Aug 31, 2011

தளரும் முடிச்சு...தளிரும் நம்பிக்கை




நம்பிக்கைத் துளிர் விட்டிருக்கிறது.

//ராஜிவ் கொலை வழக்கில், முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய மூவரையும் தூக்கிலிட 8 வாரங்கள் தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ராஜிவ் கொலை வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் தண்டனையை குறைக்கக்கோரும் தீர்மானத்தை முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்தார். தூக்கு தண்டனை தமிழக மக்களை வருத்தப்பட வைப்பதாக உள்ளதாகவும், எனவேதமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளதாக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இத்தீர்மானம் சட்டசபையில் ஏகமனதாக நிறைவேறியது. இத்தீர்மானம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.//

மேலேயுள்ள தகவல் பலரும் அறிந்திருக்கக் கூடும். இப்பதிவின் இறுதியில் உள்ளதை பலரும் அறிந்திருக்க வாய்ப்புகள் மிகக் குறைவு.

மேற்கண்ட தகவல் சிறு நம்பிக்கையை விதைத்திருப்பது உண்மையே. ஆனாலும், இது மட்டும் போதுமா? என்ற கேள்விக்கு , வாய்த்திருக்கும் எட்டு வார காலத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில் தான் அந்த நம்பிக்கையை மரமாக வளர்த்தெடுக்க முடியும்.

அதன் பொருட்டு ஆர்வலர்கள் அனைவரும் நமக்குக் கிடைக்கும் அரிய சான்றுகளை இன்னும் பலருடன் பகிர்ந்துக் கொள்வதால் ஒரு புதிய கவனயீர்ப்பை உருவாக்கி உண்மையை உலகறியச் செய்து உண்மையான குற்றவாளிகளை தண்டனைக்கு உட்படுத்த முடியும்.

ஒரு கை ஓசையெழுப்பாமல் போகலாம். நாம் ஒவ்வொருவாரும் ஒவ்வொரு கையைச் சேர்த்தால் உலகதிரும் ஓசையை எழுப்பிக் காட்டலாம்.

ஒரு உண்மையின் காணொளி இங்கே பகிர்ந்துள்ளேன். பார்ப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், இன்னும் பலருக்கு பரப்புவதை மேற்கொள்ளுங்கள் நண்பர்களே!


Aug 29, 2011

பெற்ற மனம்



என்மகனைக் கண்டீரோ?

அய்யா,
என் மகனைக் கண்டீரோ?
அம்மா,
என் மகனைக் கண்டீரோ?
பத்தொன்பது அகவையில்
காணாமற் போனவன்
இருபது ஆண்டுகளாய்க் காணவில்லை!
தேடிச் சோர்ந்துவிட்டேன்;
முதுமையால் இயலவில்லை!
நீங்கள் உதவிடுவீர்!

கண்கள் பஞ்சடைந்து,
கால்கள் தடுமாறுதையா!
மனிதர்களேஉதவிடுவீர்!
மண்டியிட்டு வேண்டுகிறேன்!
உங்கள் வீட்டுப் பிள்ளைகளில்
ஒருவனாய் ஆடுகிறானோ?

கொண்டாடும் போதிலே
தலைவாழை இலையிலே
உங்கள் வீட்டுப் பிள்ளைக்கு
இனிப்புகள் வைக்கும் போது
என்மகனையும் நினையுங்கள்!
தேடிக் கண்டால் சொல்லுங்கள்!

இனப்பகைவரும்
இரண்டகத்தே செய்பவரும்
என்மகனை இருட்டில் வைத்தாரோ?
எப்போதும் சிரித்திருப்பான்
துன்பத்திலும் பொறுத்திருப்பான்!

பிறர் துயர்க்கு அழுதிடுவான்
முடிந்தவரை உதவிடுவான்!
நண்பர்களைப் பிரிய மாட்டான்;
பிரிந்திட்டால்தமிழைவிட்ட
இசைபோலக் கலங்கிடுவான்!

ஆண்ட பரம்பரையின்
அடலேற்றின் தோற்றம்!
காலைக் கதிரவனின்
செவ்வரி விழிகள்
சொல்லும் கொள்கைகள்!
திருக்குறள் தந்த
நல்லற உரைகள்!
தொலைநோக்குக் கணக்கில்
பெரியாரின் தீர்ப்பு!
இவை அவனின் அடையாளங்கள்
அவன் பெயர் பேரறிவாளன்.

மானுட இனத்தாரே!
காலம் எம்மைத் தேய்ப்பதால்
கரைந்துவரும்
எம் உயிரைக் காப்பாற்ற
மீட்டுத்தர இறைஞ்சுகிறேன்.

