Oct 30, 2011

மரணம்



மரணம்
உயிரின்
இடப்பெயர்வு.

அப்பா மரணித்தபோதும்
தம்பி மரணித்தபோதும்

இருமுறை
நானும்
மரணித்திருக்கிறேன்.

நீங்களும் கூட
அதை அனுபவித்திருக்கக் கூடும்.
உயிருக்கு நெருக்கமானவரின்
மரணத்தை ஒன்றி பார்த்திருந்தால்!


மரணம்
உயிர் கொண்டாடும்
திருவிழா.

இல்லையென்றால்
எல்லா உயிர்களும்
மரணத்தை விரும்பும் மர்மம்
என்னவாக இருக்க முடியும்?



Oct 24, 2011

போர் எச்சரிக்கை



கவிஞனை
தீர்க்கதரிசி என்பார்கள்!

”தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்” - என,
எட்டையபுரத்து இளம்பரிதி சுட்டிய
பெரும் பிணியாம் “பசி”! 

அதை
எரித்து அழித்திட 
ஒற்றை தீக்குச்சியை
உரசக் கூட
ஒருவரும் நம்மில் - முன்
வருவதாய் இல்லை.

இதே போக்கை தொடர்வதும்
இதற்கொரு விடிவை தருவதும்
 நம் அனைவரின் கரங்களில்!

என் சொற்களை
எச்சரிக்கையாய் ஏற்றுக்கொண்டாலும் சரி.
துச்சமாய் தட்டிக்கழித்தாலும் சரி.

இன்னும்
குறுகிய காலத்தில்
உலக பசியினைப் போக்க
முயற்சிக்க மறந்தோமானால்,
மூன்றாம் உலகப்போரின்
முதல் தீப்பொறியை
ஏழைகளின் வயிற்றை எரிக்கும்
பசி தான் பற்ற வைக்கப்போகிறது.

கவனத்தில் கொள்ளுங்கள்.
காலந்தோறும் கவிஞனை
தீர்க்கதரிசி என்றே சொல்கிறார்கள்!

Oct 12, 2011

விருது


விருதுகள்
மலர்கள் போல.

சில
பூஜையறைக்குப் போகின்றன.

பல
கல்லறைக்குப் போகின்றன.

மனுகுலத்திற்கு
அரியதைச் செய்தவர்
பூஜையறை.

நடுவருக்கு
உரியதைச் செய்தவன்
கல்லறை.

விருதுகள்
மலர்கள் போல!

***

பி.கு.:

சிங்கப்பூர் கடற்கரைச்சாலைக் கவிமாலை அமைப்பு கடந்த மாதம் (செப்டம்பர்)  ”விருது” என்னும் தலைப்பில் நடத்திய கவிதைப் போட்டியில் பரிசு பெற்ற கவிதை.


Oct 8, 2011

தீ




ஈரைந்து புலன்கள்
இருளில் கனல்கிறது

ஒளி தராமல்
ஒலி தரும்

‘இதை’

போய்
தீ
எனச் சொல்கிறார்களே!

*

Oct 6, 2011

கார்காலம்


இருண்டு
திரண்ட
நீரிழைப்பொதி
அவிழ்ந்து சிதறியது.

நொடியில்
முளைத்து
நடை பயில்கின்றன

வண்ணவண்ணக்
காளான்கள்!

Sep 29, 2011

தஞ்சாவூரு மண்ணு எடுத்து



தஞ்சாவூர்
மண் என்றில்லை,
பஞ்சாப்
மண் கொண்டும்
பொம்மை செய்யலாம்.

இத்தாலியில் இருந்தே
பொத்தானை அழுத்தி
இந்தியாவை
இயக்கி மகிழலாம்.

ஐ நா -வில்
அமர்ந்து கொண்டே
’அவனே’ காரணம் என
அப்பாவியாய்
அறிக்கை விடலாம்

கேப்பையில்
நெய் வடியும்
அரிய செய்தியுடன்
மா மா
ஊழல்
செய்தியையும்
உற்சாகமாய் ரசித்து விட்டு

வாயையும்
**த்தையும்
பொத்திக் கொண்டு
நாமெல்லாம்
வயித்து பிழைப்பை
பார்க்க போகலாம்..!

நாட்டை
பொம்மைகள்
பார்த்துக் கொள்ளும்!

***

டிஸ்கி : ’மா’ என்றால் ’பெரிய’ என்று பொருள். “மா மா” என்றால்?

 நன்றி : படம் அருளிய கூகிள் ஆண்டவருக்கு.

Sep 27, 2011

வெள்ளிப் பணம்


அலார அலரலுடன்
அவசர விழிப்பு அன்றாடம்.

எட்டு மணிக்குள்
வேலை துவக்கம் - என 
மூளைக்குள்
எட்டி உதைக்கும்
மணிமுள் ஓசை.

