Jun 30, 2013

காதல் கடிதம்ப்படி துவங்குவதென்றே தெரியவில்லை மனோரஞ்சிதா.

அன்புள்ள தோழி என்று துவங்க வெட்கமாய் இருக்கிறது. 

ப்ரியமான காதலி என்று துவங்க பயமாய் இருக்கிறது. 

இதுநாள் வரை தோழியென தான் நம்பியிருந்தேன். அந்த நம்பிக்கையில் மண் வந்து விழுந்தது,   என் அம்மா சொன்ன உன் கல்யாணம் குறித்தான தகவல்  அறிந்த போது தான்.  ஆமாம்,  இவ்வாண்டு பள்ளிப்படிப்பு முடிந்ததும் உன்னை, உன் தாய் மாமனுக்கு கல்யாணம் கட்டிவைக்கப் போவதாக  உன் அம்மா சொன்னளாம். அதை, என் அம்மா சொல்லக் கேட்ட நொடியிலிருந்து  கட்டுப்படுத்த முடியாத ஒருவகையான அதிர்வு என்னுடலில் புகுந்துக் கொண்டது.   நிமிடத்திற்கு எண்பது என்ற எண்ணிக்கையை மறந்து  தறிக்கெட்டு துடிக்கிறது இதயம். இறகுகள் முளைக்கும் முன்னமே  தொலைத்து விடுவேனா என் வானத்தை என அஞ்சும் ஒரு குருவிக் குஞ்சினைப் போல் அஞ்சுகிறது  நெஞ்சம். கைப்பிடியளவு நுண்மணல் எடுத்து இமைக்குள் இட்டு நிரப்பியதைப் போல் உறுத்துகிறது கண்ணில் உரக்கம்.   ஒற்றையடி பாதையை வழிமறித்து படுத்திருக்கும் பாம்பினைப் போல  நீண்டு படுத்துக் கொண்டு என்னை மிரட்டுகிறது இந்த இரவு. கவிஞர் வைரமுத்து சொன்ன   வயிற்றுக்கும், தொண்டைக்கும் நடுவில் உருவமில்லா பந்து ஒன்று எனக்குள்ளும் உருளத் துவங்கியிருக்கிறது. ஒருவேளை, நம்மைக் காதலித்துப் பார்க்கச் சொல்லி கலகம் செய்கிறதோ காலம்! 

ரே ஊரில் பிறந்து, வளர்ந்து ஒரே வகுப்பில் படித்து ஓடியாடி விளையாடி மகிழ்ந்த நமக்கிடையிலான இத்தனை ஆண்டுக்கால நட்பில் யாதொரு வித்தியாசத்தையும் அறிந்திராத உள்ளம், உனக்கு கல்யாணம் என்பதை கேள்விப்பட்ட மாத்திரத்தில்  அறுந்த பல்லியின் வால் போல துடிப்பதின் மர்மம் எதுவாக இருக்கும் என்ற கேள்வி தொல்லை செய்கிறது என்னை. கண்ணுக்குத் தெரியாமல் நம் நட்பின் தோளில் கை போட்டுக் கொண்டு ஒட்டுண்ணியாய் வளர்ந்திருக்குமோ இந்த காதல் ? இதோ இப்போது அது எனக்குள் மெல்லமெல்ல ஊடுருவி மூலாதார முடுக்கில் ஒளிந்துக் கொண்டு,  நீயில்லாததொரு வாழ்வு வாழ்வாகவே இருக்காது என்று சதா ஜபித்தபடி பித்தனாக்குகிறது என்னை. என் மனக்கட்டுப்பாட்டை இழந்துதான் இந்தக் கடித்தை எழுதிக் கொண்டிருக்கிறேன். எழுதி முடிப்பதற்குள்ளாகவே மனநிலை பிறழ்ந்திடுவேனோ என பயமாய் இருக்கிறது. 