குழந்தையாய்ப் பெற்று
இளையனாய்ப் பிரிந்தானைக்
கிழவனாகப் பெற்றாலும் போதும்,
மீட்டுக்கொடுங்கள்,
கொடிய காலனிடமிருந்து!
-குயில்தாசன்
(பேரறிவாளனின் தந்தை)
  
*****
மேற்கண்ட கவிதையை,எனக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிய மதிப்பிற்குரிய(கீழ்கண்ட) நண்பர்களுக்கு நன்றி.

          

முனைவர் பா.இறையரசன்

Dr.B.ERAIYARASAN,M.A.,M.Phil.,Ph.D 
செயலர்,எழுத்தேணி கல்வி தொண்டு அறக்கட்டளை
(சிங்கபுரம்,தமிழகம்)
செயலர்,தமிழ் எழுச்சிப் பேரவை, சென்னை
 9840416727

Aug 26, 2011

கண்கள் இருந்தால்...


கண்கள் தயாராய் இருந்தால் முட்களும் அழகுதான்...!


படங்களைப் பெரிதாய்க் காண படத்தின் மேல் சொடுக்கவும்.








கண் மருத்துவரைக்காணச் சென்றிருந்தேன்.அங்கே கண்டு ரசித்த தாவரங்கள் இவை.

 நம் நாட்டில் பொட்டல்களில் இருக்கும் முட்கள் இங்கே கலைக் கண்களுக்கு காட்சி பொருள்களாய் இருக்கின்றது.

Aug 22, 2011

சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே...!


வணக்கம் நண்பர்களே,

'முத்துக்கள் மூன்று' தொடர்பதிவுக்கு நண்பர் குணா அக்கரையும்...இக்கரையும் தம்பி சிம்பு -மாணவன்  வரலாற்று நாயகர்கள் என்னும் தலைப்பில் உலகத்தலைவர்களைப் பற்றி தொடர்ந்து எழுதி வருபவர். என் வரலாற்றைத் தெரிந்துக் கொள்வதில் தம்பிக்கு அப்படி என்ன வேண்டுதலோ.)) ஆகியோரின் அன்பு (என்ன விலை-ன்னெல்லாம் கேக்கப்படாது) அழைப்பை ஏற்று.....


1 . விரும்பும் மூன்று விஷயங்கள்
  • காதலும்- கவிதைகளும்
  • போராளிகளின் வாழ்க்கை வரலாறு
  • நட்பு.

2 . விரும்பாத மூன்று விஷயங்கள்
  • மது
  • துரோகம்
  • தெரியாததைத் தெரிந்தது போல் காட்டிக்கொள்வது.


3. பயப்படும் மூன்று விஷயங்கள்
  • பாம்பு
  • நட்பு அரிதாரம் பூசிய முகங்கள்
  • ஆட்சியைப் பிடிக்க அரசியல்வியாதிகள் அவிழ்த்து விடும் இலவசங்கள்

4 . புரியாத மூன்று விஷயங்கள்
  • பாடல் கேட்டுக் கொண்டே உறங்குகிறார்களே எப்படி?
  • கல்யாணத்துக்குப் பின்னும் காதல் எப்படி?
  • மக்கள் சொத்தை கொள்ளையிடும் கொள்கை வாதிகளை...!
5 . என் மேசையில் இருக்கும் மூன்று பொருட்கள்

  • தண்ணீர்
  • தொ(ல்)லைபேசி
  • நூல் ( நல்ல நூல்களைப் படிச்சா அறிவு வளருமாமே!)

6 . என்னை சிரிக்க வைக்கும் மூன்று விஷயங்கள்
  • சுமாரன நகைச்சுவையைப் படித்தாலும் ரசிச்சி சிரிக்கிற ரகம் நான்
  • நண்பர்களின் அரட்டைகள்
  • அமரர் நாகேஷ், வடிவேலு

7 . செய்துகொண்டிருக்கும் மூன்று விஷயங்கள்
  • கவிதைத் தொகுப்பு வெளியிட தயார் படுத்திக் கொண்டிருக்கிறேன்.
  • தமிழ் இலக்கணம் கற்றுக் கொண்டிருக்கிறேன்.
  • குமரிக்குச் சென்று திருவள்ளுவனை தரிசித்துவர திட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன்.

8 . கற்றுக்கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்
  • சரளமாக ஆங்கிலம் பேச!
  • தவறின்றி தமிழ் இலக்கணம்.
  • விவசாயம்
9 . பிடித்த மூன்று உணவு வகைகள்
  • நண்டுக் குழம்பு.( நண்பன் கேசவன் சமைக்கனும்)
  • கேழ்வரகுக் களி + கோலா கருவாட்டுக் குழம்பு (என் அம்மா சமைக்கனும்)
  • பச்சை அரிசி சோறு+முருங்கைக்காய் சாம்பார்.(இது நானே சமைக்கனும்)

10 . கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்
  • தேர்தல் வாக்குறுதிகள்
  • இலவசமாய் எதையும்
  • அசிங்கமான அர்ச்சனைச் சொற்கள்.