இங்கு எழுத
கை கூசும்
மேற்பார்வையாளனின்
வசீகர வசைகள்,

சுற்றங்களின்
குற்றங்களை
கொட்டி குமையும்
நடப்புக்கால நண்பர்கள்,

தாய்நாட்டு
நாணய மதிப்பை
ஒப்பிட்டு உணர்ந்து
உலர்த்தி கிடத்தும்
உயிரூக்கி நாளங்கள்,

தொலை தேசத்திலிருந்து 
தொலைபேசி உரையாடலில்
துணையாளுடன்
துவளும் தாம்பத்யம்!

இப்படியாக...
துறவறத்துடன் கழிகிறது
பொழுதுகளும், இரவுகளும்!

ஒருபுறம்
காலை நேர 
நிழலாய் தேயும்
இளமை,

மறுபுறம்
மாலை நேர
நிழலாய் நீளும்
பணத்தேவை

இடையில் சிக்கி ஊசலாடும்
மடமக்களைக் கண்டு
கெக்களித்துச் சிரிக்கிறது
வெள்ளிப் பணம்!

இப்படியே தொலைந்திடுமோ
வாழ்வு தினம் தினம்...!!!?



Sep 26, 2011

எதிரி



எதிரிலும்,சுற்றிலும்
எங்கிலும் இல்லை

உன்னுள் தேடு
கண்டு அழி
உன்னையறிதலில்
உள்ளது உலகம்.

வெளியில் உலவும்
எதிரியே - உன்
வெற்றிகளின் ஆணிவேர்
அவனை அப்படியே
இருக்க விடு...!

எச்சரிக்கையாய்
இருக்க வேண்டியது
நண்பர்களாய்
நீ
நம்பிக் கொண்டிருப்பவர்களிடமே!

ஏனெனில்,
நம்பிக்கை துரோகங்களே
நம்
வரலாறு முழுதும்
வலம் வந்தபடி இருக்கிறது.

வரலாறும் அதை
சளைக்காமல் சுமந்தபடி 
காலத்தைக் கடக்கிறது.

Sep 22, 2011

இல்லாளின் பிறந்தநாள்!




எனக்கே
எனக்கென
பிறப்பெடுத்த
பெருமகளே!

சூரியனால் நிலா
ஒளி பெறுவது
விஞ்ஞானம்!
நிலவே உன்னால்
ஒளி பெறும்
சூரியன் நான்.

இது
எஞ்ஞானம்
எனத் தெரியவில்லை.

உன்னை
மகளாய் பெற்றதில் - உன்
பெற்றோருக்குப் பெருமை.
மருமகளாய் பெற்றதில் - என்
பெற்றோருக்கு பெரும்பெருமை!

மனைவியாய் பெற்றதில்
எனக்கு பேருவகை!

இன்று
பிறந்த நாள் காணும்
இல்லாளும் என்
காதலியே

பூரணச்சுகங்களுடன் வாழ
உன்னவனின்
உள்ளத்து வாழ்த்துக்கள்!

Sep 16, 2011

தமிழா ... நீ அறிவாளியா? புத்திசாலியா?


தமிழன் உருப்படாததற்குப் பத்து காரண‌ங்கள்....
  இந்தியாஇலங்கைமலேசியா போன்ற நாடுகளில்... ஒரு நிமிடம்!  இது பல்பொடி விளம்பரம் அல்ல. தமிழன் புறக்கணிக்கப்படுகிறஅடிவாங்குகிற தேசங்களின் பட்டியல் தான் இது.

  கேரளாகர்நாடகாவில் தமிழன் ஜென்ம எதிரியாகவே பார்க்கப்படும் நிலை. ஆந்திராவிலும் தமிழனுக்கு எதிரான ஆவேசம். மராட்டியம்மும்பையில் தமிழன் என்றாலே எட்டிக்காய். கல்கத்தாவிலும்டில்லியிலும் தமிழனுக்கு எதிரான அரசியல். ஜெர்மனியில் கூட நியோ நாஜிக்கள் என்ற குழுவினருக்குத் தமிழன் என்றால் பிடிக்கவில்லை.
தமிழனுக்கு என்ன ஆச்சுஎல்லோரும் திட்டமிட்டு அவனுக்கு கட்டம் கட்டுவது ஏன்அவன் செய்த தவறுதான் என்ன?
1.     முதல் காரணம் தமிழனின் அறிவாற்றல்!
எந்த இடத்தில் விட்டாலும் அதில் மூளையைச் செலுத்தி முன்னேறும் ஆற்றல். அந்த தன்னம்பிக்கை காரணமாகவே அவன் தன் மண்ணில் மற்ற யார் பிழைப்பதையும் தடுப்பது இல்லை. ஆனால்அதே தமிழன் வேறு மண்ணில் பிழைக்கப் போகும் போது அங்கு அவன் காட்டும் ஆற்றல் மற்றவர்களைப் பொறாமையும் ஆத்திரமும் கொள்ளச் செய்கிறது. அதற்குத் தீர்வாக &தம் மண்ணில் தமிழனைப் பிழைக்க விடக்கூடாது என்று முடிவெடுத்து மற்றவர்கள் செயல்படுகின்றனர்.
  * தமிழன் அறிவாளி. ஆனால்புத்திசாலி அல்ல. இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. தன் அறிவை எல்லோருக்கும் பயன்பெறத் தருபவன் அறிவாளி (உதாரணம்: தாமஸ் ஆல்வா எடிசன்). தன் அறிவையும் மற்றவர்கள் அறிவையும் தனக்கு லாபமாக பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம் (உதாரணம்: தமிழக அரசியல் தலைக்ள்). பிழைக்கச் செல்லும் இடங்களில் தன்னைப் பார்த்து வயிறு எரிகிற மற்றவர்களை தாஜா செய்வது பற்றி கவலையே படாமல்கண்ணை மூடிக்கொண்டு உழைத்து முன்னேறுவது. அதனால் ஒரு நிலையில் அநியாயம் செய்கிற எதிரிகளிடம் சுலபமாகச் சிக்கிக் கொள்கிறான்.