என்னையும், உன்னையும் கேட்காமலேயே இத்தனைக் காலமாய் உன்னைக் காதலியாய் அமரவைத்து அழகு பார்த்திருக்குமோ என் இதயம் என்று இப்போது சந்தேகம் வலுக்கிறது. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா எனக் கேட்டு  நமட்டுச் சிரிப்பு சிரிக்கிறது மனசாட்சி.  “இந்தக் காதலின் அவஸ்தை என் எதிரிக்கும் கூட வரக்கூடாது  இறைவா!”, என  இறைஞ்சத் தோன்றுகிறது. 

கூரையின் சந்து பொந்துகளில் எல்லாம் நுழைந்து வந்து விளக்கை அணைப்பதிலேயே முனைப்பாய் இருக்கிறது காற்று. ஏழையின் குடிசை என்றால் ஆடிக்காற்றுக்கும் இளப்பம் தான் போல!.  விளக்கு புட்டியில் இருக்கும் மண்ணெண்னை தீர்வதற்குள்  இந்த கடிதத்தை எப்படியாவது எழுதி முடித்துவிட வேண்டும் என்ற மன உந்துதலுக்கேற்ற வேகத்தில் வந்து விழ மறுக்கின்றன சொற்கள். வெட்கம் விட்டுச் சொல்கிறேன். ஆறு மாதக் குழந்தை நான்கு காலில் தவழ்ந்து நடக்க முயன்று விழுந்து  மீண்டும் மீண்டும் நடைப்பயில முயல்வதைப்போல , என் விருப்பத்தை எழுத முயன்றதில் இந்த இருவத்தி மூன்றாவது தாள்தான் கடிதம் போன்றதொரு தோற்றத்தை அடைந்திருக்கிறது. இப்போதும் கூட நான் சொல்ல வந்ததை சரியாக எழுதியிருக்கிறேனா என ஒரு சந்தேகம் வந்து தொலைக்கிறது.

உண்மையில் காதல் என்பதின் பூரண அர்த்தம் என்னவாக இருக்கும் என்பது எனக்குத் தெரியவில்லை. என் காதலின் ஒரே நோக்கம் மரணத்தின் எல்லை வரை நீ என் உடன் இருக்க வேண்டும் என்பதே.

இந்தக் கடிதத்தைப் படித்த உடனே உன் விருப்பத்தைச் சொல்ல வேண்டும் என்கிற கட்டாயமெதுவும் கிடையாது. சாவகாசமாக ஒருநாள் எடுத்துக்கொள். அதற்கு மேலான தாமதத்தைத் தாங்குவது எனக்கு சிரமமாக இருக்கும். இறுதியாய், உன்னிடம் கெஞ்சிக் கேட்டுக்கொள்வது  ஒன்றே ஒன்றுதான், 

“நானும் நல்லா யோசிச்சி பாத்தேன், இதெல்லாம் தப்புடா?  நாம எப்பவும் நட்பாவே இருந்துடலாம்” என கெஞ்சித் தொலையாதே. காரணம், 

ஒரேயொரு நொடி உன்னை காதலியாய் ருசி கண்டுவிட்ட அந்த இதயம், மீண்டும் ஒருபோதும் தோழியாய் ஏற்கவே ஏற்காது.  ஒருவேளை, காதலை நீ ஏற்றுக் கொள்ளாமல் போனால், தோற்றுப் போனதாவே இருந்து விடட்டும் என் காதல்!

காத்திருப்புக்களுடன்,
சத்ரியன்.


# குறிப்பு :  திடங்கொண்டு போராடு” வலைத்தள நண்பர் சீனு நடத்தும் காதல் கடிதப் போட்டியில் “காதலிக்கு எழுதிய கடிதம்” என்ற தலைப்பிற்காக புனையப்பட்டது.

34 comments:

 1. சத்ரியனின் மோகனமான மயக்கும் எழுத்தினை மீண்டும் ரசித்து ருசித்தேன் நான்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் பாலா அண்ணா.

   கலாரசிகன் நீங்கள் என்பதை அறிந்தவன் தானே நான். மிக்க மகிழ்ச்சி.

