Feb 11, 2014

அடையாளம்

ளங்காலைப் பொழுது

தூரத்தில் ஏறியிறங்கும்
நீலம் பூத்த மலைத்தொடர்கள்

பனையோலை வேய்ந்த
பழங்குடிசை வீடு

ஈரத்தரையில் ஊர்ந்துச் செல்லும்
மரவட்டைகள்

புகை புடை சூழ மண்ணடுப்பில்
விறகெரித்துச் சமையல் செய்யும் பெண்

குப்பையைக் கிளறி 
குஞ்சுகளை இரை திண்ணப் பழக்கும் கோழி

ஓடைநீரில் துண்டு விரித்து
மீன் பிடித்து விளையாடும் சிறுவர்கள்

குச்சியின் உச்சியில்
யோசனையாய்க் காத்திருக்கும் மீன்கொத்தி

தென்னங்கீற்று நுனியில்
தூளி போல் ஆடும் தூக்கணாங்கூடு

மரக்கிளையில் மறைந்தமர்ந்து
கொய்யாவைக் கொத்தும் கிளிகள்

தொங்கும் மாங்கனியை
தூரிகைப் பற்களால் கொறிக்கும் அணில்

காளைகளிரண்டை ஓட்டிக்கொண்டு
கலப்பைச் சுமந்து போகும் உழவன்

ஐந்தங்குல இடைவெளியில் அவனைப் பின் தொடர்ந்து 
ஓட்டமும் நடையுமாய் செல்லும் நாய்

இப்படி
இயற்கையோடு இயைந்தே மனிதர்கள்
இன்புற்று வாழ்ந்ததற்கான அடையாளமாக
அதிசயமூட்டுகிறது
அருங்காட்சியகத்தில் ஒரு ஓவியம்.


8 comments:

  1. ஆக இனி ஓவியத்தில் பார்க்கப் போகிறோம் என்பதையும் சொல்லி விட்டீர்கள்... மாறுவதற்கு முன் மா(ற்)ற வேண்டும் என்பதையும்...

    ReplyDelete
    Replies
    1. தெரிந்தே தொலைப்பதை மீட்டெடுக்கவே முடியாதுங்க.

      Delete
  2. எத்தனையோ நாளாகி விட்டது இது போலொன்று படித்து. கடைசி வரிகளின் சுருக் வலிக்கவே இல்லையே.. என்னில் என்ன கோளாறு என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. எப்படி வலிக்கும்? நமக்குத்தான் எல்லாம் மரத்துப் போச்சே!

      வணக்கம் அய்யா. நலமா? நெடுநாட்களாகி விட்டது.

      Delete
  3. அடாடா... இத்தனை இயற்கை சமீபகாலங்களில் எங்கும் கண்ணுக்கு விருந்தாகக் கிடைக்கல்லியே... தம்பி எங்க பாத்து ரசிச்சாருன்னு ஒரு எண்ணம் மனசுல ஓடிட்டிருந்துச்சு படிக்கறப்ப... கடைசி வரிகள் ‘சுருக்’ தந்தது மனசுல! இப்படியொரு நிலை இனி சாஸ்வதமானாலும் வியப்பதற்கில்லைப்பா!

    ReplyDelete
    Replies
    1. இந்த நிலையை ஏறக்குறைய நெருங்கி விட்டோம் கணேஷ் அண்ணா.

      Delete
  4. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : மஞ்சு பாஷிணி சம்பத் குமார் அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கதம்ப உணர்வுகள்

    வலைச்சர தள இணைப்பு : அன்பின் பூ - நான்காம் நாள்

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா.

      Delete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.