May 7, 2015

ஆலிங்கனா-07


ஆலிங்கனா-07


சித்திரையின் முதல்நாளில் கொட்டோ கொட்டென்று கோடைமழைக் கொட்டி இன்றோடு எட்டாண்டுகள் ஆகிவிட்டது. மழைக்குப்பின்னான நாளில் நிலம் சுற்றிப் பார்ப்பது தனிசுகம். இதோ கிளம்பி விட்டேன். வானம் பார்த்த பூமியில் தூசு படிந்து மழுங்கியிருந்த சின்னஞ்சிறு சரளைக் கற்களெல்லாம் மழைநீரால் கூர் தீட்டிய ஊசிகளாகக் குறுகுறுக்கிறது பாதத்துள். குகையிலிருந்து எட்டிப்பார்க்கும் புலிக்குட்டிகளைப் போல தரைக்குள்ளிருந்து தலைநீட்டி வெளிவருகிறது அருகம்புல் தளிர்கள். தரையில் அமர்ந்து நுனிப்புற்களைக் கவனிக்கிறேன். நினைவு பின்னோக்கி உன்னிடம் திரும்புகிறது.

இது போன்றதொரு நாளில் நிலத்தைச்சுற்றி நடைப்போட்டுக் கொண்டிருக்கையில் தான் நெருஞ்சி முள்ளொன்று குத்தி விட்டது உன் காலில். முள்குத்திய காலை சற்றே உயர்த்தி கொக்கைப்போல் நின்றாய் நீ. காலைத் தரையில் தேய்த்தால் முள் தானாய் விழுந்து விடுமெனச் சொல்லியும் நீ அதைச் செய்யவே இல்லை. பாவம் பார்த்துக் கீழமர்ந்து முள்ளைப் பிடுங்க உன் பாதத்தை ஒரு கையில் தாங்குகையில், உன் வலக்கையை உயர்த்தி ஆசிவழங்குவதைப் போன்ற பாவனையில் நிற்கிறாய். என்ன திமிர் உனக்கு? போனால் போகட்டுமென்று பிடுங்கிய முள்ளைத் தூர எறிந்து விட்டு எச்சில் தொட்டு முள்குத்திய இடத்தில் தடவி தேய்த்து விட்டேன். தாங்கித்தாங்கி நடந்து என்னைப் பின்தொடர்ந்தாய்.

சுட்டெரிக்கும் வெயிலில் காய்ந்துக் கருகி விடும் புற்கள், மழைப்பெய்த ஓரிரு நாட்களில் முளைவிடுகிறதே எப்படி என்றொரு கேள்வியை எழுப்பினாய். உன்னிடம் பிடிக்காதவைகளில் அடிக்கடி கேள்வி கேட்டு துளைப்பதும் ஒன்று எனச்சொல்லி விட்டு,  “தனக்குள்ளிருக்கும் புற்களின் வேரினைச் சுற்றிலும் , மண்ணே ஒருவகை பூஞ்சையால் கூடுகட்டி காக்கும். பின் ஈரம் பட்டதும் வேரை மெல்ல விழிப்பூட்டி தளிரை வெளியனுப்பும்” என்று, அனைத்தையும் அறிந்த அதிமேதாவி போல் ஒரு பதிலைச் சொன்னேன். அப்படியா! என ஆச்சரியங்காட்டி நம்பினாய். என்னுள்ளிருக்கும் உன் நினைவின் வேர்களுக்கும் இப்பூமியைப் போல்தான்  என் நெஞ்சமும் கூடுகட்டிக் காத்து வருவது, நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை.

