Aug 29, 2011

பெற்ற மனம்



என்மகனைக் கண்டீரோ?

அய்யா,
என் மகனைக் கண்டீரோ?
அம்மா,
என் மகனைக் கண்டீரோ?
பத்தொன்பது அகவையில்
காணாமற் போனவன்
இருபது ஆண்டுகளாய்க் காணவில்லை!
தேடிச் சோர்ந்துவிட்டேன்;
முதுமையால் இயலவில்லை!
நீங்கள் உதவிடுவீர்!

கண்கள் பஞ்சடைந்து,
கால்கள் தடுமாறுதையா!
மனிதர்களேஉதவிடுவீர்!
மண்டியிட்டு வேண்டுகிறேன்!
உங்கள் வீட்டுப் பிள்ளைகளில்
ஒருவனாய் ஆடுகிறானோ?

கொண்டாடும் போதிலே
தலைவாழை இலையிலே
உங்கள் வீட்டுப் பிள்ளைக்கு
இனிப்புகள் வைக்கும் போது
என்மகனையும் நினையுங்கள்!
தேடிக் கண்டால் சொல்லுங்கள்!

இனப்பகைவரும்
இரண்டகத்தே செய்பவரும்
என்மகனை இருட்டில் வைத்தாரோ?
எப்போதும் சிரித்திருப்பான்
துன்பத்திலும் பொறுத்திருப்பான்!

பிறர் துயர்க்கு அழுதிடுவான்
முடிந்தவரை உதவிடுவான்!
நண்பர்களைப் பிரிய மாட்டான்;
பிரிந்திட்டால்தமிழைவிட்ட
இசைபோலக் கலங்கிடுவான்!

ஆண்ட பரம்பரையின்
அடலேற்றின் தோற்றம்!
காலைக் கதிரவனின்
செவ்வரி விழிகள்
சொல்லும் கொள்கைகள்!
திருக்குறள் தந்த
நல்லற உரைகள்!
தொலைநோக்குக் கணக்கில்
பெரியாரின் தீர்ப்பு!
இவை அவனின் அடையாளங்கள்
அவன் பெயர் பேரறிவாளன்.

மானுட இனத்தாரே!
காலம் எம்மைத் தேய்ப்பதால்
கரைந்துவரும்
எம் உயிரைக் காப்பாற்ற
மீட்டுத்தர இறைஞ்சுகிறேன்.

குழந்தையாய்ப் பெற்று
இளையனாய்ப் பிரிந்தானைக்
கிழவனாகப் பெற்றாலும் போதும்,
மீட்டுக்கொடுங்கள்,
கொடிய காலனிடமிருந்து!
-குயில்தாசன்
(பேரறிவாளனின் தந்தை)
  
*****
மேற்கண்ட கவிதையை,எனக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிய மதிப்பிற்குரிய(கீழ்கண்ட) நண்பர்களுக்கு நன்றி.

          

முனைவர் பா.இறையரசன்

Dr.B.ERAIYARASAN,M.A.,M.Phil.,Ph.D 
செயலர்,எழுத்தேணி கல்வி தொண்டு அறக்கட்டளை
(சிங்கபுரம்,தமிழகம்)
செயலர்,தமிழ் எழுச்சிப் பேரவை, சென்னை
 9840416727

7 comments:

  1. கனத்த இதய்ம் கொண்டோரே
    இந்தக் கவிதையைப் படிக்க முடியும்
    மக்கள் எழுச்சி நிச்சயம் ஒரு
    நல்ல முடிவைத் தரும்
    த.ம.1

    ReplyDelete
  2. என்ன சொல்வதென்று புரியாமல் தினறுகிறேன் அண்ணே... சாதகமான பதில்கள் கிடைக்குமா கிடைக்குமா என நித்தம் மரணித்துக்கொண்டிருக்கும் அவர்களின் கண்ணீர் ... தமிழகத்தில் தமிழர்கள் ஆழ்க்குழியின் அகத்தில் சிக்கிக்கொண்டதைப்போன்ற வேதனை இது உண்மைதானோ...

    ReplyDelete
  3. மனம் பதறுவதை தடுக்க இயலவில்லை...

    வார்த்தைகளில் சோகம் வரிக்கு வரி....

    பிள்ளையை யாரேனும் காப்பாற்றிவிடுவார் என்ற நம்பிக்கையில் எழுந்த கவிதை....

    கண்டிப்பாக ஒரு அற்புதம் நடக்கும்....
    நல்லதே நடக்கும்.....

    அன்பு நன்றிகள் பகிர்வுக்கு....

    ReplyDelete
  4. நல்லாயிருந்திச்சு....

    ReplyDelete
  5. கண்டிப்பாக ஒரு அற்புதம் நடக்கும்....
    நல்லதே நடக்கும்.....

    என்று நம்புவோம்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  6. கண்ணீரை மையாக்கி
    எழுதப்பட் கவிதை!மனம்
    கனக்கிறது
    அதிகம் எழுத இயலவில்லை
    முதுகுவலி காரணம்

    என் தொலைபேசி-24801690
    கைபேசி-9094766822

    ReplyDelete
  7. கலங்கடிக்கும் கவிதை!

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.