Mar 16, 2014

இலையுதிர் காலம்

உடை
அவிழ்த்த தருவின்
அடிமரத்து நிழலில்
ஒடுங்கி அமர்ந்திருந்தேன்

மழைக்கூதலுக்குஇதமாய்
எஜமானியை உரசும் வீட்டுப் பூனையைப் போல
வந்து உரசுகிறது
ஒரு சருகு

இதே போன்றதொரு
கோடைநாளில் தான்
திடீரென 
காணாமல் போனதெங்கள்
பூனை.


*

Feb 14, 2014

ஆலிங்கனா-06


கொத்துக்கொத்தாய் மிகக் கூர்மையான மெல்லிய முட்களைக் கண்டு விலகிச் சென்ற என்னை வழியே வந்து விருந்துக்கு அழைத்தது அந்த அடர்ந்தரோஸ் நிற சப்பாத்திக்கள்ளிப்பழம். அருகே சென்று சில பழங்களைப் பறித்து பக்கத்திலிருந்த பாறையின் மீது உரசி அதன் மென்முட்களை நீக்கிக்கொண்டிருந்தேன். முதுகுப்புறமிருந்து வரும் சருகு நொறுங்கும் சப்தம் நெருங்கி ஒலிக்கையில் வருவது நீ தான் என உளவு சொன்னது செவிப்புலன். நான் திரும்பிப் பார்ப்பதாக இல்லை. உயிர் முழுதும் ஆவல் நிரம்பியிருந்தாலும், உன்மீதான கோபம்  கழுத்துவரை தேங்கியிருந்தது எனக்குள். இருக்காதா பின்ன? உள்ளூரில் இருந்துக்கொண்டே இரண்டு நாட்களாய் கண்ணிலேயே படாமல் போக்குக்காட்டிய காட்டேரி தானே நீ.

முன்புறம் வந்து நிற்க உனக்கும் துணிவில்லை போல. முதுகுப்புறத்திலேயே நின்றுக்கொண்டிருந்தாய். ஒரு பழத்தைக் கீறி உள்ளிருந்த கொக்கி முள்ளை எடுத்து தூர வீசிவிட்டு பழத்தை வாயிலிடும் நேரம் பார்த்து “எனக்கு” என்றாய். கோபமாய்த் திரும்பினேன். உன் வலக்கன்னத்திலிருந்த தழும்பைக் கண்டதும் வலி கொண்டு,  “என்னாச்சி” என கேட்கும் முன்னமே உன் கீழ் இமைக்குள்ளிருந்து குதித்து விட்டது கண்ணீர். கையை நீட்டினேன். உன் கைகளைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டாய். என்னவாயிருக்கும் என எண்ணியபடியே வலுக்கட்டாயமாக பிடித்திழுத்ததுப் பார்த்ததும் உன் உள்ளங்கைக்குள் நீ சுமந்து வந்த சூட்டுக்காயத்தைக் கண்டு உள்ளம் கலங்கி போனேன்.

அன்றொருநாள் காட்டுக்குப் போய் காளான் சமைத்துச் சாப்பிட்ட கதையை சில நாட்கள் கடந்து உன் தோழியிடம் பெருமையாய் நீ சொல்ல, அது உன்னைப் பிடிக்காத ஒருத்தியின் காதில் விழ, அவள் போய் உன் அம்மாவின் காதில் அமிலம் போல் ஊற்ற அதனால் விளைந்த காயம் இதுவெனவும், இனியெப்போதும் என்னைப் பார்க்கவோ, பேசவோ கூடாதென எச்சரித்து இருநாட்களாய் வீட்டோடு வைத்திருந்ததையும் சொல்லி முடித்தாய். இப்போதும் கூட யாருக்கும் தெரியாமல் தான் இங்கே வந்திருப்பதாய்ச் சொன்னாய்.

இங்கிருந்தால் யாராவது பார்க்கக்கூடும் என்பதால், முள்நீக்கி வைத்திருந்த பழங்களை உன் தாவணியின் முந்தானையில் அள்ளிக்கொண்டு  ஆளரவமற்ற பகுதிக்கு நடந்தோம். ஒரு சின்ன பாறையில் அமர்ந்து உன் துயரங்களைச் சொன்னாய். ஆறுதல் சொல்லிக்கொண்டே பழங்களை உறித்தேன். உறிக்கையில் விரலில் வழிந்த பழச்சாற்றினால் உன் நெற்றியில் பொட்டிட்டேன். இப்படி நேருமென்று சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை நீ. நானும் தான். பின் பழச்சதையை உண்ணக்  கொடுத்தேன். கொஞ்சம் எனக்கும் ஊட்டினாய். அதன் சதையையும், சாற்றையும் உறிஞ்சிக்கொண்டு விதைகளைத் துப்பத் திரும்பியவளின் பார்வை நிலைத்த இடத்தில் ஊர்ந்துச் சென்றுக்கொண்டிருந்த ‘வெல்வெட் பூச்சி’யைக் கண்டேன். அதை எடுத்து உன் கையை விரித்து சூட்டுப்புண்ணின் மேல் விட்டேன். அங்கிருந்து முன்னும் பின்னும் நகர்ந்த அப்பூச்சியைப் பார்கையில் புண்ணிலிருந்துக் கசிந்துத் திரண்ட ரத்தத்துளி ஒன்று உருள்வது போல் இருந்தது. வலி மறந்து அதன் மென்மையை ரசித்தாய் நீ. உன் நிலைக்கண்டு உள்ளுக்குள் கசிந்தேன் நான்.

உன்னுடன் இருப்பது மகிழ்வாய் இருந்தாலும், நேரம் கடந்துக்கொண்டிருந்ததை எண்ணி உறுத்திக் கொண்டே இருந்தது. பிரிய மனமில்லை தான். இருந்தாலும்,  “உன் அம்மா தேடுவதற்குள்  வீடு போய் சேர்”, எனச் சொன்னேன்.  “கொஞ்ச தூரம் நீயும் வா” என்றாய். பின் தொடர்ந்தேன்.

கல்லாலமரத்தைக் கடக்கையில் எதிரே இருபதடி தொலைவில் இரு பாம்புகள் ஒன்றாகித் தள்ளாடுவதைக் கண்டதும் பதறியபடி திரும்பிய வேகத்தில் என்னை நெஞ்சிறுகக் கட்டிக்கொண்டு கண்களை மூடிக்கொண்டாய். வழக்கமாய் இதயம் துடிப்பதைக் கேட்டிருக்கிறேன். இதயம் நடுங்கும் என்பதை அன்றுதான் உணர்ந்தேன். உன் இதயத்தின் தாறுமாறான துடிப்பை என் மார்பு உணர்ந்தது. நடுங்கும் உன்னை நிதானப்படுத்த என்ன செய்வதெனப் புரியவில்லை எனக்கு. ஒருவாறு,  பின்னந்தலையில் தொடங்கி தோளினைத் தடவியபடியே எதையெதையோ பேசி உன்னை திடப்படுத்தினேன். சிறிது சிறிதாக நடுக்கம் தொலைத்தாய். உன் முகத்தை உயர்த்தினேன். ஆனாலும் கண்களைத் திறப்பதாயில்லை நீ. போர்வைக்குள் புரளும் பூவையைப்போல திறவாத இமைக்குள் இடவலமாய்  உருண்டன உன் கண்கள். உதட்டுக்குச் சற்று மேலுள்ள பூனைமுடிகள் குறுகுறுப்பாய் என் கண்களை முறைத்துப் பார்த்தன. அதை நான் கண்டு கொண்டதாய்க் காட்டிக் கொள்ளவில்லை.  மூடிக்கிடந்த உன் இமைகளின் மேல் மெதுவாய் ஊதினேன். காற்றின் வருடலில்  நீ கண் திறந்தத் தருணத்தில் பாம்பிருக்கும் திசையைப் பார்க்கச்சொல்லி கண்களால் உத்தரவிட்டேன். பிடியின் இறுக்கம் தளர்த்தாமல் திரும்பிப் பார்த்தாய். சரசத்தில் பிணைந்திருந்த அந்த சர்ப்பங்களும் நம்மைக் கண்டுக்கொள்வதாய் இல்லை. பாம்பின் திசையிலிருந்து பார்வையை விலக்கி இருவர் கண்களும் இணையாய் மோதின. இரு கண்கள் என்னவோ கேட்டன. இரு கண்கள் எதையோ சொல்லின.

காம்பில் தங்காது கழன்ற, கனிந்த நாவல்பழங்கள் இரண்டு முழுமையடைந்த பெண் ஓவியத்தின் முகத்தில் விழுந்து ஒட்டிக்கொண்டதைப் போன்ற உன் உதடுகள் எனக்குள் ஏதோ வேதிவினை நிகழ்த்தின. கனியும் கனி வாய் எனக்கு ஒப்புதல் அளிப்பதாய் சுழிந்தன. என் மார்பில் முட்டியிருந்த சிற்ப பூச்செண்டுகள் தீக்கங்கின் வேலையைச் சிறிதாய்த் தொடங்கியிருந்தன. அந்த பாம்புகளின் நிலைக்குச்செல்ல நம்மை ஆயத்தமாக்கின ஆர்மோன்கள். இரத்தநாளங்கள் மொத்தமும் பித்தம் கடத்தின. மூடியிட்ட கொதிகலனிலிருந்து சிறு துவாரத்தின் வழியே வெளியேறும் நீராவி போல இரு மோகக் கலன்களிலிருந்து தீ மூச்சு வெளியேறிக் கொண்டிருந்தது. இருவருக்குள்ளும் சுழலும் ஊன்வெப்பப் பெருக்கத்தால் மார் கச்சையின் கீழ்கொக்கி கழல மறுத்தும் முயற்சியை நிறுத்தவில்லை விரல்கள். 