நிலத்தின் நடுவில் வகிடெடுத்தபடி இருக்கும் ஒத்தையடிப்பாதையில் நீண்டு பயணிக்கிறது என் கால்கள். மென்மையாய் ஜாதிமல்லியின் வாசம் நெருங்கியது என்னை. சுற்றிலும் பார்த்தேன். ஒருவரும் இல்லை. சற்று நெருக்கத்தில் ஒரு குறும்புதர்ச்செடி தரையோடு தவழ்ந்திருப்பதைக் கண்டேன். அருகே சென்று பார்த்தேன். அப் புதர்ச்செடியில் வெள்ளைநிறத்தில் ஒரு பூ மலர்ந்திருந்தது. சட்டென்று நினைவில் நீ முளைத்துப் படர்கிறாய். விரித்த கூந்தலில் ஒரேயொரு பூவை சூடிக்கொண்டு வெற்றுத்தரையில் நீ சுருங்கிப் படுத்திருப்பதைப் போன்று தோற்றம் பெறுகிறது அச்செடி. நீரிலிருந்து உயிரினம் தோன்றியதாக அறிவியல் சொல்கிறது. என்னவொரு அபத்தமான கூற்று அது. இங்கிருக்கும் அனைத்துமே உன்னிலிருந்து பிறந்தவை. மீண்டும் மீண்டும் சொல்வேன். உன் சாயல் இல்லாத ஒன்றுமே இவ்வுலகில் இல்லை. இதோ, அச்செடியில் பூத்திருந்த பூவைப் பறித்தெடுக்காமல் முழங்காலிட்டு குனிந்து முகர்ந்தேன். ஜாதிமல்லியின் அசல் வாசம். அசந்து போய் விட்டேன். ஏனெனில், அது உன்வாசம்.

தாமரையை ராஜமலர் என்பார்கள். இல்லவே இல்லை . என்னைப் பொறுத்தவரை ஜாதிமல்லி தான் ராஜமலர். எனக்கு மிகமிகப் பிடித்த பூ அதுதான். அதன் முகை உன் நீண்ட கூர்மூக்கை நினைவுப் படுத்தும்.  அதன் வாசம் உன்னை முழுதாய்க் கொண்டு வந்து என்முன் நிறுத்தும். என் உடலை இயக்கும் உயிர்க்காற்றையெல்லாம் வெளியே கடத்தி விட்டு ஜாதிமல்லியின் வாசத்தை மட்டுமே நுரையீரல் முழுதும் நிறைத்துக் கொள்வேன். அது உள்ளிருந்து அங்கமெங்கும் ஊறி மூளையின் நினைவடுக்குகளில் போய் பதுங்கிக்கொள்ளும். ஜாதிமல்லியின் வாசத்தை சுவாசிக்க வாய்க்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம், நுகரும் உணர்வை ஐம்புலன்களுக்கும் அளிக்காமல் ஏன் குறைவைத்தான்  இறைவன் என்று கோபம் பொங்கும்.

உன்னையொத்த அச்செடியருகில் சற்றுநேரம் நானும் ஒடுங்கிப் படுத்துக்கொண்டேன். இங்கே தான் நீ குடிகொண்டிருப்பதாய் நம்புகிறது என் மனம். அம்மலரிலிருந்து  பரவும் வாசம் நம்மிருவரையும் உயரத்தில் மிதக்கச் செய்து எங்கெங்கோ பயணித்து கடத்திக்கொண்டு போய் ஓர் அடர்வனத்தின் நடுவில் இறக்கிவிட்டு விட்டது.

இவ்வனம் கொஞ்சம் பயமுறுத்தினாலும் குதுகலமாகத்தான் இருக்கிறது. இங்கே கொடிய விலங்குகள் நம்மை அச்சுறுத்தலாம். சாதுவான விலங்கினங்கள் நம்மோடு சிநேகம் கொள்ளலாம். எந்நேரத்திலும் எதுவும் நடக்கலாம். ஆனாலும், இது தான் நம் உலகம். இனிமேல் இங்குதான் நாம் ஜீவிக்கப்போகிறோம்.


