Jun 26, 2012
Jun 21, 2012
கண்ணி
பிரத்யேகமான இழை கொண்டு
பின்னவில்லை
#
உனக்கான வலை கண்ணியை.
உன்
பேச்சுக்களிலிருந்தே
பிரித்தெடுக்கிறேன்
உறுதியான நாரிழைகளை.
உனை வெல்ல
என் முதலீடு
வலை பின்னும்
விரல் நுணுக்கம் மட்டுமே.
வலைக்குள் சிக்காத
கலைமான் நீயென அறிவேன், எனவே
பின்னும் முன்னே
உள் வைத்து விட்டேன் உன்னை.
#
Jun 12, 2012
செவத்தா
நிலக்கடலைச் செடிக்கு களை கொத்திக் கொண்டிருந்தாள்.
“செவத்தா நல்லாயிருக்கியாம்மா” வரப்பு வழியில் நின்றபடியே கேட்டேன். எங்க நிலத்துக்கும், அவங்க நிலத்துக்கும் பொதுவான வரப்பு தான் எங்க கிராமத்துக்கு போகும் கொடிவழி. வரப்புகளின் வழியே வளைந்து நெளிந்து செல்லும் பாதைக்கு கொடிவழி என்று பேர்.
மிகுந்த கவனத்துடன் செடிகளை ஒதுக்கி விட்டு களைச்செடிகளைக் கொத்திக் கொண்டிருந்தவள் குரல் வந்த திசையில் திரும்பி பார்த்து தலையில் சுற்றியிருந்த முக்காட்டு துணியை எடுத்து கையில் வைத்துக் கொண்டு,
“கண்ணண்ணனா, எப்பண்ணா வந்த? நல்லாகீரயா?” என்றாள்.
தோற்றமே முற்றிலும் மாறிப்போயிருந்தாள். இவள் தான் செவத்தா என்றால் எங்கள் ஊர் காக்கா குருவிகள் கூட நம்பாது.
”எனக்கென்னம்மா நல்ல்ல்லாருக்கேன். முந்தாநா வந்தேன். ஒன்றை மாசம் லீவு.”
“புள்ள குட்டிகள உட்டுபோட்டு என்னா வெளிநாட்டு பொழப்போ. காலாகாலத்துல ஊரு பக்கம் வந்து பொழைக்கிறத பாருண்ணா.”
“என்னாம்மா பன்றது? நம்மள பெத்தவங்க தான் இந்த மானம் பாத்த பூமிய நம்பியே இருந்துட்டு நமக்கும் ஒழுங்கான படிப்பு கெடைக்க வழியில்லாம உட்டுட்டாக. எதோ கத்துகின ‘அ’னா, ‘ஆ’வன்னாவ வெச்சி வயித்த கழுவுனா போதுமேன்னு கெடைக்கிற வேலைய செஞ்சி பொழைக்கிறோம். நம்ம பொழப்பு தான் இப்படியாகி போச்சி. புள்ளைகளயாவது நல்ல பள்ளிகோடத்துல படிக்க வச்சி கண்ண தெறந்து வெச்சிரலாமேன்னு தான் அங்க போயி சந்நாசி மாதிரி தனியா கெடக்கறேன்.”
“ஹூம்! என்னமோ. நீ சொல்றதும் மெய்தான். என் கண்ண தான் எங்கப்பன் அம்மாவே குருடாக்கி உட்டுட்டாக. போன காலம் இனி திரும்ப போதா? உடுண்ணா.”
“ஹூம்! நீ ஏம்மா தனியா கள கொத்தினு இருக்கிற. கூலிக்கு ஆளுங்கள கூப்ட்ருக்கலாமில்ல?”.
“இப்பல்லாம் யார்ணா வராங்க? நாசமா போன கெவர்மெண்ட்டுகாரன் நூறுநாளு வேலன்னு ஒன்ன கொணாந்து கொல்லி வேலைக்கி ஆளுக வரவுட்டாம பண்ணிட்டாக. ஒடம்பு வளஞ்சி வேல செய்யினும்னா ஜனங்களுக்கும் வலிக்குது.”
