Nov 26, 2011

வீரர்களைக் காப்போம்

சாப்பாட்டு மேஜையில் இருக்கும் தட்டை எடுத்து குழந்தையொன்று விளையாட ஆரம்பிக்கின்றது.

அப்பொழுது ....

டேய்....உடைத்துவிடாதே.கீழே வை தொடாதே..!

கொஞ்ச நேரத்தின்பின் பார்க்க.....குழந்தை மீண்டும் அந்தத் தட்டைக் கையில் எடுத்துக் கொள்கின்றது.மறுபடியும்...டேய் அதைத் தொடாதே.கத்துவது காதில் விழுகிறதா இல்லையா...!

பிறகும் திரும்பிப் பார்க்க....மீண்டும் அந்தக் குழந்தை அதையே தான் செய்து கொண்டிருக்கின்றது.

இதுவே பல சந்தர்ப்பங்களில் நடைபெறக் கூடிய நிகழ்வுகள்..!

குழந்தைகளுக்கு உத்தரவிட முடியும்.அவர்கள் அதனைக் கேட்காத பொழுது மீண்டும் அதே உத்தரவை இட்டுக் கொண்டே இராமல் குழந்தையைக் கண்டு கொள்ளாமல் இருந்து விட வேண்டும்.

இது மாதிரியான சூழ்நிலைகள் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?

சிலர் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்,சிலர் அடிக்க வேண்டும்,சிலர் அது குழந்தை தானே என்று விட்டு விட வேண்டும் குழந்தையிடம் அதிகம் எதிர்பார்க்க முடியாது என்றும் கூறுவார்கள்.

உண்மையில் நல்லொழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்குவதற்கு பெற்றோர்கள்தான் முயற்சி செய்ய வேண்டும்.இதுவே சமூகத்தின் எதிர்பார்ப்புமாகும்.

பெற்றோர்களைப் பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கும். குணாதிசயங்கள் இருக்கும்.இருப்பினும் குழந்தைகளை இப்படித்தான் நடத்த வேண்டுமென்ற பொதுவானதொரு வழிமுறை இருக்கின்றது.அதனைப் பின்பற்றினால் ஒழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்க முடியும்.நாம் நினைத்தமாதிரியெல்லாம் குழந்தைகளை வளர்த்து விட முடியாது.திட்டமிட்ட அடிப்படையில் அவர்களை வழிநடத்தும் பொழுது நல்லபல விளைவுகள் ஏற்படும்.

1. இளமையில் கல்வி.

2. கோபமான நிலையில் குழந்தைகளுக்கு உத்தரவிடாதீர்கள்.

3. பெற்றோர்கள் இணைந்து முடிவெடுத்துச் செயல்படுங்கள்.

4. எதிலும் உறுதியாக இருங்கள்.அதையே குழந்தைக்கும் சொல்லிக் கொடுங்கள்.

5. குழந்தைகளிடம் பொய் பேசாதீர்கள்.

6. அடம் பிடித்து அழுகின்றதா...விட்டு விடுங்கள்.

7. தவறிழைத்தால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுங்கள்.உங்களது தவறுக்கும் மன்னிப்புக் கேளுங்கள்.குழந்தையின் தவறுகளையும் மன்னித்து விடுங்கள்.

8. இளமையிலேயே கடவுள் அல்லது மனச்சாட்சியை அறிமுகப்படுத்துங்கள்.

9. கீழ்ப்படிதல் போன்ற நல்லொழுக்கங்களைக் கற்றுக் கொடுங்கள்.

த்தனையும் நம் ஈழக்குழந்தைகளுக்குக் கிடைக்கிறதா என்றால் பெரிதொரு கேள்விக்குறிதான் !

எலும்பும் தோலுமாய் ஒட்டிய வயிறோடு அந்தக் குழந்தைகள் செய்த ஒரே தவறு...தமிழச்சி வயிற்றில் தரித்தது தான்! சோமாலியக் குழந்தைகளை விட மோசமாக வயிறு ஒட்டிப்போய்க் கிடக்கும் ஈழத் தமிழ்க் குழந்தைகள் இன்று சாவின் நுனியில் அவல வாழ்வுக்குள் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன.