   Delete
 2. என்னய்யா ரொம்ப நாளைக்கு அப்புறமா இந்தப் பக்கம் வந்தாப்புல இருக்கே...!

  ReplyDelete
  Replies
  1. அது ஒன்னுமில் மனோ, போட்டின்னு ஒரு வெளம்பரம் பாத்தேன். சரி சரி மனசுக்கு வயசாகலியே, நம்மளும் களத்துல குதிச்சா என்னன்னு தான்!

   * நலமா மனோ?

   Delete
 3. /// “இந்தக் காதலின் அவஸ்தை என் எதிரிக்கும் கூட வரக்கூடாது இறைவா!” ///

  போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. பின்னே இல்லீங்களா தனபாலன். என்னா அவஸ்தை அது!

   Delete
 4. அருமை.

  வெற்றி பெற வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 5. //இந்த இருவத்தி மூன்றாவதாக தாள்தான் கடிதம் போன்றதொரு தோற்றத்தை அடைந்திருக்கிறது//

  ரசித்த வரிகள்...

  அருமையான எழுத்து நடை... போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. ஆமா சாரே!, எழுதி கிழிச்சி எழுதி கிழிச்சி-ன்னு பாவம் காகிதங்கள் தான் உசுர வுடுதுங்க.

   தங்களின் முதல் வருகைக்கும், மேலான கருத்திற்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

   Delete
 6. ".....உன்னை காதலியாய் ருசி கண்டுவிட்ட அந்த இதயம், ......"

  போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. உண்மை தானே மாதேவி. நட்பிலிருந்து தாவிய எண்ணம் மறுத்து விட்டால் மட்டும் திரும்பி பழைய நிலைக்கு வந்து விடாதில்லையா?

   நன்றி.

   Delete
 7. வெற்றி பெற வாழ்த்துக்கள் சத்ரியன்

  ReplyDelete
 8. //கைப்பிடியளவு நுண்மணல் எடுத்து இமைக்குள் இட்டு நிரப்பியதைப் போல் உறுத்துகிறது கண்ணில்// - அருமையான உருவகம்.
  //என் காதலின் ஒரே நோக்கம் மரணத்தின் எல்லை வரை நீ என் உடன் இருக்க வேண்டும் என்பதே.// அட, அட!
  மொத்தத்தில் அருமையான காதல் கடிதம். வாழ்த்துகள்.

  ReplyDelete
 9. தங்களின் முதல் வருகைக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றிங்க கிரேஸ்.

  ReplyDelete
 10. நீங்கள் எழுதினால் இழவுக் கடிதமும் காதல் கடிதமாகிறது. 'கெஞ்சித் தொலையாதே'யில் மின்சாரம் தயாரிக்குமளவுக்கான வலிமையும் வேகமும். மிகவும் ரசித்துப் படித்தேன். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. காதல் கொண்ட கண்ணுக்கு காண்பதெல்லாம் காதலாகத்தானே தெரியும்!

   மிக்க நன்றிங்க.

   Delete

 11. //கூரையின் சந்து பொந்துகளில் எல்லாம் நுழைந்து வந்து விளக்கை அணைப்பதிலேயே முனைப்பாய் இருக்கிறது காற்று. //


  அட என்ன ஒரு ஒப்பனை  //கண்ணுக்குத் தெரியாமல் நம் நட்பின் தோளில் கை போட்டுக் கொண்டு ஒட்டுண்ணியாய் வளர்ந்திருக்குமோ இந்த காதல் ?//  புதிய கற்பனை அருமை அன்பரே

  ReplyDelete
  Replies
  1. மிக்க அன்பும் நன்றியும் பிரேம்.

   Delete
 12. //இறகுகள் முளைக்கும் முன்னமே தொலைத்து விடுவேனா என் வானத்தை என அஞ்சும் ஒரு குருவிக் குஞ்சினைப் போல் அஞ்சுகிறது நெஞ்சம்//

  செம செம செம ...! ரெம்ப ரெம்ப ரெம்ப நல்லாருக்குங்க ...! எதார்த்தமும் , கற்பனையும் கலந்து கட்டிய அற்புதமான காதல் சரம் ...!