2. மிருகங்களில் நாய்... பாலில் பெண்பால்... இனத்தில் தமிழன்... இந்த மூன்றுக்கும் ஒரு வினோத ஒற்றுமை உண்டு.தம்மவர்கள் முன்னேறினால் பொறுக்காது.

ஒரு நாய் அதிகம் குரைப்பதே தெருவில் இன்னொரு நாய் வரும்போதுதான். அது போல சக பெண்ணின் முன்னேற்றம் இன்னொரு பெண்ணைத்தான் மனம் சுருங்கச் செய்யும். இது உண்மை. அதைப்போலவே ஒரு தமிழன் முன்னேறினால் இன்னொரு தமிழனுக்குப் பிடிக்காது. தன் இனத்தவனைக் கெடுக்கவோ,போட்டுக்கொடுத்து கவிழ்க்கவோ தமிழன் தயங்க மாட்டான்.
  இந்தச் சண்டையை இங்கு பிழைக்க வரும் மற்ற இனத்தவர் பயன்படுத்திக்கொள்கின்றனர். பிழைக்கப் போன வேறு இடத்திலும் தமிழன் இதே தவறைச் செய்கிறான். கடைசியில் எல்லாத் தமிழனுக்குமே அது பாதிப்பாகிறது. தமிழனை வைத்தே தமிழனை அழிக்கலாம் சுலபம்.

அதே நேரம் தமிழ்நாட்டுக்கு ஒரு மலையாளியோதெலுங்கரோகன்னடரோ பிழைக்க வந்தால்தான் காலூன்றியவுடன்தன் மண்ணில் இருந்து பிழைக்க வருபவனைத் தேடிப்பிடித்து அரவணைத்துக் கொள்கிறார்கள். திட்டமிட்டு அழைத்துக்கொண்டும் வருகிறார்கள். இன்று மலையாளிகளுக்கு மட்டுமே வீடு வாடகைக்கு தரும் மலையாள வீட்டு உரிமையாளர்களே சென்னையில் உண்டு. அதுபோல கடை உரிமையாளர்களும் உண்டு. குறைந்தது அவர்களுக்கு வாடகையாவது குறைக்கப்படும். தமிழனுக்கு அதிக வாடகை. நடப்பது கேரளாவில் அல்ல தமிழகத்தில்!  
3. பெண்ணாசை
பெண்ணாசைக்கு தமிழினம் மங்கோலிய இனம் என்றெல்லாம் வித்தியாசம் கிடையாது என்றாலும் கூட ,தமிழனுக்கு காலகாலமாக மரபணுவிலேயே அது கொஞ்சம்
அதிகமாக ஊறிவிட்டதோ என்று யோசிக்கத் தோன்றுகிறது .அந்தக் கால அரசர்கள் பின்னால் வந்த குறு நில மன்னர்கள் என்று பெண்ணாலும் அழகிய பெண்களை முன் நிறுத்திய படைகள் மற்றும் தனிப்பட்ட விதத்திலும் பெண்ணால்அழிந்தவர்கள் என்று வரலாற்றில் அதிகம் . இன்றும் கூட பெரிய வணிக
நிறுவனங்களை உருவாக்கி அதை பிழைப்பு தேடி வரும் வேற்று மாநிலப் பெண்களிடம் இழந்து புலம்புபவர்கள் அதிகம் . காலகாலமாக இதை மற்றவர்கள் பயன்படுத்திக் கவிழ்த்துப் பலன் பெறுகின்றனர்.


4. மற்ற மொழியினத்தவர்கள் எல்லோரும்தங்கள் மொழிஇன உணர்வைக் காக்கசாதி மத உணர்வுகளைத் தாராளமாகத் தள்ளி வைப்பார்கள். உதாரணமாக கிறித்தவரான கே.ஜே.யேசுதாஸின் குரல்,தினசரி அரிவராசனம்பாடி சபரி மலை அய்யப்பனைத் தூங்க வைக்கும். அது மலையாளிகளின் ஒற்றுமை. ஆனால்தமிழனோ மதசாதி உணர்வுகளுக்காகதமிழ் உணர்வையும்தமிழின உணர்வையும் தரையில் போட்டு மிதிப்பான்.