தாய்-தந்தை உறவுகளைப் பிரிந்த ஓலங்கள்...உறவுகளைப் பற்றி நினைக்கக்கூட சுவாதீனமில்லாமல் வயிற்றைத் தடவும் பசிக் குரல்கள்...எங்கே போவதெனத் தெரியாமல் பிரமை பிடித்து அலையும் பரிதாபங்கள்... என ஈழம் இன்று வெளியில் தெரியா மரணக் கேணியாய் ஆகியிருக்கிறது.

பன்னாட்டு அமைதி அமைப்புக்களும் ஈழத்தில் குழந்தைகள் மீது நடத்தப்படும் வன்கொடூரத்தை பகிரங்கமாகக் கண்டித்திருக்கின்றன.ஆனால் சிங்கள ராணுவத்தின் வெறிகொண்ட கொடூரத் தாக்குதல் சத்தங்களில் அந்தக் குரல்கள் இலங்கை அரசுக்கு கேட்பதே இல்லை!

வவுனியாவில் இருக்கும் சுகாதாரத் துறை ஊழியர் ஒருவர் பேசும்போது"ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் தங்கி இருக்கும் குழந்தைகளில் முக்கால்வாசிப்பேருக்குக் காது மந்தமாகி விட்டதெனவும்,ராணுவப் பீரங்கிகளின் கொடும் சத்தம் அவர்களின் செவிப் பறையைப் புண்ணாக்கி விட்டதெனவும்,மனரீதியாகவும் அந்தக் குழந்தைகள் பெரிய அளவில் பாதிக்கப் பட்டிருக்கின்றன என்றும் சொல்கிறார்.

ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு மக்கள் கொண்டு வரப்பட்டதுமே உடனடியாக குழந்தைகள் தனியாகவும் பெற்றோர்கள் தனித் தனியாகவும் பிரிக்கப்படுகிறார்கள்.பெற்றோரை விட்டுப் பிரிக்கப்படும்போது குழந்தைகள் கதறும் கூக்குரலை மனசாட்சியுள்ள ராணுவத்தினர் சிலராலேயே பொறுத்துக்கொள்ள முடிவதில்லை.தனிமைப்படுத்தி அல்லாடும் அந்தக் குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு ஒரு தடவைதான் உணவு.

பசியால் தவித்த பத்து வயதுச் சிறுவர்கள் இருவர் கம்பி வேலியை வளைத்துத் தப்பிக்க முயன்றபோது ராணுவத்தினரிடம் பிடிபட்டனர்.மொத்தக் குழந்தைகளும் பார்க்க அந்தச் சிறுவர்கள் மீது நடத்தப்பட்ட வெறித்தனமான அடி எல்லோரையும் உலுக்கி விட்டது.ராணுவத்தின் தாக்குதலில் காயமடைந்த குழந்தைகள் மருந்துக்கு வழியில்லாமல் வெயிலில் எரிச்சல் தாளாமல் துடிதுடித்துப் போகிறார்கள்.மதிய வேளைகளில் ராணுவத்தினர் வரும்போது,'ஆமி மாமா சோறு போடுங்கோ...' என முகாம் குழந்தைகள் பசி மயக்கத்தோடு ஈனஸ்வரத்தில் கெஞ்சுவதைப் பார்க்கையிலேயே நெஞ்சடைத்துவிடும்!

பாவம் பசித்த வயிற்றுப் பிஞ்சுகளுக்கு எமன்களை உறவுகொண்டாடுகிறோம் என எப்படித் தெரியும்? அதிலும் சில குழந்தைகள் கொடுக்கப்படும் ஒருவேளை சாப்பாட்டையும் கூட வற்புறுத்திக் கொடுத்தாலும் சாப்பிடாமல் பித்துப் பிடித்துத் திரிகின்றன.கொஞ்சம் விவரமான குழந்தைகளைத் தனியே அழைத்துச் செல்லும் ராணுவத்தினர் அவர்களை என்ன செய்கிறார்கள் என்றே தெரிவதில்லை!