அதோ அந்தப் பாறையில் இருக்கும் நீள் சுனையில் நீராடு
அருகே செடிமீது படர்ந்திருக்கும்
கொடிமுல்லை மலர்கள் கொய்துத் தருகிறேன்
கொஞ்சம் பூக்களால் உன்னைத் துவட்டிக்கொள்
மிச்சப் பூக்களை நீ உடுத்திக்கொள்
ஆதியுலகில் நுழையலாம்
ஆதாம் ஏவாள் ஆகலாம்
குகையொன்றில் குடிபுகலாம்
எரிநட்சத்திரம் ஒன்றை வேட்டையாடி வீழ்த்தி
வீட்டு வாசலில் ஒளியேற்றலாம்
காய் கனி தேன் கிழங்கு என தேடித்தேடி
வகைவகையாய் உண்ணலாம்
சிக்கிமுக்கிக்கல் உரசி தீ மூட்டலாம்
கட்டாந்தரையைக் கட்டிலாக்கலாம்
வில் நீ
அம்பு நான்
வினைபுரியலாம்
வினையின் விளைவால் விளையும்
நம் மேல்மூச்சு கீழ்மூச்சு இவ்வனமெங்கும் அலைந்து
வண்டு துளைத்த வன்மூங்கிலில் நுழைந்து
புல்லாங்குழல் இசையாக வெளியேறட்டும்
வனமே இசைந்தாடட்டும்
இம் மன்மத ஆண்டு மதங்கொள்ளட்டும்.

எழு ஆலிங்கனா.

*

இளவேனில்


வெண்பா - வாழ்த்து
*******************************

சித்திரைத் திங்களிலே செங்கமலம் நீபிறந்தாய்
கத்திரி வெம்மைத்தீக் கங்/கொத்/த வெப்பத்தால்
நித்திலமே கார்வண்ணம் நீயுற்றாய் என்றாலும்
பித்தேற்றும் பேரெழில் பூ.

பெட்டைக் குழந்தையென பெண்தாதி சொல்லிடவும்
மட்டற்ற பேரின்பம் மண்ணுலகைச் சூழ்ந்ததம்மா
பட்டுப் பதுமையே பைந்தமிழில் பேருனக்கு
இட்டோம் ‘இளவேனில்’ என்று.


ஞால மொழிகளில் நான்கேனும் கற்றுக்கொள்
காலத்தின் போக்கைக் கணிக்கும் திறமும்கொள்
ஆலம்போல் நீண்டநல் ஆயுள் நிலைத்துநீ

வாழ வழங்குகிறேன் வாழ்த்து.

*

06/05/2015- எங்கள் இளையமகள் இளவேனிலுக்கு மூன்றாம் பிறந்த நாள்.


Apr 11, 2015

ஊமத்தம்பூ உருவினள்


எருமைகள் மேயும் வனாந்தரத்தில்
நெருஞ்சிப்பூக்களைத் தேடி நடக்கிறேன்
நிற்க சொல்லி நிர்பந்திக்கிறது
முனை அலர்ந்த வெண்ஊமத்தை மொக்கு

முன்னாள் ஒன்றில்
நெற்றி உதிர்த்த திருநீறு
நிலைக்கொண்டிருந்தது என் நுனிமூக்கில்
ஒற்றி துடைத்திட உன் உள்ளங்கை பூத்த
வெண்பூ கைக்குட்டை விரிகிறது மனக்கண்ணில் 
நின்று நினைவில் மூழ்கும் நிலையில் இல்லை நான்
தொலைதூரம் அலைய வேண்டியதிருக்கும்
தொடர்ந்தேன் தேடலை

அந்திப் பொழுதாகியும் நெருஞ்சியைச் சந்திக்காமலே
திரும்புவது  கொஞ்சம் துயரம் தான் எனக்கு
காம்பின் பிடி தளர்த்தித்
தலைக்கீழாகக் கவிழ்ந்து வழிமறிக்கிறது
காலையில் எனை தடுத்த ஊமத்தம்பூ
பாவாடையை வட்டமாக பரப்பி
பசும்புற்களின் மீதமர்ந்த நீயாக உருமாறுகிறது
ஊமத்தையும், அதன் உள்ளிருந்து நீளும் மகரந்தக்குழலும்

மீளும் வழியடைத்து வேலியிட்டு விட்டாய் நீ
இனி
புதைக்குழியில் சிக்கி
கால் மாற்றி கால் பலம் செலுத்தி
மேலேற முயலும் களிறு போல நானும்
ஓயாது உள்ளிழுக்கும் சகதி போல உன் நினைவும