அவள் சொல்வதும் உண்மை தான். இன்னும் கிராமத்தில் ஒட்டிக்கிடக்கும் கொஞ்ச நஞ்ச ஆட்களும் நடையா நடந்து கெஞ்சினாலும் விவசாய வேலைக்கு ஒருத்தரும் வருவதில்லை. நூறுநாள் வேலை திட்டத்தை அறிமுகப்படுத்தி விவசாய வேலைக்கு ஆட்கள் வராமல் கெடுத்து விட்டது அரசு. போதாக்குறைக்கு இலவச அரிசி வேறு. எப்படியாவது “தன் கட்சி” ஆட்சியை பிடித்தாக வேண்டும் என்ற ஆசையில் கண்டதையெல்லாம் இலவசமா கொடுக்க ஆரம்பித்து விட்டது அரசாங்கம். அநேகமாக அடுத்த தேர்தல்களில் இலவச மனைவி, இலவச கணவன், இலவச குழந்தை என தேர்தல் அறிவிப்புகள் வந்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை. நான் கூட இன்னும் திருமணப்பதிவு செய்யவில்லை. அடுத்த தேர்தலுக்குப் பின் பதிவு செய்துக்கலாமே!
“அப்பிடிதாம்மா ஆகிப்போச்சி இப்ப. நம்ம கொல்லிலையும் கொஞ்சம் அளவுக்குதான் வெரை போட்ருக்குது. மீதியெல்லாம் கரம்பா தான் கெடக்குது.”
”பாவம்ணா ஒம்பொண்டாட்டி தனியாளா ஒருத்தி புள்ளைகள பாப்பாளா? கொல்லி வேலைய பாப்பாளா? நான் இந்த கொல்லில கல்லக்கொட்ட போடறதுக்கே தம்பி சின்னவன ராவும் பகலுமா கெஞ்சி ஏறு ஓட்ட வெச்சேன். அவன் எப்ப பாத்தாலும் படிக்கிறேன், படிக்கிறேன்னு சொல்லி பொழுத கழிக்கிறான். மத்த நேரமெல்லம் கிரிகெட்டு ஆடறதுக்கு ஓடிர்ரான்.”
”ஆமாம்மா. இந்த காலத்து பசங்களுக்கு படிக்கிறத விடவும் கிரிக்கெட்டு தான் பொழப்பா போச்சி. சொன்னா எவன் கேக்கறான். நாள பின்ன அஞ்சுக்கும், பத்துக்கும் அல்லாடும் போது தெரியும் உடு. நல்லத சொன்னா கேக்கற காலமா இது?”
“வெவசாய பொழப்பு இப்பிடியே போனா சோத்துக்கு வழியத்து சாகப்போது ஜனம். செரிண்ணா. வெகுலு ஏர்ரதுக்குள்ள உன்னம் அமுட்டு கொத்திட்டு ஊட்டுக்கா போறன். நேரங்கெடச்சா புள்ளைகள கூட்டிக்கினு சாயங்காலமா ஊட்டானக்கி வா.”
சரியெனச் சொல்லி விட்டு வீட்டுக்கு நடையை கட்டினேன். ஆடிமாத காற்று சுழற்றி வீசி நெட்டிநெட்டி தள்ளியது. ஆடிக்காற்றுக்கு எதிர்திசையில் நடப்பதுகூட பெரும் சாகசம் தான்.