  அழகு ...! அழகு ..! அழகு ...!

  ReplyDelete
 13. முதல்முறை வருகைக்கும், உங்களின் மேலான கருத்திற்கும்
  மிக்க அன்பும், நன்றியும் ஜீவன்.

  ReplyDelete
 14. அழகிய கற்பனை. 'உண்மையில் காதலென்பது என்னவென்று..' சந்தேகம் எனக்கும் ஆரம்பத்திலேயே இருந்தது. மரணம்வரை கூட இருப்பது என்று சொல்வது நல்ல கற்பனைதான்.. ஆனால் சுயநலம் கலக்கிறதோ என்ற சந்தேகம் வந்து விடும்! ஏனெனில் காதலுக்கான வரையறைகள் இடத்துக்கு இடம் ஆளுக்கு ஆள் வேறுபடுகின்றன! 23 வது தாள்! நல்ல முயற்சி.

  ReplyDelete
  Replies
  1. எது காதல் என்ற தேடலுக்கான பொதுவிளக்கம் நிருவப்படாத வரையில் காலந்தீறும் ஆளுக்கொரு கருத்துக்களை முன்வைத்த படி தான் இருப்போம்.

   மிக்க நன்றிங்க ராம்.

   Delete
 15. அழகான கடிதம் அண்ணா... வெற்றி பெற வாழ்த்துகள். மீண்டும் ஆலிங்கனம் போன்ற உங்கள் மோகன எழுத்தில் நனைந்தோம்... கலக்கல் கடிதம்...! ஒற்றையடி பாதையில் குறுக்கான பாம்பு மற்றும் சந்து பொந்துகளில் நுழைந்த ஒளி. இந்த இரண்டு உவமைகளும் சூப்பர்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க அன்பும், நன்றியும் வெற்றி.

   Delete
 16. உங்களது கெஞ்சித் தொலையாதே - வில் தெரியும் செல்லப் கோபம், அப்படி சொல்லிடுவாளோ என்ற பயம் செல்ல மிரட்டல் எல்லாவற்றையும் ரசித்தேன்.

  போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. உதறலும். உளறலும் இல்லாமல் காதலைத் துவக்கவே முடியாது இல்லைங்களா?

   வருகைக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றிங்க.

   Delete
 17. கடிதம் படிக்கும் போது உங்க வர்ணைகளில் கிறங்கிப்போனேன்/ குப்பிலாம்பு, வால் இழந்த பல்லி பாம்பு/ம்ம் காதல் ரொம்ப அனுபவம் போல!ஹீ சத்ரியன் வலையை இவ்வளவு நாலும் பார்க்கமல் விட்டதன் பிழை புரிகின்றது! போட்டியில் வெற்றி பெற் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. எல்லோரது வலைப்பக்கத்தையும் வாசித்து விடுவதென்பது மிகமிகக் கடினமானதொரு செயல் தான். நண்பர் சீனுவின் இந்த போட்டி நிகழ்த்தும் முயற்சியால் நானும் பல புதியவர்களின் தளங்களை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

   தங்களின் வருகைக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றிங்க.

   Delete
 18. "கண்ணுக்குத் தெரியாமல் நம் நட்பின் தோளில் கை போட்டுக் கொண்டு ஒட்டுண்ணியாய் வளர்ந்திருக்குமோ இந்த காதல் ?"

  மிகவும் இரசித்தேன்.போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் நண்பரே.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிங்க பிரகாசம்.

   Delete
 19. எல்லாம் மனசுல தாங்க இருக்கு! - என்ன ஒரு அழகான வாக்கியம்! நினைவில காதல் உள்ள மிருகம் தான் மிரட்டுது!:)

  இந்தக் கடிதத்துக்கும் அது பொருந்தும் போல!போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சத்ரியன்.

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகைக்கும், மிரண்ட பயத்திற்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றிங்க மணிமேகலா.

   Delete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.