“தளிரான என்மேனி
தாங்காது உன் மோகம்” .

– பாடல்வரி தூரத்தில் எங்கோ ஒலித்துக் கொண்டிருந்தது.


*

Feb 11, 2014

அடையாளம்

இளங்காலைப் பொழுது

தூரத்தில் ஏறியிறங்கும்
நீலம் பூத்த மலைத்தொடர்கள்

பனையோலை வேய்ந்த
பழங்குடிசை வீடு

ஈரத்தரையில் ஊர்ந்துச் செல்லும்
மரவட்டைகள்

புகை புடை சூழ மண்ணடுப்பில்
விறகெரித்துச் சமையல் செய்யும் பெண்

குப்பையைக் கிளறி 
குஞ்சுகளை இரை திண்ணப் பழக்கும் கோழி

ஓடைநீரில் துண்டு விரித்து
மீன் பிடித்து விளையாடும் சிறுவர்கள்

குச்சியின் உச்சியில்
யோசனையாய்க் காத்திருக்கும் மீன்கொத்தி

தென்னங்கீற்று நுனியில்
தூளி போல் ஆடும் தூக்கணாங்கூடு

மரக்கிளையில் மறைந்தமர்ந்து
கொய்யாவைக் கொத்தும் கிளிகள்

தொங்கும் மாங்கனியை
தூரிகைப் பற்களால் கொறிக்கும் அணில்

காளைகளிரண்டை ஓட்டிக்கொண்டு
கலப்பைச் சுமந்து போகும் உழவன்

ஐந்தங்குல இடைவெளியில் அவனைப் பின் தொடர்ந்து 
ஓட்டமும் நடையுமாய் செல்லும் நாய்

இப்படி
இயற்கையோடு இயைந்தே மனிதர்கள்
இன்புற்று வாழ்ந்ததற்கான அடையாளமாக
அதிசயமூட்டுகிறது
அருங்காட்சியகத்தில் ஒரு ஓவியம்.


Feb 3, 2014

உழவுத்துறை



உலகின் மூத்த தொழில் உழவு
உயிர்களின் மூத்த உணர்ச்சி பசி

நூறாண்டுக் காலங்கள் உழைத்து
வேளாண்மை வளர்த்த நாம் தான்
விஞ்ஞானத்தின் வால் பிடித்து
அரை நூற்றாண்டு காலத்திற்குள்
நெறித்து விட்டோம் உழவின் கழுத்தை

இயற்கை உரமிட்டு பல்லுயிர்க் காத்த
பண்பாட்டுவழி வந்த நாம் தான்
இரட்டிப்பு மகசூல் பெறும்
கட்டில்லா பேராசையால்
ரசாயன உப்பைக் கொட்டி
புற்றுநோய் தொற்ற வைத்தோம்
விளைநிலத்தின் கருப்பைக்கு.

விளைவு?

விதையூன்றும் நுணுக்கத்தை
விரல்நுனிகள் மறந்து விட்டன
மோழி பிடித்து ஏரோட்டும் லாவகத்தை
மணிக்கட்டுகள் மறந்து போயின
கலப்பை இழுத்த கால்நடைகள்
அடிமாடாகி அழிந்து போயின
எழும்புக் கூட்டில் உயிர் சுமந்து
வீம்புக்கு விவசாயம் செய்தபடி
ஊருக்கு ஓரிருவர் மட்டும்
எஞ்சி நிற்கின்றனர்

இன்னும் கொஞ்சம் காலம் தான்
அவர்களும் காலனின் ஊருக்குக்
பாடையேறிக் கிளம்பிடுவர்

புதிய தலைமுறையை
காசு பணம் செய்யும்
கல்விக்குத் தாரை வார்த்து
துறைதோறும் வல்லுநர்களாக்கி வைத்தோம்,
அதிலும் வஞ்சணையாய்
உழவுத்துறையை ஒதுக்கி வைத்தோம்

நாளை
அனைவரின் மடியிலும்
அளவு மிஞ்சிய பொருளிருக்கும்
அந்தோ பரிதாபம்!
அரை வயிற்றுக் கஞ்சி கிடைக்காமல்
உலகே பசியால் நிரம்பியிருக்கும்.

உண்மையை உணர்ந்த பின்னும்
கணினிப்பெட்டி முன்னமர்ந்து
கவலைப்பட்டுக் கவிதை எழுதுவோமேயன்றி
நம்மில் ஒருவனும்
திரும்பப் போவதில்லை
உலகின் மூத்த தொழிலுக்கு.

***

Jan 13, 2014

அதிரூபனும் சிண்ட்ரெல்லாவும் - ஒரு கவிதை அநுபவம்

கவிதைக்குப் பொய் அழகு என்பார் கவியரசு வைரமுத்து. கவிதைக்கு உண்மையும் அழகு  என்பதைக் கவிதாயினி தமிழரசியின் கவிதைகள் உணர்த்தி விடுகின்றன. கவிதை செய்வோருக்கு  , கூடு விட்டு கூடு பாயும் வித்தைத் தெரிந்திருக்க வேண்டுமாயிருக்கிறது. இக்கவிதாயினி தெரு மாடுகளாக, தெருநாயாக, தெருவோர வாசியாக, கல்லுடைக்கும் சிறுமியாக, விபச்சாரியாக, மரமாக, மலராக, மழையாக, கல்லாக, பறவையாக, …. இப்படி அனைத்தின் பிரதிநிதியாய் முன்னின்று அவற்றின் / அவர்களின் குரலாக கவிதைகள் நெய்திருப்பதைப் பாராட்டாமல் இருக்கவே முடியாது. இவள் கவிதைக் குலப்பெண். காண்பவை அனைத்திலும் கவிதைகளைக் கடைந்தெடுத்திருக்கிறாள்.

பொதுவாக, கவிஞர்கள் காலத்தின் கண்ணாடி என்பார்கள். ஆமாம், 21-ஆம் நூற்றாண்டிலும் இந்நாடு எந்நிலையில் இருந்தது என்பதைக் காட்ட,

“பிறப்புறுப்பைக்கூட
எங்கள் தாயின்
நைந்த புடவையினால் தான் மறைக்கிறோம்” - 
என்ற இந்த வரிகள் போதாதா?

எளிய தமிழில் கவிதைகள் செய்யவேண்டும் என்பார் பாரதிதாசன். தமிழரசியின் கவிதைகளின் பலமே எளிய சொல்லாடல்கள் தான்.

காதல் கவிதைகள் எழுதாத எவரும் கவிதை உலகில் இருக்கவே கூடாது என்பது இயற்கையின் நியதி. இவள் காதலை எழுதுவதற்கென்றே பிறப்பெடுத்திருக்கிறாள் என்பதை, இத்தொகுப்பிலுள்ள காதல் கவிதைகளைப் படிப்பவர் / படித்தவர் எவரும் மறுக்க முடியாது. அதிலும்,

“போர் முடிந்தவுடன்
உன் கூர்விழிகள் கொய்யப்படும்
வேறுகளம் காணக்கூடாதென்று
சம்மதம் என்றால்
உன் மதம் காட்ட வா”

இப்படியான மிரட்ட தொனிக்கும் காதல் கவிதைக்குச் சொந்தக்காரி.

இறுதியாக இடம் பெற்றிருக்கும், “எழுதுகிறேன் ஒரு கடிதம்” … படிக்கும் ஆண் வாசகன் தன்னை அதிரூபனாய் உருவகித்துக் கொள்ளாமல் இருக்கவே முடியாது. (சிண்ட்ரெல்லாவாக அவரரவர் தலைவியை நினைச்சுக்குங்கப்பா) அந்தக் கடிதத்தின் மூன்றாவது முனையில் ஒரு முத்தம் பதித்தனுப்பி இருப்பதாகவும், கடிதத்தைப் பிரித்தவுடன் அம் முத்தத்தைத் தின்று விடும்படியாகவும் அதிரூபனுக்கு, குறிப்பெழுதியிருக்கிறாள் சிண்ட்ரெல்லா.அதிரூபன் தின்றானா, இல்லையா? என்பது தெரியாது. ஆனால்,

(தமிழரசியின் தனிப்பட்ட கவனத்திற்கு:)
உங்களின் நூலினைப் படித்து முடித்ததும் கவிதைகளைத் தின்று விட்டேன்.

மொத்தத்தில் ஒரு கவிக்கானகத்திற்குள் காணாமல் போய்விடும் அதிசயத்தை நிகழ்த்தி விடுகிறது இந்நூல்.

நண்பர்களின் கவனத்திற்கு,
சென்னைப் புத்தகக் கண்காட்சியில் இக்கவிதை நூல் வாங்க விழைவோர்,

டிஸ்கவரி புக் பேலஸ்,

ஸ்டால் எண்- 307,308, 353,354 

Oct 11, 2013

இரை

குஞ்சுகளுக்கு
இரையூட்டி விட்டு
விருட்டென பறக்கும்
தூக்கணாங்குருவி போல்
அஞ்சல்பெட்டிக்குக் கடிதத்தையும்
என் நெஞ்சத்துக்குக் காதலையும்
ஊட்டிவிட்டு விரைந்து விட்டாய்
அடுத்தடுத்த நாளும்
அங்கேயே
நிறுத்தி வைத்திருக்கிறேன் என்னை.