இலங்கையில் முதன் முதலாக பிரச்னை வந்தது சிங்களர்களுக்கும் தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கும்தான். ஆனால்தமிழர்களில் பெரும்பான்மையான இந்துக்கள்புத்தமதச் சிங்களன்தான் நமக்கு நெருக்கம் என்று அவனோடு உறவாடி தமிழ் முஸ்லிம்களை எதிர்த்தனர். அங்கே மொழியை விட மதம் பெரிதாகப் போனது.

வடக்கு மாகாணத் தமிழன்கிழக்கு மாகாணத் தமிழனை மட்டக்களப்பான் மடையன்’ என்று சொல்லி&தாழ்ந்த ஜாதி என்று காரணம் காட்டித் தள்ளி வைத்தான். புறக்கணித்தான். அங்கே மொழியை விட சாதி பெரிதாகப் போனது. தமிழகத்தில் இருந்து இலங்கை போன மலையகத் தமிழர்களைசிங்கள அரசு ஒடுக்கியபோதுஈழத் தமிழன் அதைக் கண்டுகொள்ளவில்லை. அங்கும் இன உணர்வில்லை.


5. தன் அடிப்படை அடையாளங்களைவிரும்பி முற்றிலுமாகத் தொலைக்கிற கேடுகெட்ட மனோபாவம் தமிழனின் இன்னொரு குணம். ஒரு வங்காளி எங்கு போனாலும் வங்காளியாகவே இருப்பான். ஒரு மலையாளி எங்கு போனாலும் தன் கலாசார வேர்களைக் கைவிடுவது இல்லை. ஆனால்தமிழன் அதைப்பற்றிக் கவலைப்படுவதே இல்லை. பொதுவாக உலக மக்களிடம் உள்ள இன உணர்வு தமிழனிடம் இல்லாததால் மரியாதை கிடைப்பது இல்லை. ஒரு நிலையில் தமிழன் கேலிப் பொருள் ஆகிறான்.

6. இரண்டு மலையாளிகள் சந்தித்துக் கொண்டால் மலையாளத்தில் பேசுவார்கள். இரண்டு தெலுங்கர்கள் சந்தித்துக்கொண்டால் தெலுங்கில் பேசுவார்கள். இரண்டு கன்னடர்கள் சந்தித்துக் கொண்டால் கன்னடத்தில் பேசிக்கொள்வார்கள். இரண்டு தமிழர்கள் சந்தித்துக் கொண்டால்..ஆங்கிலத்தில் பேசுவார்கள்!
நீங்கள் அறிந்த விஷயம் இது. ஆனால் தாய்மொழியை மதிக்கிற எந்த இனமும் இந்த கேடுகெட்ட குணத்தை மதிப்பது இல்லை. அதனால் ஏற்படும் எரிச்சல் கோபமாக மாறுகிறது. தாய்மொழியை தாய் மண்ணிலேயே புறக்கணிக்கிற எந்த இனமும் உருப்பட முடியாது என்பதற்கு தமிழனே உலகளாவிய சாட்சி!


7. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போதுதமிழ் மக்களுக்கு நிலம் சொந்தமாக உள்ள பல பகுதிகள்,தமிழின வரலாற்றின் களமாக இருந்த பல நிலங்கள்தமிழின கலாசாரமாக சின்னமாக இருந்த நிலங்கள்,நியாயமாகத் தமிழ்நாட்டோடு வரவேண்டிய பல வளமான பகுதிகள்நதி உற்பத்தியாகும் இடங்கள் எல்லாம்,மற்ற மாநிலத்தவரால் திட்டமிட்டுப் பிடுங்கப்பட்டன. அப்போது திராவிட நாடு என்ற கனவில் இருந்த தி.மு.க.,அதையெல்லாம் எதிர்த்தால் அந்த மாநிலங்களில் ஓட்டு வாங்க முடியாது என்று எண்ணிதமிழ்ப் பெருமாநிலம் சிதறிப்போனதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்தது. திராவிட நாடு என்ற சித்தாந்தம் காரணமாக பெரியாரும் இதைத் தடுக்காமல் வேடிக்கைப் பார்த்தார்.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போதுஆந்திரகேரளகர்நாடக மாநிலங்களில் உயர்பதவிகளில் இருந்த தமிழர்கள் எல்லோரும் பதவி பறிக்கப்பட்டனர். விரட்டப்பட்டனர். அடுத்தடுத்த கட்டங்களில் தமிழர்கள் அங்கே பதவிக்கு வருவது தடுக்கப்பட்டது. ஆனால்தமிழ்நாடோ திராவிடம் என்ற பெயரில் எல்லோரையும் தொடர்ந்து அனுமதித்தது. இங்கு வளர்ந்த மற்ற மொழி பேசும் அதிகார வர்க்கத்தினர்,அதன் பின்னர் தமிழ்நாட்டில் வேலைப் பார்த்துக்கொண்டேதங்கள் மாநிலத்துக்கு உண்மையாக நடந்தனர். தமிழனை சுரண்டினர். தமிழன் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல்மீட்டிங் பார்ப்பதில் குறியாக இருந்தான்.