பாவம் செவத்தா. அவள் தான் எதையுமே எதிர்க்காமல் வாழ்க்கை போகும் திசையிலேயே போய் கொண்டிருக்கிறாள். நக்கீரனே மீண்டும் பிறப்பெடுத்து வந்தாலும் அவளிடம் குற்றங்குறை காண முடியாது. இறை நம்பிக்கை உள்ளவன் நான். ஆனாலும், இவளது வாழ்வை நினைத்தால் மட்டும் இறை என்பது பொய்யோ என்னும் ஐயம் வருவதை தவிர்க்க முடியவில்லை என்னால். வாழைக்கன்று போல இருந்தவளின் வாழ்வு ஆடிக்காற்றில் கிழிந்து தொங்கும் வாழையிலைப் போல மாறிப்போனதைக் கண்டால் யாருக்கு தான் மனம் வெம்பி போகாது?
இளவயது செவத்தா, பெயருக்கேற்றார் போல நல்ல சிவந்த நிறம். அழகும் கூட. மீசை முளைக்காத முறை பையன்கள் கூட இவள் மேல் காதல் ஆசை கொண்டிருந்ததை ஊரே அறியும். சுறுசுறுப்பில் எறும்பும் தோற்கும் அவளிடம். அம்மாவுடன் சேர்ந்து ஒன்பது மணிக்குள்ளாக அவ்வளவு வீட்டு வேலைகளையும் இழுத்து போட்டு செய்து முடித்து விட்டு, மேய்ச்சலுக்கு ஆடுகளை ஓட்டிக்கொண்டு காட்டுக்கு போவாள். மாலை திரும்பி வரும்போது பெரிய சுமையாக விறகும் சுமந்து வருவாள். உள்ளூரில் சில அத்தைமார்கள் என் வீட்டுக்கு தான் மருமகளாக வரப்போகிறாள் என பெருமையாய் சொல்லிக்கொள்வார்கள். அத்தனை பேர் மனதிலும் அந்தளவிற்கு இடம்பிடித்திருந்தாள். ஆனால் இவள் மனதில் இடம் பிடித்திருந்தவன் எதிர்வீட்டு வெள்ளையன் தான்.
வெள்ளையன் செவத்தாளை விடவும் ஒரு வயது இளையவன். ஆனால் அவன் உடற்கட்டைப் பார்க்கும் போது வயது வித்தியாசம் தெரியாது. பணிரெண்டாம் வகுப்புவரை படித்திருந்தான். மேற்கொண்டு படிக்க வீட்டில் அனுமதிக்கவில்லை. பாவம் கூலிவேலை செய்யும் அவனது பெற்றோர்கள் இன்னும் உள்ள மூன்று பிள்ளைகளையும் படிக்க வைக்கனுமே. அதோடு மட்டுமில்லாமல் அவனது அப்பாவிற்கும், அம்மாவிற்கும் ஏழாம் பொருத்தம். எந்நேரமும் சண்டை தான். அவர்கள் எப்படி ஒன்றாய் படுத்து நான்கு பிள்ளைகள் பெற்றுக்கொண்டார்களோ தெரியவில்லை..
தருமபுரியில் இராணுவத்துக்கு ஆள் எடுப்பதாக செய்தித்தாளில் பார்த்தேன். வெள்ளையனுக்கு நல்ல உடற்கட்டு இருந்ததால் நானும், நண்பர்களும் அவனை இராணுவத்துக்கு முயற்சிக்க சொன்னோம். ஒரு வாரம் ஓடுவதற்கு பயிற்சி எடுத்துக்கொண்டு தருமரி சென்றான். முதல் முயற்சியிலேயே தேர்வாகி விட்டான். எழுத்து தேர்விற்கு சென்னைக்கு வரச்சொன்னார்களாம்.
வந்ததும் என்னிடம் சொன்னான்.