அண்ணன்-தம்பி,அக்கா-தங்கை என உறவு வழியிலான குழந்தைகளும் கூட அங்கே நெருங்க விடாமல் கெடுபிடி காட்டப்படுகிறது.ராணுவத்தின் நடவடிக்கைகளை ஆழமாகக் கவனித்தால்...இந்தக் குழந்தைகளை மனரீதியாக சிதைத்து பலவீனப்படுத்த வேண்டும் என்கிற வெறி அப்பட்டமாகத் தெரிகிறது.வவுனியா மாவட்ட கலெக்டரான மிஸஸ் சார்லஸ் இந்த உண்மைகளை உலக அமைப்புகளின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார். பத்துக்கும் மேற்பட்ட ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள ஈழக் குழந்தைகளுக்கு தொடர்ந்து இத்தகைய கதிதான் என்கிறார் வேதனை மேலிட.

தாக்குதலுக்கு ஆளாகிக் கிடக்கும் குழந்தைகள் குறித்து வருகிற செய்திகளோ இதைவிடக் கொடூரம்...!




கடந்த இறுதி யுத்தகாலங்களில் பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஆயிரக்கணக்கில் இறந்திருக்கின்றனர்.3000-4000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கை-கால்களை இழந்து பெருங்காயங்களோடு அல்லாடிக் கொண்டிருக்கின்றன.ரத்தத் தொற்று வியாதிகள் பரவி நிறையக் குழந்தைகள் படுத்த படுக்கையாகி எப்போது மரணம் என்ற நிலையில் கிடக்கின்றன.12 வயதுக்கு மேற் பட்ட ஆண் குழந்தைகள் ராணுவத்தினரால் தேடித்தேடி அழிக்கப்படுகின்றன."எதிர்காலத்தில் யாரும் போராளியாக உருவெடுத்துவிடக் கூடாது" என்பதற்காகத்தான் இப்படி திட்டமிட்டுச் செய்கிறது ராணுவம்.

சிங்களவர்களின் அந்தரங்க சொர்க்க புரியாக அரசாலேயே அறிவிக்கப்பட்டிருக்கும் அனுராதபுரத்தில் இதுநாள்வரை தமிழ்ப் பெண்கள் விபசாரத்தில் ஈடுபட்டதாகத் தகவல்கள் இல்லை.ஆனால் இப்போது ஈழத்தில் இருந்து பிடிக்கப்பட்ட பதின்மூன்று வயதுப் பெண் குழந்தைகள் பலர் அங்கே விபச்சார வற்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்.அதில் ஒரு சிறுமி ராணுவத்தினர் தன் மீது கட்டவிழ்த்துவிட்ட காமக் கொடூரங்களையும் வெறித்தனங்களையும் ஒரு கடிதமாக எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டாள்.

அடுத்த தலைமுறைப் பிஞ்சுகளும் எங்கே உரிமைக்காகப் போராட கிளம்பிவிடுமோ என்ற பயத்தில் சிங்கள ராணுவம் நடத்துவது 'இனப் படுகொலை' மட்டுமல்ல...'ஈனத்தனமான படுகொலை'யும் கூட!

ஈழத்தில் நடத்தப்பட்ட யுத்தம் குழந்தைகளின் மனங்களில் ஆறாத காயங்களாக படிந்திருக்கின்றன.குழந்தைகள் எந்த அரசியல் நோக்கங்களுமற்றவர்கள்.
குழந்தைகள் அமைதியான உலகத்தை எப்பொழுதும் எதிர்பார்க்கிறார்கள்.ஆனால் ஈழத்துக் குழந்தைகளுக்கு அந்த உலகம் மறுக்கப்பட்டிருக்கிறது.அழிவும் அச்சமும் கொண்ட வாழ்க்கைதான் தொடர்ந்தும் பரிசளிக்கப்படுகிறது.குழந்தைகளின் மனங்களிலிருந்து எழும் கோபத்தையும் விரக்தியையும் யாரும் கண்டுகொள்ளுவதில்லை.அவைக்கான காரணங்களைத் தேடுவதில்லை.குழந்தைகளை அற்பங்களாக பார்த்துவிட்டு கடந்து கொண்டிருக்கிறார்கள்.