8. இந்தியாவின் ஜனாதிபதியாக அப்துல்கலாம் இருந்த நேரம்... காங்கிரஸ் கட்சி அடுத்த ஜனாதிபதி வேட்பாளராகப் பிரதீபா பட்டீலை நிறுத்துகிறது. அவர் மராட்டியப் பெண்மணி. மராட்டியத்தில் காங்கிரஸும்சிவசேனாவும் எதிர்க்கட்சிகள். ஆனால் சிவசேனா தலைவர் பால்தாக்கரே சொன்னார், ‘‘பிரதீபா பட்டில் எங்கள் ஜென்ம விரோதக் கட்சியான காங்கிரஸ் ஆளாக இருக்கலாம். ஆனால் எங்கள் மண்ணின் மகள். மராட்டிய மாணிக்கம். எனவே கட்சி உணர்வை தூக்கி எறிந்துவிட்டுகூட்டணி&எதிரணி என்று பாராமல் பிரதீபா பட்டீலை ஆதரிக்கிறேன்’’என்று சொன்னார்.


ஆனால் தமிழரான அப்துல் கலாமுக்கு எதிராகக் களம் இறங்கிய பிரதீபா பட்டீலைஅப்துல் கலாம் பிறந்த தமிழ்நாட்டுக்கே முதன் முதலாகக் கொண்டு வந்து அறிமுகக் கூட்டம் நடத்திபிரதீபா பட்டீலுக்கு பலம் சேர்த்து,ஒரு ஜனாதிபதித் தமிழன் வீழக் காரணமாக இருந்தவர்கள் சாட்சாத் தமிழர்கள்தான்.

9. ஆந்திராவோகர்நாடகாவோகேரளாவோ அந்த மொழி இனம் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்னைக்காகஒரு போராட்டம் நடந்தால்அரசாங்கம்அரசியல் தலைவர்ஆள்வோர் அதை அடக்கச் சொன்னாலும் அதிகார வர்க்கமும்,காவல்துறையும் போராட்டக்காரர்களை பூப்போலக் கையாளும். அவர்கள் எல்லாம் உப்பு போட்டு சோறு தின்பதாலேயோ என்னவோநம் இன மொழிக்குத்தானே போராடுகிறான் என்ற உணர்வு அங்கு பலருக்கும் இருக்கும். அதே நேரம் ஈழப் பிரச்னைக்காக பெங்களூரில் மறியல் செய்த தமிழர்களை கர்நாடக போலீஸ் எப்படி புரட்டிப் புரட்டி அடித்தது என்பதையும் பார்த்தோம்.
ஆனால் தமிழ்நாட்டில்நமது மீனவர்களை சிங்களக் கடற்படை என்ன செய்தாலும் கவலை இல்லை. ஆனால் அத்து மீறி தமிழக எல்லைக்குள் வரும் சிங்கள மீனவர்களைப் பார்த்து குனிந்து கும்பிட்டு,சுடுநீரில் குளிப்பாட்டி,சொறிந்து விட்டுசொடக்கெடுத்துதலைவாழை இழைபோட்டுஉணவு ஊட்டிபீடா மடித்துக்கொடுக்கும் தமிழக போலீஸ்...  தமிழ்நாட்டில் யாராவது தமிழுக்காகதமிழனுக்காக போராடினால் மட்டும் சட்டக் கல்லூரிக்குள்ளேயே புகுந்து புரட்டி எடுக்கும் தமிழகக் காவல்துறை.

10. காசு வாங்கிக்கொண்டு ஓட்டுப்போடுவதில் மூத்த குடி கன்னடக் குடிதான் என்றாலும்அது கட்சி அரசியலோடு நின்றுவிடும். கன்னட இனம் அழியும் போது காசுக்கு அவர்கள் ஓட்டுப்போட மாட்டார்கள். ஆனால்தொப்புள் கொடி நீளமுள்ள தூரத்தில் 80,000 தமிழர்கள் கொசுக்கள் போல நசுக்கப்பட்டபோதும்... அது பற்றிக் கவலைப்படாமல்,ஒரு நாளைக்கு கூட உருப்படியாகப் பலன் தராத ஓரிரு நூறுரூபாய்த் தாளுக்காக ஓட்டு வியாபாரம் செய்த தமிழக வாக்காளர்கள்...
தமிழன் நலிவுறவும் புறக்கணிக்கப்படவும்இப்படிப் பல காரணங்கள்....

பொதுவாக தமிழன் அழிக்கப்படுபவன் இல்லை. அழிக்கப்படும் வாய்ப்பை தானே தருபவன். அதனால் தன்னைத் தானே அழித்துக்கொள்பவன். மாறவேண்டும். இல்லையென்றால் இன்னும் நாற வேண்டி வரும்.