“கண்ணா. அந்த க்ரவுண்ட பாத்ததுமே ஒன்னுக்கு வரமாதிரியாயிடுச்சிடா. எவ்ளோ பெரிய க்ரவுண்டு தெரியுமா? தாயோளிக, நாலு ரவுண்டு ஓட வைக்கிறாக. மூணாவது ரவுண்டு ஓடும்போதே மூச்சு தெணருச்சி. ஒரு செகண்டு மனசுக்குள்ளாற செவத்தா தெரிஞ்சா. அவளுக்காகவாவது ஜெயிச்சே ஆகனும்னு தம் கட்டி ஓடனேன். செவத்தா புண்ணியத்துல நானும் ஜெயிச்சிட்டேன்.” வெள்ளந்தியாய் சொல்லிவிட்டு என்னைப் பார்த்தான். தொடர்ந்து,
“ஆமாண்டா. அவள தான் கல்யாணம் கட்டப்போறேன். பாவம்டா அவ. ஆடு மேய்க்க பொறந்தவளாடா அவ. எங்கயோ ராஜகுமாரியா பொறந்திருக்க வேண்டியவ நம்ம குடியானவங்க வயித்துல வந்து பொறந்து தொலைச்சிட்டா. ட்ரைனிங் முடிஞ்சி மொத லீவுல வந்ததுமே கல்யாணம் பண்ணிக்க போறேன். இனிமே பட்டாளத்தான் பொண்டாட்டி அவ.” என்றான் உணர்ச்சி வசப்பட்டவனாக.
ஒரு மாதம் கழித்து ராணுவ பயிற்சிக்கு லக்னோ சென்று விட்டான். செவத்தா நல்லவனை தேர்ந்திருக்கிறாள் என என் மனம் அவளை ஆசீர்வதித்தது. ஆனால், அவளது பெற்றோருக்கு தான் அவர்களது வாழ்வை ஆசீர்வதிக்க மனமில்லாமல் போனது. செவத்தாளின் அம்மா ஒரு ராங்கி. வீம்புக்கு “எதோ” செய்வது என்பார்களே. அந்த ரக பொம்பளை தான் அவள்.
வெள்ளையனும், செவத்தாளும் ஒருவரையொருவர் விரும்பும் செய்தி அந்த ராங்கி காதுக்கு எட்டிவிட்டிருந்தது. “போயும் போய் எம்மகள அந்த கூறு கெட்ட குடும்பத்துக்கா குடுக்கப்போறேன். அவுக பொழைக்கிற பொழப்பே ஊரெல்லாம் நாறுது. எம்மவள அந்த குப்பையிலயா கொட்டுவேன். எம்மவளோட அலகுக்கும், நெறத்துக்கும் எப்பேர்பட்ட குடும்பத்துல இருந்தெல்லாம் வந்து கேக்கறாக”, என கொக்கரித்துக் கொண்டிருந்தாள். “எதும் நல்ல எடமா வந்தா சட்டு புட்டுனு கட்டி வெரட்டலாம் கழுதைய” என கணவனிடமும் சொல்லி சம்மதிக்க வைத்தாள். அவர் ஒரு அப்புறானி.
ஒருமாத காலத்துக்குள் அவசர அவசரமாக பேசி முடித்து ஒருவனுக்கு செவத்தாளை கல்யாணம் கட்ட ஏற்பாடு செய்து விட்டார்கள். மாப்பிள்ளை பற்றி விசாரித்ததில் முப்பது மைலுக்கு அப்பால் எதோ ஒரு ஊரின் பேரைச் சொன்னார்கள். பெங்களூரில் ஆட்டோ ஓட்டுகிறான் என்றார்கள். ஓரளவு சீர் செனத்தியுடன் ஒரு நன்னாளில் கல்யாணம் கட்டிக் கொடுத்தார்கள். ‘கொடுத்தார்கள்’ என்று சொல்வதை விட ‘கெடுத்தார்கள்’ என்று சொன்னால் மிக பொருத்தமாக இருக்கும்.