*

Jan 14, 2015

அன்பின் நிறம்

நம்
காதலுக்குப்பின் தான்
என் மேனியில்
கரியநிறம் கூடியவண்ணம் இருக்கிறது

பறிமாறப்படாத
உனக்கான அன்பு
உள் நிரம்பி
முற்றி
நஞ்சாவதின்
முதல் அறிகுறி அது

*


Dec 10, 2014

சமர்




மத்தகத்தில் அரியாசனமிட்டு
ராணியாக வீற்றிருந்தாய்
புலவனாக கோட்டைக்குள் நுழைந்தேன்
மகுடம் தொடங்கி
மந்தகாச புன்னகை வழியிறங்கி
மார்மீது சறுக்கி 
மடி கடந்து
பாதத்தில்
ஓர் பூ உதிர்த்தேன்

இடை தரித்த உடைவாள் உருவி
பரிசளித்து
சமருக்கு சம்மதம் கேட்டாய்
மகிழ்வுடன் மயிற்பீலி தந்தேன்
இனி 
விடியும் முன் மருந்திடுவதே
முதல்வேலை உனக்கு

*


Nov 29, 2014

நிலாப்பால்



நிமிர்த்தி வைத்திருந்த
நிலவுக்குடுவையின்
வாய் பகுதியை வாகாய்
பற்றியிழுக்கிறது குழந்தை

வான் உறியிலிருந்து
ஒருக்களியும் குடுவையிலிருந்து
கொட்டுகிறது முளிதயிர்

குழந்தையின் வாய்க்குள்
சிக்கிய சிறுதுளி தவிர்த்து
மிஞ்சியதெல்லாம் பாய்கிறது பால்வெளியில்

பாயும் ஒளிக்கு
நீயும் நானும்  சூட்டிய பெயர்
நிலவொளி

*

நன்றி : ஓவியர் @Keshav முகநூல் நண்பர்

Nov 21, 2014

நதிமூலம்

நீங்களெல்லாம் ஒன்றுகூடி
துயரம் பகிர்ந்து
அடக்கம் செய்துவிட்டு களைந்துபோன பின்
வெளி, இருள்
ஒளி
நெருப்பு, நீர்
உயிர்
மண், மலை
விலங்கு
மரம், காற்று
பறவை
வான், கோள்
விண்மீன்
இவையாவும் ஒன்றுகூடி வந்து
என்னை
பங்கிட்டுக் கொள்ளும்

கருவறைக்குத் திரும்பிய
களிப்பில் இருப்பேன்
நான்

*


Nov 20, 2014

இறுதி ஊர்வலம்

இறந்த தட்டானை
சுமந்துச் செல்கின்றன எறும்புகள்
இரைக்காக இருக்கலாம் என
எதார்த்தத்தை எண்ணலாம்
இறுதி ஊர்வலம் என
கவிதைக் கண்ணால் பார்க்கலாம்
எதையுமே பொருட்படுத்தாமல்
கடந்தும் போகலாம்

*

Oct 27, 2014

மழைக்கூந்தல்


உன்
நரைக்கூந்தல்
சரிவதைப் போல் அவிழ்கிறது
இந்த
மழைத்தூறல்

*


Oct 7, 2014

விண்ணிழை


உன்
கருங்கூந்தலில் 
தலைக்காட்டும்
வெள்ளியிழைகளை 
நினைவூட்டும்
இவ்விரவு வானில்
ஒளிரும் விண்மீன்கள்

*


Oct 5, 2014

வான்கோழி




இசைத்து கொண்டே
இழைக்கிறது மரங்கொத்தி

புல்லாங்குழலாகும்
புளகாங்கிதத்தில்
துளைவிழும் போதே
இசையெழுப்புகிறது
மரம்.