"Even a correct decision is wrong....,When it was taken too late.....”
********                              *******                         ***********
குறிப்பு: இத் தகவல் நண்பர் திரு.தியாகரமேஷ் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். அவருக்கு நன்றி.

Sep 13, 2011

“சாரலின்பா” - பிறந்த நாள்.






ஈராண்டுக்கு முன்
இதே நாளில்,
ஒற்றைப் 
பூ

நீ
பிறந்தாய்
நந்தவனமாகி விட்டது
நம் வீடு.
*

பரம ஏழை உன் தந்தை.
பிறந்தது 
நீ 
என 
அறிந்தேன்
பெருஞ்செல்வந்தனாய்
உணர்ந்தேன்.
*

“அப்ப்ப்பா”  - என 
செல்பேசி வழி - உன்
சொல் கேட்கையில்
மகளே,
சொர்க்கத்தில் இருப்பதாய்
  நினைப்பு.
*

 நித்திலமே!
அமாவாசை இரவென்றால்,
அன்னம் தண்ணி உண்ணாமல்
அழுதபடி இருக்கிறதாம்
உன்னைக் காணாத
ஏக்கத்தில்,
நிலா!

இன்று
நம் வீட்டு வழி வரும்போது
நிலாவிற்கும் ஊட்டிவிடு
உன் பிறந்த நாள்
”கேக்”

*
சாரல் இன்று மூன்றாவது பிறந்தநாளில் முதல் அடியைப் பதிக்கின்றாள்

***


Sep 7, 2011

பாஞ்சாலி சபதம்




துச்சாதனன்-களுக்கு
வேலையில்லை.

கண்ணனோ
தேவையே இல்லை.

திரௌபதிகள்
திறந்தமேனியுடனே
திருவீதி உலா வருகிறார்கள்.

***

”வலைச்சரம்” - ஆசிரியர் அவதாரத்தில் சத்ரியன்:-







Sep 2, 2011

’தோச’ பக்தி


செவ்வாய் தோசமுள்ளவன்
செவ்வாய் தோசமுள்ள
பெண்ணை தான்
மணமுடிக்க வேண்டுமாமே!

ஜோதிடவாதிகளே,

காதல் தோசமுள்ள
பெண்னொருத்தியைக்
கண்டு சொல்லுங்களேன்.
எனக்கு!

***

இறைவனை
இரைஞ்சும் கவிதைகளால்
உலகக் கவிஞனாகி விட்டான்
உமர்கயாம்.

உன்னை
இரைஞ்சும் கவிதைகள் எழுதும்
என்னை
என்ன செய்வாய்
காதலே!




Aug 31, 2011

தளரும் முடிச்சு...தளிரும் நம்பிக்கை




நம்பிக்கைத் துளிர் விட்டிருக்கிறது.

//ராஜிவ் கொலை வழக்கில், முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய மூவரையும் தூக்கிலிட 8 வாரங்கள் தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ராஜிவ் கொலை வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் தண்டனையை குறைக்கக்கோரும் தீர்மானத்தை முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்தார். தூக்கு தண்டனை தமிழக மக்களை வருத்தப்பட வைப்பதாக உள்ளதாகவும், எனவேதமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளதாக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இத்தீர்மானம் சட்டசபையில் ஏகமனதாக நிறைவேறியது. இத்தீர்மானம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.//

மேலேயுள்ள தகவல் பலரும் அறிந்திருக்கக் கூடும். இப்பதிவின் இறுதியில் உள்ளதை பலரும் அறிந்திருக்க வாய்ப்புகள் மிகக் குறைவு.

மேற்கண்ட தகவல் சிறு நம்பிக்கையை விதைத்திருப்பது உண்மையே. ஆனாலும், இது மட்டும் போதுமா? என்ற கேள்விக்கு , வாய்த்திருக்கும் எட்டு வார காலத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில் தான் அந்த நம்பிக்கையை மரமாக வளர்த்தெடுக்க முடியும்.

அதன் பொருட்டு ஆர்வலர்கள் அனைவரும் நமக்குக் கிடைக்கும் அரிய சான்றுகளை இன்னும் பலருடன் பகிர்ந்துக் கொள்வதால் ஒரு புதிய கவனயீர்ப்பை உருவாக்கி உண்மையை உலகறியச் செய்து உண்மையான குற்றவாளிகளை தண்டனைக்கு உட்படுத்த முடியும்.

ஒரு கை ஓசையெழுப்பாமல் போகலாம். நாம் ஒவ்வொருவாரும் ஒவ்வொரு கையைச் சேர்த்தால் உலகதிரும் ஓசையை எழுப்பிக் காட்டலாம்.

ஒரு உண்மையின் காணொளி இங்கே பகிர்ந்துள்ளேன். பார்ப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், இன்னும் பலருக்கு பரப்புவதை மேற்கொள்ளுங்கள் நண்பர்களே!


Aug 29, 2011

பெற்ற மனம்



என்மகனைக் கண்டீரோ?