"குழந்தைகளிடம் இருக்கிற வார்த்தைகளும் கோபமும் விரக்தியும் எந்த அரசியல் சுயநலக் குறிக்கோள்களையும் கொண்டிருப்பதில்லை.அவர்களின் கோபங்கள் எங்கிருந்து ஏன் வருகின்றன என்பதுதான் முக்கியமானது.அழகான குழந்தைகளின் மனவுலகம் பல்வேறு அரசியல்களுக்காக தொடர்ந்தும் சிதைக்கப்படுகின்றன."

அண்மையில் யாழ் நூலகத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் அதிசிறந்த புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் முன்னணிப் பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களில் பரமேஸ்வரன் சேதுராகவன் என்ற மாணவன் அகில இலங்கை ரீதியாக 194 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றதற்காக கௌரவிக்கப்பட்டான்.தனது தாய் தந்தையருடன் வருகை வந்த சேதுராகவன் அன்றைய நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தனவின் கால்களில் விழுந்து வணங்க மறுத்திருக்கிறான்.

வன்னி யுத்தத்திற்குள் வாழ்ந்து அதிலிருந்து மீண்டு தடுப்புமுகாம் சென்று அங்கிருந்து மீள்குடியேறி சமகால வன்னிச் சனங்கள் வாழும் வாழ்க்கைக்குள் இருந்து வந்த இந்தச் சிறுவன் இன்றைய ஈழத்து மக்களிடத்தில் உள்ள உணர்வை வெளிப்படுத்தியிருக்கிறான். அவனிடம் எந்த அரசியலும் இல்லை.தனது எதிர்ப்பு உணர்வை மறைக்கவும் தெரியவில்லை.கல்வி அமைச்சரின் கால்களில் விழுவதற்கு அவன் விரும்பவில்லை என்ற நிலைப்பாடு அரசு மீதான வெறுப்புணர்வைத்தான் காட்டுகிறது.சிறுவர்களின் வெறுப்பு சாதாரணமானதல்ல.அவை சிறுவர்களின் வெள்ளை மனவுலகத்தில் இருந்து எந்த ஒளிவு மறைவுமின்றி ஏற்படுகின்றது.

அவன் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினரோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியில் இருப்பவனோ அல்ல.வாக்கு அளிக்கின்ற வயதைக் கொண்டவனுமல்ல. போருக்குள் பிறந்து வாழ்ந்ததைத் விட வேறு எதையும் அறியாதவன்.எதற்காக கால்களில் விழ மறுத்திருக்கிறான்?

சேதுராகவனுக்கு பத்து வயதே ஆகிறது.கடந்த 2001 ஆம் ஆண்டில் பிறந்திருக்கிறான். யுத்த்தில் பிறந்து யுத்தத்தில் வளர்ந்து யுத்தத்தில் படித்துத் தனது வாழ் நாட்கள் முழுவதையும் யுத்த காலத்தில் கழித்திருக்கிறான்.அவன் பார்த்திருந்த காட்சிகள் எல்லாமே யுத்தம்தான்.தமிழன் என்பதனால்தான் சேதுராகவன் கால்களில் விழ மறுத்தான் என்று மட்டும் சொல்லிவிட இயலாது.இது ஒரு குழந்தையின் எதிர்ப்புணர்வு.காயங்களினால் ஏற்க மறுக்கிற எதிர்ப்பு.துயரமும் அழிவும் கொண்ட வாழ்க்கையினால் ஏற்பட்ட உணர்வு.யாரும் அவனுக்கு இதைச் சொல்லிக் கொடுத்திருக்க மாட்டார்கள்.அவனாகவே இதைச் செய்திருக்கிறான்.சேதுராகவனின் மனம் என்பது ஈழத்தின் ஒவ்வொரு குழந்தைகளுக்குள்ளும் உள்ள மனம்.

ஈழப் போரைக் கடந்த பல குழந்தைகளின் நெஞ்சில் அந்தப் போர்க்காட்சிகள் ஆழமாகப் படிந்திருக்கின்றன.போருக்குப் பிந்தைய இன்றைய வாழ்விலும் அதன் தாக்கங்களை உணரக் கூடியதாக இருக்கிறது.அவர்கள் அந்தப் போரின் இறுதி நாட்களைப் பற்றியும் மரணக் காட்சிகளையும் பற்றியும் மறக்காமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.போரின் குழந்தைகளாய் நெஞ்சில் படிந்த இந்தக் காயங்களை துடைத்தெறியக் கூடிய வாழ்வை அவர்கள் எட்டவில்லை என்பதுதான் துயரம்.