*

Aug 30, 2013

ஆலிங்கனா-05


       ஆலம் விழுது போல நிலவிலிருந்து ஒரு ஒளிக்கயிறு என் முன்னே இறங்கியது. ஆவலில் அதைத் தொட்டதும் என் கைகளை  அதிலிருந்து விலக்கவே முடியவில்லை. நிலவிலிருந்து யாரோ அக்கயிற்றை மேல்நோக்கி இழுத்தார்கள். உயரே போகப்போக உயிரே போய்விடும் போல் திகிலலடைந்து மனம். பயத்தில் நினைவிழந்துவிட்டேன். நினைவு திரும்பி கண்விழித்தபோது எதோவொரு புது இடத்தின் விளிம்பில்  விழுந்துக்கிடந்தேன். இப்போது அங்கே கயிறு எதுவும் இல்லை. படுத்தபடியே சுற்றிலும் பார்த்தேன்.ஒருவரையும் காணவில்லை. இரு கைகளாலும் விளிம்பினை உறுதியாகப் பிடித்துக் கொண்டு எட்டிப் பார்த்தேன். இதுவரையிலும் காணாத என்னென்னவெல்லாமோ தெரிந்தது. அவற்றின் பெயர் தெரியாததால் அவை பற்றி எதுவும் இங்கே விவரிக்க முடியாது என்னால்.  படுத்திருந்த தரை பளிங்கினால் ஆனது போல் இருக்கிறது. எழுந்து நிற்க முயன்றேன். கால்கள் நழுவியது. இப்போது புரிந்து விட்டது எனக்கு, நானிருக்கும் இடம் நிலா. 

இத்தனை ஆண்டுகளாய் நான் நினைத்திருந்ததைப் போல நிலா தட்டையாய் இல்லை. இங்கே வந்த பின்புதான் தெரிகிறது, ஒளியுமிழும் ஒரு வட்ட பரப்பு இது.  வட்டத்தின் நடுவில் குழிந்து குளம் போன்றதொரு  பள்ளத்தில் பால் நிரம்பியிருக்கிறது. நிலவின் விளிம்பையொட்டியே நடந்து பூமியை எட்டியெட்டிப் பார்த்து பரவசத்தில் இருந்தேன். நிலா மெல்ல குலுங்கியது. மீண்டும் பயம்.  ஓரிடத்தில் நின்று குளத்தை உற்றுக் கவனித்தேன். நிலவின் கரையில் நிற்கும் என்னை பொருட்படுத்தாமல் பால்குளக் கரையோரத்தில் நின்று மேலாடைகளை மெல்லக் களைந்து வீசியெறிந்தாய். அது காற்றில் அலைந்து அலைந்து நிலவின் மறுவிளிம்பில் சிக்கித் தொங்கியது. அனுதினமும்  குளிக்க ஆடைகளைக் களைந்து நீ வீசும்போது ஒழுங்கற்று விழுந்து நிலவின் சில பகுதிகளை மூடிக்கொள்வதால் வளர்பிறை, தேய்பிறை நிகழ்வதையும், உனதாடை தவறுதலாய் நிலா முழுவதையும் மூடிக்கொள்ளும் நாளில் பிரபஞ்சமே இருண்டு போய் அமாவாசை யாவதையும் புரிந்துக் கொண்டேன். ஆளரவமே இல்லாத இங்கே நீ மட்டும் எப்படி வந்திருப்பாய் என்பதை நினைத்துப் பார்த்தேன். சாத்தியமே இல்லை. சத்தியமாய் நீ நிலவின் மகளாய்த்தான் இருக்க முடியும் என முடிவு கொண்டேன்.

பாவடையின் நாடாவைத் தளர்த்தி இடுப்பிலிருந்து உயர்த்தி திமிரும் தனங்களுக்கு மேலே நெருக்கிக் கட்டி பால் குளத்தில் இறங்கி நீந்தினாய். பல்லவன் உளி பெற்றெடுத்த கரிய கற்சிலையொன்று பாலில் நீந்துவதைக் கண்ட என் கண்கள் வியப்பில் இமைக்க மறந்து போயின. கண் திரைகள் உலர்ந்து விட்டன. நிலவின் விளிம்பில் நான் நின்றிருந்த இடம் மட்டும்  பாரந்தாங்காமல் அலுமினியத் தட்டினைப் போல் நெகிழ்ந்து வளைவதை என் உள்ளங்கால்கள் உணர்த்துகின்றன. இங்கிருந்து நகர்ந்து விடலாம் என நினைக்கையில், இனி ஒரு அடி கூட நடக்கவே முடியாது என்னால். ஆமாம், என் பாதத்திலிருந்து நிலவிற்குள் வேர் பாய்ந்துக்கொண்டிருக்கிறது. வேறு வழியின்றி குளத்தையே பார்த்துக் கொண்டு நின்றேன். பாலுக்குள் மூழ்கி நெடுநேரம் கழித்து வெடுக்கென தலைநீட்டிய நீ அடக்கியிருந்த மூச்சை அவசர அவசரமாய் வெளியேற்றி,உள்ளிழுக்கும் போது அந்தக் குளமே சுருங்கி விரிவது விந்தையாய் இருக்கிறதெனக்கு.  

நீந்தி களைத்துக் கரையேறுமிடத்தில் தும்பைப் பூக்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கிறது. குளத்திலிருந்து வெளிவந்து அப்பூக்களை அள்ளியெடுக்கிறாய். பூந்துவாலையைப் போல் பின்னி விரிகிறது அவ் உதிரிப்பூக்கள்.  முகத்திலிருந்து பாதம்வரை துடைக்கிறாய். உன் உடலைத் துடைக்கையில் அத்துவாலையிலிருந்து உதிரும் தும்பைப்பூக்கள் கண் கூசாத அளவிற்கு ஒருவிதமான மென்னொளி வீசுகின்றன.  உதிர்ந்த பூக்களின்மேல் வானம் நோக்கி நீண்டு படுத்துக் கொண்டாய். சிதறிக்கிடந்த பூக்களை எடுத்து அங்கத்தின் அந்தரங்கத்தை மூடினாய்.


சற்றுநேர இளைப்பாறலுக்குப் பின் மீண்டும் குளத்தில் இறங்கி நீந்தத் துவங்கிவிட்டாய். நீந்துவதும் இளைப்பாறுவதும் தான் உன் வேலையா? உனக்கு பசியே எடுக்காதா? பசிக்காது தான். உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கும் எனக்கே பசிக்கவில்லையே. உனக்கு மட்டும் எப்படி பசிக்கும்? இங்கே எதை உண்டு இத்தனை வனப்பாக வளர்ந்தாய் நீ? பெண் அங்கத்திற்கென உருவகித்திருக்கும் அத்தனை இலக்கணங்களுக்கும் உரியவளாய் எப்படி உருவெடுத்தாய் நீ? ஒருவேளை மந்திரமோகினியா நீ? இங்கிருந்து உன்னை நான் பார்க்க முடிகிறதென்றால் அங்கிருந்து என்னை உன்னால் பார்க்க முடியுந்தானே? பிறகேன் என்னைக் காணாதவள் போலவே ஆடை அவிழ்ப்பதும், நீந்துவதும், கரையில் புரள்வதுமாய் செய்கிறாய்.  ஒருவேளை பார்வையற்றவளா நீ?

அட! நின்றவிடத்திலிருந்து நான் உன்னையே பார்த்துக் கொண்டிருந்ததை எப்படியோ உணர்ந்து விட்டாய். நீர்க்கோழி போல் மீண்டும் பாலுக்குள் மூழ்கி உன்னை மறைத்து கொண்டு விட்டாய். மூச்சுத்திணறி இறந்துவிட போகிறாய். வெளியே வந்துவிடு சிலையம்மா. வா. வந்து விடு. குளத்தினருகில் வந்து உன்னைத் தேடலாமென்றாலும், வேரூன்றி விட்ட கால்களை விடுவிக்க முடியவில்லை என்னால். உனக்கு என்னாகுமோ என தவித்து, எப்போது வெளியே வருவாயென எதிர்பார்த்து காத்து களைத்திருந்தேன்.  நான் போய்விட்டிருக்கக் கூடும் என்றெண்ணி, நீரினடியில் அமிழ்த்து வைக்கப்பட்டிருந்த வளி நிரம்பிய பந்து பிடி நழுவி வெளியேறும் வீச்சில், குளத்திலிருந்து   வெளியே தலையை நீட்டி கூந்தலை ஒரு வீசுவீசினாய். கூந்தலிலிருந்து தெரித்த பால் துளிகள் என் கண்ணுக்குள் வந்து விழுந்தன. அனிச்சையாய் கண்களைக் கசக்க, கலைந்துவிட்டது கனவு. 

*

Aug 19, 2013



கண்கொத்திப் பறவை - ஒரு பார்வை 

  

     சத்ரியனை முகநூலின் வழியாகவே பழக்கம். உண்மையில் அவர் கவிதைகளைப் படிக்கும் முன்னரே அவர் அறிமுகம் கிடைத்து விட்டது என்றே சொல்லலாம். ஆனால் அவர் கவிதைகளைப் படிக்கும்போதுதான் அவரின் நெறிமுகம்(நானே யோசிச்ச வார்த்தையாக்கும்) தெரிந்தது. என்னால் முடிந்த அளவு நடு நிலையோடு விமர்சித்து இருக்கிறேன் நண்பனின் கவிதைகளை. சில (+) களும், (-) களும் இங்கே.

(+) உவமை - சத்ரியனின் பலம். சரியும் வளையல்கள் தோழிகள் ஆவதும் வெட்டுப் படாத தாளின் முனை தெற்றுப் பல் ஆவதும் சில உதாரணங்கள்.. தக்கை நோக்கும் மீன் பிடி சிறுவன் நம் காதல் நோக்கி காத்திருந்த கணங்களை நினைவுபடுத்திப் போகிறான்.