அய்யா,
என் மகனைக் கண்டீரோ?
அம்மா,
என் மகனைக் கண்டீரோ?
பத்தொன்பது அகவையில்
காணாமற் போனவன்
இருபது ஆண்டுகளாய்க் காணவில்லை!
தேடிச் சோர்ந்துவிட்டேன்;
முதுமையால் இயலவில்லை!
நீங்கள் உதவிடுவீர்!

கண்கள் பஞ்சடைந்து,
கால்கள் தடுமாறுதையா!
மனிதர்களேஉதவிடுவீர்!
மண்டியிட்டு வேண்டுகிறேன்!
உங்கள் வீட்டுப் பிள்ளைகளில்
ஒருவனாய் ஆடுகிறானோ?

கொண்டாடும் போதிலே
தலைவாழை இலையிலே
உங்கள் வீட்டுப் பிள்ளைக்கு
இனிப்புகள் வைக்கும் போது
என்மகனையும் நினையுங்கள்!
தேடிக் கண்டால் சொல்லுங்கள்!

இனப்பகைவரும்
இரண்டகத்தே செய்பவரும்
என்மகனை இருட்டில் வைத்தாரோ?
எப்போதும் சிரித்திருப்பான்
துன்பத்திலும் பொறுத்திருப்பான்!

பிறர் துயர்க்கு அழுதிடுவான்
முடிந்தவரை உதவிடுவான்!
நண்பர்களைப் பிரிய மாட்டான்;
பிரிந்திட்டால்தமிழைவிட்ட
இசைபோலக் கலங்கிடுவான்!

ஆண்ட பரம்பரையின்
அடலேற்றின் தோற்றம்!
காலைக் கதிரவனின்
செவ்வரி விழிகள்
சொல்லும் கொள்கைகள்!
திருக்குறள் தந்த
நல்லற உரைகள்!
தொலைநோக்குக் கணக்கில்
பெரியாரின் தீர்ப்பு!
இவை அவனின் அடையாளங்கள்
அவன் பெயர் பேரறிவாளன்.

மானுட இனத்தாரே!
காலம் எம்மைத் தேய்ப்பதால்
கரைந்துவரும்
எம் உயிரைக் காப்பாற்ற
மீட்டுத்தர இறைஞ்சுகிறேன்.

குழந்தையாய்ப் பெற்று
இளையனாய்ப் பிரிந்தானைக்
கிழவனாகப் பெற்றாலும் போதும்,
மீட்டுக்கொடுங்கள்,
கொடிய காலனிடமிருந்து!
-குயில்தாசன்
(பேரறிவாளனின் தந்தை)
  
*****
மேற்கண்ட கவிதையை,எனக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிய மதிப்பிற்குரிய(கீழ்கண்ட) நண்பர்களுக்கு நன்றி.

          

முனைவர் பா.இறையரசன்

Dr.B.ERAIYARASAN,M.A.,M.Phil.,Ph.D 
செயலர்,எழுத்தேணி கல்வி தொண்டு அறக்கட்டளை
(சிங்கபுரம்,தமிழகம்)
செயலர்,தமிழ் எழுச்சிப் பேரவை, சென்னை
 9840416727

Aug 26, 2011

கண்கள் இருந்தால்...


கண்கள் தயாராய் இருந்தால் முட்களும் அழகுதான்...!


படங்களைப் பெரிதாய்க் காண படத்தின் மேல் சொடுக்கவும்.








கண் மருத்துவரைக்காணச் சென்றிருந்தேன்.அங்கே கண்டு ரசித்த தாவரங்கள் இவை.

 நம் நாட்டில் பொட்டல்களில் இருக்கும் முட்கள் இங்கே கலைக் கண்களுக்கு காட்சி பொருள்களாய் இருக்கின்றது.

Aug 22, 2011

சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே...!


வணக்கம் நண்பர்களே,

'முத்துக்கள் மூன்று' தொடர்பதிவுக்கு நண்பர் குணா அக்கரையும்...இக்கரையும் தம்பி சிம்பு -மாணவன்  வரலாற்று நாயகர்கள் என்னும் தலைப்பில் உலகத்தலைவர்களைப் பற்றி தொடர்ந்து எழுதி வருபவர். என் வரலாற்றைத் தெரிந்துக் கொள்வதில் தம்பிக்கு அப்படி என்ன வேண்டுதலோ.)) ஆகியோரின் அன்பு (என்ன விலை-ன்னெல்லாம் கேக்கப்படாது) அழைப்பை ஏற்று.....


1 . விரும்பும் மூன்று விஷயங்கள்
  • காதலும்- கவிதைகளும்
  • போராளிகளின் வாழ்க்கை வரலாறு
  • நட்பு.

2 . விரும்பாத மூன்று விஷயங்கள்
  • மது
  • துரோகம்
  • தெரியாததைத் தெரிந்தது போல் காட்டிக்கொள்வது.