ஆறு மாதம் கழித்து விடுப்பில் ஊருக்கு வந்த வெள்ளையனுக்கு எதிர்க்காலம் இருட்டாய் தெரிந்திருக்கும். அதுவரை நாங்கள் யாரும் அவனுக்கு இந்த செய்தியை தெரியப்படுத்தவில்லை. அவன் கனவுக்கோட்டை சிதிலமடைந்ததை பொறுக்காமல் அன்றிரவு அவன் கொண்டு வந்திருந்த மிலிட்டரி சரக்கை அடித்து விட்டு எங்களை எல்லாம் கெட்ட வார்த்தையால் திட்டித்தீர்த்து ஆற்றாமையால் அழுதான். எங்களால் வெறும் ஆறுதல் மட்டும் தான் சொல்ல முடிந்தது. விடுப்பு முடிந்து மீண்டும் சென்று விட்டான். போய் சேர்ந்ததும் எனக்கு கடிதம் எழுதியிருந்தான். “ செவத்தா நினைப்பாகவே இருக்கிறது. அவள் இல்லாத வாழ்வை நினைத்து பார்க்கும் போதே தூக்கிட்டுச் சாகலாம் எனத்தோன்றுகிறது. ஆனாலும், என்னை நிராகரித்த அந்த குடும்பத்தினர் கண்முன்னே ராஜ வாழ்க்கை வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைரக்கியம், தற்கொலை எண்ணத்தைத் தவிடு பொடியாக்கி விட்டது. வாழ்ந்து காட்டுகிறேன் பார்” என சபதம் போட்டு எழுதியிருந்தான். ”அவர்களை தண்டிக்க அது தான் சிறந்த வழி. உன் லட்சியம் நிறைவேற என் வாழ்த்துக்கள்”, என பதிலிட்டேன்.
காலம் யாருக்காக காத்திருக்கப் போகிறது சொல்லுங்கள்? அது ரெக்கைக்கட்டி பறந்து கொண்டு தான் இருந்தது. நண்பர்கள் தன் பிழைப்புக்காக ஆளுக்கொரு திசையில் பறந்தார்கள். எல்லோரும் மீண்டும் எப்போது ஒன்றாய் கூடிக்களிப்போமோ! காலம் தான் பதில் சொல்ல வேண்டும். காலச்சுழற்சியில் சிக்கி செவத்தாவின் பெற்றோர்களும் நொடித்து போனார்கள். ஒழுகும் வீட்டிற்கு கூரைக் கூட மாற்ற முடியவில்லை அவர்களால். ஊர் மாறி விட்டது. மக்கள் மாறிவிட்டார்கள். செவத்தாளின் வாழ்க்கை விசயத்தில் தான் தவறு செய்து விட்டதை அவளின் அம்மா கூட உணர்ந்தவளாகி விட்டாள் என்றால் பாருங்களேன்.
எப்போதாவது கணவனுடன் செவத்தா ஊருக்கு வந்து போவாள். பார்க்கும் சந்தர்ப்பங்களில் வெள்ளையன் பற்றி விசாரிப்பாள். கண்களை துடைத்துக் கொள்வாள். யார் செய்த பாவமோ, செவத்தாளுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் போனது. அவளது கணவன் பெங்களூரிலேயே ஆட்டோ ஓட்டி வருவதாகவும், இரண்டு அல்லது மூன்று மாதத்திற்கொரு முறை ஊருக்கு வந்து போவதாகவும், தன்னை அன்பாக கவனித்துக் கொள்வதாகவும் சொல்வாள். குழந்தைப் பேற்றுக்காக மருத்துவ சோதனை செய்து கொண்டார்களா எனத் தெரியவில்லை.
வெள்ளையனும் உள்ளூரிலேயே ஒரு கரியநிற தேவதையொருத்தியைத் தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொண்டான். அந்த பெண்ணும் சிறந்த குணவதி தான். அவர்களுக்கு இரு குழந்தைகள். பழைய வீட்டை இடித்து விட்டு இரண்டடுக்கு மாடி வீடு கட்டியிருக்கிறான். வீட்டிற்கு வெள்ளைநிற பெயிண்ட் தான் அடித்திருக்கிறான். பார்க்க மாளிகைப்போல் தோற்றமளிக்கிறது.