(+) காதல் - எத்தனையோ கவிஞர்களை இயக்கும் சக்தி. சத்ரியனின் கவிதைகளில் இது நிரம்பி வழிகிறது. காதலில் இருப்போர் கண் கொத்திப் பறவையிடம் அடிமைப் பட்டுப் போவார்கள்.. ஒரு கிராமத்துக் காதலின் தவிப்பான சுவடுகள் நூலெங்கும் கிடைக்கிறது. 

(+) நிஜம் - நூலெங்கும் கவிஞனின் ஆத்மாவைக் காண முடிகிறது. அவர் குழந்தையின் பிறந்த நாள் உட்பட.. படித்து முடிக்கையில் ஓர் புலம் பெயர்ந்த கிராமத்துக் காதலனின் போராட்டம் புரிந்து விடுவது இந்தப் புத்தகத்தின் வெற்றி.

(+) நூல் வடிவமைப்பு - நிறைய உழைத்து இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.. அட்டைப் படம் ஒன்றே போதும் அலமாரியில் இருந்து எடுக்கப் பட..

(+/-) நடிகைகள் - புத்தக வடிவமைப்பில் உபயோகித்து இருக்கும் நடிகைகள் படங்களைத் தவிர்த்து இருக்கலாம். கவிதைகளின் உண்மை நாடி அதில் அடிபட்டுப் போகிறது என்பது என் சொந்த அபிப்பிராயமே.. இதையே பலர் விரும்பவும் செய்யலாம். குறிப்பாக சினிமாவின் மூலம் காதலிப்பவர்கள்..

(-) முன்னுரைகள் - நிறைய பக்கங்கள்.. சிலவற்றை கடைசியில் வைத்து இருந்தால் கவிதைகளை விரைவில் அடையலாம்..

மொத்தத்தில் சத்ரியனின் கவிதைகளில் தெரியும் காதலும் உவமைகளும் அவருக்கு நிறைய வாசகர்களைப் பெற்றுத் தரும் என்பது என் உறுதியான எண்ணம். இது அவர் முதல் படி என்றாலும் உறுதியாகவே எடுத்து வைத்து இருக்கிறார். மீண்டும் வாழ்த்துக்கள் ஒரு உண்மையான கவிஞனுக்கு...!

கவிஞர் ஷான் அவர்களின் பக்கத்தில் படிக்க “இங்கே” சொடுக்கவும்.


 நன்றி : ஷான்.


Aug 12, 2013

தேடித்தேடி

தேவையின் நிமித்தமே
தேடலைத் துவக்கி வைக்கிறது

இவ்வுயிரிக் கோளத்தின்
இடைவிடாத் தேடலின்
இறுதி கண்டுபிடிப்பு மனித இனம்

நிர்வாண மனிதன்
நிர்வாணமாய் இருந்த வரையிலும்
சொர்க்கமாகவே இருந்தது பூமி

இடையை மறைக்கும் தேவை
மரவுரியையும்
மிருகத்தை விரட்டும் தேவை
நெருப்பையும்
உணவுத் தேவை உழவையும்
உணர்வுப் பறிமாற்றத்தேவை
மொழியையும்
மகிழ்ச்சித்தேவை கலையையும்
இனப்பெருக்கத் தேவை கலவியையும்
தற்காப்பு தேவை போரையும்
நாட 
கட்டாயப்படுத்தியது காலம்

நிலம் கடக்க சக்கரம்
கடல் கடக்க கலம்
கோள் அளக்க வானவியல் என
தொடர்ந்த தேடலால்
விருத்தியடைந்தது அறிவியல்
அறிவியலின் விரல் பிடித்து
அணு பிளக்கும் வல்லமைக் கண்டு
இயற்கையை மார் பிளந்து
மனிதனே இங்கு மாபெறும் ஆற்றலென
இறுமாப்போடு உயர்ந்து
சக உயிரினங்களை ஒழித்து ஓய்ந்து
இளைப்பாறும் நேரத்தில்

எஞ்சியிருக்கும்
கொஞ்சம் தாவரங்களும்
கூடுதலான எந்திரங்களும்
இன்றோ நாளையோ
பாலையாகி விடுவோம் என்னும்
பயத்திலிருக்கும் மண் பரப்பும்
மன்றாடி பணித்தபடி இருக்கிறது
மனிதா
நீ மட்டுமாவது வாழ
தேடிக்கொள்
மற்றோர் உயிரிக்கோளத்தை என!

*

சிங்கப்பூரில் தங்கமீன் வாசகர் வட்டம் இம்மாதம் (11/08/13) நடத்திய  (தலைப்பு : “தேடல்”)  கவிதைப் போட்டியில் பரிசு பெற்ற கவிதை.

Jun 30, 2013

காதல் கடிதம்



எப்படி துவங்குவதென்றே தெரியவில்லை மனோரஞ்சிதா.

அன்புள்ள தோழி என்று துவங்க வெட்கமாய் இருக்கிறது. 

ப்ரியமான காதலி என்று துவங்க பயமாய் இருக்கிறது. 

இதுநாள் வரை தோழியென தான் நம்பியிருந்தேன். அந்த நம்பிக்கையில் மண் வந்து விழுந்தது,   என் அம்மா சொன்ன உன் கல்யாணம் குறித்தான தகவல்  அறிந்த போது தான்.  ஆமாம்,  இவ்வாண்டு பள்ளிப்படிப்பு முடிந்ததும் உன்னை, உன் தாய் மாமனுக்கு கல்யாணம் கட்டிவைக்கப் போவதாக  உன் அம்மா சொன்னளாம். அதை, என் அம்மா சொல்லக் கேட்ட நொடியிலிருந்து  கட்டுப்படுத்த முடியாத ஒருவகையான அதிர்வு என்னுடலில் புகுந்துக் கொண்டது.   நிமிடத்திற்கு எண்பது என்ற எண்ணிக்கையை மறந்து  தறிக்கெட்டு துடிக்கிறது இதயம். இறகுகள் முளைக்கும் முன்னமே  தொலைத்து விடுவேனா என் வானத்தை என அஞ்சும் ஒரு குருவிக் குஞ்சினைப் போல் அஞ்சுகிறது  நெஞ்சம். கைப்பிடியளவு நுண்மணல் எடுத்து இமைக்குள் இட்டு நிரப்பியதைப் போல் உறுத்துகிறது கண்ணில் உரக்கம்.   ஒற்றையடி பாதையை வழிமறித்து படுத்திருக்கும் பாம்பினைப் போல  நீண்டு படுத்துக் கொண்டு என்னை மிரட்டுகிறது இந்த இரவு. கவிஞர் வைரமுத்து சொன்ன   வயிற்றுக்கும், தொண்டைக்கும் நடுவில் உருவமில்லா பந்து ஒன்று எனக்குள்ளும் உருளத் துவங்கியிருக்கிறது. ஒருவேளை, நம்மைக் காதலித்துப் பார்க்கச் சொல்லி கலகம் செய்கிறதோ காலம்! 

ஒரே ஊரில் பிறந்து, வளர்ந்து ஒரே வகுப்பில் படித்து ஓடியாடி விளையாடி மகிழ்ந்த நமக்கிடையிலான இத்தனை ஆண்டுக்கால நட்பில் யாதொரு வித்தியாசத்தையும் அறிந்திராத உள்ளம், உனக்கு கல்யாணம் என்பதை கேள்விப்பட்ட மாத்திரத்தில்  அறுந்த பல்லியின் வால் போல துடிப்பதின் மர்மம் எதுவாக இருக்கும் என்ற கேள்வி தொல்லை செய்கிறது என்னை. கண்ணுக்குத் தெரியாமல் நம் நட்பின் தோளில் கை போட்டுக் கொண்டு ஒட்டுண்ணியாய் வளர்ந்திருக்குமோ இந்த காதல் ? இதோ இப்போது அது எனக்குள் மெல்லமெல்ல ஊடுருவி மூலாதார முடுக்கில் ஒளிந்துக் கொண்டு,  நீயில்லாததொரு வாழ்வு வாழ்வாகவே இருக்காது என்று சதா ஜபித்தபடி பித்தனாக்குகிறது என்னை. என் மனக்கட்டுப்பாட்டை இழந்துதான் இந்தக் கடித்தை எழுதிக் கொண்டிருக்கிறேன். எழுதி முடிப்பதற்குள்ளாகவே மனநிலை பிறழ்ந்திடுவேனோ என பயமாய் இருக்கிறது. 

என்னையும், உன்னையும் கேட்காமலேயே இத்தனைக் காலமாய் உன்னைக் காதலியாய் அமரவைத்து அழகு பார்த்திருக்குமோ என் இதயம் என்று இப்போது சந்தேகம் வலுக்கிறது. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா எனக் கேட்டு  நமட்டுச் சிரிப்பு சிரிக்கிறது மனசாட்சி.  “இந்தக் காதலின் அவஸ்தை என் எதிரிக்கும் கூட வரக்கூடாது  இறைவா!”, என  இறைஞ்சத் தோன்றுகிறது. 

