எப்படி துவங்குவதென்றே தெரியவில்லை மனோரஞ்சிதா.
அன்புள்ள தோழி என்று துவங்க வெட்கமாய் இருக்கிறது.
ப்ரியமான காதலி என்று துவங்க பயமாய் இருக்கிறது.
இதுநாள் வரை தோழியென தான் நம்பியிருந்தேன். அந்த நம்பிக்கையில் மண் வந்து விழுந்தது, என் அம்மா சொன்ன உன் கல்யாணம் குறித்தான தகவல் அறிந்த போது தான். ஆமாம், இவ்வாண்டு பள்ளிப்படிப்பு முடிந்ததும் உன்னை, உன் தாய் மாமனுக்கு கல்யாணம் கட்டிவைக்கப் போவதாக உன் அம்மா சொன்னளாம். அதை, என் அம்மா சொல்லக் கேட்ட நொடியிலிருந்து கட்டுப்படுத்த முடியாத ஒருவகையான அதிர்வு என்னுடலில் புகுந்துக் கொண்டது. நிமிடத்திற்கு எண்பது என்ற எண்ணிக்கையை மறந்து தறிக்கெட்டு துடிக்கிறது இதயம். இறகுகள் முளைக்கும் முன்னமே தொலைத்து விடுவேனா என் வானத்தை என அஞ்சும் ஒரு குருவிக் குஞ்சினைப் போல் அஞ்சுகிறது நெஞ்சம். கைப்பிடியளவு நுண்மணல் எடுத்து இமைக்குள் இட்டு நிரப்பியதைப் போல் உறுத்துகிறது கண்ணில் உரக்கம். ஒற்றையடி பாதையை வழிமறித்து படுத்திருக்கும் பாம்பினைப் போல நீண்டு படுத்துக் கொண்டு என்னை மிரட்டுகிறது இந்த இரவு. கவிஞர் வைரமுத்து சொன்ன வயிற்றுக்கும், தொண்டைக்கும் நடுவில் உருவமில்லா பந்து ஒன்று எனக்குள்ளும் உருளத் துவங்கியிருக்கிறது. ஒருவேளை, நம்மைக் காதலித்துப் பார்க்கச் சொல்லி கலகம் செய்கிறதோ காலம்!
ஒரே ஊரில் பிறந்து, வளர்ந்து ஒரே வகுப்பில் படித்து ஓடியாடி விளையாடி மகிழ்ந்த நமக்கிடையிலான இத்தனை ஆண்டுக்கால நட்பில் யாதொரு வித்தியாசத்தையும் அறிந்திராத உள்ளம், உனக்கு கல்யாணம் என்பதை கேள்விப்பட்ட மாத்திரத்தில் அறுந்த பல்லியின் வால் போல துடிப்பதின் மர்மம் எதுவாக இருக்கும் என்ற கேள்வி தொல்லை செய்கிறது என்னை. கண்ணுக்குத் தெரியாமல் நம் நட்பின் தோளில் கை போட்டுக் கொண்டு ஒட்டுண்ணியாய் வளர்ந்திருக்குமோ இந்த காதல் ? இதோ இப்போது அது எனக்குள் மெல்லமெல்ல ஊடுருவி மூலாதார முடுக்கில் ஒளிந்துக் கொண்டு, நீயில்லாததொரு வாழ்வு வாழ்வாகவே இருக்காது என்று சதா ஜபித்தபடி பித்தனாக்குகிறது என்னை. என் மனக்கட்டுப்பாட்டை இழந்துதான் இந்தக் கடித்தை எழுதிக் கொண்டிருக்கிறேன். எழுதி முடிப்பதற்குள்ளாகவே மனநிலை பிறழ்ந்திடுவேனோ என பயமாய் இருக்கிறது.
என்னையும், உன்னையும் கேட்காமலேயே இத்தனைக் காலமாய் உன்னைக் காதலியாய் அமரவைத்து அழகு பார்த்திருக்குமோ என் இதயம் என்று இப்போது சந்தேகம் வலுக்கிறது. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா எனக் கேட்டு நமட்டுச் சிரிப்பு சிரிக்கிறது மனசாட்சி. “இந்தக் காதலின் அவஸ்தை என் எதிரிக்கும் கூட வரக்கூடாது இறைவா!”, என இறைஞ்சத் தோன்றுகிறது.
கூரையின் சந்து பொந்துகளில் எல்லாம் நுழைந்து வந்து விளக்கை அணைப்பதிலேயே முனைப்பாய் இருக்கிறது காற்று. ஏழையின் குடிசை என்றால் ஆடிக்காற்றுக்கும் இளப்பம் தான் போல!. விளக்கு புட்டியில் இருக்கும் மண்ணெண்னை தீர்வதற்குள் இந்த கடிதத்தை எப்படியாவது எழுதி முடித்துவிட வேண்டும் என்ற மன உந்துதலுக்கேற்ற வேகத்தில் வந்து விழ மறுக்கின்றன சொற்கள். வெட்கம் விட்டுச் சொல்கிறேன். ஆறு மாதக் குழந்தை நான்கு காலில் தவழ்ந்து நடக்க முயன்று விழுந்து மீண்டும் மீண்டும் நடைப்பயில முயல்வதைப்போல , என் விருப்பத்தை எழுத முயன்றதில் இந்த இருவத்தி மூன்றாவது தாள்தான் கடிதம் போன்றதொரு தோற்றத்தை அடைந்திருக்கிறது. இப்போதும் கூட நான் சொல்ல வந்ததை சரியாக எழுதியிருக்கிறேனா என ஒரு சந்தேகம் வந்து தொலைக்கிறது.
உண்மையில் காதல் என்பதின் பூரண அர்த்தம் என்னவாக இருக்கும் என்பது எனக்குத் தெரியவில்லை. என் காதலின் ஒரே நோக்கம் மரணத்தின் எல்லை வரை நீ என் உடன் இருக்க வேண்டும் என்பதே.
இந்தக் கடிதத்தைப் படித்த உடனே உன் விருப்பத்தைச் சொல்ல வேண்டும் என்கிற கட்டாயமெதுவும் கிடையாது. சாவகாசமாக ஒருநாள் எடுத்துக்கொள். அதற்கு மேலான தாமதத்தைத் தாங்குவது எனக்கு சிரமமாக இருக்கும். இறுதியாய், உன்னிடம் கெஞ்சிக் கேட்டுக்கொள்வது ஒன்றே ஒன்றுதான்,
“நானும் நல்லா யோசிச்சி பாத்தேன், இதெல்லாம் தப்புடா? நாம எப்பவும் நட்பாவே இருந்துடலாம்” என கெஞ்சித் தொலையாதே. காரணம்,
ஒரேயொரு நொடி உன்னை காதலியாய் ருசி கண்டுவிட்ட அந்த இதயம், மீண்டும் ஒருபோதும் தோழியாய் ஏற்கவே ஏற்காது. ஒருவேளை, காதலை நீ ஏற்றுக் கொள்ளாமல் போனால், தோற்றுப் போனதாவே இருந்து விடட்டும் என் காதல்!
காத்திருப்புக்களுடன்,
சத்ரியன்.
# குறிப்பு : “திடங்கொண்டு போராடு” வலைத்தள நண்பர் சீனு நடத்தும் காதல் கடிதப் போட்டியில்
“காதலிக்கு எழுதிய கடிதம்” என்ற தலைப்பிற்காக புனையப்பட்டது.