நானும் வேலை கிடைத்து வெளிநாட்டிற்குச் சென்று விட்டேன்.
அன்று ஞாயிற்றுக்கிழமை. அம்மாவிற்கு போன் செய்த போது செவத்தாளின் கணவனை எங்கோ அநாதைப் பிணமாய் கண்டெடுத்ததாகவும், அவர் தனக்கு எய்ட்ஸ் நோய் இருந்த செய்தியறிந்து தற்கொலைச் செய்து கொண்டு இறந்து போனதாகவும், அதன் பின் தாலியருத்து அனைத்து சடங்குகள் முடிந்ததும் அந்த ஊர் பெரியவ்ர்கள் கூடி செவத்தாளுக்கு குழந்தையும் இல்லை, கணவனும் இல்லை என்பதைக் காரணம் காட்டி அம்மா வீட்டிற்கே அனுப்பி வைத்து விட்டதாகவும் சொல்லி முடித்தாள் எனது அம்மா. செவத்தாளின் வாழ்வு சூன்யமாகிப் போனதைக் கேட்டு ஒரு பாவமும் அறிந்திராத அந்த பெண்ணுக்கு மட்டும் ஏன் இத்தனை சோதனைகளோ என புழுங்கியது என் மனம்.
அடுத்தடுத்த வருடங்களில் செவத்தாளின் பெற்றோர்களும் இறந்து விட்டார்கள். அவளது கணவன் எய்ட்ஸ் நோயால் இறந்து போன காரணத்தால் அவளுடன் யாரும் சரிவர பேசுவதும் பழகுவதும் கிடையாது. அவளுக்கு அந்நோய்தொற்று இருக்குமோ இல்லையோ இன்று வரை அவளுக்கே தெரியாது. யார்யாரோ சொல்லிப் பார்த்தும் மருத்துவச் சோதனை செய்ய ஒப்புக்கொள்ளவில்லை அவள். நான் நோயற்றவள் என்று யாருக்கு நிரூபிக்க வேண்டும்? என்ற கேள்வியுடன் எளிமையாக மறுத்துவிடுவாள். இத்தனை இழப்புகளுக்கு பின்னும் இன்னாரால் தான் என் வாழ்வு கெட்டது என்று ஒருவரையும் சுட்டிக்காட்ட முனையவில்லை அவளின் சுட்டு விரல். இப்போது அவளின் இரண்டு தம்பிகள் சென்னையில் பேக்கரியில் வேலை செய்து வருகின்றார்கள். கடைசி தம்பி படிக்கிறான். அவர்களுக்காகத்தான் மாடாய் உழைக்கிறாள் இப்போதும். அவர்களுக்கு அவள் தான் எல்லாமும். ஆனால் அவளுக்கு?!
செவத்தா இன்னும் அந்த பழைய கூரை வீட்டில் தான் வசிக்கிறாள். எப்போதும் என்னை குடையும் ஒரு கேள்வி, படிக்கும் உங்களையும் ஒருமுறை குடையட்டும். எதிரே இருக்கும் வெள்ளையனின் மாளிகை வீடு இயல்பாய் தூங்க விடுமா செவத்தாளை? அல்லது எதிர்வீட்டு குடிசையை எதார்த்தமாய் பார்க்க நேரிட்டாலும் நிம்மதியாய் தூங்க முடியுமா வெள்ளையனால்?
இவள் வாழ்வை படித்த பின்னும், உங்கள் பிள்ளைகளின் வாழ்விற்காக அனைத்து முடிவுகளையும் நீங்களே தான் எடுப்பீர்கள் என்றால், எக்கேடாவது கெட்டுப் போங்கள்.
இன்னொரு செவத்தா கதையை எழுத தெம்ப்பில்லை எனக்கு.
# # #
நன்றி: ‘அதீதம்’ இணைய இதழ்.
Subscribe to:
Posts (Atom)