உலகில் குழந்தைகளின் நலம் பற்றித்தான் அதிகம் பேசுகிறார்கள்.போரின் குழந்தைகளாய் பிறந்து வாழும் ஈழக் குழந்தைகளின் எதிர்காலம் பற்றி யார் சிந்திக்கிறார்கள்?அரசாங்கம் ஈழத் தமிழர்களின்மீது தொடர்ந்தும் அடக்குமுறைகைளையும் அழிவுகளையும்தான் கட்டவிழ்த்து விடுகிறது.எமது குழந்தைகள் அந்தச் சூழலில் வளர்வதுடன் அதையே தங்கள் முதல் பாடமாக படிக்கிறார்கள்.குழந்தைகளின் மனங்களை வெல்ல இந்த அரசால் முடியவில்லை என்பதுதான் இங்கு உணர்த்தப்படும் பெரும் செய்தி.

சமாதானம் கொண்டு வரப்பட்ட பூமி என்றும்,பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட தேசம் என்றும் வெற்று அரசியல் வார்த்தைகளைச் சொல்லி ஈழத் தமிழர்களின் வாழ்வுலகத்தை மறுக்கும் அரசியலை செய்யும் பொழுது,ஈழக்குழந்தைகள் எத்தகைய பாதிப்பை எதிர்கொண்டு வாழ்கின்றார்கள் என்பதும்,இந்த வடுக்கள் நெஞ்சில் எப்படிப் படிந்திருக்கின்றன என்பதும் எப்பொழுது புரியப்படும்?

ஈழக் குழந்தைகள் நிம்மதியாக வாழும் ஒரு உலகத்தைத் தேடுகிறார்கள்.‘ஒரு தடியையோ சில கட்டைத் துண்டுகளையோ இந்தக் குழந்தைகள் தங்களோடு எடுத்தே செல்கின்றனர்....!



நன்றி : உப்புமடச்  சந்தி ( ஹேமா)
http://santhyilnaam.blogspot.com/2011/11/blog-post_25.html

18 comments:

  1. ஒரு வகையா ஆரம்பிச்சு இப்படி இதயம் கணக்கும் படி முடிச்சிட்டீங்களே...

    ReplyDelete
  2. ஆரம்பத்துல குழந்தைகள் பற்றி சொல்லிட்டு போக போக ஈழ குழந்தைகளுக்கும் கிடைக்குமா என்று கேள்வி கேட்டுள்ளீர்கள்.

    ReplyDelete
  3. பிஞ்சு நெஞ்சில் விதிக்கவேண்டிய நல்ல விதைகளை
    வரிசைப்படுத்தி அழகாக சொன்னமைக்கு நன்றிகள் பல நண்பரே...

    பதிவை ஈழக் குழந்தைகள் மனநிலையுடன் கோர்த்துவிட்டது மனதை கனக்கச் செய்கிறது...

    ReplyDelete
  4. மனசுக்கு கஷ்டமா இருக்குய்யா...

    ReplyDelete
  5. குழந்தைகள் படும் பாடு.... மனதை கனமாக்குகிறதப்பா...
    நாம இப்படி ஒரு வழியை/வலியை காட்டி விட்ட பிறகு இவ்வளவு பெரிய கிரிமினலாகிட்டானேன்னு வருத்தபடுகிற நிலைதான் வரும்....

    ReplyDelete
  6. மனதை என்னவோ செய்கிறது!

    ReplyDelete
  7. உள்ளத்தை கனக்கச் செய்யும் பதிவு இது உலக மக்களின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலையில் இருக்கிறோம் நாம் அனைவரும் இடுகைக்கு பாராட்டுகள்

    ReplyDelete
  8. மனம் கனமாய்ப் போனது..