11 . அடிக்கடி ஹம்மிங் செய்யும் மூன்று பாடல்கள்
  • வா பொன்மயிலே (சிவக்குமார்+சுஜாதா)
  • பூக்கள் பூக்கும் தருணம் (ஆர்யா+ஒரு அழகான பொண்ணு)
  • ஏரத்தாழ ஏழு மணி (பேராண்மை படத்துல)

12 . பிடித்த மூன்று பொன்மொழிகள்
       (பிடிச்ச ஆத்திச்சூடின்னு வெச்சிக்குங்களேன்)
  • உடலினை உறுதி செய்
  • ஆண்மை தவறேல்
  • தையலை உயர்வு செய்

13. ஆசைப்படும் மூன்று விசயங்கள்
  • 2013-ஆம் ஆண்டின் இறுதியிலிருந்து நிரந்தரமாக தமிழ் நாட்டிலேயே தங்கி வாழவேண்டும்.
  • சிங்கையின் சிங்கங்கள் பட்டாபட்டி & வெளியூர்காரன் ரெண்டு பேரையும் ஒருதடவையாவது நேரில் சந்திக்கனும் (ஐய்யா ராசாக்களா 2013 முடியறதுக்குள்ள என்னை ஒருமுறை சந்திச்சிருங்கப்பா)
  • விவசாயத் தொழிலில் சிறந்து விளங்க வேண்டும்.

14 . நிறைவேறாத மூன்று ஆசைகள்
  • என் செல்லமகள் சாரலின்பா-வின் மழலைச் சொற்களை அவளருகில் இருந்து அனுபவிக்க எண்ணியிருந்தேன்.
  • 2010- லிருந்து தமிழகத்திலேயே தங்கிவிட திட்டமிட்டிருந்தேன்.
  • முன்னால் காதலியின் திருமணதிற்கு என் கவிதை நூலை பரிசளிக்க எண்ணியிருந்தேன்.( நான் புத்தகம் வெளியிடும் முன்பே அவளுக்கு கல்யாணம் ஆகிடும்னு நான் என்ன கனவா கண்டிருந்தேன்)
15. இது இல்லாம வாழ முடியாதுன்னு சொல்ற மூன்று விஷயங்கள்
  • தன்னம்பிக்கை
  • உணவும், உடையும்
  • அன்பும்,கோபமும்

போதும் விட்றா-ன்னு யாரோ கத்துறது காதுல விழுது. சரி நிப்பாட்டிக்கிறேன்.

இதை தொடர அழைக்கப்போகும் மேலும் மூன்று ... வேணாம் பாஸ். இதையும் நிப்பாட்டிக்கிறேன்.


Aug 10, 2011

யுத்தம் செய்


எண்ணிக்கையில்
ஏழு புள்ளி இரண்டு கோடியை
எட்டி நிற்கும்
என் நாட்டுத் தமிழா!

’இனப்பெருமை என்பது
இனப்பெருக்கம்
செய்வது மட்டுமல்ல’-என்பதை
எப்போது உணரப்போகிறாய்?

இருபது மைல் தொலைவில்
இன மலர்ச்சிப் போராட்டம்
உச்சத்தில் இருந்த போதும்
இன மானம் உணர்ந்து,

சிறு துரும்பையும்
அசைக்க முனையாத நீயா
ஈராயிரத்து இருபதில்
இந்தியாவை
வல்லரசாக்கி விடப் போகிறாய்?

விழி நீரைத் துடைக்க
உனை நோக்கி நீண்ட
கரங்களின் விரல்களே
உன்
சுதந்திரத்தின் கண்களைக்
குருடாக்கிய கதையை
அறியாமல் கிடக்கிறாயே!

தனியொருவனால் ஒன்றும்
கிழிக்க முடியாமல் போகலாம்
ஒத்தக் கருத்துடையோருடன்
மெத்தக் கலந்து பேசி
அணி திரண்டு
யுத்தம் புரிய வேண்டாமடா நீ

உரக்க சத்தமிட்டாலே போதும்
உடைந்த சிலம்பின்
முத்துப்பரல்கள் போல்
சிதறி ஓடுமடா
எதிரிகளின் கூலிப்படையும்,
கூட்டுப் படையும்!

இலவசத்திற்கே பழகிப்போன - என்
இளையச் சமுதாயமே
‘இனச் சுதந்திரம்’
இலவசமாய்
எங்கும் கிடைக்காதப்பா!

நமக்கான
உரிமைகளை ஒன்று
கேட்டுப் பெற வேண்டும்.
மறுக்கப்படுமாயின்
உதைத்து தான் பெற வேண்டும்!

***
பின் குறிப்பு:-

கவிஞனின் சுட்டு விரல் என்னையும் சுட்டுகிறது.