேண்டும்.இன்றையத் தலைவர்களிடம் அந்த முனைப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு நம் தேசத்தின் தலையிடமே பதில் இருக்கப்போவதில்லை.

முக்கியமான சிலவற்றைப் பற்றி மக்கள் அறிந்து கொள்ளக்கூடாது என்னும் விசயத்தில் நம் அரசாங்கம் மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்கிறது. காரணம் மிகமிக எளிமையான ஒன்று. மக்கள் உண்மைகளை உணர்ந்துக் கொண்டால், தம்மால் அரசியல் பிழைப்பு நடத்த முடியாது என்பதை ஆளும் / எதிக்கட்சி அரசியல் வியாதிகள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள்.

நமக்கும் கூட, இலவச வேட்டி, இலவச சேலை, இலவச டிவி, கியாஸ் அடுப்பு.... இன்னும் இத்யாதி இத்யாதிகள்...கிடைத்தால் போதுமென்றும், ஒரு நல்ல வேலை, கை நிறைய சம்பளம் , வீடு .... இவைகள் மட்டும் போதுமென்று இருந்து விடுகிறோமே தவிர , சமூகம் பற்றிய எந்த அக்கறையும் இல்லை. ஏனென்றால், நாம் சுயமாக சிந்திப்பதையே படிப்படியாய் இழந்துக்கொண்டு வருகிறோம்.

ஆமாம், உழைப்பின் களைப்பை போக்க நாட வேண்டிய திரைப்படம், தொலைக்கட்சி நிகழ்ச்சிகளுக்கு அடிமையாகிக் கிடக்கிறோம். யாரோ ஒருவனின் படைப்பைப் பற்றியும், சிந்தனையைப் பற்றியும், நடிப்பைப் பற்றியும் சிலாகித்து பேசி, பொழுதைக் கழிப்பதில் உள்ள மகிழ்ச்சி வேறெதிலும் கிடைப்பதில்லை என்ற மனப்போக்கில் வாழ்நாளைக் கடத்திக் கொண்டிருக்கிறோம்.

நாமாய் ஒன்றை சிந்திக்காத வரையில், இனப்பற்றும், மொழிபற்றும், தேசப்பற்றும் ... எங்கிருந்து வந்து நம்மில் நங்கூரமிட்டு விடப் போகிறது?

முன்பொரு நாளில் சுதந்திரம் என்றால் என்ன என்பதை உணர்ந்து, அதற்காக போராடி , இன்னுயிர் நீத்த தியாகிகளுக்கு என் தலை தாழ்த்தி வணக்கமும் , நன்றியும் உரித்தாக்கிக் கொள்கிறேன்.

Aug 12, 2010

உசுரே போகுது





சூரியன்
ஒளியால்
நீரை
உறிஞ்சுவது போல்

கூரிய
விழியால்
என்னுயிரை
நீயும்.....!


*** *** ***