    ReplyDelete
  9. நெஞ்சம் பத பதைக்கும் பதிவு அண்ணே ..
    இந்த உலகமகா தலைவர்களின் கண்மூடிய அரசியலில் தமிழ் குழந்தைகளின் உணர்வும் , மனசும்
    மழுங்க படுவது உள்ளதை கணக்க வைக்கின்றது ,,,
    நேற்று ஒரு மானங்கெட்ட ஈனப்பிறவி சொல்கிறது ஈழத்தில் இறந்தவர்கள் அனைவரும் இயற்கை மரணம் அடைந்தவர்களாம்...
    இவனின் தலைவனை மட்டும் படுகொலை செய்து விட்டார்களாம் ... அப்படியே அந்த கழிவை காரி துப்ப வேண்டும் போலிருந்தது ...

    ReplyDelete
  10. நெஞ்சு கனக்குறது தங்கள் ஆக்கத்தைக் கண்டபோது .இந்த நிலை மாறாதோ ...........!!!! நன்றி சகோ பகிர்வுக்கு .

    ReplyDelete
  11. இளமையிலேயே கடவுள் அல்லது மனச்சாட்சியை அறிமுகப்படுத்துங்கள்.வாழ்த்துக்கள் நண்பா
    அருமையான பதிவு .
    அன்புடன்
    யானைக்குட்டி

    ReplyDelete
  12. இளமையிலேயே கடவுள் அல்லது மனச்சாட்சியை அறிமுகப்படுத்துங்கள்.வாழ்த்துக்கள் நண்பா
    அருமையான பதிவு .
    அன்புடன்
    யானைக்குட்டி

    ReplyDelete
  13. ஈழத்திற்கு நம்மால் ஏதாவது நல்லது நடக்குமா என்று எத்தனையோ முயற்சிகள் சில நல்லவர்களின் ஆதரவுடன் நடந்து கொண்டுதான் இருக்கிறது....ஆனாலும் தமிழ்நாட்டு மக்கள் அனைவருமே ஈழத்திற்காக வீதிக்கு வந்தால் மட்டுமே முடிவு என்பது உண்டு..இல்லையென்றால்
    தமிழ்நாட்டிற்கும் நாளை இதே நிலைதான்.

    ReplyDelete
  14. நல்லதொரு பகிர்தல் நண்பா..

    இப்படித்தான் ஒருகுழந்தைக்கு விருந்தினர் பணம் வைத்துக்கொடுத்தார்கள்..

    விருந்தினர் சென்றவுடன் பணத்துக்கும் காகிதத்துக்கும் வேறுபாடுதெரியாத அந்தச் சின்னக் குழந்தையிடம் பணத்தைக் கிழித்துவிடாதே என்று சொல்லிககொண்டே இருந்தார்கள்..

    குழந்தை கிழிக்கப்போகிறதே என்று அதனிடமிருந்து அந்தப் பணத்தைப் பறிக்கப்போனார்கள்..

    அப்போது அந்தக்குழந்தை என்ன நினைத்ததோ பணத்தைக் கிழித்தே விட்டது..

    குழந்தை வளர்த்தல் ஒரு கலை நண்பா..

    ReplyDelete
  15. வலிகள் வாய்களுக்குள்ளேயே அமுங்கிப் போகிறது...

    வார்த்தைகள் இருந்தும் அதற்கு ஒலி கொடுக்கத் தென்பில்லை...

    சத்தி இருந்தும் செத்தபிணமானேன்...

    ReplyDelete
  16. நல்ல பதிவு.
    எனது முக நூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  17. குழந்தைகளை ஒரு போதும் கோபமாக அதட்டாதீர்கள், குழந்தைகளுக்கு மன்னிப்புக் கேட்கச் சொல்லிக் கொடுங்கள் -இப்படி நீங்கள் சொன்ன விஷயங்களை ரசித்துப் படித்துக் கொண்டே வந்தேன். பிற்பகுதியில் நீங்கள் சொல்லியிருந்தவற்றைப் படித்ததும் மனம் பாரமானது. கண்கள் ஈரமானது.

    ReplyDelete
  18. உள்ளத்தை கனக்கச் செய்யும் பதிவு இது உலக மக்களின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலையில் இருக்கிறோம் நாம். அனைவரும் இடுகைக்கு பாராட்டுக
    copy paste seidhuviten mannikkavum
    ennidam thamizh ezhuththuru illai
    surendran
    surendranath1973@gmail.com

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.