*


Sep 18, 2014

காற்றானவள்


கரையோரம் இறங்கி
காற்றைத் தொட்டு சிலிர்த்தான்
காற்றை வாரி இறைத்தான்
காற்றினில் இறங்கி நீந்தினான்
கரையேறி துவட்டினான்
காற்றைக் கிள்ளியெடுத்து உண்டான்
காற்றை அள்ளிப் பருகினான்
படிக்கல்மேல் அமர்ந்திருக்கும்
காற்றின் அருகே அமர்ந்தான்
காற்றைத் தோள்சாய்த்து முத்தமிட்டான்
காற்றோடு கை கோத்து நடந்து
காற்றுவெளியில் தூரப்புள்ளியானான்
அவனுக்கு எல்லாமே அவள் தான்
காற்றாகிப் போனவள்

*

Jul 28, 2014

கிளிமூக்கி



சளி பிடித்திருக்கும் நாட்களில்
பச்சைநிற உடை அணியவேண்டாம் நீ

சிவந்திருக்கும் நுனிமூக்கும் 
பச்சைநிற உடையும்
கிளியாக்கி விடுகிறது உன்னை


*

Jul 27, 2014

இணைகோடுகள்



குடியிருப்பை அலங்கரிக்கும் 
கோயில்கள் போல
தெருக்கள்தோறும் அரசின் மதுக்கடைகள்
உழைத்துப் பிழைக்கும் 
எளியோரின் வலிமையை
இழிவு படுத்தவென்றே அரசின் இலவசங்கள்

நாட்டின் முன்னேற்றத்திற்கு
திசை திருப்பப்பட வேண்டிய
இளைய ஆற்றலையெல்லாம் போதையேற்றி
கூற்றுவன் கூடத்திற்கு
ஆள் பிடித்து அனுப்பும்
பாழ்பட்ட அரசின் பாதங்களில் வீழ்ந்து
தாள்தொட்டு வணங்கும் எம் இனத்திற்கு
என்றுதான் தெரியுமோ
மதுக்கூடங்களும், இலவசங்களும்
நம் தேசத்தின் எதிர்காலத்தை நாசப்படுத்தும்
நச்சு இணைகோடுகளென்று.

*

Apr 25, 2014

சுடர்



தலைவனின்
தழுவலில் இருந்து
போலியாய்
நழுவ முயலும்
தலைவியைப் போல்
நெளிகிறது

திரியின் நுனியில்
சுடர்.

*


Mar 16, 2014

இலையுதிர் காலம்

உடை
அவிழ்த்த தருவின்
அடிமரத்து நிழலில்
ஒடுங்கி அமர்ந்திருந்தேன்

மழைக்கூதலுக்குஇதமாய்
எஜமானியை உரசும் வீட்டுப் பூனையைப் போல
வந்து உரசுகிறது
ஒரு சருகு

இதே போன்றதொரு
கோடைநாளில் தான்
திடீரென 
காணாமல் போனதெங்கள்
பூனை.


*

Feb 14, 2014

ஆலிங்கனா-06


கொத்துக்கொத்தாய் மிகக் கூர்மையான மெல்லிய முட்களைக் கண்டு விலகிச் சென்ற என்னை வழியே வந்து விருந்துக்கு அழைத்தது அந்த அடர்ந்தரோஸ் நிற சப்பாத்திக்கள்ளிப்பழம். அருகே சென்று சில பழங்களைப் பறித்து பக்கத்திலிருந்த பாறையின் மீது உரசி அதன் மென்முட்களை நீக்கிக்கொண்டிருந்தேன். முதுகுப்புறமிருந்து வரும் சருகு நொறுங்கும் சப்தம் நெருங்கி ஒலிக்கையில் வருவது நீ தான் என உளவு சொன்னது செவிப்புலன். நான் திரும்பிப் பார்ப்பதாக இல்லை. உயிர் முழுதும் ஆவல் நிரம்பியிருந்தாலும், உன்மீதான கோபம்  கழுத்துவரை தேங்கியிருந்தது எனக்குள். இருக்காதா பின்ன? உள்ளூரில் இருந்துக்கொண்டே இரண்டு நாட்களாய் கண்ணிலேயே படாமல் போக்குக்காட்டிய காட்டேரி தானே நீ.