கூரையின் சந்து பொந்துகளில் எல்லாம் நுழைந்து வந்து விளக்கை அணைப்பதிலேயே முனைப்பாய் இருக்கிறது காற்று. ஏழையின் குடிசை என்றால் ஆடிக்காற்றுக்கும் இளப்பம் தான் போல!.  விளக்கு புட்டியில் இருக்கும் மண்ணெண்னை தீர்வதற்குள்  இந்த கடிதத்தை எப்படியாவது எழுதி முடித்துவிட வேண்டும் என்ற மன உந்துதலுக்கேற்ற வேகத்தில் வந்து விழ மறுக்கின்றன சொற்கள். வெட்கம் விட்டுச் சொல்கிறேன். ஆறு மாதக் குழந்தை நான்கு காலில் தவழ்ந்து நடக்க முயன்று விழுந்து  மீண்டும் மீண்டும் நடைப்பயில முயல்வதைப்போல , என் விருப்பத்தை எழுத முயன்றதில் இந்த இருவத்தி மூன்றாவது தாள்தான் கடிதம் போன்றதொரு தோற்றத்தை அடைந்திருக்கிறது. இப்போதும் கூட நான் சொல்ல வந்ததை சரியாக எழுதியிருக்கிறேனா என ஒரு சந்தேகம் வந்து தொலைக்கிறது.

உண்மையில் காதல் என்பதின் பூரண அர்த்தம் என்னவாக இருக்கும் என்பது எனக்குத் தெரியவில்லை. என் காதலின் ஒரே நோக்கம் மரணத்தின் எல்லை வரை நீ என் உடன் இருக்க வேண்டும் என்பதே.

இந்தக் கடிதத்தைப் படித்த உடனே உன் விருப்பத்தைச் சொல்ல வேண்டும் என்கிற கட்டாயமெதுவும் கிடையாது. சாவகாசமாக ஒருநாள் எடுத்துக்கொள். அதற்கு மேலான தாமதத்தைத் தாங்குவது எனக்கு சிரமமாக இருக்கும். இறுதியாய், உன்னிடம் கெஞ்சிக் கேட்டுக்கொள்வது  ஒன்றே ஒன்றுதான், 

“நானும் நல்லா யோசிச்சி பாத்தேன், இதெல்லாம் தப்புடா?  நாம எப்பவும் நட்பாவே இருந்துடலாம்” என கெஞ்சித் தொலையாதே. காரணம், 

ஒரேயொரு நொடி உன்னை காதலியாய் ருசி கண்டுவிட்ட அந்த இதயம், மீண்டும் ஒருபோதும் தோழியாய் ஏற்கவே ஏற்காது.  ஒருவேளை, காதலை நீ ஏற்றுக் கொள்ளாமல் போனால், தோற்றுப் போனதாவே இருந்து விடட்டும் என் காதல்!

காத்திருப்புக்களுடன்,
சத்ரியன்.


# குறிப்பு :  “திடங்கொண்டு போராடு” வலைத்தள நண்பர் சீனு நடத்தும் காதல் கடிதப் போட்டியில் “காதலிக்கு எழுதிய கடிதம்” என்ற தலைப்பிற்காக புனையப்பட்டது.





Jun 12, 2013

வல்லமை

என்னை 
வீழ்த்தும் ஆயுதம் செய்ய 
பத்து மாதம் தேவையாய் இருந்திருக்கிறது 
என் அத்தைக்கு

அந்த 
ஆயுதத்தைக் கூர் தீட்ட
எண்ணிரண்டு ஆண்டுகள்
தேவையாய் இருந்திருக்கிறது
காலத்திற்கு

அந்த
ஆயுதத்திற்கு என்னை இரையாக்க
ஒரேயொரு நொடிதான் தேவையாய் இருந்தது
காதலுக்கு.


May 18, 2013

பெயர்




எழுதுகோல்
வாங்கும்போதெல்லம்
எதற்கு உந்தன்
பெயர் எழுதினேன் என்பதை
இன்று தான் உணர்ந்தேன்

கவிதை எழுத
தவழ்ந்திருக்கிறேன்.

*

Apr 8, 2013

காத்திருப்பு


நேரம் கடத்த
சிறு கற்களெடுத்து
குளத்து நீரில் எறிந்துக் கொண்டிருந்தேன்.

எனக்கும்
நிழல் விரித்துக் கொண்டே
பழுத்த இலைகளை
கிள்ளியெறிந்துக் கொண்டிருந்தது மரம்.

என் காத்திருப்பு
அவளின் வருகைக்காக

மரத்தின் காத்திருப்பும்
அவளுக்காகத்தான் இருக்குமோ?

**

Feb 14, 2013

ஆலிங்கனா-04


இதுநாள் வரை உன்னிடம் சொல்லாத ஒரு உண்மை இருக்கிறது. என்னுடன் நீ பழகத் தொடங்கிய நாளிலிருந்து என் உடலெங்கும் ஒருவகையான விஷம் ஊறத் தொடங்கியிருப்பதாய் உணர்கிறேன், ஆலிங்கனா. நடிக்கவே தெரியாத நயணத்தை எப்படி அருளினான் உனக்கு!?  எத்தனை அன்பையும், ஏக்கத்தையும் ஒருசேர பிரசவிக்கின்றன உன் கண்கள்! அய்ய்ய்யோ! உன் பார்வையை எதிர்கொள்ளும் வல்லமை இன்னும் என் கண்கள் பெறவில்லை. அனைத்தையும் நிறைவாய் கொடுத்த ’அவன்’ உனக்கான அன்பிற்கு மட்டும் பஞ்சம் வைத்து விட்டிருக்கிறான்  ‘பரதேசி’. என் ஆயுளை இட்டு நிரப்பினாலும் நிரம்பாதது உன் விழிப்பள்ளத்தின் ஏக்கம், ஆலிங்கனா. 

முந்தைய சந்திப்பின் விடைப்பெறுதலின் போது அந்த தேன்கலை மலையினைச் சுட்டிக்காட்டி, என்றாவது ஒருநாள் அம் மலையுச்சியில் இருக்கும் பூமரத்து சுனைக்கு உன்னை அழைத்துச் செல்வதாய்ச் சொல்லியிருந்தேன். அன்றது வாய்க்கும் என்று எதிர்பார்க்கவில்லை நான். உன்னை எண்ணி வியக்கும் விசயங்களில்  அந்த நாளினை தேர்ந்தெடுத்ததும் அடங்கும். இயல்பாய் வாய்த்துவிட்டது அந்நன்னாள். ஆமாம், அன்று பிப்ரவரி 14.  ஆனால்  ‘காதலர் தினம்’ அது என்பதை நாமறியாத காலம் அது.   இருவருமாய்ச் சேர்ந்து  முழுநாளையும் கழித்தோம். என்னவொரு தேவசுகம்! இங்கிருப்பவர்களில் யாராலும் உணரமுடியாது அதை. ஒருவேளை நாகரீகம் காணாத  கற்கால முன்னோர்கள் உணர்ந்திருக்கலாம். 

காட்டுப்பாதைப் பயணம் உனக்கு புதிது. உன் உடை இழுக்கும் முட்செடிகளை  விடுவித்து நீ நடந்து வருவதைக் காண பாவமாக  இருந்தது. செடிகளின் மீது கோவம் கோவமாய் வந்தது எனக்கு. ஒரு செடி கூட உன்னைத் தொடக்கூடாதென்ற என் எண்ணத்தின் பின்னணியில் என்ன இருக்கும் ஆலிங்கனா? ஒரு கவைக்கழி கொண்டு வழியோரச் செடிகளை ஒதுக்கி நீ மலையேற வழியமைத்துக் கொண்டே முன் நடந்தேன். செடிகளை ஒதுக்குகையில் சிறு புற்றின் ஓரம் ஒரு மொட்டுக்காளான்  உன் கூர்மூக்கில் அணிந்திருக்கும் ஒற்றைக்கல் மூக்குத்தியைப் போல தெரிந்தது.  அந்தப் புற்றினைச் சுற்றிலும் இருந்த புதரினை இன்னும் சற்று ஒதுக்கிப் பார்க்கையில் மொட்டுக்காளான்கள் மொத்தமாய் விளைத்திருந்ததைக் கண்டோம். புதருக்குள் நுழைந்து நான் பறித்தெடுத்த காளான்களை நீ பாவாடை மடியில் ஏந்தி எடுத்துக் கொண்டாய். அதைச் சுமந்தபடி நடக்கத்தெரியாத உன்னழகை எந்த சொல் கொண்டும் விளக்க முடியாது என்னால்.

மலையுச்சியை நெருங்க நெருங்க  பெருஞ்சுவாசத்தின் சுதிக்கேற்ப ஜதி பிடித்து ஏறி இறங்கியது உன் நெஞ்சம். மலையுச்சியில் நின்று சுற்றியிருக்கும் ஊர்களையும், அலையலையாய் தெரியும் தூரத்து இளநீல மலைகளையும் கண்ட பரவசத்தில் மடியின் பிடியை மறந்த உன் கை கன்னத்திற்குக் குடியேறிவிட,  பிடி தளர்ந்து மடி பிறிந்த காளான்கள் சறுக்கு பாறையில் உருண்டோடின. காளான்களை நான் பார்க்க, பரவசம் தொலைத்து பயத்துடன்  என்னைப் பார்த்தாய். மெலிதாய்ச் சிரித்து, ’சுனையில் போய் விழும் எடுத்துக்கலாம் விடு என்றதும்’ மெல்ல நீயும் சிரித்தாய். காட்டு முல்லை பூத்தது போன்ற பற்கள் உனக்கு.