3. பயப்படும் மூன்று விஷயங்கள்
  • பாம்பு
  • நட்பு அரிதாரம் பூசிய முகங்கள்
  • ஆட்சியைப் பிடிக்க அரசியல்வியாதிகள் அவிழ்த்து விடும் இலவசங்கள்

4 . புரியாத மூன்று விஷயங்கள்
  • பாடல் கேட்டுக் கொண்டே உறங்குகிறார்களே எப்படி?
  • கல்யாணத்துக்குப் பின்னும் காதல் எப்படி?
  • மக்கள் சொத்தை கொள்ளையிடும் கொள்கை வாதிகளை...!
5 . என் மேசையில் இருக்கும் மூன்று பொருட்கள்

  • தண்ணீர்
  • தொ(ல்)லைபேசி
  • நூல் ( நல்ல நூல்களைப் படிச்சா அறிவு வளருமாமே!)

6 . என்னை சிரிக்க வைக்கும் மூன்று விஷயங்கள்
  • சுமாரன நகைச்சுவையைப் படித்தாலும் ரசிச்சி சிரிக்கிற ரகம் நான்
  • நண்பர்களின் அரட்டைகள்
  • அமரர் நாகேஷ், வடிவேலு

7 . செய்துகொண்டிருக்கும் மூன்று விஷயங்கள்
  • கவிதைத் தொகுப்பு வெளியிட தயார் படுத்திக் கொண்டிருக்கிறேன்.
  • தமிழ் இலக்கணம் கற்றுக் கொண்டிருக்கிறேன்.
  • குமரிக்குச் சென்று திருவள்ளுவனை தரிசித்துவர திட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன்.

8 . கற்றுக்கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்
  • சரளமாக ஆங்கிலம் பேச!
  • தவறின்றி தமிழ் இலக்கணம்.
  • விவசாயம்
9 . பிடித்த மூன்று உணவு வகைகள்
  • நண்டுக் குழம்பு.( நண்பன் கேசவன் சமைக்கனும்)
  • கேழ்வரகுக் களி + கோலா கருவாட்டுக் குழம்பு (என் அம்மா சமைக்கனும்)
  • பச்சை அரிசி சோறு+முருங்கைக்காய் சாம்பார்.(இது நானே சமைக்கனும்)

10 . கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்
  • தேர்தல் வாக்குறுதிகள்
  • இலவசமாய் எதையும்
  • அசிங்கமான அர்ச்சனைச் சொற்கள்.

11 . அடிக்கடி ஹம்மிங் செய்யும் மூன்று பாடல்கள்
  • வா பொன்மயிலே (சிவக்குமார்+சுஜாதா)
  • பூக்கள் பூக்கும் தருணம் (ஆர்யா+ஒரு அழகான பொண்ணு)
  • ஏரத்தாழ ஏழு மணி (பேராண்மை படத்துல)

12 . பிடித்த மூன்று பொன்மொழிகள்
       (பிடிச்ச ஆத்திச்சூடின்னு வெச்சிக்குங்களேன்)
  • உடலினை உறுதி செய்
  • ஆண்மை தவறேல்
  • தையலை உயர்வு செய்

13. ஆசைப்படும் மூன்று விசயங்கள்
  • 2013-ஆம் ஆண்டின் இறுதியிலிருந்து நிரந்தரமாக தமிழ் நாட்டிலேயே தங்கி வாழவேண்டும்.
  • சிங்கையின் சிங்கங்கள் பட்டாபட்டி & வெளியூர்காரன் ரெண்டு பேரையும் ஒருதடவையாவது நேரில் சந்திக்கனும் (ஐய்யா ராசாக்களா 2013 முடியறதுக்குள்ள என்னை ஒருமுறை சந்திச்சிருங்கப்பா)
  • விவசாயத் தொழிலில் சிறந்து விளங்க வேண்டும்.

14 . நிறைவேறாத மூன்று ஆசைகள்
  • என் செல்லமகள் சாரலின்பா-வின் மழலைச் சொற்களை அவளருகில் இருந்து அனுபவிக்க எண்ணியிருந்தேன்.
  • 2010- லிருந்து தமிழகத்திலேயே தங்கிவிட திட்டமிட்டிருந்தேன்.
  • முன்னால் காதலியின் திருமணதிற்கு என் கவிதை நூலை பரிசளிக்க எண்ணியிருந்தேன்.( நான் புத்தகம் வெளியிடும் முன்பே அவளுக்கு கல்யாணம் ஆகிடும்னு நான் என்ன கனவா கண்டிருந்தேன்)
15. இது இல்லாம வாழ முடியாதுன்னு சொல்ற மூன்று விஷயங்கள்
  • தன்னம்பிக்கை
  • உணவும், உடையும்
  • அன்பும்,கோபமும்

போதும் விட்றா-ன்னு யாரோ கத்துறது காதுல விழுது. சரி நிப்பாட்டிக்கிறேன்.

இதை தொடர அழைக்கப்போகும் மேலும் மூன்று ... வேணாம் பாஸ். இதையும் நிப்பாட்டிக்கிறேன்.