முன்புறம் வந்து நிற்க உனக்கும் துணிவில்லை போல. முதுகுப்புறத்திலேயே நின்றுக்கொண்டிருந்தாய். ஒரு பழத்தைக் கீறி உள்ளிருந்த கொக்கி முள்ளை எடுத்து தூர வீசிவிட்டு பழத்தை வாயிலிடும் நேரம் பார்த்து “எனக்கு” என்றாய். கோபமாய்த் திரும்பினேன். உன் வலக்கன்னத்திலிருந்த தழும்பைக் கண்டதும் வலி கொண்டு,  “என்னாச்சி” என கேட்கும் முன்னமே உன் கீழ் இமைக்குள்ளிருந்து குதித்து விட்டது கண்ணீர். கையை நீட்டினேன். உன் கைகளைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டாய். என்னவாயிருக்கும் என எண்ணியபடியே வலுக்கட்டாயமாக பிடித்திழுத்ததுப் பார்த்ததும் உன் உள்ளங்கைக்குள் நீ சுமந்து வந்த சூட்டுக்காயத்தைக் கண்டு உள்ளம் கலங்கி போனேன்.

அன்றொருநாள் காட்டுக்குப் போய் காளான் சமைத்துச் சாப்பிட்ட கதையை சில நாட்கள் கடந்து உன் தோழியிடம் பெருமையாய் நீ சொல்ல, அது உன்னைப் பிடிக்காத ஒருத்தியின் காதில் விழ, அவள் போய் உன் அம்மாவின் காதில் அமிலம் போல் ஊற்ற அதனால் விளைந்த காயம் இதுவெனவும், இனியெப்போதும் என்னைப் பார்க்கவோ, பேசவோ கூடாதென எச்சரித்து இருநாட்களாய் வீட்டோடு வைத்திருந்ததையும் சொல்லி முடித்தாய். இப்போதும் கூட யாருக்கும் தெரியாமல் தான் இங்கே வந்திருப்பதாய்ச் சொன்னாய்.

இங்கிருந்தால் யாராவது பார்க்கக்கூடும் என்பதால், முள்நீக்கி வைத்திருந்த பழங்களை உன் தாவணியின் முந்தானையில் அள்ளிக்கொண்டு  ஆளரவமற்ற பகுதிக்கு நடந்தோம். ஒரு சின்ன பாறையில் அமர்ந்து உன் துயரங்களைச் சொன்னாய். ஆறுதல் சொல்லிக்கொண்டே பழங்களை உறித்தேன். உறிக்கையில் விரலில் வழிந்த பழச்சாற்றினால் உன் நெற்றியில் பொட்டிட்டேன். இப்படி நேருமென்று சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை நீ. நானும் தான். பின் பழச்சதையை உண்ணக்  கொடுத்தேன். கொஞ்சம் எனக்கும் ஊட்டினாய். அதன் சதையையும், சாற்றையும் உறிஞ்சிக்கொண்டு விதைகளைத் துப்பத் திரும்பியவளின் பார்வை நிலைத்த இடத்தில் ஊர்ந்துச் சென்றுக்கொண்டிருந்த ‘வெல்வெட் பூச்சி’யைக் கண்டேன். அதை எடுத்து உன் கையை விரித்து சூட்டுப்புண்ணின் மேல் விட்டேன். அங்கிருந்து முன்னும் பின்னும் நகர்ந்த அப்பூச்சியைப் பார்கையில் புண்ணிலிருந்துக் கசிந்துத் திரண்ட ரத்தத்துளி ஒன்று உருள்வது போல் இருந்தது. வலி மறந்து அதன் மென்மையை ரசித்தாய் நீ. உன் நிலைக்கண்டு உள்ளுக்குள் கசிந்தேன் நான்.

உன்னுடன் இருப்பது மகிழ்வாய் இருந்தாலும், நேரம் கடந்துக்கொண்டிருந்ததை எண்ணி உறுத்திக் கொண்டே இருந்தது. பிரிய மனமில்லை தான். இருந்தாலும்,  “உன் அம்மா தேடுவதற்குள்  வீடு போய் சேர்”, எனச் சொன்னேன்.  “கொஞ்ச தூரம் நீயும் வா” என்றாய். பின் தொடர்ந்தேன்.