சரி வா சுனைக்குச் செல்லலாம் என சரிவான பாறையில் லாவகமாய் இறங்கினேன். அனுபவம் இல்லாததால் சிலையாக நின்றாய் நீ. மேலேறி வந்து உன் கரம் பற்றின போது தான் கண்டேன், பள்ளத்தைக் கண்டு பயத்தில் நடுங்கும் உன் பாதத்தையும். அப்படியே உன்னை அமரச் செய்து பயத்தால் வியர்த்திருந்த பாதங்களைக் கையால் துடைத்து விட்டு பயம் போக்க என்னென்னவோ சொல்லிப் பார்த்தும் பயனின்றி போகவே  ‘உப்பு மூட்டை’ சுமந்தேன் உன்னை. உள்ளங்கையில் சிறை பட்ட புறாவின் கதகதப்பையும், நடுக்கத்தையும் முதுகில் உணர்ந்தேன். நம்பினால் நம்பு, பூமி சுழல்வதை அப்போது தான் உணர்ந்தேன் நான்.

சுனையில் மிதந்துக்கொண்டிருந்த காளான்களை ஒவ்வொன்றாய் எடுத்து உன்னிடம் வீசினேன். எடுத்து பத்திரப்படுத்தினாய். கூட்டாஞ்சோறு செய்துண்ணும் ஏற்பாட்டுடன் சென்றிருந்தோம். அதை கை விட்டுவிட்டு காளான் சமைக்க ஆயத்தமானோம். மூன்று கற்களால் அடுப்பு வைத்து அருகிலிருந்த சுள்ளிகள் எடுத்து தீ மூட்டி உடன் எடுத்துச் சென்றிருந்த அலுமினிய கும்பாவில் சுனைநீர் விட்டு சிறிது உப்பு, சில காய்ந்த மிளகாய்களைக் கிள்ளிப் போட்டு, அதனுடன் களான்களையும் சேர்த்து சிறிது நேரம் வேக வைத்து பாறைமீது வைத்து பறிமாறினேன்.  பசி தீர்ந்தது. குடிக்க நீர் கேட்டாய். மண்டியிட்டு சுனையில்  குடித்துக் காட்டினேன். அந்தமுறை உனக்கு எளிதாய் இல்லை.ஆனாலும் முயற்சித்துக் குடித்தாய். பின் சுனைக்கருகிலான குகையில் அமர்ந்து இளைப்பாறினோம்.

‘இத்தனை எளிமையாய் சமைக்க எப்படி கற்றாய்?’ என்றாய். கிராமத்து ஜனங்களுக்கு எளிமை மட்டும் தானே தெரியும் என்றேன். என்னில் வியக்க எதுவுமே இல்லை. ஆனாலும் உன் ஒவ்வொரு மிடறு பார்வையிலும் என்னை வியந்தே விழுங்கினாய், ஆலிங்கனா.  என்மீதான ஈர்ப்பு எந்த கணத்தில் உதித்தது உனக்குள்?. என்னிலிருந்தே உன் உலகை முற்றுமுழுதாய் உணர்ந்துவிடும் எண்ணம் எப்படி வந்தது உனக்குள்?  எனக் கேட்டுவிடும் முடிவோடு தான் இன்றுன்னை அழைத்து வந்தேன். ஏதோவொரு தயக்கம்.  வேறொரு நாளில் கேட்டுக்கொள்கிறேன் விடு.

‘கோரை ஜோசியம் தெரியுமா உனக்கு’ என்றேன். உதடு பிதுக்கிய நீ ‘எப்படின்னு எனக்கு சொல்லிக் கொடேன்’ என்றாய். ஒரு கோரைப்புல் எடுத்து ஆளுக்கொரு முனையில் பிடித்து சரி பாதியாக பிளக்க வேண்டும். சிக்கல் விழாமல் பிளந்துக் கொண்டால் நாம் நினைத்தது நிறைவேறும். சிக்கலாக பிளந்தால் நிறைவேறாது’ எனச்சொல்லி விளக்கினேன்.  ‘சரி சரி நாம் கோரை ஜோசியம் பார்க்கலாம்’ என்றாய். சுனையின் கரையில் வளர்ந்திருந்த கோரைப்புற்களில் ஒன்றை பிடுங்கி வந்து ஆளுக்கொரு முனையைப் பிடித்துகொண்டு  ‘மனதுக்குள் ஏதாவது நினைத்துக் கொள்’ என்றேன். ‘ம்’ என்றவுடன் பிளக்கத் துவங்கினோம். சிக்கலாய்ப் பிரிந்தது. கண்கள் கலங்கினாய். ஏனென்று கேட்டதும் வெடித்தழுது வெளிப்படுத்தினாய்.  ‘நாம் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தேன்’ என்று. என் கண்கள் நீர் அவிழ்க்க ஆயத்தமானது.

பொழுது சாயத் தொடங்கியது. அமைதியிழந்த மனதுடன் வீட்டிற்குப் புறப்பட்டோம்.  வழியெங்கும் அமைதி நிறைந்திருந்தது. பொதுவாக காட்டிற்கு நிசப்தமாய் இருக்கப் பிடிக்காது. இப்பொழுது எந்த முட்செடியும் உன் உடையைப் பிடித்திழுக்கவில்லை. ஆனாலும், கவக்கழியால் வழியேற்படுத்திக் கொண்டே வந்தேன். என்னின் இந்த வழித்துணை வாழ்நாளெல்லாம் உன்னைத் தொடரும் என்றே நானும் நம்பினேன். காலமும், காலனும் கூட்டுக்களவாணிகள் என்பது புரிய ஆண்டுகள் தேவையாய் இருந்தது.   

எளியவன் நான் என்ன செய்வேன் ஆலிங்கனா.

***

Jan 5, 2013

காதல் காலம்-01



இன்றென்ன
காதல் ஜெயந்தியா?

என் 
வீடெங்கும்
உன்
கா(த)ல் தடங்கள் பதிந்திருக்கிறதே!

*

என் உள்ளம் 
பல்லாங்குழியாகவா தெரிகிறது?
பின்னே ஏனடி
கண்ணுமுழி ரெண்டையும்
அதில் போட்டு
விளையாடிக் கொண்டிருக்கிறாய்?

**


Jan 2, 2013

கண்கொத்திப் பறவை


வணக்கம்.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

நீண்ட இடைவெளிக்குப் பின் வலைப்பக்கம் வந்திருக்கிறேன். இந்த இடைவெளிக்கு காரணம் “கண்கொத்திப் பறவை” யை உங்களின் “மனங்களைக் கொத்தும்” வகையில் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் தான். எதிர்பார்த்தது போலவே பலரும் பாராட்டும் வகையில் உருவாகியிருக்கிறது.


 (நூலின் அட்டைப்படம். பெரிதாக்கி பார்க்க படத்தின் மேல் சொடுக்கவும்.)

இப்புத்தகம் சிறப்பாக உருவாக உறுதுணைப் புரிந்த ,

   1.“மின்னல் வரிகள்” திரு.பா.கணேஷ்:

நான் இழுத்த இழுப்பிற்கெல்லாம் தன்னை இலகு படுத்திக்கொண்டு  தான் ஏற்றுக்கொண்ட வடிவமைப்பு பணியினைக் காலநேரம் பாராது ஒத்துழைப்பு தந்து உழைத்ததன் விளைவாக  நான் எதிர்பார்த்ததை விடவும் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது.

    2.கவிஞர் திரு.இசாக் (தமிழ் அலை பதிப்பகம்),

 ”இது இப்படி இருக்க வேண்டும். இந்த தேதிக்குள் கிடைத்தால் நலம்” - என்று எனது தேவையைச் சொல்லி  முழு பொறுப்பையும், சுதந்திரத்தையும் கொடுத்து விட்டு நேர இக்கட்டையும் கொடுத்தேன். அட்டையை வடிவமைத்து , அச்சிட்டு, புத்தகமாக்கி நான் எதிர்பார்த்த நேரத்துக்குள்ளாகவே கொடுத்து விட்டார்.

செய்நேர்த்தி என்பதின் விளக்கத்தை சுருங்கச் சொல்வதென்றால் “இசாக்” என்று சொல்வேன்.

    3.”Discovery" திரு.வேடியப்பன்.

புத்தகமாக உருபெறும் வரையிலும் கணேஷ் அண்ணா+ இசாக் அண்ணா+ நான் எங்கள் மூன்று பேரையும் ஒருங்கிணைத்து பெரும்பங்காற்றிய எனது அன்புக்குரிய மாப்பு. ”கண்கொத்திப் பறவை” நூல் விற்பனை உரிமையையும் தானே ஏற்றுக்கொண்டிருக்கிறார். 

இம் மூவருக்கும் ,  மற்றும் இதன் பின்புலத்திலிருந்து செயல்பட்ட அனைத்து தோழமைகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

குறிப்பு: நூல் வாங்க Discovery Book Palace  வேடியப்பன் அவர்களைத் தொடர்புக் கொள்ளுங்கள்.
**************************************************************************************************************************

நூல் அறிமுக விழா (சிங்கையில்)


2013 - புத்தாண்டின் புன்னகையுடன் சிங்கப்பூரில் நடைபெறவிருக்கும் எனது “கண்கொத்திப் பறவை ” - கவிதை நூல் அறிமுக விழாவிற்கு உங்கள் அனைவரையும் (உள்ளூரில் இருப்பவர்கள் நேரில் வந்து சிறப்பிக்கவும், தொலைதேசத்தில் இருப்பவர்கள் வாழ்த்தி சிறப்பிக்கவும்) அன்புடன் அழைக்கின்றோம். 





நாள் : 06 / 01/ 2013 - ஞாயிற்றுக்கிழமை

நேரம் : மாலை 6:30 - 8:30 வரை

இடம் : ஆனந்தபவன் உணவகம் (2 ஆம் தளம்),
              (முஸ்தஃபா சென்டர் எதிரில்)
              95 சையது அல்வி சாலை,
              சிங்கப்பூர்.

தொடர்புக்கு : கோ.கண்ணன் - 9623 5852.

