Nov 20, 2011

மடையர்களும் காந்திகளும்

இதற்கும் உண்ணாவிரதம்
இருக்கப்போவதில்லை நாங்கள்.

உண்ணாவிரதத்தை மதிக்க
நீங்கள் வெள்ளையர்களும் இல்லை
நாங்கள் காந்திகளும் இல்லை.

ஒரு
கொள்ளையர் குடும்பத்தை விரட்ட
வேறொரு கொள்ளையர் கூட்டத்தை
அரியணை ஏற்றிவைத்த
அறியாமையின் சொந்தக்காரர்கள் நாங்கள்!

பயணக்கட்டணம் உணவுப் பொருள்
மின்சாரம் எரிபொருள் விதை
உரம் பூச்சிக்கொல்லி ...என இன்னும்
என்னென்னவெல்லாம் உண்டோ
அனைத்தின் விலையினையும் உயர்த்துங்கள்.

அது பற்றிய கவலை
எள்ளளவும் இல்லை எமக்கு - ஆனால்,

வழங்கிய வாக்குறுதியில்
இலவசங்களை மட்டும்

நிறைவேற்றி விடுங்கள்
அது போதும் எங்களுக்கு.

***

மானங்கெட்ட
மாநில அரசே!

சிறு
குருவிகளின் தலையில்
பனங்காய் சுமத்துவதை விடுத்து
இலவசங்களை நிறுத்து
உங்கள்
கூட்டத்து கொள்ளைகளை தடுத்து - அரசு
கல்லாவின் கனத்தை உயர்த்து
ஏழை
மக்களின் தேவைகளை உணர்ந்து
மங்கும் தலைமையை நிமிர்த்து

அல்லாது போனால்,

கடந்தக்கால கழுதைகளின்
கழுத்தைப் பிடித்து தள்ளிய
மை விரல்களுக்கு
நிகழ்கால கோவேறுகளின்
பிடரியைப் பிடித்து தள்ள
வெகுநேரம் தேவை படாது.

12 comments:

 1. இப்படியெல்லாம் திட்டினால் நாங்க திருந்திடுவோமா என்ன? அதுக்கு தான் எங்களுக்கு பேரு அரசியலவாதிகள்.. தொண்டை வலிக்க கத்தவும் வேண்டாம் பேனா மை தீர எழுதவும் வேண்டாம் போராட்டம் என்ற பேரில் நாளை வீணாக்க வேண்டாம்.. சுய நலம் என்ற ஒன்றை முன்னிருத்தி வாழும் வாழ்க்கை அதனால் நமக்கு தொடர் போராட்டங்களுக்கு நேரமில்லை துணிவும் இல்லை..போய் ஆகற வேலையை பார்க்கலாம்..ஆகாட்டி சாகலாம்..

  ReplyDelete
 2. மிக காட்டமான கவிதை!!

  ReplyDelete
 3. ஊரில் எல்லோரும் நலமா மாம்ஸ், தங்கச்சி மருமக ...

  எதுனா புதுசா சொல்லு மாம்ஸு

  பேணாவில் "மை" ஊற்றி எழுதிய காலமெல்லாம் போயே போயாச்சு, இப்போ "பொய்" ஊற்றி எழுதுகின்றனர், எது விலை ஏறினா என்னா இலவசம் எப்போ நம்வசம் இதுதான் நமது மக்களின் கவலையும், மக்களுக்கு எது பிடிக்குதோ அதை செய்யத்தானே அரசி(ச்சீ)

  வேணாம் அழுதுறுவேன் ...

  ReplyDelete
 4. வாங்க மாப்ள ஜமால்,

  அது பேனா மை அல்ல
  ஓட்டு போட்டா விரல்ல வெக்கிறாங்களே அந்த மை யச் சொன்னேன்.

  ReplyDelete
 5. நீங்க கலக்குங்க பாஸ்....

  ReplyDelete
 6. வாங்க சூர்யா அண்ணே,

  சேந்து கலக்கலாம்.

  ReplyDelete
 7. இதுக் கெல்லாம் பயப்பட மாட்டோம் எப்படி வேண்டுமானாலும்
  எழுதுங்க!
  இன்னும் நாலரை ஆண்டு
  இட்டதே சட்டம் சொன்னதே வேதம்

  இதைவிட காட்டமா எழுத இயலாது!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 8. அனல் தெறிக்கும் கவிதைக்கு முதலில் வாழ்த்துக்கள் அண்ணே ...]

  சொல்லாமல் கொல்லுவது ஒரு வகை
  சொல்லி கொல்வது ஒரு வகை ,,,
  இப்போ ரெண்டாம் வகை ,தான் ஆளும் கட்டிலில் அசுரத்தனமாய் அமர்ந்து
  அழிச்சாட்டியம் பண்ணுது ...

  ReplyDelete
 9. ரொம்ப சூடாயிட்டீங்க!

  ReplyDelete
 10. மிகவும் அருமையான எழுத்துக்கள்....
  வாழ்த்துக்கள் சத்ரியன்!

  ReplyDelete
 11. பேனாவில் ஆசிட் ஊற்றி எழுதி இருக்கிறீர்கள் சத்ரியன். ஆனால் அரசியல் வாதிகளுக்கு ஏது சுரணை? அவர்கள் வெளிநாட்டு சரக்கு தரும் ஏசி பார்களை அமைப்பதில் அல்லவோ மும்முரமாக இருக்கிறார்கள்? எம் போன்றோரின் வயிற்றெரிச்சலுக்கு இதைப் படித்ததில் ஒரு ஆறுதல். அவ்வளவே...

  ReplyDelete
 12. நல்ல சாட்டையடி கவிதை.

  ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.