கல்லாலமரத்தைக் கடக்கையில் எதிரே இருபதடி தொலைவில் இரு பாம்புகள் ஒன்றாகித் தள்ளாடுவதைக் கண்டதும் பதறியபடி திரும்பிய வேகத்தில் என்னை நெஞ்சிறுகக் கட்டிக்கொண்டு கண்களை மூடிக்கொண்டாய். வழக்கமாய் இதயம் துடிப்பதைக் கேட்டிருக்கிறேன். இதயம் நடுங்கும் என்பதை அன்றுதான் உணர்ந்தேன். உன் இதயத்தின் தாறுமாறான துடிப்பை என் மார்பு உணர்ந்தது. நடுங்கும் உன்னை நிதானப்படுத்த என்ன செய்வதெனப் புரியவில்லை எனக்கு. ஒருவாறு,  பின்னந்தலையில் தொடங்கி தோளினைத் தடவியபடியே எதையெதையோ பேசி உன்னை திடப்படுத்தினேன். சிறிது சிறிதாக நடுக்கம் தொலைத்தாய். உன் முகத்தை உயர்த்தினேன். ஆனாலும் கண்களைத் திறப்பதாயில்லை நீ. போர்வைக்குள் புரளும் பூவையைப்போல திறவாத இமைக்குள் இடவலமாய்  உருண்டன உன் கண்கள். உதட்டுக்குச் சற்று மேலுள்ள பூனைமுடிகள் குறுகுறுப்பாய் என் கண்களை முறைத்துப் பார்த்தன. அதை நான் கண்டு கொண்டதாய்க் காட்டிக் கொள்ளவில்லை.  மூடிக்கிடந்த உன் இமைகளின் மேல் மெதுவாய் ஊதினேன். காற்றின் வருடலில்  நீ கண் திறந்தத் தருணத்தில் பாம்பிருக்கும் திசையைப் பார்க்கச்சொல்லி கண்களால் உத்தரவிட்டேன். பிடியின் இறுக்கம் தளர்த்தாமல் திரும்பிப் பார்த்தாய். சரசத்தில் பிணைந்திருந்த அந்த சர்ப்பங்களும் நம்மைக் கண்டுக்கொள்வதாய் இல்லை. பாம்பின் திசையிலிருந்து பார்வையை விலக்கி இருவர் கண்களும் இணையாய் மோதின. இரு கண்கள் என்னவோ கேட்டன. இரு கண்கள் எதையோ சொல்லின.

காம்பில் தங்காது கழன்ற, கனிந்த நாவல்பழங்கள் இரண்டு முழுமையடைந்த பெண் ஓவியத்தின் முகத்தில் விழுந்து ஒட்டிக்கொண்டதைப் போன்ற உன் உதடுகள் எனக்குள் ஏதோ வேதிவினை நிகழ்த்தின. கனியும் கனி வாய் எனக்கு ஒப்புதல் அளிப்பதாய் சுழிந்தன. என் மார்பில் முட்டியிருந்த சிற்ப பூச்செண்டுகள் தீக்கங்கின் வேலையைச் சிறிதாய்த் தொடங்கியிருந்தன. அந்த பாம்புகளின் நிலைக்குச்செல்ல நம்மை ஆயத்தமாக்கின ஆர்மோன்கள். இரத்தநாளங்கள் மொத்தமும் பித்தம் கடத்தின. மூடியிட்ட கொதிகலனிலிருந்து சிறு துவாரத்தின் வழியே வெளியேறும் நீராவி போல இரு மோகக் கலன்களிலிருந்து தீ மூச்சு வெளியேறிக் கொண்டிருந்தது. இருவருக்குள்ளும் சுழலும் ஊன்வெப்பப் பெருக்கத்தால் மார் கச்சையின் கீழ்கொக்கி கழல மறுத்தும் முயற்சியை நிறுத்தவில்லை விரல்கள். 

“தளிரான என்மேனி
தாங்காது உன் மோகம்” .

– பாடல்வரி தூரத்தில் எங்கோ ஒலித்துக் கொண்டிருந்தது.


