Nov 3, 2009

"எனக்கு மகனாக"





கல்லூரிக்குப் போயிருப்பதாகவே
என்னுள் இருக்கிறாய்.
காலன் வீட்டிற்குப் போய்விட்டதாய்
எப்படி நான் ஏற்றுக்கொள்ள?

உன் சிதைக்கு "தீ" மூட்டி
நான் அழுதுக்கொண்டிருக்கையில்
நம் பகை சிரித்து மகிழ்ந்ததை
எப்படி உன்னிடம் சொல்வேன்?

வேலையிருக்கு விரைந்தெழுடா என்றால்
அதிகாலை குளிருதுடா என்பாயே,
வெந்நீர் எடுத்து வைத்து
குளிக்கவாடா என்றழைத்தால்
சுடுகிறதென்று குளிர் நீர் கேட்பாயே

அன்று மட்டும் ,
அதிகாலை என்றும் பாராமல்
கொழுந்து விட்டெறிந்த
கட்டைக் குவியலுக்குள்
அமைதியாய் எப்படிடா படுத்திருந்தாய் ?

நம்மைப் பெற்றெடுத்த
அம்மா சொல்கிறாள்:
உன்னைச் சுமந்த கருப்பை
மறந்து போனதாம்.
உன்னைச் சுமக்கும் நினைப்பை
மறக்க முடியவில்லையாம் .


நீ
வாங்கவிருந்த பட்டங்களுக்கும்
சூடவிருந்த வெற்றிகளுக்கும்
மாலைச் சூட்ட வேண்டிய கரங்கள்
உன் நிழல் அடைத்திருக்கும்
மரச் சட்டங்களுக்கு
மலர்கள் குவித்து........,

எங்கள்
பதினெட்டு வயது கனவை
தீயின் நாவிற்கு உணவாய்
கொடுத்துவிட்ட
ஓராண்டு நினைவில்
அழுகிறோம்.

எங்கிருக்கிறாய்
உடன் பிறப்பே?
ஏங்கித் தவிக்கிறோமே
ஏதும் உணராமல் இருப்பாயோ?
எனக்கு மகனாகப் பிறப்பாயோ?

11 comments:

  1. என்ன சொல்வதென்று தெரியவில்லை சத்ரியா,...
    எனது ஆழ்ந்த வருத்தத்தை தாய்க்கும் உங்களுக்கும்
    தெரிவித்து கொள்வதை தவிர..........

    ReplyDelete
  2. //எங்கிருக்கிறாய்
    உடன் பிறப்பே?
    ஏங்கித் தவிக்கிறோமே
    ஏதும் உணராமல் இருப்பாயோ?
    எனக்கு மகனாகப் பிறப்பாயோ?//

    ஆழ்ந்த வருத்தங்கள் நண்பா... அதற்கு மேல் சொல்ல தெரியவில்லை

    ReplyDelete
  3. சத்ரியா,வருத்தங்களும் துன்பங்களும் யாரையுமே விட்டு வைக்கவில்லைப் போலும்.ஆ(ற்)றிக்கொள்ளுங்கள்.
    அருகில் உங்கள் சாரல்.கை நீட்டும் தூரங்களில் நாங்கள் இருக்கிறோம்.
    வாழ்வு நீங்கள் வேண்டாம் என்றாலும் உங்களை இழுத்துச் செல்லும்.
    கலங்கவேண்டாம் சகோதரனே.

    ReplyDelete
  4. கலங்க வேண்டாம் நண்பா. அம்மாவுக்கும் உங்களுக்கும் நீங்களே ஆறுதல். வேறு வார்த்தைகள் இல்லை என்னிடம்.

    ReplyDelete
  5. ம்ம்.வார்த்தைகள் ஒன்றும் உதாவது. கண்ணீரஞ்சலி.

    ReplyDelete
  6. ஆறுதல் சொல்லியோ,அனுதாபப்பட்டோ
    உங்கள் துயர் ஆறாது.மீட்ட முடியாத
    பேரிழப்பு.
    எனக்கும் அந்த அனுபம் ஒன்றல்ல...
    பல..நமக்குமட்டுமல்ல ஒவ்வொருவர்
    வாழ்க்கையிலும் பல இழப்புக்கள்
    நேந்திருக்கும் சத்திரியன்
    இருந்தாலும் ...உங்கள் அன்னைக்கும்,
    குடும்பத்தாருக்கும் இரு மகனாய் இருந்து
    ஆற்றுங்கள் உங்கள் கடமையை.
    கவலையும் ,சோகமும்,கண்ணீரும்
    கரையட்டும் உங்கள் சிரிப்பில்.

    ReplyDelete
  7. எனக்கு தெரியும் அந்த நாளின் உன் சோகம்!.
    எனக்கு தெரியாது அதை நீ அடைகாப்பது!

    உன்னோடே இருபான் தம்பி பிரபகரன்!!

    ReplyDelete
  8. அன்பின் உறவுகள்,

    வேல்கண்ணன்
    ஆ.ஞானசேகரன்
    ஹேமா
    S.A. நவாஸ்
    வானம்பாடி
    கலா,
    சி.கருணாகரசு

    அனைவருக்கும் எங்கள் குடும்பத்தாரின் நன்றிகளும், அன்பும்.

    ReplyDelete
  9. வார்த்தைகள் இல்லை
    நண்பனே,
    அன்னைக்கு ஆறுதலாயிறு
    என்னைக்கும்..

    ReplyDelete
  10. வார்த்தைகள் என்னிடம் இல்லை சத்ரியன்..
    வருத்தம் மட்டும்..
    கலங்காதீர்
    நானிருக்கேன்..

    ReplyDelete
  11. வேதனையை வரிகளில் தோய்த்து எழுதியிருறாய் நண்பனே, அடுத்தவரியை படிக்க முடியாமல் விழி நீர் விழித்திரையை மறைக்கிறது. இந்த உலகத்தில் எதுவும் நிரந்தர மிலலை வேதனையும் தான்.

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.