மேலும் தகவல்களுக்கு இணைப்பில் உள்ள அழைப்பிதழைச் சொடுக்கி பெரிது படுத்திப் பார்க்கவும்.


உங்கள் ஆசிகளுடன்,
சத்ரியன்.





Oct 5, 2012

ஆலிங்கனா-03


மாரளவு செடிகளை விலக்கிக் கொண்டு வரப்பில் நீ வருவதைக் கண்டதுமே மழைப்பொழிய தொடங்கும் முன் சிலுசிலுவென ஒரு மென்காற்று தரையோடு தவழ்ந்து வந்து உடலைத்தழுவி உயிரை வாங்குமே, அதுபோல உள்ளமெங்கும் ஒரு குளிர் பரவி ஓயாமல் பேரானந்ததைப் பிரசவித்தபடியே இருந்தது. 

வரும்போதே ஒரு வண்ணத்துப்பூச்சியைப் பிடித்த நீ, அதன் தவிப்பைத் தாளாது பறக்கவிட்டு வந்திருந்தாய். ஆனாலும், விரல் நுனியில் ஒட்டியிருந்த வண்ணங்கள் அழிந்துவிடாமலிருக்க நீ எடுத்த பிரயத்தனங்களைக் காண  கண்ணிரண்டு போதவில்லை போ. நானறிந்த வரையில், நான் ஆடு மேய்ப்பதை ஆனந்தமாய் பார்த்த முதல் மோகினி நீ மட்டும் தான் ஆலிங்கனா.

வெள்ளைச்சட்டை உனக்கு வெகு அழகு. சட்டையின் இட,வல பைகளில் ஒளித்து வைத்திருக்கும் பம்பரத்தை நினைவூட்டும் உன் கழுத்துக்குக் கீழான பகுதியைப் பார்க்காமல் தவிர்க்கும் பொருட்டு நான் பட்ட பாட்டை நீ பார்த்தாய். ஆனாலும் என்னை கடிந்துக் கொள்ளவில்லை நீ. தொடர்ந்தும் நான் பார்த்துப்பார்த்து பசியாகிக் கொண்டேன். பேச்சினூடே ”தொய்யாம்பால் சாப்பிடுவியா?’, எனக்கேட்டேன். பேந்தப்பேந்த விழித்தாய். செய்து தருகிறேன் எனச்சொல்லி ஒரு நொடியும் தாமதிக்காமல் தாயாய் செயல்பட்டேன்.

மேய்ந்துக்கொண்டிருந்த வெள்ளாட்டு மடியில் பால் கனத்திருந்தது. பசியாறக் கொண்டு வந்திருந்த கேழ்வரகு கூழை ஆட்டிற்கு உண்ணக்கொடுத்து பின்னங்கால்களை உன்னை பிடிக்கச்சொல்லி,  தூக்குச்சட்டியில் பால் பீய்ச்சி வெதுவெதுப்பு ஆறும் முன் வெப்பாலைக் கொழுந்துகளைக் கிள்ளிப்போட்டு மூடியிட்டு வைத்துவிட்டு,  சில நிமிடங்கழித்து உன் கையிரண்டை மலர்த்தி  கவிழ்த்துக் கொட்டினேன். உன் உள்ளங்கையில் மெல்ல அதிர்ந்த அந்த  ”பால் கட்டி” வெள்ளை இதயம் அசைவது போலிருந்ததைக் கண்டதும், ”உடலுக்குள் ரத்தத்திற்கு பதிலாக பால் ஓடினால் நம் இதயமும் கூட இப்படித்தான் இருக்கும் இல்லையா”, என  நீ கேட்டது நெஞ்சுக்குள் நங்கூரமிட்டபடியே இருக்கிறது  ஆலிங்கனா.

காய்ச்சாதபால் கட்டியானதை நம்ப முடியாமல் விழித்தாய். விவரித்தேன். சுவைத்து குதூகளித்தாய். எஞ்சியதை எனக்கும் ஊட்டிவிட்டாய். என் வாயைச்சுற்றி திட்டுதிட்டாய்  ஓட்டியிருந்த பால்கட்டியைக் கூச்சமின்றி துடைத்தெடுத்தாய் . தேவதை கூட தாயாகும் தருணத்தை உணர்ந்தேன் நான்.  அதற்கு முன் ஆயிரம் முறை தொய்யாம்பால் செய்து சாப்பிட்டவன் தான் என்றாலும், உன் கையால் உண்டதும் அமுதசுவை அறிந்தேன் அன்று ஆலிங்கனா. 

வெயில் சற்று உரக்க வீசியது.  கொன்றை மரத்தின் வேர்கள் மீதமர்ந்து பேசத்துவங்கினோம். அது ஆவணி மாதம். தங்க நிறத்தில் கொத்துக்கொத்தாய்ப் பூத்து தொங்கிக் கொண்டிருந்த கொன்றைப்பூக்கள் மெதுமெதுவாய் அசையும் காற்றுக்குங்கூட ஒன்றிரண்டு  பொன்னிறப்பூக்களை  நம்மீது உதிர்த்து பூரிப்பு கொண்டது கொன்றைமரம்.

குறிப்பு:- மேலே ”வெப்பாலை” என்னும் சொல்லின்மேல் சொடுக்கினால் படம் பார்த்து விளங்கிக் கொள்ளலாம்.




Sep 18, 2012

சூரியனே கதி - சுஜாதா



அணுசக்தி வேண்டாம்.



 அணுசக்தியைப் பிளப்பதால் ஏற்படும் அபரிமிதமான உஷ்ணத்தைக் கொண்டு டர்பைன்களை இயக்கி மின்சாரம் உண்டாக்குவதை மனிதனின் சக்தித் தேவைகளுக்கு முடிவான விடை என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். நூற்றுக்கணக்கான அணுமின் நிலையங்களை அமைத்தார்கள்.

எல்லோரும் சந்தோஷமாக இருந்தார்கள்.அணுசக்தியென்னும் ராட்சசனை அடக்கி நம் மனித இனத்தின் நலனுக்குப் பயன்படுத்துகிற
ோம் என்கிற திருப்தியில் விஞ்ஞானிகள் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கும் போது, ராட்சசன் அப்படியொன்றும் அடங்கிவிடவில்லை என்பது தெரிந்தது.


விபத்துகள்:-



  முதலில் விபத்துகள். அமெரிக்காவில் 'மூன்று மைல் தீவு' என்கிற இடத்தில் வைத்திருந்த அணுமின்நிலையத்தில் விபத்து. அப்புறம் பற்பல அணுமின் நிலையங்களில் தெரிந்த, தெரியாத விபத்துக்கள். கல்பாக்கம் கூட விலக்கல்ல. அதன்பின் சமீபத்தில் செர்னோபில்.
அணுமின் நிலையங்களில் விபத்து என்பதை ஒரு அணுகுண்டு இலவசமாக வெடிபபதற்குச் சமானமாக, அவ்வளவு தீவிரமாகப் போகவிடமாட்டார்கள் என்கிற நம்பிக்கையில் நாமெல்லாம் நகத்தைக் கடித்துக்கொண்டிருக்க, விஞ்ஞானிகள் இன்னமும் கான்க்ரீட், இன்னமும் பாதுகாப்புச் சாதனங்கள், ஏதாவது எங்கேயாவது தப்பு என்றால் உடனே எல்லாவற்றையும் அணைத்து விடும்படியான இருமடங்கு மும்மடங்கு பாதுகாப்புகள் என்றெல்லாம் செய்தும், அணுமின் நிலையத்தில் உள்ள மற்றொரு தீவிரமான பிரச்சினையை அவர்கள் நிஜமாகவே மூடி மறைக்கிறார்கள் - அதன் சாம்பல்.


ஆபத்தான கதிரியக்கம்:-



 அணுமின் நிலையங்களில் எரிபொருளாக உபயோகிக்கப்படும் யுரேனியம், ப்ளுடோனியம் போன்றவை அதீத கதிரியக்கம் கொண்டவை. அதிலிருந்து வெளிப்படும் கதிர்கள் நம்மேல் பட்டால் நம் எலும்புக்குள் இருக்கும் குருத்து அழிக்கப்பட்டு உத்திரவாதமாகச் செத்துப்போவோம்.
அணுமின் நிலையத்தின் சாம்பலில் இவ்வாறான கதிரியக்கம் அதிகப்படியாகவே இருக்கும். அதைத் தண்ணீரில் கரைக்க முடியாது; காற்றில் தூற்ற முடியாது; அதன் கதிரியக்கம் ஆய்ந்து அவிந்து பத்திர அளவுக்கு வர ஆயிரக்கணக்கான வருஷங்கள் ஆகும்.



சாம்பலை என்ன செய்வது:-



 அதனால், அந்தச் சாம்பலை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று விழிக்கிறார்கள். துப்பறியும் நாவல்களில் 'டெட்பாடி' போல எப்படி மறைப்பது, எங்கே புதைப்பது என்று அலைகிறார்கள். அவைகளை 'நாடுயுல்ஸ்' (nodules) என்று கெட்டியாக்கி ஆழக்கடல் தாண்டிச் சென்று சமுத்திரத்திற்குக் கீழே புதைக்கலாம்; இல்லை, பூமியில் பள்ளம் தோண்டிப் பத்திரப்படுத்தலாம்.இவ்வளவு தகிடுதத்தம் ப்ண்ணி அந்தச் சனியனை உற்பத்தி செய்து தான் ஆக வேண்டுமா என்று ஒரு கோஷ்டி கேள்வி கேட்க, அதற்கு விஞ்ஞானிகளிடமிருந்து சரியான பதில் இல்லை. அதுவும் இளைய தலைமுறையினர் இந்தக் கேள்விகளை கேட்கிறார்கள்.