*

Feb 11, 2014

அடையாளம்

இளங்காலைப் பொழுது

தூரத்தில் ஏறியிறங்கும்
நீலம் பூத்த மலைத்தொடர்கள்

பனையோலை வேய்ந்த
பழங்குடிசை வீடு

ஈரத்தரையில் ஊர்ந்துச் செல்லும்
மரவட்டைகள்

புகை புடை சூழ மண்ணடுப்பில்
விறகெரித்துச் சமையல் செய்யும் பெண்

குப்பையைக் கிளறி 
குஞ்சுகளை இரை திண்ணப் பழக்கும் கோழி

ஓடைநீரில் துண்டு விரித்து
மீன் பிடித்து விளையாடும் சிறுவர்கள்

குச்சியின் உச்சியில்
யோசனையாய்க் காத்திருக்கும் மீன்கொத்தி

தென்னங்கீற்று நுனியில்
தூளி போல் ஆடும் தூக்கணாங்கூடு

மரக்கிளையில் மறைந்தமர்ந்து
கொய்யாவைக் கொத்தும் கிளிகள்

தொங்கும் மாங்கனியை
தூரிகைப் பற்களால் கொறிக்கும் அணில்

காளைகளிரண்டை ஓட்டிக்கொண்டு
கலப்பைச் சுமந்து போகும் உழவன்

ஐந்தங்குல இடைவெளியில் அவனைப் பின் தொடர்ந்து 
ஓட்டமும் நடையுமாய் செல்லும் நாய்

இப்படி
இயற்கையோடு இயைந்தே மனிதர்கள்
இன்புற்று வாழ்ந்ததற்கான அடையாளமாக
அதிசயமூட்டுகிறது
அருங்காட்சியகத்தில் ஒரு ஓவியம்.


Feb 3, 2014

உழவுத்துறை



உலகின் மூத்த தொழில் உழவு
உயிர்களின் மூத்த உணர்ச்சி பசி

நூறாண்டுக் காலங்கள் உழைத்து
வேளாண்மை வளர்த்த நாம் தான்
விஞ்ஞானத்தின் வால் பிடித்து
அரை நூற்றாண்டு காலத்திற்குள்
நெறித்து விட்டோம் உழவின் கழுத்தை

இயற்கை உரமிட்டு பல்லுயிர்க் காத்த
பண்பாட்டுவழி வந்த நாம் தான்
இரட்டிப்பு மகசூல் பெறும்
கட்டில்லா பேராசையால்
ரசாயன உப்பைக் கொட்டி
புற்றுநோய் தொற்ற வைத்தோம்
விளைநிலத்தின் கருப்பைக்கு.

விளைவு?

விதையூன்றும் நுணுக்கத்தை
விரல்நுனிகள் மறந்து விட்டன
மோழி பிடித்து ஏரோட்டும் லாவகத்தை
மணிக்கட்டுகள் மறந்து போயின
கலப்பை இழுத்த கால்நடைகள்
அடிமாடாகி அழிந்து போயின
எழும்புக் கூட்டில் உயிர் சுமந்து
வீம்புக்கு விவசாயம் செய்தபடி
ஊருக்கு ஓரிருவர் மட்டும்
எஞ்சி நிற்கின்றனர்

இன்னும் கொஞ்சம் காலம் தான்
அவர்களும் காலனின் ஊருக்குக்
பாடையேறிக் கிளம்பிடுவர்

புதிய தலைமுறையை
காசு பணம் செய்யும்
கல்விக்குத் தாரை வார்த்து
துறைதோறும் வல்லுநர்களாக்கி வைத்தோம்,
அதிலும் வஞ்சணையாய்
உழவுத்துறையை ஒதுக்கி வைத்தோம்

நாளை
அனைவரின் மடியிலும்
அளவு மிஞ்சிய பொருளிருக்கும்
அந்தோ பரிதாபம்!
அரை வயிற்றுக் கஞ்சி கிடைக்காமல்
உலகே பசியால் நிரம்பியிருக்கும்.

உண்மையை உணர்ந்த பின்னும்
கணினிப்பெட்டி முன்னமர்ந்து
கவலைப்பட்டுக் கவிதை எழுதுவோமேயன்றி
நம்மில் ஒருவனும்
திரும்பப் போவதில்லை
உலகின் மூத்த தொழிலுக்கு.

***