ஆர்ப்பாட்டம், எதிர்ப்பு:-



 உலகில் எங்கே அணுமின் நிலையம் வைப்பதாகச் சர்க்கார் அறிவித்தாலும் அங்கே போய் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். கர்நாடகத்தில் 'கைகா' வில் ஓர் எதிர்ப்பு இயக்கம் தோன்றியுள்ளது. அதுபோல் தமிழ்நாட்டில் திருநெல்வேலி ஜில்லாவில் கூடங்குளம் என்கிற இடத்தில் சோவியத் உதவியுடன் ஆயிரம் மெகாவாட் அணுமின் சக்தி நிலையம் கொண்டுவரப் போகிறார்கள். அதற்கும் ஓர் எதிர்ப்பு இயக்கம் உருவாகி வருகிறது என்று படித்தேன்.

எரிபொருள்கள்:-



 இந்த எதிர்ப்புகள் நியாயமானவை தான் என்றாலும், எதிர்காலத்தில் மின்சாரம் தயாரிக்க எரிபொருள்கள் காலியாகிக் கொண்டிருக்கின்றன என்பதும் உண்மையே. உலகத்தில், கைவசம் உள்ள பெட்ரோலியம் சம்பந்தப்பட்ட எரிபொருள்கள் அடுத்த நூற்றாண்டின் முற்பகுதியில் காலியாகிவிடும். எண்ணெய்க் கிண்றுகள் வற்றிவிடும். நம் இந்தியாவில் மிக அதிகப்படியாக நிலக்கரி இருக்கிறது. அது இன்னும் பல நூற்றாண்டுகளுக்குத் தாங்கும். ஆனால், நிலக்கரியில் சிக்கல்கள் பல உள்ளன. முதலில் நிலக்கரியைத் தோண்டியெடுப்பதில் உள்ள சங்கடங்கள். ஆழமாகத் தோண்ட வேண்டும்; ஆபத்து அதிகம்; தோண்டுபவர்களுக்கு விபத்துக்கள்; அவர்கள் மூச்சில் ஏறும் கார்பன் கலந்த காற்றினால் அவர்கள் சீக்கிரம் இறந்துபோகிறார்கள். இவ்வாறு இரக்கமற்றுத் தோண்டுவதற்குப் பதிலாக முழுக்க முழுக்க ரோபாட் மெஷின்களை வைத்துக் கொண்டே செய்தால் மிக அதிகமான செலவாகும்.


காற்று மண்டலத் தூய்மைக்கேடு:-



 நிலக்கரியைச் சுரங்கங்களிலுருந்து மின் உற்பத்தி ஸ்தலத்திற்குக் கொண்டு வர ஆகும் செலவு, அங்கேயே உற்பத்தி செய்தால் மின்சார விரயம். அது மட்டுமன்றி, நிலக்கரியை எரிப்பதால் நம் காற்று மண்டலத்தில் அதிகமாகும் கார்பன் டையாக்ஸைடின் அளவு ஒரு பெரிய ஆபத்து. 1900-த்தில் நம் காற்று மண்டலத்தில் கார்பன் டையாக்ஸைடு வாயு பத்தாயிரத்தில் 29 பகுதி இருந்தது. இப்போது 32 ஆக உயர்ந்திருக்கிறது. கி.பி. 2000-க்குள் 36 ஆகிவிடும். இந்தக் கார்பன் டையாக்ஸைடு அதிகமானால் பூமி மெல்ல மெல்லச் சூடேறிக் கொண்டு வருகிறது. இதை க்ரீன் ஹவுஸ் எஃபெக்ட் (Green house effect) என்று சொல்வார்கள்.

துருவப் பிரதேசப் பனி உருகலாம்:-



 அந்த அதிகப்படி உஷ்ணம் நாம் உணராமல் மெல்ல மெல்ல நம் துருவப் பிரதேசங்களில் உள்ள பனிப் பாளங்களை உருக்கி, நம் சமுத்திரங்களில் தண்ணீர் லெவல் அதிகமாகி, கொஞ்சம் கொஞ்சமாக தினமணி ஆபீசின் மாடிக்கு கடல் வந்துவிட சாத்தியக்கூறுகள் உள்ளன!. மேலும் சமுத்திர நீர் அதிக உஷ்ணத்தால் ஆவியாகி, அதில் கரைந்துள்ள கார்பன் டையாக்ஸைடு காற்றில் அதிகமாகி, வீனஸ் கிரகம் போல் சூடு ஆயிரக்கணக்கான டிகிரிகளுக்கு எகிறும்.

மாற்று வழிகள்:-



நிலக்கரி எல்லாவற்றையும் எரிப்பதால் ஆபத்து; அணுசக்தி ஆகாது; பின் என்ன தான் நல்லது? பற்பல மாற்று சாத்தியக்கூறுகள் நம்பிக்கை தருகினறன. முதலில் இங்கிருந்து புரசவாக்கம் போவதற்கு பாட்டரி கார்கள் அமைக்கலாம். ஸோலார் பாய்மரங்கள் விரித்துச் சூரிய ஒளியைப் பயன்படுத்திக் காலேஜ் போகலாம்; இல்லை, சைக்கிள்களை அதிகம் பயன்படுத்தலாம்.


ஹைட்ரஜன் வாயு:-



 ஹைட்ரஜன் - ஜலவாயு நம்மிடம் நிறைய இருக்கிறது. பூமியின் கைவசம் உள்ள 3000 கோடி கனமைல் தண்ணீரில் கரைந்திருக்கும் இந்த ஹைட்ரஜன் வாயுவை எப்படியாவது எரி பொருளாக உபயோகிக்க முடிந்தால் நம் பிரச்சினைகள் எல்லாமே தீர்ந்துவிடும். இதனால் நம் வாயுமண்டலம் பாழாகாது. ஹைட்ரஜன் எரியும் போது அது விடுவிக்கிற, பிராண வாயுவுடன், ஆக்ஸிஜனுடன் சேர்ந்து கொண்டு மறுபடி நீராவியாகிறது. ஆனால் விஷயம் அத்தனை சுலபமில்லை. ஜலவாயு ரொம்ப லேசானது. அதைச் சேமித்து வைப்பதற்கு ராட்சசக் குடுவைகள் வேண்டும். மேலும் ஜலவாயு முணுக்கென்றால் பற்றிக்கொள்ளும். ஆரம்பக் காலத்தில் ஹைட்ரஜன் நிரப்பின பிரம்மாண்டமான மிதக்கும் கப்பல்கள் பண்ணி பல பேர் எரிந்து போயிருக்கிறார்கள்.

"சைவ" பெட்ரோல்:-



 அதனால் பல மாற்று முறைகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். இரும்பு, டைட்டேனியம் கலந்த ஒரு கலப்பு உலோகத்திற்கு ஜலவாயுவை உறிஞ்சிக் கொள்ளும் குணம் இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் அல்லது கார்பன் டையாக்ஸைடுடன் கலந்து மிதைல் சாராயம், மீதேன் என்று பொருள்களாக மாற்றிச் சேமித்து வைக்கலாம். அதிலிருந்து அவைகளையே மறுபடி பெட்ரோலாகவும் பண்ணலாமா என்று முயற்சி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பெட்ரோல் 'சைவ பெட்ரோல்'. இதை எரிப்பதால் முதலில் ஆரம்பித்த கார்பன் டையாக்ஸைடைத் திரும்பப் பெறுவோம் அவ்வளவே. சுத்தம்!. இவை யாவும் பரிசோதனைச்சாலைக் கனவுகள்.

சூரியனே கதி:-


 சூரியன் தான் நமக்கு எப்படியும் கடைசி சரணாக இருக்கப் போகிறது. சூரியன், பத்திரமான தூரத்தில் உள்ள அணு உலை என்று தான் சொல்லலாம். பதினைந்து கோடி கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அணு உலை அதன் சக்தியின் பெரும்பாலான பகுதி விண்வெளியில் வீணாகிறது. அதிலிருந்து ஒரு கடுகளவு தான், மொத்தத்தில் 220 கோடியில் ஒரு பகுதி தான், நமக்குக் கிடைக்கிறது. இதுவே நமக்கு அதிகம்.



இதற்கு இன்றைய ரேட்டில் விலை போட்டால், ஒரு செகண்டுக்கு நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சக்தியைச் சூரியன் நம் பக்கம் அனுப்புகிறது. அதைச் சரியாகச் சிறைப்பிடிக்க முடிந்தால் போதும். யோசித்துப் பார்த்தால் நம் வாழ்வின் அத்தனை சக்திகளும் ஆதாரமாக சூரிய வெளிச்சத்திலிருந்து கிடைப்பவையே. மழை, மேகம், ஆறுகள், நிலக்கரி, பெட்ரோல் எல்லாமே சூரிய ஒளியின் வேறு வேறு வடிவங்கள் தாம். விதிவிலக்கு அணுசக்தி. அணுசக்தி ஆதிநாள்களில் சிருஷ்டி சமயத்தில் ஏற்பட்ட மகா வெடிப்பில் அணுக்கருகள் இருக்கும் துகள்கள் ஒட்டிக்கொண்ட போது சேமித்து வைக்கப்பட்டவை. சிருஷ்டியைக் கலைப்பதில் தான் எத்தனை சிரமம்!.

(1-10-1988 - தினமணியில் காலங்களை கடந்த எழுத்தாளர் சுஜாதா எழுதியது.)




நன்றி: இணைய பகிர்வாளர்களுக்கு.